Saturday, 16 May 2015

ஜெயகாந்தனுக்கு அஞ்சலி 7

ஜெயகாந்தனின் பெண்கள்
எம்.ஏ.சுசீலா

ஜெயகாந்தனின் அக்கினிப்பிரவேசம் வெளிவந்து சமூகத்தில் பலத்த அதிர்வலைகளை, எதிர்வினைகளை ஏற்படுத்திக்கொண்டிருந்த ’60களின் பிற்பகுதி. மதுரை என் சி பி எச் மாடியில் ஒரு காரசாரமான கூட்டம்; ஜே கே முன்னிலையிலேயே அந்தப்படைப்பைக் கடுமையாகத் தாக்கி வசைமாரி பொழிந்தபடி, கெட்டுப்போன பெண்ணை அவர் நியாயப்படுத்துவதாக பலத்த விவாதங்கள்…
ஜெயகாந்தன் எழுந்தார்.
“நீங்கள் எல்லோரும் அந்தப் பெண்ணின் இடத்தில் உங்கள் மனைவியை வைத்துப்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள், அதனால்தான் ஒருவேளை அப்படிப்பட்ட ஒரு பெண்ணை நம் தலையிலும் கட்டியிருப்பார்களோ என்ற சந்தேகம் உங்களுக்குள் எழுகிறது, சினமும் வருகிறது. அதே இடத்தில் உங்கள் மகளை வைத்துப்பாருங்கள்,நியாயம் புரியும் என்றார்”
அதுதான் ஜே கே.
சமூகத்தின் எந்தப் படிநிலையில் இருந்தாலும் எந்தத் தொழில் புரிந்தாலும் எந்தப்பெண்ணையும் கிஞ்சித்தும் சிறுமை செய்யத் தலைப்படாதவை ஜே கேயின் எழுத்துக்கள். அதே போலப் பரிவுக்கும் இரக்கத்துக்கும் பாதுகாப்புக்கும் உரிய ஒரு ஜீவனாக மட்டுமே எண்ணியபடி ஆணை விட ஒரு படி அவளைத் தரம் தாழ்த்தி விடாமலிருப்பதிலும் கவனமாக இருப்பவை; அவளுக்கென்ற தனித்த கம்பீரமான ஆளுமையை வழங்கத் தவறாதவை. சில நேரங்களில் சில மனிதர்களின் ‘கங்கா’, நடிகையான ‘கல்யாணி’ , சுந்தர காண்டத்தின் ‘சீதா’ , ’தவறுகள் குற்றங்கள் அல்ல’ சிறுகதையில் தன்னிடம் தவறாக நடக்க முற்பட்ட மேலதிகாரிக்குப் பெருந்தன்மையோடு மன்னிப்பு வழங்கும் ஸ்டெனோ தெரஸா, கணவனின் அந்தரங்கத்தை மதித்து ஏற்கும் ‘அந்தரங்கம் புனிதமானது’ கதையின் ரமணியம்மா என்று படித்த பெண்கள் மட்டுமல்லாமல் விதவைப் பேத்தியின் மறுமணத்துக்கு முழு மனதோடு ஒப்புதல் வழங்கும் ‘யுகசந்தி’யின் பழைய தலைமுறைப் பாட்டியும், பிரளயத்தின் சேரிப்பெண்ணான பாப்பாத்தியும் கூடத் தனி மிடுக்கோடு தங்களுக்கென்று சொந்தமான ஓர் அபிப்பிராயத்தோடு இருப்பவர்களே..

முழுமையான தனித்த ஆளுமை கொண்ட பெண்களின் பிரதிநிதியாகவே உருவாக்கப்பட்டிருப்பவள் ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ நாவலின் கல்யாணி; ரங்கா மீது தான் வைத்திருக்கும் உண்மையான அன்பைப் போலி வார்த்தையும் பாசாங்கான பசப்புமொழிகளும் பேசினால்தான் தக்க வைத்துக்கொள்ள முடியும் என்ற உண்மை புரிய வந்தாலும் அதை ஏற்காமல்… நிஜ வாழ்வில் நடிக்க மறுப்பவள்;அந்த உறவே முறிந்தாலும் கூடப்பொருட்படுத்தாமல் அன்பிலும் உறவிலும் முழுச்சுதந்திரத்தை நாடுபவள்.

அடிமட்ட வாழ்க்கையில் கூலி வேலை செய்து உழலும் பெண்ணானாலும் உடலை விற்றுப்பிழைக்கும் தொழிலுக்குத் தள்ளப்பட்ட பெண்ணானாலும் தங்களுக்கென்று வகுத்துக்கொண்டிருக்கும் நியாயமும் தர்மமும் உள்ளவர்களாகவே அவர்கள் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். ’சினிமாவுக்குப்போன சித்தாள்’ பெண் திரை நடிகரைப்பார்த்து மயங்கிப்போவது ஒரு புறம் இருந்தாலும் சூழ்நிலை காரணமாக விபசார விடுதிக்குத் தள்ளப்பட்ட பின், கணவனிடம் வரவே கூசுகிறாள்;அவனோடு வாழும் தகுதி தனக்கில்லையென்று நினைக்கிறாள், அவள் அளவில் அதுவே அவள் வரித்துக்கொண்ட தர்மம். கணவன் சிறைக்குப்போன நிலையில் இன்னொருவனுடன் கூடி வாழ்ந்தாலும் தன் குருட்டு மனைவியை அவன் படுத்தும் பாட்டைக்கண்டு பொங்கியெழுந்து அவளுக்குக் கருணையுடன் சோறூட்டுகிறாள் ‘பிரளயம்’ பச்சிம்மா.

விதவை என்றால் மறுமணம்தான் தீர்வு என்பதல்ல, மறுமணத்தை ஏற்பதும் மறுப்பதும் அவள் உரிமை என்பதை அழுத்தமாய்ச் சொல்ல ஒரே வாதத்தின் இருவேறு தரப்புக்களை முன்னெடுக்கும் இரு சிறுகதைகள்…,பேரன் பேத்தி எடுத்தபின் கருவுற்ற முதிய பெண் அதற்காகக் கூசி ஒடுங்கிப்போகும்போது, உறவினரெல்லாம் அதற்காகவே அவளைச்சிறுமை செய்யும்போது எங்கிருதோ வந்த அயல்நாட்டவள் வழி அந்தப்பெண் மீது வெள்ளமாய்ப் பொழிய விடும் கருணைப்பிரவாகம், ‘இருளைத் தேடி’ ஒதுங்கும் பெண்கள் நிர்வாண ஓவியத்துக்கு ‘மாடல்’ ஆன போதும், விலைமகள் வாழ்வில் சபிக்கப்பட்டபோதும் மனிதம் ஒன்றையே மையப்படுத்தும் மானுடநேயம், ஜன்னலில் காத்திருந்தே முதிர்கன்னியின் வாழ்க்கைப்பார்வை என்று பல வகைமாதிரியான ஜெயகாந்தனின் பெண்பாத்திரங்கள்!!

தான் ஆண் என்ற மேட்டிமைத்தனம் சிறிதும் இன்றி “கணவன் என்றும் காதலன் என்றும் சகோதரன் என்றும் தந்தை என்றும் உன்னைச்சுற்றியுள்ள எல்லா ஆண்களுமே இராவணர்கள் மட்டுமே” என்று ‘சுந்தர காண்டம்’ நாவலின் முன்னுரையில் பிரகடனம் செய்த ஒரே ஆண்படைப்பாளி தமிழ் இலக்கியப்பரப்பில் ஜே கே ஒருவர் மட்டுமே..

