Sunday, 11 October 2015

உயிர் ஊற்று 2

உயிர் ஊற்று 2
அந்த விடியற்காலை நேரத்தில், புழக்கடையில் பாத்திரங்கள் உருளும் ஓசை கேட்டதும் பாக்கியம் விழித்துக் கொண்டாள்.
அறைச் சுவரில் பதிந்திருந்த கடிகார ஓசை அங்கு நிலவிய அமைதியில் வெகு துல்லியமாகக் கேட்டது. மணி ஐந்தேகால்.
அன்னபூரணி எழுந்து பாத்திரம் துலக்கிக் கொண்டிருக்கிறாள் என்று புரிந்தது. கட்டிலில் பக்கத்தில் படுத்திருந்த விஜயா, காலைத் தூக்கி பாக்கியத்தின் மேல் போட்டுக் கொண்டு தூங்கினாள்.
“அப்பப்பா, ராத்திரியிலே என்னமாப் புரள்றே’’ என்று சொல்லியவாறே காலை எடுத்து அவளைச் சரியாகப் படுக்க வைத்து விட்டு விடியற்காலைக் காற்று தாக்காமலிருக்க, அவள் மீது லேசான போர்வை ஒன்றைப் போர்த்தினாள் பாக்கியம். தலை முடி அவிழ்ந்து தொங்கியதைச் சுருட்டிக் கோடாலி முடிச்சுப் போட்டவாறே எழுந்தாள்.
அவளையுமறியாமல் அவளது கால் அவரது அறையை நோக்கிப் போயிற்று. அது தான் அவளது தினசரி வழக்கம். ஒவ்வொரு சமயம் நினைத்துப் பார்க்கும் போது, அவளுக்கே கூட அது விநோதமாகத் தோன்றும்.
இத்தனை வயதாகி, வாழ்வின் பல பருவங்களைத் தாண்டி இன்ப துன்பங்களை ஆண்டு அனுபவித்த பின், அனுபவங்களின் பயனாய் ஒரு முதிர்ச்சியும் நிதானமும் வந்துங்கூட, அவாள மீது இப்படி ஓர்  ஆழ்ந்த பற்றுதல்.
காலையிலிருந்து இரவு வரை நிழல் போல அவரையே சார்ந்து, அவாள என்ற ஆதாரப் புள்ளியிலேயே இயங்கிக் கொண்டிருக்கும் வாழ்க்கை.
அதற்கு பக்தி என்று அர் த்தமல்ல. பக்திக்கும் அதன் தன்மைக்கேற்ற அர்த்தங்கள் உண்டு. வரம்புகள் உண்டு.
பாக்கியம் அவரிடம் அப்படியெல்லாம் தூரத்தில் நிற்கவே மாட்டாள். அவள் அவாள இன்றி வாழவே மாட்டாள். அவர் இன்றி வாழவே இயலாது.
கல்யாண வீட்டில் அதை எடு, இதை எடு என்று கம்பீரமாக ஆளை விரட்டிய வண்ணம் காரியம் செய்பவர்களைப் போல் கல கலவென்றிருப்பாள்.
பெரிய உள்ளம், பெரிய உடம்பு, பெரிய குரல். எதிலும் அவள் பெரியவள் தான்.
அவள் வட்டாரத்தில் எந்த விசேஷம் நடந்தாலும், அதற்குப் பாக்கியம் போகா விட்டால் களை கட்டாது. அவளது அதிகாரம், செயல், நேர்த்தி , சமயோசிதம் இவைகள் எல்லாம் தம்மையுமறியாது  மற்றவர்களைத் தலை வணங்க வைத்து விடும்.
இத்தனை இருந்தாலும் நாலு நாளைக்குச் சேர்ந்தார்  போல அவர் எங்காவது வெளியூருக்குப் போய் விட்டால், அவள் பலம் எல்லாம் வடிந்து போன மாதிரி பேசாமல் ஒடுங்கி விடுவாள்.
“அப்படி என்னடியம்மா நாங்கள்ளாம் காணாததை நீ கண்டுட்டே!’’ என்று சீண்டி விடுவார்கள் சினேகிதிகள்.
“அதைக் கண்ணாலே பார்க்க முடியாது. கண்டவர் கள் விண்டு  சொன்னாக் கூட புரியறாப்பலே இருக்காது. ஏதோ நாவல்லே படிக்கிறாப்பிலேயும், சினிமாவிலே பார்க்கிறாப்பி லேயும் தான் தோணும்’’ என்று பதிலளிப்பாள்.
சாதாரணமாகத் தம்பதிகள் ஒருவருக்கு ஒருவர்  சௌஜன்யத்துடன் நீடித்து இருந்து விட்டாலே அது அதிசயம் தான்.
ஒரு பக்கத்து ஏமாற்றங்கள்….அது வளர்த்த புற்றில் உள்ளுக்குள் சீறிக் கொண்டிருக்கும் கோபதாபங்கள்.
வாழ்க்கையே பலருக்கு இவ்விதம் பதுங்கிய, பழக்கத்திற்காளான,எ டுபட்ட ஏமாற்றங்களாய் நடந்து வருகிறது.
