Sunday, 5 February 2017

மணல்வெளி மான்கள்:1

மணல்வெளி மான்கள்
1
------------------------------------------------------------------------------------------------------------
வியர்த்தது,
பின்னங் கழுத்தில். பனியனுக்குள், உடம்பின் ஒவ்வொரு மயிர்க் காலிலும்...
பனியனையும் உரித்துச் சுருட்டிக் கிடாசி விட்டு அப்படியே கிணற்றில், நிற்கிற திட்டிலிருந்தே ஒரு டைவ் அடிக்க வேண்டும்.
‘பொறு!’ அவன் உடம்பு அரிப்புக்குக் கட்டளையிட்டான். கட்டியிருந்த லுங்கி அவிழ்ந்தது. ஸ்பேனரை ஸக்ஷன் பம்ப் கட்டை மீது வைத்து லுங்கியை இறுகக் கட்டினான்.
இன்னும் இரண்டு சுற்று சுற்றினால் அந்த நட்டு இறுகிவிடும். ஸ்பானர்தான் வழுக்குகிறது. கொஞ்சம் வாய் விரிசல். இருந்தாலென்ன? கௌதமுக்குச் சவால்கள். இப்படிச் சின்னச்சின்ன இடைஞ்சல்கள் பிடிக்கும்.
கௌதம் இரண்டு சுற்று வழுக்கி வழுக்கி ‘டைட்’ வைத்தான். ஸக்ஷன் பம்பின் நட்டு, மாடு பிடித் திருவிழாவில் பிடித்து நிறுத்திய காளை மாதிரி ஸ்தம்பித்தது.
அவன் ஸ்பானரைக் கீழே வைத்தான். நெற்றி வியர்வையை விரல் வைத்து வழித்தெறிந்தான்.
ஏழு மணிக்குக் கிணற்றில் இறங்கியது. ஒரு மணி நேரம் ஆகியிருக்கலாம்.
போனது ஃபுட் வால்வ் லெதர் என்று தெரியாமல் ஆதிகேசவன் அலைமோதிவிட்டான். கார் நெல்லுக்கு அன்றாடம் நீர் பாய்ச்ச மோட்டார் பம்ப் கை விட்டு விட, பழைய பாணியில் கவலை மாடுகளை நம்பினான்.
ஏழு நாட்களாக மோட்டார் சப்தம் ஓய்ந்து போன கிணற்றில் இனி அது பலிக்கும்.
ஆதி கிணற்றுக்கு மேலே தான் நின்று கொண்டிருப்பான். கௌதம் உள்ளே இருந்து குரல் கொடுத்தான்.
“ஆதி... மோட்டாரைப் போடு.”
கிணற்றின் சுற்றுச் சுவரில் பட்டுப்பட்டு எதிரொலிகள். ஒன்று, இரண்டு, மூன்று முறை... பதில் வரவில்லை. எங்கே போய்விட்டான்?
தன் சிரமம் பலித்திருக்கிறதா என்று கௌதமுக்கு உடனே முடிவை எதிர்பார்க்கும் தவிப்பு. மேலே போகலாமா? ஸ்பானரை எடுக்கக் கௌதம் குனிந்தபோது அவன் முதுகில் லொட்டென்று குறி பார்த்து அடித்த மாதிரி எதுவோ தாக்கியது. முதுகைத் தாக்கிவிட்டு அந்த ஏதோ ஒன்று தாவி விழுந்து தண்ணீரில் மறைந்தது.
சிவுக்கென்று தலை நிமிர்த்தினான். கிணற்றுக்கு மேலே சாலும் வடக்கயிறும் தொங்கின. யாரும் தென்படவில்லை. ஆனாலும் யாரோ விளையாடுகிறார்கள். ஆதியா? இல்லை. அவனிடம் ஆதி விளையாடமாட்டான். ஸ்பானரை இன்னும் வைத்த இடத்திலிருந்து எடுக்கவில்லை. எனவே மீண்டும் குனிந்தான்.
லொட்டென்று மீண்டும் முதுகில் பனியனின் ஈர நைப்புக்கு உறைக்கிற மாதிரி ஒரு கொட்டையளவு ஏதோ விழுந்தது. அதிகம் வலிக்கவில்லை.