ஜெயகாந்தன் எழுத்திலிருந்து சிறிது சிறிதாக விட்டு விலகிக்கொண்டிருந்த காலம், அப்போது தன்னிடம் எழுத்து குறித்த ஆலோசனை பெற வந்த ஒரு இளம் எழுத்தாளரிடம்,“எப்போது எந்தப்பெண்ணை உங்கள் படைப்பில் உருவாக்கினாலும் அவளை உங்கள் உங்கள் மகள் நிலையில் வைத்து மட்டுமே உருவாக்குங்கள்”என்று ஜே கே குறிப்பிட்டதாகச் சொல்வார்கள்.

சமகாலச்சூழலில் இன்றைய இலக்கியத்தில் பெண்கள் எவ்வாறு படைக்கப்பட வேண்டும் என்பதற்குத் தன் புனைவுகள் மூலம் பாடம் சொல்லியிருக்கும் ஜே கே தன் சொற்கள் மூலமும் பாடம் சொல்லியிருக்கிறார் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.. பெண்ணை விரசமாக ஆபாசமாக அருவருப்பான வருணனைகளுக்காக மட்டுமே பயன்கொள்ளும் படைப்பாளிகள் ஜே கேயிடம் பயில வேண்டிய பண்பு இது….

“நான், எவ்வளவு கேவலமான விஷயங்களை மிகப்பரந்த அளவுக்குள் சித்தரிக்க முயன்றாலும், அதில் பொதிந்துள்ள சிறப்பானதும், உயர்வானதும், வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுப்பதுமான ஒரு மகத்தான மனிதப்பண்புக்கு வலுமிக்க அழுத்தம் கொடுத்து வாழ்க்கையின் புகழையே பாடுகிறேன்……ஆழ்ந்து ஆழ்ந்து பார்க்கின்ற ஒரு பக்குவம்வந்து விட்டால் எல்லாவற்றுக்குள்ளும் ஒரு மகத்துவம் துயில்வதை தரிசிக்க முடியும்” என்று தனது நூல் முன்னுரை ஒன்றில் குறிப்பிடுவார் ஜே.கே.

அழுக்கும், அசிங்கமுமான களங்களை அவர் தேர்ந்து கொண்டாலும் அவற்றுக்குள் உறைந்து, உட்பொதிந்து கிடக்கும் உன்னதச் செய்தியை அவை உலகுக்குப் பறைசாற்றின. நாசகாரி ஏவுகணைகளைப்போன்ற நச்சு இலக்கியங்களை-படிக்கக்கூசும் விரசங்களை,சமூகக்கட்டமைவுக்கு இன்றியமையாத அடிப்படைகளை மீறுவதை நியாயப்படுத்தும் நிலைப்பாடுகளை அவை ஒருபோதும் கொண்டிருந்ததில்லை.எதற்காகவும் எவற்றோடும் சமரசம் செய்துகொள்ள முயலாத ஜே.கேயைப் போன்றவையே அவரது எழுத்துக்கள்.

தான் உணர்ந்து தெளிந்தவற்றை, தான் கொட்ட நினைத்ததைக் கொட்டிவிட்டு ஒரு கட்டத்திற்குப்பிறகு எழுதுவதை நிறுத்தியும்,குறைத்தும் கொண்டவர் அவர். சுய தூண்டுதலும், உண்மையான அக எழுச்சியும் இல்லாத எழுத்துக்களை வாசகர்களின் வற்புறுத்தலுக்காகவோ, பிற எந்தப்புறக்காரணத்துக்காகவோ, படைப்புக்களின் எண்ணிக்கையைக் கூட்டுவதற்காகவோ என்றுமே அவர் கைக்கொண்டதில்லை; எந்தச்சீண்டல்களுக்கும் பணிந்து போய் விடாமல், அகத்தின் கட்டளைக்கு மட்டுமே செவிகொடுக்கும் அரியதொரு படைப்பாளியான ஜே.கேயைப் போன்ற எழுத்தாளரை அபூர்வமாகத்தான் இந்த மண்ணும்,மனிதர்களும் எதிர்ப்படுகிறார்கள்.அவர் காலத்தில் வாழ நேர்ந்ததில் நாம்தான் பெருமை கொள்ள வேண்டும்.