அதற்கு வித்தியாசமான ஒருத்தி என்றால், அவர் களால் நம்ப முடியவில்லை.
ஆனால், அவரே அவளுடைய வாழ்வில் பலம்; நம்பிக்கை அர்த்தம்.
இந்தச் சமூகத்தில் பெண்ணின் வாழ்க்கை ஆமை ஓடு போலக் குறுகி இருக்கிறது.
தான், தன் வீடு, கணவன், பிள்ளைக் குட்டிகள், மிச்சமாகப் போனால் மாதர் சங்கம், பெண் அவ்வளவு தான் ஆணிடம் எதிர்பார்க்கிறாள். அவள் வட்டம் பெரிதாகும் போது அவளுக்கே குறுகுறுப்பு தோன்றுகிறது. தனது ஆட்சிக்குப் பங்கம் நேர்வதுபோல் துணுக்குகிறாள்.
பாக்கியத்தின் உள்ளம் அப்படி ஒரு சின்ன கூண்டில் சிறைப்பட்டதல்ல.
அவளும் அத்தகைய சிறையை ஆமோதிப்பவ ளல்ல. அவாள உள்ளத்தின் திசைகள் விரிந்த அளவு அவளும் பெரியவளாக இருந்தாள். அந்தச் சுதந்திரமே இந்த வயதிலும் அவர் மீது அப்படிக் காதல் நிலவக் காரணமாக இருந்தது.
மேஜை விளக்கைப் போட்டுக் கொண்டு, ஜஸ்டிஸ் ஆனந்தரங்கம் ஒரு கேஸ் பைலை ஊன்றிப் படித்துக் கொண்டிருந்தார்.
ஐம்பத்து நான்கு வயதை அவர் நெருங்கிக் கொண்டிருந்தாலும், ஒழுங்கான யோகாப் பயிற்சியாலும் அன்றாடம்  உடலுழைப்பு வேண்டும் என்று தோட்டத்தில் கையில் மண்வெட்டிபிடித்து வேலை செய்து வருவதாலும், அவர் தோற்றத்தில் இளமையின் அம்சமே அதிகமாக இருந்தது.
சற்று முன் நோக்கி சரிந்தாற் போன்று பரந்த நெற்றி, பெரிய நாசி, தன் கீழே அதிக இடைவெளியில் அமைந்த இறுகிய உதடு.
சதுரமான மோவாய்க் கட்டு. அவரது முகமே எதிராளியின் முகத்தில் சற்று அச்சத்தை ஏற்படுத்துவதாக அமைந்திருந்தது.
கண்களின் தீட்சண்யம் அவரது உணர் ச்சிகளையோ அபிப்ராயங்களையோ வெளியிடாது. மற்றவர்  மனத்தை ஆராய்ச்சி செய்யும். சென்னை ஹைகோர்ட்டில் ஜட்ஜ் ஆக சமீபத்தில் நியமனம் ஆகியிருந்தார். அவர் ஆஜராகும் வழக்கு என்றால் வக்கீல்களுக்கு சற்று யோசனை தான். சட்டங்களில் சதுரர்கள். அதன் இடைவெளிகளைப் பயன்படுத்தி,  தமது இழுப்புக்கு அவற்றை வளைத்து என்ன சாதுலுளயம் செய்தாலும், ஆனந்தரங்கத்தை மசிய வைக்க முடியாது. மனித தாளமங்களும், உண்மையும் அவருக்குச் சட்டத்தை விட முக்கியம்.
அவாள நீதிமன்றத்திலும்,  வெளி உலகத்திலும் எவ்வளவுக்கெவ்வளவு நிதான உணர்ச்சியோடும், கண்டிப்போடும் நடந்து கொள்வாரோ அதற்கு முற்றிலும் முரணாக, சமீபத்தில் திருமணமான ஓர் இளைஞன் காதல் மயக்கில் எவ்விதம் தன் மனைவிக்குக் கட்டுப்பட்டிருப்பானோ, அப்படி ஐக்கியமாக இருப்பார் பாக்கியத்திடம்.
இந்த வயதான காதல், வெளி உலகத்திற்கு அவ்வளவாகத் தெரியாது.
பாக்கியம் அவரது பெரியபி ரேம் போட்ட மூக்குக் கண்ணாடி, முகத்திற்கு மிகவும் கம்பீரம் தருவதை மனசுக்குள் ரசித்துக் கொண்டே நின்றாள்.
அவள் வந்து நின்ற ஓசை கேட்டும், கேஸ் கட்டில் ஒரு குறிப்பட்ட பாரா முடியும் வரையில் ஆனந்தரங்கம் நிமிரவில்லை. அப்புறமாகப் பார்த்தார்.

“என்ன பாக்கியம்?’’

“காபி கொண்டு வரட்டுமா?’’

“கொஞ்ச நேரம் போகட்டும். காலையிலே தரிசனம் ஆச்சில்லே’’ என்று சாவதானமாக,  குறும்பு தொனிக்கக்  கேட்டார்.