வெள்ளி மணலாக அடி தெரிந்த கிணற்று நீரின் இள நீலத்தில் ஒரு சிலும்பல். இப்போது விழுந்தது ஒரு சின்னஞ்சிறு மாம் பிஞ்சு.
கௌதம் மனசில் ஒரு முகம் தெரிந்தது. நித்யாவாகத் தான் இருக்கும்.
“மேலே ஏறி வந்தா என்ன நடக்கும் தெரியுமா நித்யா?” என்று தலை உயர்த்தாமல் கத்தினான்.
‘நித்யா’ என்று கிணற்றில் எதிரொலி வந்தது. மும்முறை. கிணற்று நீரின் ஒருபுறத்தில், கரை மீதிருந்த நித்யாவின் பிம்பம் சிலும்பலில் நெளிந்தது.
“என்ன பண்ணுவே?” மேலே நின்றபடி நித்யா கேட்டாள்.
அவன் பிம்பத்தைப் பார்த்தே பேசினான்.
“ஆத்து மணல்லே, அன்னக் கூடையை இடுப்பிலே தூக்க வச்சு ஓட ஓடத் துரத்துவேன்.”
“நீ?” என்றாள் நித்யா – எகத்தாளம். கொஞ்சம் சவால்.
கிணற்றின் அலைகள் தத்தித் தத்தி, கோடை வானத்தின் வெளிர் நீலப் பின்னணியில் நித்யாவின் முகபிம்பத்தை அலைக்கழித்தன. அவள் பற்கள் தெரியச் சிரித்தாள்.
“மேலே யாரும் இல்லியா?”
அவன் பிம்பத்தைப் பார்த்துப் பேசினான். அவளும் அவன் பிம்பத்தைப் பார்த்துப் பதில் சொன்னாள்.
“கேக்கறே பாரேன் கேள்வி!”
நாக்கைக் கடித்துக் கொண்டான்.
முட்டாள்! யாராவது இருந்தால் அவள் இப்படி விளையாடுவாளா?
“ஆதி இருப்பானே!” அவன் சமாளித்தான்.
“நுணா மரத்துப் பம்பு ஷெட்டாண்ட ஒரு கூட்டம் நிக்குது. அவரு அங்கே நிக்கறாரு.”
“கூட்டமா?”
“ஆமா...என்னமோ தகராறுன்னு நெனைக்கிறேன்.”
“சரிதான். இப்பத்திக்கி வர மாட்டான்! அப்ப ஒண்ணு செய்யி...”
“என்ன?”
“கெணத்திலே குதிச்சுடு!”
“ஐயா வந்து காப்பாத்திடுவீங்க...”
“நீ குதிச்சா உன்னைக் காப்பாத்தற சாக்கிலே சேர்ந்து குளிக்கலாம் பாரு.”
“இப்ப நெஜமாலும் ஒன் தலை மேல குதிச்சுடுவேன்.”
“இன்னும் சௌகரியம்.”
“வர வர உனக்கு வாய் கொழுத்துப் போச்சு. நான் போறேன்.”
அவள் முகம் விருட்டென்று மறைந்தது.
“நித்யா..நித்யா!”
என்ன?” மீண்டும் அவள் பிம்பம்.
“மோட்டார் ஸ்விட்சு தெரியுமில்லே ஒனக்கு?”
“சொல்லு...”
“அதைப் போடேன். ஃபுட் வால்வ் லெதர் மாத்தினேன். தண்ணி எடுக்குதான்னு பார்க்கணும்.”
“கரெண்ட போயி அரை மணி நேரம் ஆவுது.”
அவன் வெறுத்துப் போனான். பிறகு அவள் வாயைக் கிண்டினாள்.
“வழக்கமா ஒங்க அம்மாதானே துணி துவைக்க வருவாங்க?”
“ஆமா! அவங்க சொந்தக்காரங்க கருமாதிக்குப் போயிருக்காங்க.”
“அதான் நேரா இங்கே வந்துட்டே.”
“ஆமா. பம்ப் ஷெட் ரிப்பேருக்குக்காக கெணத்திலே எறங்கி இருப்பாருன்னு ஞான திருஷ்டியிலே தெரிஞ்சது.” மீண்டும் தலை மறைந்தாள்.
“துணி துவைக்கணுமா வேண்டாமா?”
“அதான் கரண்ட்டும் இல்லே... தண்ணியும் இறைக்கலியே!”