நன்றி:சொல்வனம் 


Friday, 8 May 2015

ஜெயகாந்தனுக்கு அஞ்சலி 6

ஒரு மனிதன் ஒரு இலக்கியவாதி ஒரு உலகம்
(சென்னை அடையாரில் இருந்து வெளி வரும் “அன்பு பாலம்” சிறு பத்திரிக்கையின் மே2008 இதழ் ஜெயகாந்தன் பவள விழாவின் இரண்டாவது பகுதியாக வந்தது. அதில் அவரைப் பற்றிய எனது கட்டுரை)
கண்டதைச் சொல்லுகிறேன் -உங்கள்
கதையைச் சொல்லுகிறேன்- இதைக்
காணவும் கண்டு நாணவும்- உமக்குக்
காரணம் உண்டென்றால்                        
அவமானம் எனக்குண்டோ?
ஆனந்த விகடனில் வெளிவந்த ‘சொல்’ என்னும் கவிதையை “சில நேரங்களில் சில மனிதர்கள் என்னும் திரைப்படத்துக்காக ஜெயகாந்தன் பாடலாக்கினார். ஜெயகாந்தன் என்னும் தனி மனிதனைப் புரிந்து கொள்ள இந்தப் பதிவு உதவும்.
ஒரு படைப்பாளிக்குள் மிகவும் நாசூக்கான ஒரு இதயம் நிறைய விழுப்புண்களுடன் தழும்புகளுடன் தத்தளிக்கும். ஒரே கல்லில் இடறினாலும் நகக் கண்ணில் உயிர் போகிற வலி வருவது போல் சொந்த வாழ்க்கையிலும் பிறர் ஏற்படுத்தும் காயங்கள் படைப்பாளியின் சொரணையால் மிக ஆழமானதாய் விழும். உலகெங்கும் ஆகச் சிறந்த படைப்பாளிகள் தற்கொலை செய்து மாய்ந்தனர். இன்னும் பலரும் எழுதுவதை விட்டு ஒதுங்கினர். வேறு பலர் மன அழுத்தத்துடன் மங்கி மடிந்தனர். இன்னும் அது நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.
கும்பிடச் சொல்லுகிறேன்- உங்களை
கும்பிட்டுச் சொல்லுகிறேன்-என்னை
நம்பவும் நம்பி அன்பினில் தோயவும்
நம்பிக்கை இல்லையென்றால் எனக்கொரு
தம்பிடி நஷ்டமுண்டோ?
என கர்வமுடன் நிமிர்ந்து நிற்கும் ஆளுமை ஜெயகாந்தனுடையது. அவரால் எப்போதும் தலை நிமிர்ந்து தன் குரலை உயர்த்த இயன்றது. திருச்சியில் ஒரு விவாத மேடையில் தந்தை பெரியார் மகாபாரதத்தைக் கிழிகிழி என்று கிழித்து அமர்ந்த போது, சற்றும் தயங்காது இந்தியப் பண்பாட்டுக் கூறுகள் பற்றிய அழுத்தந் திருத்தமான ஒரு சொற்பொழிவாற்றினார் ஜெயகாந்தன்.
எந்தை, தந்தை, தந்தை தம் மூத்தப்பன் என்னும் பாரம்பரியம் பற்றிய பெருமிதம் அவருடையது. அதே சமயம் அந்தப் பாரம்பரியத்தைப் பற்றிய விமர்சனங்களை அவர் பதிவு செய்து கொண்டிருந்தார். அரசியலிலும் தாம் இணைந்த கட்சியின் செயற்பாடுகள் தமக்கு ஒத்து வர வில்லையென்றால் விமர்சிக்கவும் விலகித் தனியே நிமிர்ந்து நிற்கவும் அவர் தயங்கியதே இல்லை.
ஒரு இலக்கியவாதி
சிறுகதை, நவீனம், கவிதை, திரைக்கதை, கட்டுரைகள் எனப் பல்வேறு தளங்களில் தமது ஆற்றலை வெளிப்படுத்தினார். அவரது சிறுகதைகளும், கட்டுரைகளும் கூர்மைக்காகவும் அவரது நாவல்களும் திரைப்படங்களும் பாத்திரச் சித்தரிப்புக்காகவும் போற்றிக் கொண்டாடப் பட்டன.
புதுமைப் பித்தனை இன்று வாசித்தாலும் அவருடைய கால கட்டத்தில் எப்படி இத்தனை தனித்தன்மையும் புதுமையும் கற்பனையும் அவரிடம் வெளிப்பட்டன என்ற பிரமிப்பு ஏற்படும். அதுவே ஜெயகாந்தனுக்கும் பொருந்தும்.
பின்னாளில் “சில நேரங்களில் சில மனிதர்கள்” என்னும் நாவலாய் சினிமாவாய் வெளிவந்ததன் மூலக் கதையான சிறுகதை “அக்கினிப் பிரவேசம்” . பதினாறு பதினேழு வயதுச் சிறுமி இதே தொழிலாக இருந்த பணக்கார வாலிபனிடம் தனது கன்னித்தன்மையை இழந்து, தாயிடம் சொல்லி அழுகிறாள். ஒரு சொம்புத் தண்ணீரால் அவளைக் குளிப்பாட்டி ‘இது கங்கை உன்னைப் புனிதப் படுத்தும் ‘ என ஆறுதலிக்கிறாள் தாய்.
‘சிலுவை’ என்னும் கதையில் ஒரு பயணத்தின் போது ஒரு குடும்பப் பெண்ணை கவனித்து வரும் கிறித்துவப் பெண் துறவி அன்று மாலை பாதிரியாரிடம் தான் துறவு மேற் கொண்டது பாவம் என்று குறிப்பிட்டுப் பாவ மன்னிப்புக் கேட்கிறார். “உண்மை சுடும்” என்னும் சிறுகதையில் தன் தந்தையின் குறை நிறைகளைப் புரிந்து கொள்கிறார் மகன். நாம் பீடத்தில் வைத்தவர்களை, வைத்தவற்றை, சாதி, மத, இன, நம்பிக்கை தொடர்பான முத்திரைகளை அகற்றி ஒரு நிதர்சனத்துக்கு நம்மை இட்டுச் செல்கிறார்.
காதலுடன் இள வயது எஜமானனிடம் தன்னை இழக்கும் இளவயது வேலைக்காரி. கையில் பணத்தைத் திணித்து அவளைக் கொச்சைப் படுத்தியதற்காகக் கழிவிரக்கம் கொள்கிறார் ஒருவர் ‘திரஸ்காரம்’ கதையில்.
இரண்டாம் மனைவியுடன் பகற்பொழுதில் தனித்திருப்பதற்காகப் பையனை ‘மேட்னி ஷோ’வுக்கு அனுப்பும் தந்தை கதவைத் திறக்கும் போது “படம் “அடல்ட்ஸ் ஒன்லி” நான் பார்க்கவில்லை’ என்று கதவருகே நிற்கிறான் மகன். மணமான புதிதில் மனைவி ஒத்துழைக்கவில்லை என்று பழகிய விலை மாதுவிடம் போகும் இளைஞனை ‘புது செருப்பு கடிக்கும்’ என அவள் திருப்பி அனுப்புகிறாள். கதையும் தலைப்பு அதுவே. முதிர்கன்னி ஒருத்தி ஜன்னலருகே என்ன எண்ண ஓட்டங்களுடன் இருக்கிறாள் என விரியும் “நான் ஜன்னலருகே”. “ஒரு பிடி சோறு” வறுமை பற்றிய ஆகச் சிறந்த படைப்பு.
உலகின் வக்கிரங்கள், வன்மங்கள், குரூரங்கள், கோழைத்தனங்கள் இவை யாவையும் அவரது கதாபாத்திரங்கள் வாயிலாக விமர்சிக்கப் படுகின்றன. வெளிச்சப் படுத்தப் படுகின்றன.
ஜெயகாந்தனின் நாவல்கள் இருவிதமானவை. ஒன்று படித்தவர்களின் உலகத்தைப் பற்றியது. மற்றது வறிய கல்வியற்றவர்களின் உலகம். ஆனால் தனி மனிதன், சமூகம், தேசம் என்னு வரையறைகளைத் தாண்டிய ஒரு புதினம் “ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்’ . தமிழின் ஆகச் சிறந்த ஐந்து நாவல்கள் எனத் தெரிவு செய்தால் இது அவற்றுள் ஒன்றாகும். ‘கோகிலா என்ன செய்து விட்டாள்?’, “பாரிஸுக்குப் போ”, “ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்”, “ரிஷிமூலம்”, “சில நேரங்களில் சில மனிதர்கள்” ஆகிய நாவல்கள் பெரிதும் படித்தவர் உலகத்தைப் பிரதிபலிப்பவை. “சினிமாவுக்குப் போன சித்தாளு”, “உன்னைப் போல் ஒருவன்”, தலித்துகள் பற்றிய அபூர்வமான பதிவுகள். “ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்” நாவலில் வரும் ஹென்றியும் கிராமமும் இந்திய மண்ணின் பண்பாட்டுக் கூறுகளை ஆழமாகப் பதிவு செய்வது.
ஒரு உலகம்
ஜெயகாந்தன் என்னும் தனி உலகம் (தீவு அல்ல) மற்றும் வாசகர்கள் என்னும் பிரிதொரு உலகம் இவை இரண்டின் பாலங்களாக அமைந்தவையே அவரது படைப்புகள், திரைப்படங்கள்.
‘என் உலகம் வேறு – உன் உலகம் வேறு’ என்று குழப்பமே இல்லாமல் தான் அவர் உரை நிகழ்த்துகிறார். எழுதினார். நண்பர்களுடன் பேசுகிறார். தமது உலகம் பிறருக்கான சமாதானங்கள் எதையும் கொண்டிருக்கத் தேவையில்லை என்று அவருக்குத் தெரியும். மனித நேயமுண்டு, சமுதாயத்தின் மீது அக்கறையுமுண்டு, பண்பாடு பற்றிய புரிதலும் பெருமிதமும் உண்டு. ஆனாலும் அவர் தமது உலகத்தில் இருந்து கொண்டு நம் அருகில் இருக்கிறார். ஆனால் நம்முள் இல்லை.
சுமார் பத்து வருடங்கள் முன்பு குமுதம் இதழ் ஒன்றைத் தயாரித்த போது புகையிலை, கஞ்சா இவை தமக்குத் தீண்டத் தகாத பொருட்கள் அல்ல என வெளிப்படையாகப் பதிவு செய்தார். அவர் ஒரு திறந்த புத்தகம். ஒரு குடும்பஸ்தனாக இருந்தும் பொருள் தேடி குடும்பத்தை நிலை நிறுத்தப் பெரு முயற்சிகள் எடுத்தவர் அல்லர் அவர். பல பத்திரிக்கைகளைத் தொடங்கி நடத்தி இருக்கிறார். அவை நின்று போயின. ஆயினும் அவர் இலக்கியப் பணி என்றும் தொடர்கிறது.
ஜெயகாந்தன் என்னும் ஒரு மனிதனை, இலக்கியவாதியை உள்ளடக்கிய ஜெயகாந்தன் என்னும் உலகம் மிக விரிந்தது. தமிழ் மண்ணின் பெருமை மிக்க அடையாளமாய் என்றும் இருக்கும்.
-சத்தியானந்தன் 