“ஆமா, என்னைக் கிண்டல் பண்ணலேன்னா, உங்களுக்கு எங்கே பொழுது விடியப் போகுது?’’ என்று புன்சிரிப்போடு கூறியபடியே அறைக்குள்ளே நுழைந்தாள் பாக்கியம்.
“உள்ளே வந்தாச்சா, இனிமே என் வேலை ஓடினாப்பலேதான்!’’ என்று மெதுவாகச் சிரித்தபடி சொன்னார்  ஆனந்தரங்கம்.
“அடேயப்பா, வேலையை விட்டுட்டு எத்தனை நாள் நீங்களும் என்னோட பேசிக்கிட்டிருந்தீங்க? எத்தனை நாள் உங்க வேலையைக் கெடுத்தேன்?’’ என்று சளைக்காமல் பதில் கொடுத்தவாறே அவரது முதுகுக்குப் பின்னால் நாற்காலியைப் பிடித்தவாறே போய் நின்றாள்.
“எங்க வக்கீல்களை விட நீ கோர்ட்டிலே ஆஜராகலாம் பாக்கியம். உன்னுடைய லா பாயிண்டுகளுக்கு முன்னாலே நான் ஊமையா உட்கார்ந்துட வேண்டியது தான்.’’
“ஐயோ பாவம், நான் சொல்ற பேச்சைத் தப்பாமே கேட்கறீங்க இல்லே...’’ என்று அவர் கையிலிருந்த கேஸ் பைலைப் பார்த்தவாறே கேட்டாள் பாக்கியம்.
 “இன்னிக்கு மாரமங்கலம் கொலைக் கேஸிலே ஜட்ஜ்மெண்ட் இல்லே?’’
“ஆமா… ஏன் உன்னுடைய ஆர்க்யூமெண்ட் ஏதாவது இருக்கா?’’ அவளை குறும்புடன் நிமிர்ந்து பார்த்தார் ஆனந்தரங்கம்.
அவருடைய கிண்டலை லட்சியம் செய்யாமல் “என்ன தீர்ப்பு சொல்லப் போறீங்க?’’ என்றாள்.
“உனக்குத் தான் கேஸைப் பற்றி கிளியராத் தெரியுமே. நீ தான் சொல்லேன் பார்ப்போம்!’’
“எனக்கு என்னமோ அந்தப் பையனை நெனச்சா பரிதாபமாயிருக்கு. அவன் பேச்சும், பத்திரிகையிலே போட்டிருக்கிற அவனுடைய போட்டோவையும் பார்த்தா நிரபராதின்னு தோணுது!’’ என்று அச்சமயம் பத்திரிகையில் விவரமாகப் பி ரசுரிக்கப்பட்டிருந்த ஒரு வழக்கைப் பற்றித் தன் அபிப்ராயத்தைச் சொன்னாள், பாக்கியம்.
“சந்தர்ப்பப் பொருத்தமும், சாட்சியங்களும் ரொம்ப கிரிட்டிகலா இருக்கே பாக்கியம்!’’
“அப்புறம் ஒங்கபாடு, ஒங்க வக்கீல்களாச்சு. நீங்களாச்சு’’
ஒரு நிமிஷம் கண்ணை மூடிக் கொண்டு ஏதோ யோசித்தார் ஜஸ்டிஸ்.
“என்ன திடீர்யோசனை?’’
“இல்லே, உன்னே ஜஸ்டிஸா போட்டா, எத்தனை ஜெயில்களை காலி பண்ணுவேன்னு நெனைச்சேன்.’’
“ஜெயில்கள்ளாம் காலியாயிருந்தா அது தேசத்துக்குப் பெருமை தானே…’’
“ அப்புறமா தேசமே ஜெயிலாடுமே !.’’
“ ஜெயிலுக்குள்ளே ஒரு தேசம் இருக்கறதை வெளியிலே இருக்கலாமே!’’
“சபாஷ், போட்டியே ஒரு போடு.’’
“சரி, காலையிலே உங்கக்கிட்டே பேசிக்கிட்டு நின்னேன்னா எனக்கு வேலை ஆனாப் போலத் தான். இன்னிக்காவது நரேந்திரன் போன் பண்ணுவானா?’’
“அதான் நேத்தே ரகு அவங்கம்மாவுக்கு பண்ணினானே!எழுதியிருந்தானே, இவர் கவி. டூலுளலே எந்த இடத்திலே இவருக்குக் கவிதை உதயமாச்சோ, இவன் பாட்டுக்கு ஒக்காந்துட்டிருப்பான்.’’
“எல்லாரும் சின்ன வயசுலே அப்படித் தான்’’ என்று தன் மகனைப் பற்றிய பெருமிதம் நெஞ்சில் மணக்க பதிலளித்தாள் பாக்கியம்.