“மாடுங்க நுகத்தடி பூட்டி நிக்குதுங்க இல்லே?”
“நிக்குதுங்க.”
“இரு... தோ வர்றேன்.”
அவன் செருகு செருகாகப் படிக்குப் பதில் கிணற்றோடு பதித்திருந்த ஜல்லிக் கல்லில் ஒவ்வொரு கல்லாகத் தாவித்தாவி ஏறினான். என்ன வேகமாக ஏறுகிறான்! கால் வழுக்கி விடாது என்று நினைத்தாள் நித்யா.
அவளுக்கு அவன் வேகத்தின் மீது இலேசான பயம்.
அவன் கடைசி ஜல்லிக் கல்லில் நின்றபோது கண் பூத்து விடுகிற மாதிரி கிழக்கு மேற்காய் ஆற்று மணல் தெரிந்தது. விட்டலாபுரத்திற்கும் அன்னவாசலுக்கும் இடையில் பாலாற்றின் குறுக்கே போட்ட நீண்ட தாம்போகிப் பாதை தெரிந்தது.
கல் பரவிய அந்தப் பாதை மீது எட்டரை மணி ரயிலின் வரவுக்காகப் பூந்துறை ஸ்டேஷனுக்குச் செல்லும் டவுன் பஸ் போவது தெரிந்தது.
அந்த எட்டரை மணி பஸ்ஸைப் பார்க்கும் போதெல்லாம் ஒரு மீன்கொத்தி மாதிரி மனசு இறந்த காலத்திற்குப் பாய்கிறது.
ஒரு நொடி - இல்லை; ஒரு நொடியில் ஒரு சிறு கூறு...
அந்த பஸ்ஸில்தான் பூத்துறையில் அம்மா இறங்குவாள் என்ற ஆவலோடு பதினாலு வயது கௌதம் பூந்துறைக்குப் போவான்.
மனசு விசித்தரமானது. பழக்க வாசனையுள்ள புறா மாதிரி ஒரே கூட்டிற்குத் திரும்பித் திரும்பிப் போகிறது.
நினைவை உதறி விட்டு நித்யாவைப் பார்த்தான். பத்தொன்பது வயசில் எதற்குக் கோடாலி முடிச்சு? சாக்லேட் பாவாடை. பொன்னிழை ஓடிய கறுப்புத் தாவணி... அவன் அவன் நெற்றித் திலகத்தை, கண்மையை, முகத்தை ரசித்துக் கொண்டே நிற்பதை நித்யாவும் ரசித்தாள்.
“இவ்வளவு சிவப்பு ரொம்ப ஓவர்!”
அவன் தன் நிறத்தைச் சொல்கிறான் என்று அவளுக்கும் புரிந்தது.
“என்ன பண்ணச் சொல்றே? கறுப்பு பெயிண்ட் அடிச்சுக்கவா?”
“முயற்சி பண்ணு!”
“இதைச் சொல்றதுக்குத்தான் கெணத்தை விட்டு மேல வந்தியா?”
பூட்டிய நுகத்தடியோடு சிவனே என்று நிற்கும் கவலை மாடுகளை நோக்கி அவன் நடந்தான்.
“தா... ஹை!” என்று மாடுகளை அதட்டினான். ஒன்று திரும்பிப் பார்த்துக் கொம்புகளை ஆட்டிற்று. கலகலவென்று கழுத்துச் சலங்கை மணிகள் அதிர்ந்தன.
“அது முட்டற மாடு. ஒன்னைக் கெணத்துலே தள்ளப் போவுது” என்று நித்யா மிரட்டினாள்.
“இப்பப் பாரு...”
கௌதம் அவற்றின் அருகே சென்று கழுத்தை நீவி, முதுகை இதமாகத் தட்டிக் கொடுத்தான். கொம்பை ஆட்டிய மாட்டின் முதுகுத் தோல் சிலிர்த்துத் துடித்தது.
வடக்கயிற்றைப் பிடித்துக் கொண்டு பின்னோக்கி இழுத்தான். மாடுகள் இரண்டும் பின்வாங்கி நடந்தன. கிணற்றை எட்டிப் பார்த்தான். சால் கிணற்று நீரை முத்தமிட்டது. அமிழ்ந்தது. நிறைந்தது.
[தொடரும்]

No comments:

Post a Comment