Thursday, 7 May 2015

மாறுதலான ஒரு மலையாளப்படம்அரபி கத

- மலையாளத் திரைப்படம்  

இயக்கம் : லால்ஜோஸ்
எழுத்து : இக்பால்

கம்யூனிசத்தை நேசித்து வாழ்க்கையாக ஏற்றுக்கொண்ட ஒரு சாதாரண கம்யூனிஸ்ட் கடைசிவரை கம்யூனிஸ்டாகவே வாழ்ந்து இறந்து போகிறான்….. ஏனெனில் அவன் படித்த சித்தாந்தங்களை அப்படியே நம்புகிறவன்… பணமோ, பதவியோ, புகழோ அவனை எதுவும் மாற்றி விடாது என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்கிறது ‘’அரபி கத’’ திரைப்படம்…

செம்மனூரில் வசிக்கிறார்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரப் பொறுப்பாளர்கள் சொஸைட்டி கோபாலனும் (நெடுமுடி வேணு), அவரது மகன் முகுந்தனும் (ஸ்ரீனிவாசன்)…. கட்சி புத்தகங்களையும், கொள்கைகளையும் தவிர வேறெதையும் மகனுக்காக சேர்த்து வைக்கவில்லை கோபாலன்… ஊருக்குள் சாலை போடுவதில் ஆரம்பித்து, பெரிய நிறுவனங்களை இழுத்து மூடுவது வரை சளைக்காமல் போராடிக் கொண்டே இருக்கிறார்கள்… திருவனந்தபுரத்தில் இருக்கும் குஞ்சுண்ணியின் (ஜெகதி) சுகர் ஃபேக்டரியையும் இழுத்து மூடுகிறார்கள்…

திருமணம் செய்து கொண்டால் கட்சி வேலைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என திருமணம் செய்து கொள்ளாமலே இருக்கிறார் முகுந்தன்…. முடிந்தால் கியூபாவில் உள்ள பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என அப்பாவிடம் சொல்கிறார்….. திடீரென ஒருநாள் கோபாலனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகிறது… அந்த நேரத்தில் கட்சியில் மாநிலப் பொறுப்பில் இருக்கும் கருணாகரன் கட்சிப் பணத்தை தன் சொந்த செலவிற்கு எடுத்துக் கொள்கிறார். அவருக்கு வங்கி மேலாளரும், சுகர் ஃபேக்டரி முதலாளி குஞ்சுண்ணியும் உதவி செய்கிறார்கள்… கோபாலன் தான் பணத்தை எடுத்ததாக சொல்லி அவரை கட்சியில் இருந்து நீக்குகிறார்கள்… கோபாலன் இறந்து போகிறார்… அவர் எடுத்த பணத்தை முகுந்தன் திருப்பித் தர வேண்டும் என கட்சி தீர்மானம் நிறைவேற்றுகிறது…
சாயக்கடை நடத்திவரும் முகுந்தனால் அவ்வளவு பணத்தை கொடுக்க முடியாமல் தடுமாறுகிறார்… துபாய்க்கு போனால் பணம் சம்பாதிக்கலாம் என கட்சியில் நண்பர்கள் சொல்கிறார்கள்…. துபாயில் இருந்து ஊருக்கு வருபவர்களை ‘’பூர்ஷ்வா’’என்று அழைக்கும் முகுந்தனுக்கு துபாய் போக மனம் ஒப்பவில்லை… சீனாவுக்கோ, கியூபாவுக்கோ போகட்டுமா என்று கேட்கிறார்.. கடைசியில் வேறு வழியின்றி துபாய் செல்கிறார்.. துபாயில் இருக்கும் மலையாள தொழிலாளர்களிடம் கட்சியை பலப்படுத்தும் வேலையை செய்யலாம் என சொல்லி சமாதானப்படுத்தி முகுந்தனை துபாய் அனுப்பி வைக்கிறார்கள்…

வேலைக்கு ஆட்களை சப்ளை செய்யும் குஞ்சுண்ணியின்(ஜெகதி) நிறுவனத்தில் தான் தனக்கு வேலை என்பது அங்கு சென்றபிறகே, முகுந்தனுக்கு தெரிய வருகிறது… பனிரெண்டு மணிநேர வேலை, சரியான தங்குமிடம் இல்லாதது என அங்கிருக்கும் குறைகளோடு குஞ்சுண்ணியை சந்திக்க, வேலை பறிபோகிறது.. தொடர்ந்து வேலைக்கான அலைச்சல், பசி என கடக்கிறது முகுந்தனின் நாட்கள்.. கடைசியில் மலபாரைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவரின் ரெஸ்டாரெண்டில் வேலைக்கு சேர்கிறார் முகுந்தன்… அவருக்கு வரும் முதல் கஸ்டமர் ‘’கோககோலா’’ கேட்க, கோககோலாவுக்கு எதிராக கேரளாவில் நடத்திய போராட்டங்கள் முகுந்தனுக்கு நினைவு வருகிறது.. அந்த ஆர்டரை எடுக்க முடியாது என மறுக்கிறார்… முதலாளி பாய் சிரித்தபடியே, கம்யூனிஸ்டா என கேட்கிறார்….

இதற்கிடையில், சீனப்பெண் ஒருவரோடு முகுந்தனுக்கு நட்பு கிடைக்கிறது.. அவள் சீனா என்று சொன்னதும், முகுந்தனுக்கு அவளை பிடித்து விடுகிறது.. அவளோடு மாவோ பற்றியும், கிருஷ்ணபிள்ளை, ஏகேஜி பற்றியும் பேசுகிறார்… அச்சுதானந்தனுக்கும் ,பினராயிக்கும் எதுவும் சண்டை இல்லை என அவளை நம்பவைக்க முயற்சி செய்கிறார்… ஆனால் அவளுக்கு சீன மொழி தவிர வேறு எதுவும் தெரியவில்லை.. ஆனால் அவள் கம்யூனிஸ்டுகள் என்ற வார்த்தையை கேட்டாலே வெறுப்படைகிறாள்… தங்கும் இடத்தில் வாடகை தராமல் அவள் வெளியேற்றப்பட தனக்குத் தெரிந்த நர்ஸ் மாயாவோடு அவளை தங்க வைக்கிறார் முகுந்தன்,,,

ஊரில் கட்சிக் கடனை அடைக்க, பத்து லட்ச ரூபாய் சீட்டு சேருகிறார்… சீட்டு நடத்தும் ஜெயசூரியா பணத்தை முகுந்தனுக்கு தராமல் ஏமாற்றி விட்டு சீனப்பெண் மீது பழிபோடுகிறார்.. இதற்கிடையில் ரெஸ்டாரெண்ட் நடத்தும் பாய் தன் இடத்தை உரிமையாளர் கேட்பதாக கூறிவிட்டு ஊருக்கு கிளம்புகிறார்… முகுந்தனின் வேலை போகிறது… 