“அப்படியா, இன்னிக்குப் புதுக் கவிதையை கன்யாகுமரியிலேருந்து அனுப்பி  வெப்பான். நீ கவலைப் படாமப் போய் காப்பி  கொண்டு வா. ‘’
ஆனந்தரங்கத்திற்கு தன் மகன் கவிதை எழுதுவதில் உள்ளூரப் பெருமையுண்டு.என்ஜினியரிங் காலேஜில் படித்துக் கொண்டு, எந்தப் பாடத்திலும் கோட்டை விடாமல், அற்புதமான கவிதைகளை எழுதுவதில் அவருக்கு வியப்பே உண்டு.இருந்தாலும் அதை யார் முன்னிலையிலும் பாராட்டிக் கொள்ள மாட்டார்.அன்றைய தினத்திற்கு வேண்டிய தெம்பை சேகரித்துக் கொண்டு பாக்கியம் வெளியே போனாள்.
தோட்டத்துக் குழாயடியில் அன்னபூரணி பற்றுப் பாத்திரங்களைப் பரப்பி , தேய்ப்பதில் ஈடுபட்டிருந்தாள். 
புழக்கடைத் தோட்டத்தில் விடியற்காலைக் காகங்கள் கூவிக் கொண்டிருந்தன. ஆனந்தரங்கம் புகழ் பெற்ற வக்கீலாகத் தொழில் நடத்திய காலத்திலேயே விஸ்தாரமான இடம் இருப்பதனால் ஆள்வார்ப்பேட்டையில் அந்த பங்களாவைப் பலத்த போட்டிக்கிடையில் வாங்கினார். மசியாத சென்னை மண்ணையும் மசிய வைக்க, லாரி லாரியாக மண்ணைக் கொண்டு வந்து கொட்டி தோட்டத்தையே செழிக்க வைத்திருந்தார் ஆனந்தரங்கம்.
அழகை மட்டும் கருத்தில் கொண்ட செடிகள் அங்கே இல்லை. தேங்காய் முதற் கொண்டு காய்கறி, கீரை,  சில பழ வகைகள்  வரைப் பயிராயின.
அது தான் அவரது பொழுதுபோக்கு. அவரது முழு ஆர்வத்திற்கும் உரிய விஷயம்.
தம்மை ஒரு விவசாயி என்று சொல்லிக் கொள்வதில் அவருக்கு ஓர் அபாரப் பெருமை. வீட்டுத் தேவைகளுக்கு குழாய்த்  தண்ணீரே போதுமென்றாலும், தோட்டத்தின் போஷாக்கை உத்தேசித்து ஒரு பெரிய கிணற்றை வெட்டி, மூன்று ஹார்ஸ் பவரில் அதற்கு ஒரு மோட்டார் பம்பும் போட்டிருந்தார்.
பறவைகளின் ஓசையும் தோட்டத்துத் தாவரங்கள் சலசலக்கும் சப்தமும், விடிகாலைக் காற்றும் பாக்கியத்தின் உள்ளத்தில் இனிய மகிழ்ச்சியைப் பரப்பன. அவ்வளவு சீக்கிரம் எழுந்து குளித்து விட்டுப் பாத்திரங்களைத் தேய்த்துக் கொண்டிருந்த அன்னபூரணியைப் பார்த்து ஆச்சரியப்பட்டாள் பாக்கியம்.
பத்து வருடங்களுக்கு முன்னால் கையில் ரகுநாதனைப் பி டித்துக் கொண்டு அவள் கொடுத்த வேலையையே ஏற்றுக் கொண்டு, என்று இந்த வீட்டில் காலெடுத்து வைத்தாலோ, அன்றிலிருந்து அன்னபூரணியின் வாழ்க்கைச் சக்கரம் இதே ரீதியில் தான் ஓடிக் கொண்டிருக்கிறது.
விடிகாலைக் குளியல், நெற்றியில் குங்குமம், ஓயாது, சலித்துக் கொள்ளாது அந்த வீட்டின் இயக்கத்திற்கு ஈடு கொடுத்தபடி  இதே மாதிரி தான் உழைத்துக் கொண்டிருக்கிறாள்.
வந்த போது வறுமையின் உக்கிரத்தால்  வற்றிக் காய்ந்திருந்த உடம்பல், இப்போது கொஞ்சம் சதை பிடித்திருக்கிறது.
அவளது வாழ்வே ஓரிடத்தில் ஸ்தம்பத்து நின்று விட்டது போல், அவளது உடம்பலும் முகத்திலும் எவ்வித உணாளச்சிகளும் அழகும் இருந்தனவோ, அவையே இன்னும் நிலைத்து நின்றிருந்தன.
இளமையில் அவள் இன்னும் அழகாயிருந்திருக்க வேண்டும். பளீரென்று கண்ணுக்கு உறைக்கிற மாதிரி அந்தச் சிவப்பும், இப்போது சாந்தமும் வைராக்கியமும் கலந்ததாக மாறி விட்ட முகமும், ஒரு மன நெகிழ்ச்சியை ஏற்படுத்தின.
இப்போது அவளுக்கு வயது நாற்பத்தி மூன்றோ என்னவோ லேசாகத் தலை நரை கண்டு விட்டது. முகத்திலோ உடம்பிலோ முதுமையின் தளாளச்சி இல்லை.
யந்திரம் கூட நாட்பட நாட்பட தேய்வுறும், பின்னமாகும். அன்னபூரணி அன்று போலவே இன்னும் இருக்கிறாள்.