இந்த இடத்தில் படம் மூன்றாண்டுகளுக்கு பிறகு தொடங்குகிறது… செங்கன்னூரில் முகுந்தனின் தோழர்களுக்கு கோபாலன் பணத்தை எடுக்கவில்லை என்கிற உண்மை தெரிகிறது.. பணத்தை எடுத்த கருணாகரன் அமைச்சர் ஆகிவிடுகிறார்… அவருக்கு எதிராக போராட வேண்டும் என முகுந்தனின் நண்பன் அன்வர் (இந்திரஜித்) சொல்ல… கட்சித் தொண்டர்களே அதிகாரம் கையில் இருக்கும் அமைச்சருக்கு எதிராக போராட மறுக்கிறார்கள்… நியாயத்தின் பக்கம் மூன்று, நான்கு பேர் மட்டுமே மிஞ்சுகிறார்கள்…

எங்கிருக்கிறார் எனத் தெரியாமல் போன முகுந்தனைத் தேடி, துபாய் செல்கிறார் அன்வர்… அங்கு துபாயின் வெளிப்புற நகர் ஒன்றில் பண்ணையாளாக முகுந்தனை கண்டுபிடிக்கிறார்… அப்போது தான் தானும், தன் அப்பாவும் வஞ்சிக்கப்பட்டது முகுந்தனுக்கு தெரிய வருகிறது… அரபு மலையாளிகள் ஏற்பாடு செய்யும் விழாவிற்கு வருகை தந்து பெண்கள், மது என கூத்தடிக்கும் கருணாகரனை ஷூட் செய்கிறார்கள்… அவர்களை பாலைவனத்தில் விட்டுப்போவது என அதெல்லாம் சினிமா…

கிளைமாக்ஸில் சீனப்பெண் தன்னை ஏமாற்றவில்லை என முகுந்தனுக்கு தெரிய வருகிறது… சீன கம்யூனிஸ்ட் அரசை எதிர்த்ததால் மோசமாக தாக்கப்பட்டிருக்கும் தன் காதலனை குணப்படுத்தவே அவள் துபாய் வந்ததும், அவள் கம்யூனிஸ்டுகளை வெறுப்பவள் என்பதும் தெரிய வருகிறது… தன் அத்தனை நாள் சேமிப்பையும் அவளது காதலனின் மருத்துவச் செலவிற்காக தருகிறார் முகுந்தன்… அவள் மறுக்க, ‘’தேவைக்கு அதிகமாக ஒரு கம்யூனிஸ்ட் பணம் வைத்துக் கொள்ளக் கூடாது’’ என சொல்கிறார் முகுந்தன்… அவர் அவளை நேசிக்கவில்லை, அவள் வழியே சீனாவை நேசித்ததாக சொல்கிறார்…

மீண்டும் அன்வரோடு செம்மஞ்சேரி வரும் அவரை வரவேற்க கம்யூனிசத்தை இன்னமும் நம்பும் எளிய தொண்டர்கள் காத்திருக்கிறார்கள்… இன்குலாப் சிந்தாபாத்தோடு படம் முடிகிறது… கேரளாவில் மார்க்சிஸ்டின் தலைவர்கள் தடம் மாறிப்போன கதை, தொண்டர்கள் இன்னமும் மார்க்சியத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கை, வளைகுடா நாடுகளில் அடிப்படை வேலைகளுக்காக போகும் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலை எல்லாவற்றையும் மிக விரிவாகவே பேசுகிறது படம்…

இன்னொரு மொழிபேசும் தேசத்தில் முகுந்தனுக்கு துரோகம் செய்பவர்கள் அனைவரும் மலையாளிகளாகவே இருக்கிறார்கள்… ’’மலையாளி அளவுக்கு இன்னொரு மலையாளிக்கு உதவுபவன்’’ என்கிற வாக்கியத்தையும் முடிந்த வரைக்கும் காலி செய்திருக்கிறார்கள்…இந்தப்படம் கேரளாவில் பெரிய வரவேற்பு பெற்றதும், இந்தப் படத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியில் இருந்து பெரிய எதிர்ப்பு எழாததும் கலை சமுதாயத்தை மாற்ற முடியும் என்கிற மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்துகிறது… வலது கம்யூனிஸ்டுகளின் ரஷ்ய ஆதரவை கிண்டல் செய்வது, வோட்காவால் தான் ரஷ்யா உடைந்தது என கிண்டல் செய்வது என படத்தின் எதார்த்தத்திற்காக நிறைய காட்சிகள் படத்தில் இருக்கிறது...

சமீபமாக மலையாளப் படங்களில் இஸ்லாமியர்களின் வாழ்க்கை நிறைய இடம்பெறுவதை (இந்தப் படத்திலும்) காண முடிகிறது. அதற்கு அடிப்படை காரணம் மலையாளப் பட உலகில் இயக்குனராகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் அவர்கள் அதிக அளவு இடம்பெறத் தொடங்கியிருப்பதே… உலகம் முழுக்க படைப்பு ரீதியாக இஸ்லாமியர்கள் மீதான காழ்ப்புணர்வை சீர்செய்ய, அதே படைப்புத் துறையில் அவர்கள் கால்பதிப்பதே சிறந்த வழியாக இருக்க முடியும் எனத் தோன்றுகிறது..
நன்றி:பிரியா 

Wednesday, 6 May 2015

ஜெயகாந்தனுக்கு அஞ்சலி-5

ஜே.கே. - கண்டதைச் சொல்லுகிறேன்..!
இரா.மோகன்ராஜன்

ஈராயிரம் ஆண்டு தமிழ் இலக்கியப் பரப்பில் தமிழ் உரைநடை இலக்கியத்தில் குறிப்பாக சிறுகதை, புனைகதை வடிவங்களில் புதுமை பித்தனுக்குப் பிறகு அசல் வாழ்க்கை பதிவை தமது எழுத்தில் கொண்டு வந்ததில் ஜெயகாந்தன் தனித்துவமான இடத்தை பெறுகிறார். புதுமைபித்தனின் கதை மாந்தர்கள் புதுமை பித்தனால் சற்றே தள்ளி நின்று பார்க்கப்பட்டவர்கள் என்றால் ஜே.கே.யின் கதை மனிதர்கள் அசல் வாழ்க்கையிலிருந்து வருவதாக இருந்தார்கள். அவர்களில் ஒருவராக பேசினார்கள், சிரித்தார்கள், அழுதார்கள். துக்கித்தார்கள், அன்பு செலுத்திக் கொண்டார்கள். விளிம்பு நிலை மனிதரிலிருந்து நடுத்தர, மற்றும் பிராமண வகுப்பின் சமூக அரங்கிலிருந்தும் வந்த எண்ணற்ற கதை மனிதர்கள் தமிழ் சமூக அமைப்பு குறித்த அதிரவைக்கும் கேள்விகளை சதா எழுப்பிக் கொள்பவர்களாக இருந்தார்கள். அதுவரையிலான தமிழ் நெடுங்கதை வடிவம் அரைவேக்காட்டுத்தனமான சிக்கலிருந்து அல்லது சிக்கலில்லாத-பொழுது போக்கின் கதை நுகர்விலிருந்து விலகி வாழ்வின் அசல் தரிசனத்தை நமக்கு வழங்குவதாக இருந்தது. வாழ்வின் சகலவிதமான சிடுக்களிலும் நுழைந்து அதற்கென்றொரு தீர்வினை அல்லது முன்யோசனை ஒன்றை வழங்கும் வீச்சுடன் புறப்பட்டிருந்தன ஜெயகாந்தனின் கதைகள்.
எனது சிறுபிராயங்களில் தினமணி வார இணைப்பான தினமணிக்கதிரில் வந்திருந்த சிலநேரங்களில் சில மனிதர்கள், கங்கை எங்கே போகிறாள் போன்ற நெடுங்கதைகளை பழய இரும்பு பெட்டிகளில் பத்திரமாக பைண்டிங் செய்து வைக்கப்பட்டிருந்ததை வாசிப்புத் தாகம் எடுத்து படித்து முடித்துவிட்டிருக்கிறேன். எனக்கு ஜெயகாந்தனின் நாவல் தந்த அனுபவம் ஒரு பக்கம் என்றால், இப்படியான கதைகளை பத்திரப்படுத்தி, திரும்பத் திரும்ப வாசிக்கும் வாசக நிலை எப்படி உருவானது என்ற கேள்வி என்னுள் எழுந்தவாறிருந்தது. சிலநேரங்களில் சில மனிதர்கள், கங்கா எங்கே போகிறாள் போன்ற நெடுங்கதைகளின் கதாபாத்திரமான கங்கா பிறகு, ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம் ஹென்றி, அக்னிபிரவேசத்தில் வரும் தாய் என சமூக மனிதர்களின் ஏகப்பிரதிநிதியாய் நின்று பேசும் கதாபத்திரங்கள் குறித்து அன்றைக்கு ஒவ்வொரு குடும்பமும் பேசி, விவாதித்து, கலைந்து போயிருக்ககூடும்.! அக்காவோ, அம்மாவோ பக்கத்து வீட்டு ஜெயா மாமியோ ஜெயகாந்தன் கதைகள் குறித்து புழக்கடையிலும், வாசல் முற்றத்திலும், வேலிகாத்தான்களை கிள்ளியபடிக்கு உரையாடிக் கொண்டிருப்பதை கண்டிருக்கிறேன்! சிலசமயங்களில் அவை திருபுரசுந்தரி என்ற லெட்சுமியின் கதாபாத்திரங்களுடன் ஒப்பிடப்படும் எனினும் அவை கறாறான அளவுகளுடன் தர்கரீதியில் ஜெயகாந்தனின் படைப்பு சித்திரங்களே முன்னிலை பெறும் என்பதே இப்போது நினைக்கும்போது ஜெயகாந்தன் படைப்புகள், எளிய வாசக தளத்தை ஒரு சமூகம் சார்ந்த பிரக்ஞை வெளிக்கு கொண்டு சேர்த்திருந்ததை அவதானிக்க முடிந்தது.
சித்தப்பாக்கள் விகடனில் வரும் ஜெயகாந்தனின் முத்திரைக் கதைகளை கெட்டி அட்டையில் வால்யூம்களாக செய்து வைத்திருப்பார்கள். புரியாத வயதில் அவற்றை எல்லாம் வாசிப்பதற்காகவே வாசித்து பின்னர் புரிந்த வயதில் நூலகத்தில் தேடிப்போய் படிக்க என ஜெயகாந்தனின் படைப்புகள் வசீகரித்தபடியே இருந்தன. பெரும்பாலும் நூலகத்தில் புத்தகம் எடுத்துப் படிக்கும் வாசகர்கள் பெரும் விமர்சனக்காரர்களாகவோ அல்லது தமிழ் படைப்புலகம் பற்றி கரைத்துக் குடித்தவர்களாகவோ இருப்பதில்லை. ஆனால் நூலகத்தில் படிக்கும் தம்மைத் தூண்டக்கூடிய படைப்புகள் குறித்து தமது சுய விமர்சனங்களை, கருத்துக்களை இரண்ரொரு வரிகளில் ஓசையற்ற எழுத்துகளில், நூலாசிரியர் எழுதியிருக்கும் நூலின் கடைசி பக்கத்திலோ அல்லது பக்க இடைவெளிகளிலோ அவ்வகை விமர்சனங்கள் இருக்கும். நூலக வாசகர்கள் அவ்வாறு எழுதி செல்வார்கள். எனக்குத் தெரிந்து அவ்வாறான கருத்துகளும், விமர்சனங்களும் ஜெயகாந்தனின் படைப்புகளுக்கே அதிகம் நேர்ந்துள்ளதை கண்டுள்ளேன்!. முகம் தெரியாத அந்த வாசகர்களின் சத்திய ஆவேசம் ஜெயகாந்தனின் படைப்புகளோடு, இணைந்தும், எதிர்த்தும் முழங்குவதாக இருக்கும். கங்கா என்ன செய்தாள்?, என்ன செய்திருக்கக்கூடாது?. அக்னி பிரவேசத்தின் தாய் கதாபாத்திரம் அவள் மீது தண்ணீர் ஊற்றியே எல்லா கறைகளையும் போக்குவதாக சொல்வது எத்தகைய அறம் அல்லது நீதி சார்ந்தது. கங்கை புனித நீர் என்றால் கங்கா ஒரு மனுஷி அவள் புனிதமாக இருக்க இயலாதா அல்லது ஒருவரை ஒருவர் தழுவி புனிமாக இயலாதா என்றெல்லாம் முட்டி மோதி வெடிக்கும். நமக்கு அந்த கதைகள் பற்றிய ஒரு முன் விளக்கமாகவோ அல்லது அதனைக் கொண்டு மேலே செல்லவோ அவை கைபற்றி உதவும். ஜெயகாந்தனின் வாசகர்கள் இப்படித்தான் இருந்தார்கள்.