ஒரு தவத்தினால் எய்திய சாதனை போல் அவளால் இன்னும் சளைக்காமல் உழைக்க முடிகிறது.
“அக்கா, காபி  பாத்திரம் துலக்கி ஆச்சா?’’
“ஓ. முன்னாலேயே தொலக்கி வச்சுட்டேன  பாக்கியம்!’’  என்று அவளைத் திரும்பி ப் பார்த்தவாறே சொன்னாள் அன்னபூரணி.
அன்னபூரணி அந்த வீட்டு மனுஷியாகி எவ்வளவோ நாளாகிறது. அவள் ஸ்தானத்திற்கு வேலைக்காரி என்று போள இருந்தாலும் அதைப் பாக்கியம் மறந்து விட்டாள்.
அந்த வீடே மறந்து விட்டது. ஆனால் அன்னபூரணிக்கு அது நினைவிருந்தது.
அந்த வீட்டின் மீது உண்மையான பாசம் நிலவிக் கொண்டிருந்த போதிலும் தனது ஸ்தானத்தின் எல்லைகளை அவள் மீறியதில்லை.
அவளால் அதை மறைக்க முடியாது.
வாழ்க்கை அவளை வீசியெறிந்த இடத்தில் விதியோடு அவள் இருபது வருஷங்களாக, துவந்த யுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் போது, எதைத் தான் மறந்து விட முடியும்?
பாத்திரத்தை எடுத்தவாறே “அக்கா நான் காப்ப அடுப்பை மூட்டி அவருக்கு காப்பி  கொண்டு போய் கொடுத்திட்டு வாசலைப் பெருக்கிடறேன். நீங்க வெந்நீலுள பாய்லரிலே தண்ணி படிச்சு நெருப்புப் போட்டுடுங்க!’’ என்றாள் பாக்கியம்.
“வாசலை நானே பெருக்கிடறேன், நீ எதுக்கம்மா?’’
“ஏன் அக்கா, நான் செய்யக் கூடாதா?’’
“அதில்லே இப்படி எல்லா வேலையிலேயும் பங்குக்கு வந்து வந்து பி டிங்கிக்கிறயேன்று தான்னு.’’
“”நல்ல கதையக்கா இது. ராப்பகலா கஷ்டப்பட்டு மாயறது நீங்க. ஏதோ ஊறுகாத் தொட்டுக்கிறாப்பே ஒண்ணு ரெண்டு காரியம் செய்யக் கூட விடமாட்டேன்னா’’ என்று சொல்லிக் கொண்டே உள்ளே போய் விட்டாள் பாக்கியம்.
பற்றுத்தேய்த்த பாத்திரங்களைப் பளிச்சென்று குழாயடியில் அலம்பக் கொண்டே, சிந்தனையில் ஆழ்ந்தாள் அன்னபூரணி.
“”கஷ்டங்கள்… உழைப்பு… எவ்வளவு சாமான்யமாக இருக்கு. இப்போ நெனச்சா? ரகு திடுதிடுன்னு வளந்து ப.ஈ க்கும் போயிட்டான். ஆச்சு இன்னும் ஒரு வருஷம்!’’ என்று அவளது நீண்ட கனவு கைவசமாவது, வெகு விரைவில் வருவது குறித்து அவள் மகிழ்ந்தாள்.
ஒரு பற்றுத் தேய்க்கும் வேலைக்காரி, பற்றுத் தேய்த்தே தன் மகனை எஞ்சினீயாள ஆக்கி விட்டாள் என்றால் அவளது மகிழ்ச்சிக்கு ஏது எல்லை? இடையில் அவள் பட்ட கஷ்டங்கள் அதன் முன்பு எம்மாத்திரம்.
அன்னபூரணி…
சென்ற இருபது வருஷங்களாக அவள் வேலைக்காரியாகத் தான் இருக்கிறாள்.
செல்வாக்கான பெரிய குடும்பத்தில் பி றந்தாள். தந்தை ஆரணியிலும் வேலூரிலும் பெரிய மண்டி வைத்து நடத்தியவர்.ஆயிரக் கணக்கில் பணம் புரளும்.
அவாள மிகவும் பெரும்பத்தான ஆசாமி. சாப்பாட்டுப் பி ரியாள.
வாழ்வை அதன் ரசம் அலுக்கும் வரை அனுபவித்தவாள.
மூதாதையார்சொத்து, மண்டி வருமானம் கரைவது அறியாமலேயே கரைந்தது.
அந்த நாளில் அன்னபூரணியின் இளமைப் பருவம், பக்தியிலும், படித்த புராணங்களின் ஆதர்ச நாயகிகளின் பெருமையிலுமே கழிந்தது. மார்கழி பி றந்தால் வீடே கொலு மண்டபமாகி விடும்.
விடியற்காலையிலிருந்தே ஆண்டாள் பாசுரங்களைப் படித்து, ஆண்டாள் இருந்த மாதிரியே முப்பது நாட்களும் விரதம் இருந்து, அம்மாதத்தைக் கொண்டாடுவாள்.