தலித் எழுத்துக்கள், பெண்ணிய எழுத்துக்கள் என்று இன்றைக்கு வகைமைப் படுத்திப் பேசப்படும் எழுத்துக்கள் எல்லாம் அன்றைக்கு ஜெயகாந்தனின் எழுத்தில் வகைமையின்றி பேசப்பட்டன. ஒரு தலித் எழுத்தையோ அல்லது பெண்ணிய எழுத்தையோ எழுத தலித்தாகவோ, அல்லது பெண்ணாகவோ இருக்க வேண்டும் என்ற நிபந்தனைகளுக்கெல்லாம் அப்பால் அவர்களின் வலி உணர்ந்து எழுதுதிவலேயே அவற்றை சாத்தியப்படுத்த இயலும் என்பதை தனது எழுத்தில் காட்டினார் ஜே.கே. அக்கினி பிரவேசம் என்பது விளிம்பு நிலை பெண் ஒருத்தியின் கதை அதை அப்படியே பிராமண சமூகத்தின் இடத்தில் பொருத்தி அதன் இன்னல்களையும், வாதைகளையும் வெளிக் கொண்டுவந்து, அச்சமூக பெண்களின் விடுதலையை கோருகிறார் ஜெயகாந்தன். கலாசார மடிமை மிகுந்த அச்சமூகத்தில் விளிம்பு நிலை சமூகத்தின் அறங்களை, நீதிகளை கொண்டு புதிய கதவுகளை திறந்துவிடுகிறார் அவர். புனைவை சாத்தியங்களுக்கு அப்பால் கொண்டு செல்லவதல்ல நிகழ் காலத்துடனே வைத்து மிகச் சரியாகப் பொருத்தி தீர்வு காண்பது என்பதை அவரது எழுத்துக்கள் சொல்வதாக இருந்தது.
சமூக, பொருளாதார, அரசியல் காரணங்கள் தனிமனித வாழ்வில் நிகழ்த்திப் போகும் துயரங்களை, சிக்கல்களை வாழ்வின் யதார்த்தத்தோடு இணைத்துப் பார்க்கும் கதைகள் அவரது நோக்கில் அபாரமாக வெளிப்பட்டன. மார்க்சிடமிருந்தும், எளிய மனிதர்களின் வாழ்விலிருந்தும் சிடுக்குகளிலிருந்து வெளியேறும் மந்திரத்தை கற்றிருந்தார். கதைபோக்கின் தீர்வை, முடிவினை அவரது நாயக நாயகிகள் எடுத்தனர். அது புனைவின் முன் முடிவல்ல மாறாக சமூகத்தில் எங்கோ அவை அவ்வாறே இருந்தன. அவரது படைப்புகள் அல்லது கதை மனிதர்கள் என்பது அவரும் தான். தத்துவங்கள் நம்மை விடுவிப்பதற்குத்தனே தவிர சிக்கிக் கொள்ள அல்ல என்பதை அவரது எழுத்தும் பேச்சும், இயக்கமாக இருந்ததை அவதானிக்கலாம். அதனால்தான் தன்னை ‘கட்சியில் இல்லாத கம்யூனிஸ்ட்’ என்று அழுத்தமாக பதிவு செய்து கொள்ள முடிந்தது. ஒரு படைப்பாளியாக கட்டுக்குள் அடங்கா போக்கு அவருக்குள் இருந்தது. இது பாரதிக்குள் இருந்தது, பாரதிதாசனுக்குள் இருந்தது. சுந்தரராமசாமியிடம் இருந்தது. இன்றைக்கு கோவைஞானி பிரபஞ்சன், போன்றோர் இவ் விதமானவர்களே!.
ஜெயகாந்தனின் சமூக அசைவியக்கம் என்பது அவரது படைப்புதளத்தில் சதா இயங்கியபடி இருந்தது. அவர் எங்கெங்கு இருந்து இயங்கினாரோ அவ்வம் இடத்திலிருந்தே வெளிப்பட்டவாறிருந்தது. ஆனால் அவை தளமாக இருந்ததே ஒழிய தமது எழுத்தை ஒருபோதும் அடகு வைக்கும் இடமாகக் கொண்டிருக்கவில்லை. தாமரையில் என்ன எழுதினாரோ அதுவே விகடனுக்கும், குமுதத்திற்குமானதாக இருந்தது. அவரது அரசியல் களமும் அவ்வாறே இருந்தது. மேடைகள் மாறிக் கொண்டே இருந்ததே தவிர அவர் மாறினாறில்லை. ஒரு குழந்தை எல்லா இடத்திலும் குழந்தையாகவே இருக்கும். புறச்சூழலுக்கு அவை விலை போய்விடுவதில்லை. அதனால்தான் ‘எதிலும் கட்டுபடாத சிசு’ என்று தன்னைப் பற்றி ஒரு முறை கூறியிருந்தார். குழந்தையின் விடப்பிடியான அழுகை கோருவது போலவே அவரது அடர்ந்த மீசையும், தலைமுடியும் சொற்களும் பூச்சாண்டிகள் யாதொருவரும் நெருங்கி காயப் படுத்திவிடக்கூடாத எச்சரிக்கையை நிரந்தரமாகக் கொண்டிருந்தது.
அரசியலிலும், படைப்பிலும் தனக்கு சரியெனப்பட்டவற்றில் துணிந்து நிற்பதன் வழியேதான் தனக்கான கம்பீரத்தை பெற்றுக் கொண்டிருந்தார் அவர். காந்தியத்தை அவர் அரசியலாக கண்டடைந்திருந்தார். ஆனால் யதார்த்தத்தில் அதை அவர் காந்திக்குப் பிந்தய அரசியலில் தரிசிக்க முனைந்ததில் ஒரு குழந்தையைப் போன்றே ஏமாந்து கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு படைப்பாளியின் அரசியல் வாழ்வு கண்ணதாசன் போன்றே அலைகழிப்பிற்கு உள்ளானதை ஜே.கே.விலும் காணலாம். அதை அவர்களது அரசியல் தோல்வி என்பதிலும் பார்க்க அரசியலின் தோல்வி என்றுதான் சொல்லவேண்டும். தனிமனித சுரண்டலும், ஊழலும் நிரந்தர கொள்கையாக மாறிவிட்ட நவீன அரசியலில் ஜே.கே. போன்றவர்களுக்கு என்ன இடம் இருந்திருக்க இயலும். ஜே.கே.வின் படைப்பு நேர்மையை அரசியல் நேர்மையாக ஒத்துக் கொள்ளாதவர்கள் அல்லது படைப்புத்தள வாசர்களே, வாக்களார்களாகவும் இருந்துவிட இயலாது என்பதை அவரது சட்டமன்றத்திற்கான பின்னடைவு காட்டியது. எது எப்படி என்றாலும் வெற்றியடைபவர்களுக்கும் தோல்வியடைபவர்களுக்கும் ஒரு சில வாக்குகளே சமயத்தில் ஒரு வாக்கு கூட முடிவு செய்வதை சூதாட்ட அரசியலாகவே கருதினார் அவர். மாறாக, பிரதிநிதித்துவ முறைப்படியான தேர்தலே, பாராளுமன்ற தேர்தல் சனநாயகத்தை வலிமைப்படுது்ம் என்று கூறிவந்திருந்தார்.
இந்திய அமைதிப்படை இலங்கையில் நின்றிருந்தபோது அவர் கூறிய கருத்துகளும், வீரப்பன் போன்றோர் விடயத்தில் அவரது பார்வைகளும் முதிர்ச்சியற்றவை என்ற கடும் விமர்சனம் அவர் மீது வைக்கப்பட்டிருந்தது. இலங்கையில் இந்திய அமைதிப் படை நடத்திய அட்டூழிங்களை அவரது தேசியப்பார்வையும், கட்சிப்பார்வையும் ஒன்று சேர்ந்து மறைத்துவிட்டன. பின்னாளில் இந்தியாவின் இலங்கை தலையீட்டை ஒருவாறு விளங்கி கொண்டபோதும் அவரது குரலுக்கான காலத் தேவை கடந்து போய்விட்டிருந்தது. அது போன்றே சந்தனக் கடத்தல் வீரப்பன் ஒரு சமூக விளைவு என்பதை ஒத்துக் கொண்டாலும் வீரப்பன் சுடப்பட்டதை நியாயப்படுத்தியிருந்தார். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் மனிதன் தண்டிக்கப்படக்கூடாது என்பதிலும், அதிரடிப்படையினரால் வனக்குடிகள் வதைக்கப்படுவது விடுத்து அவர்களது மேம்பாட்டிற்கு உதவுவது மட்டுமே வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்டதை நியாயப்படுத்தி்க் கொள்ளவது சரியாக இருக்க முடியும் என்றார்.