அந்த நாட்கள்… தெய்வீகக்களை ததும்பி ய அந்த வீட்டில் நோன்பருக்கும் பசுங்கிளி போல் அன்னபூரணி காத்த விரதம் யாவுமே வித்தியாசமானவை. அவளது கனவுகளில் ஸ்ரீ கிருஷ்ணனைப் போன்ற ஓர் உன்னதமான கணவனை அடைவதே லட்சியமாய் இருந்தது.
மனக் கோட்டைகள் எவ்வளவு வேதனைக்குரிய விதத்தில நகாளந்து போகின்றன! அன்னபூரணியின் தவமும் அப்படித் தான் ஆயிற்று.
அப்பாவின் வியாபாரக் கூட்டாளியாக இருந்த மனிதாள, அப்பாவுக்குத் தெரியாமலேயே பெருந் தொகையை ஏப்பமிட்டுவிட்டார்.
வியாபாரமும் மந்தமடைந்தது. சரக்கு போட்டுப் பணம் வாங்கிக் கொள்ளாதவாளகளும்,  ரொக்கமாகப் பணம் கொடுத்தவாளகளும் நெருக்கத் தொடங்கி விட்டார்கள்.
இன்றும் கூட ஒரு சம்பவம் பசுமை மாறாமல் அவர் நினைவில் பதிந்திருந்தது.
குடும்பத்தோடு எல்லோரும் ஊருக்குப் பக்கத்தில் உள்ள ஒரு சுனைக் கோயிலுக்குப் போய் விட்டிருக்கிறார்கள். அன்னபூரணியும் அவள் அத்தை ஒருத்தியும் மட்டும் தான் வீட்டில் இருப்பது.
கடன் கொடுத்தவர்கள் ஜப்தி வாரண்டுடன் வந்து கதவை இடிக்கிறார்கள். அத்தையோ ஒன்றும் தோன்றாமல் உள்ளுக்கும் வெளிக்கும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.
விஷயத்தை அறிந்த உறவினர்  ஒருவர் புழக்கடை வாசற் பக்கமாக வந்து நகை நட்டுக்களையும், ரொக்கப் பணத்தையும் எடுத்துக் கொடுத்து விடு என்று வற்புறுத்துகிறார்…
ஆண் துணை இல்லை. என்ன வழி என்றும் தோன்றவில்லை. அந்நேரத்தில் யார் எதைச் சொன்னாலும் செய்து விடும் மனோநிலையில் இருந்த அத்தை, அவர் கோரியபடியே நகைகளையும் ரொக்கப் பணத்தையும் ஒரு மூட்டையில் வாரிக் கட்டிக் கொடுத்து விட்டாள் அவரிடம்.
அவாள வெளியேறிய மறு நிமிஷமே கதவை உடைத்துக் கொண்டு ஜப்திக்காரர்கள் உள்ளே நுழைந்து விட்டனர்.
நகையோடும் ரொக்கத்தோடும் வெளியேறிய ஆசாமி,  பத்து வருஷங்களுக்கு அந்த ஊரிலேயே தலை காட்டவில்லை. தலை தூக்க முடியாத அளவு அன்னபூரணியின் வீடு வீழ்ந்தது.
கக்கத்தில் ஒரு குடையை இடுக்கிக் கொண்டு கீழ்ப்பாய்ச்சு வேஷ்டியுடனும், நெற்றியில் பளிச்சென்ற விபூதியுமாக அவளுடைய அப்பா கந்தசாமிப் பி ள்ளை, அன்றாட வாழ்க்கை வண்டி ஓடுவதற்காகக் கணக்கு எழுதுவதற்கு கடை கடையாக ஏறி இறங்கினார்.
அவளது திருமணம் பெரிய நம்பி க்கையாக இருந்தது. கடமையாக மாறிச் சுமையாக முடிந்தது. அன்னபூரணியின் இடைவிடாதபி ரார்த்தனை.
அவளது நோன்புகளும், விரதங்களும் அவளது பேதை இதயத்தின் மதுரமான பொற் கனவுகள் யாவும் இடிந்து நொறுங்கின.வந்ததே போதும் என்று அவளை தூரத்து உறவினர் ஒருவருக்குக் கொடுத்து விட்டார்கள்.
ஈஸ்வரமூர்த்தி அவன் பெயர். ஆள் ஒடிசலாகக் கறுப்பாக இருந்தான். கிராமத்தில் சொற்ப நிலம் இருந்தது.
ஆனால் விவசாயம் செய்யவில்லை. கிராமத்தில் பெரிய கடை ஒன்றில் கணக்கெழுதிக் கொண்டிருந்தான்; சாதுர்யமற்ற மனிதன்.
வானளாவும் ஆசைகள்;  பேராசைகள் மண்டிய இதயம். அது ஒன்று தான் அவனைப் பற்றிய விசேஷ அம்சம்.
பெரிய கோடீஸ்வரனாய் விட வேண்டுமென்றும், மகத்தான தொழில்களைச் செய்ய வேண்டும் என்றும், சில்லறைக் கடை கல்லாவில் உட்கார்ந்தவாறே கனவு காண்பான்.தனது உள்ளத்தில் பொங்கிக் குமுறிக் கொண்டிருந்த ஆசைகளின் மார்க்கம் தெரியாத பாதையில் ஈஸ்வரமூர்த்தி ஓடத் தலைப்பட்டான்.
நிலத்தை விற்று ரொக்கத்துட்ன சென்னைக்குச் சென்று தொழில் ஆரம்பி த்தான்.முன் பன் அனுபவமில்லாததால் வியாபாரம்,  மூன்றே மாதத்தில் படுத்தது.பக்கிரியாகத் திரும்பி  வந்தான். மனத்தின் ஆசைத் தீ தணியவில்லை. இப்படியே பல ஊர்கள், பல தொழில்கள்.
அன்னபூரணி வாழாவெட்டியைப் போலக் கணவன் வீட்டிலிருந்து கொண்டு, உறக்கமற்ற இரவுகளில் கேட்கும் சின்னஞ்சிறு ஓசையும் அவன் தானோ என்று தவித்துக் கொண்டிருப்பாள்.
ரகு அப்போது பிறந்து விட்டான். பணம், தொழில்  இவற்றின் தாக்கத்தால்  ஈஸ்வரமூர்த்திக்கு ஓர் இதயம் தனக்காக உருகித் தவித்துக் கிடப்பதும் அதன் அருமையும் தெரியவே இல்லை.
ஒரு தடவை மலேசியாவிலே பெரிய தொழில்கள் செய்ய முடியும் என்று யாரோ சொன்னதைக் கேட்டுப் புறப்பட்டுப் போனான்.
இருபது வருஷங்கள் ஆயின. இத்தனை வருஷமும் காட்டில் காய்ந்த நிலவைப் போல அவளது அழகும், உள்ளமும் அவனுக்காகவே காத்துக் காத்து வீணாயின.
ஒரே ஒரு கடிதம்!
மலேசியா போனவர் கள் யாரிடமிருந்தாவது ஒரு செய்தி!
அதற்காகத் தவித்தாள் அன்னபூரணி. அக்கம் பக்கத்து ஊர் களில் மலேஷியாவிலிருந்து யாராவது வந்தால், ரகுநாதனைத் தூக்கிக் கொண்டு ஓடுவாள். மலேஷியாவின் ஏதோ ஒரு மூலையிலிருந்து வந்த அவர் களால், அவளது ஆர் வமான கேள்விக்குப் பதில் சொல்ல முடியாது.
என்றோ ஒரு நாள் அவாள திரும்ப வருவார் என்ற நம்பி க்கை மட்டும் எவ்வாறோ மிஞ்சிற்று.
அண்ணன் தம்பி யென்று பேருக்கும் ஊருக்குமாக அவளுக்கு சகோதராளகள் இருந்தார்கள்.
அவரவர்  வாழ்க்கை… அவரவர்  வீடு அவரவர் கவலைகள் என்று இறுகி விட்ட மனசோடு பாராமுகமாகி விட்டார்கள்.
ரகுநாதனைப் படிக்க வைக்க வேண்டுமென்று அன்னபூரணி விரும்பி னாள். மாமனார் வீடு என்று சொல்லிக் கொள்ளவும், ஆதரவு தரவும் யாருமில்லாததால் பி றந்த வீட்டிற்கே வந்தாள்.
மனிதர்கள் எவ்வளவு அற்ப புத்தி படைத்தவர் கள் என்று அப்போது நிறையப் பார்த்து விட்டாள் அன்னபூரணி. பார்க்கப் பார்க்க அதிர்ச்சி உண்டாயிற்றே தவிர வெறுப்பு உண்டாகவில்லை.
அவள் சொந்த கைகளையே நம்பினாள் . ஊரில் இருந்த வரைக்கும் நெல் மிஷினில் கூலிக்காரி போல், தவிடு விட்டுக் கொண்டிருந்தாள்.
அண்ணன் தம்பி கள் மானம் போவதாக அரற்றிக் கொண்டதால், பக்கத்து வீட்டில் குடியிருந்த போஸ்ட்மாஸ்டர்  மனைவி சென்னைக்கு மாற்றலாகிப் போகும் போது, வீட்டோடு இருந்துவிட அழைத்தாள்.
ரகுநாதன் அவள் வாழ்க்கைக்கு பலம் தந்தான்.
அர்த்தமானான். தாய் உள்ளத்தின் பாய்மரம் உயர்ந்தது. ஈஸ்வரமூர்த்தியினால் கை விடப்பட்டு, உறவினரிடம் வாழாவெட்டி என்று பட்டம் சுமந்து, பிரேத மாய்த் திரிந்த அன்னபூரணி க்கு அலைகடலில் மிதந்து செல்ல, குழந்தை ரகுவின் எதிர்காலத்தைப் பற்றிய கனவுகள் உதித்தன.
போஸ்ட்மாஸ்டரின் மனைவி காசரோகம் வந்து காலமாய் விடவே, சென்னையில் தன்னந்தனியாக அனாதை போல் நின்றாள்.
முறைவாசல்… பற்றுப் பாத்திரம்... எத்தனையோ வீடுகள் அனாதைக்குத் தான் வாழ்வில் எதையும் ஏற்றுக் கொள்ளும் நெஞ்சுரம் வருகிறது.
ரகுநாதனைப் பெரிய டாக்டராகவோ என்ஜினியராகவோ ஆக்கிப் பார்த்து விட வேண்டுமென்ற ஆசை. கடைசியில் ஜஸ்டிஸ் ஆனந்தரங்கத்தின் வீடு அவளை வரவேற்றது.
அவரது சிபாரிசை பிடித்து ஓ அனாதை ஹாஸ்டலில் அவனைச் சேர் த்து விட்டாள்.
மேல்நிலைப் பள்ளிப் படிப்பு வரை ரகுநாதன் அந்த ஹாஸ்டலில் ..அம்மாவின் உழைப்பு தருகிற சௌகரியங்களில் தான் வாழ்ந்து வந்தான். படிக்கும் காலத்தில் சில டியூஷன்கள், பத்திரிகைகளுக்கு எழுதுவது இவற்றில் தன்னைச் சமாளித்துக் கொண்டு என்ஜினியரிங் காலேஜ் ஹாஸ்டலில் சேர்ந்தான்.
எப்படியோ அன்னபூரணி நினைத்ததை ச் சாதித்து வருகிறாள்.
பெரிய வைராக்கியத்துடன், அவள் தனக்குத் தானே விட்டுக் கொண்ட அந்த சவால் பூர்த்தியாக,  ஒரே ஒரு வருஷம் தான் பாக்கி.
காலை மணி ஆறரை.
ஆனந்தரங்கம்,  கீழ்ப்பாய்ச்சி ஒரு குடியானவனைப் போல் வேட்டி கட்டிக் கொண்டு தோட்டத்துக் கீரைப் பாத்திகளுக்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார்.
தோட்டத்துப் பம்பு  ஷெட்டிலிருந்து நீர் குதித்துத் குதித்துப் பாய்ந்து கொண்டிருந்தது. பொன் வெயிலின் கிரணங்கள் அந்த நீரில் பட்டு மின்னின.
ஆனந்தரங்கத்தின் தோட்டம் பெரியது தான்.  மாமரங்கள், கொய்யா, மரங்கள், தென்னை என்று சிறிய தோப்பாகக் கவிந்திருந்தது.
அதன் மத்தியில் ஒரு சிறு மண் வீடு,  மஞ்சம்புல் போர்த்தியது.  ஆசிரமம் மாதிரியிருக்கும். ஆனந்தரங்கம் தனது எதிர் காலத்திற்கென்று திட்டமிட்டு இந்த இடத்தை ஏற்பாடு செய்து வைத்ததைப் போல தோன்றும்.
“என்னங்க, என்னங்க?’’ என்று கூப்பி ட்டவாறே அருகில் வந்து நின்றாள் பாக்கியம்.
பம்ப் ஷெட்டின் ஓசையினாலும்,  வேலை மும்முரத்திலும் ஆனந்தரங்கத்தின் காதில் அது விழவில்லை.
பாக்கியம் இன்னொரு தடவை உரக்கக் கூப்பி ட்டாள்.
மண்வெட்டியோடு ஆனந்தரங்கம் நிமிர்ந்தார்.
“என்ன பாக்கியம்?’’
“அப்பா, இப்பவாவது காதிலே விழுந்ததே, ஆமாம்! மணி என்ன ஆச்சுன்னு நெனைச்சுட்டு நீங்க தோட்டத்திலே வந்து எறங்கிட்டீங்க?’’
“மணி என்ன?’’
“ஆறரை மேலே ஆகிறது!’’
“ஆறரை தானே!’’
“சரி தான், இன்னிக்குக் கோர்ட்டுக்குப் போறதுக்கு முன்னே எழும்பூரிலே யாரையோ போய் பார்க்கணுன்னு சொன்னீங்களே?’’
“ஓ. நல்ல காலம், ஞாபகப் படுத்தினே, பாக்கியம் தோட்டக்காரன் வந்துட்டானா?’’ என்று கேட்டவாறே மண்வெட்டியை வைத்து விட்டு பம்ப் ஷெட்டை நோக்கி நடந்தார் ஆனந்தரங்கம்.
வாயைக் கொப்பளித்து முகம் கழுவிக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தார்.
வாசலில் நின்ற வேலைக்காரன் “சார் யாரோ பார்க்க வந்திருக்காங்க’’ என்றான்.
“யாரது?’’ என்று அவர் கேட்பதற்குள் காதில் கடுக்கன் அணிந்த ஒரு பெரியவர் கும்பி டு போட்டவாறே உள்ளே நுழைந்தார்.
அவருடன் கூட வந்த ஒரு இளம் பெண் தங்கச்சிலை  மாதிரி கண்களிலும் உதடுகளிலும் கருணை கோரும் ஒரு தீனப்பார்வையோடு சற்றும் எதிர்பாராமல் அவர் கால்களில் வந்து விழுந்தாள்.[தொடரும்]