ஒரு படைப்புலகவாதி அரசியலுக்கு வரும்போது நேரும் துயரங்கள் எல்லாவற்றையும் ஜே.கே.வும் எதிர்கொண்டார். தொழில்முறை அரசியல்வாதிகள் போன்ற ஒன்றை ஜே.கே.விடம் எதிர்பார்த்த நடைமுறை சனநாயகத்திற்கு பழக்கப்பட்டுப்போனவர்கள் அவரை சந்தர்ப்பவாதி என்றனர். ஜெயகாந்தனுக்கு அது ஒரு பரிசோதனை முயற்சி. படைப்பைபோலவே அதனுள் சென்று அகலப்படுத்த முயன்றார். இது அவரது அரசியல் அப்பாவித்தனம். திராவிட இயக்கங்களின் கட்சி அரசியலும், தனிமனித அரசியலுமே அவரை அதற்கு எதிராக இயங்கவைத்தது எனலாம் படைப்புத் தார்மீகம்மும், அரசியல் தார்மீகமும் வேறு வேறு என்பதை நேர்மை அரசியலை விரும்பிய அவரால் பிரித்து விளங்கிக் கொள்வதில் இறுதி வரை அவரது படைப்பு மனம் குழப்பம் கொண்டிருந்தது. அதனால்தான் தனது அரசியல் நாட்களை ‘இலக்கியவாதியின் அரசியல் அனுபவம்’ என்றே எழுதினார் போலும்.
ஜெயகாந்தனின் படைப்பு வழியிலான அரசியல் என்பது பாராளுமன்றத்தை ஒட்டியதாகவே இருந்தது அந்தவகையில், சினிமாவுக்குப் போன சித்தாளு குறுநாவல் நேரடி அரசியல் தாக்கம் கொண்டவையாகும். தனிமனிதனை நடுவப்படுத்தும் அரசியல் அல்லது கவர்ச்சி அரசியல் சமூக வெளியில் ஏற்படுத்தும் நச்சு சனநாயகம் அல்லது நச்சு கலாசாரம் என்பதை கண்டிக்கும் வகையிலே இருந்ததன்றி எம்.ஜி.ஆர். என்ற தனிமனிதரை தூற்றும் காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதியாக ஒருபோதும் இருந்திருக்கவில்லை. அவரது மாடி சபை குமுதத்தில் ‘சபைநடுவினிலே’வாக வந்தபோதும் அவரது அரசியல் விமர்சனம் என்பது அப்படிப்பட்டதாகத்தானிருந்தது.
அதுபோலவே இறுகி கெட்டித்துப் போன நிறுவன தத்துவார்த்தங்களின் கூட்டுக்குள் நிரந்தரமாக அடைபடுவதை விரும்பாததையே அவரது நிரந்தரமற்ற கட்சி மற்றும் தத்துவார்த்த மாற்றங்கள் காட்டுவதாக இருந்தன. ஒரு பொழுது அவருக்கு மாஸ்கோ கடவுளாக இருந்ததும். மறு பொழுது வாஷிங்டன் வணக்கத்திற்குறியதாக மாறிப்போனதும் காங்கிரஸ் மேடையில் நின்றதும், ஜெஜெய சங்கர நாவலூடாக ஜெயேந்திரரை-சங்கர மடத்தை சரணடைந்ததையும் ஒருத் தன்மை வாய்ந்த பத்தினியாக புரிந்து கொள்ளலாம். அதாவது ஏற்கும் கொள்கைக்கு, தத்துவத்திற்கு நேர்மையாக இருத்தல். யார் கண்டது..சங்கரரில் ஏற்படும் போதாமை அவரை விரைவில் சங்கர மடத்திலிருந்து வெளியேற்றுவதாகக்கூட இருந்திருக்கக்கூடும். அதனால்தான் அவர், தன்னை முரண்பாடுகளின் மூட்டை என ஒற்றை பரிமாணத்தில் விளித்துக் கொண்டார். நம்புபவர்களிடம் நம்புவதும், நம்பாதவர்களிடம் வற்புறுத்தாமலிருப்பதும் எனது நாகரீகம். நம்புவது ஒரு நல்ல நாகரீகம். கடவுளை மட்டுமல்ல, கொதுவாகவே நம்பிக்கை நல்லது என்று வேறு ஒரு பொழுதில் குறிப்பிட்டிருந்ததையும் இவற்றோடு சேர்த்துப் பார்க்கலாம்.
படைப்பு மனம் என்பது மையத்திலிருந்து விளிம்பிற்கும் விளிம்பிலிருந்து மையத்திற்குமாக சதா அலைவுறுவது. இது சகல படைப்பாளிகளுக்குமானது. தன்னுள் தானே உரையாடி உடைந்து கொள்ளும் நிலையிலிருந்தே அலைகள் பிறப்பெடுக்கின்றன. ஜே.கே.யின் உடைப்பு நிலையில் எழுந்த படைப்புகள் அவரை கடந்து கரை திரும்பி மீண்டன. சமூக வெளியில் பெண்கள் படும் பாடுகள், சுமக்க இயலாத சுமைகள், கலாசார வதைகள் அவருள் பேற்றுவலியை உருவாக்கி உள்ளிருந்து உதைத்தன. “நீங்கள்(பெண்கள்) யார் உங்கள் தந்தை என்றும் காதலன் என்றும் கணவன் என்றும் நம்பி உங்களை ஒப்புக் கொடுக்கிறீர்களே அவர்கள் யார்?!“
“அவர்களே இந்த சமூகத்து மனிதர்கள். அவர்கள் கொடுமைக்காரர்கள். பெண்ணை மதிக்கத் தெரியாத மிருகங்கள். பெண்ணை மண்ணுக்கு இணையாக மதித்து உழுது மிதித்து, அகழ்ந்து தூர்க்கிறவர்கள். உன்னை அவர்கள் வேண்டாத சுமையாக எங்கோ தள்ளிப்போடவே விரும்புகிறார்கள். தலையிலே வந்து விடிந்துவிட்டதாக இறக்கிப்போட்டு எற்றி எறிகிறவர்கள். மாட்டை வணங்குவது போல உங்களை லட்சுமிகரமாக்கி அவர்கள் தொழுவார்கள். நேரம் வரும்போது தெரியும் இந்தக் கசாப்புக்காரர்களின் காதல். லட்சணம்!”.
“வசைக்குரிய சமூகத்தின் அடிமையாக அவனும் வாழ்கிறானே, அது பற்றி பிரக்ஞையற்று தான் ஒரு எசமானன் என்று உன்னிடம் வந்து ஒர் அடிமை அதிகாரியைப் போல, சுரண்டல் வியாபாரியைப் போல நடந்து கொள்கிறானே அதற்கெல்லாம் காரணம் அவனது சமூகத் தொடர்பேயாகும்“.
“சமூகம் என்பது ஏதோ தனித்துத் தெருவில் திரிவதுதல்ல. அது தந்தையாய், சகோதரனாய், சகதி வாய்ந்த பெரிய மனிதனாய், காதலனாய், கணவனாய் ஒவ்வொரு குடும்பத்திலும் வந்து ஆரோகனித்துத்துச் செய்கிற அட்டகாசங்களைத் திமிர்ந்த ஞானச் செருக்குடைய பெண்களைத்தவிர வேறு யார் அறிவர்?“ ஜெயகாந்தனின் சுந்தரகாண்டம் நாவல் முன்னுரை இப்படி பேசுகிறது. பெண்கள் , சமகால வாழ்வில் ஆண்களிடம் எதிர்கொள்ளும் நெருக்கடிகளைப் பற்றிய விவரிப்பே சுந்தரகாண்டம். பெண்கள் தன்னையும் இந்த சமூகத்தையும் ஒருசேர மதி்க்கும்விதமாக ஒரு தெரிவை முன்வைக்கிறார் ஜே.கே. பெண்ணியம் என்பது பெண் விடுதலை மட்டுமே. மோசமான ஆண்களோடு போட்டியிட்டுத் தானும் மோசமாக மாறுவதை அல்ல என்றார். தனது ஒவ்வவொரு படைப்பிலும் தானே நிறைந்திருப்பதை ஒத்துக் கொண்ட அவர் கல்யாணியும், கங்காவும் தானே என்றார். சமூகத்தையும், தன்னையும் ஒருசேர நேசிக்கும் ஜே.கேவுக்குள் இருந்த பெண்.
மனிதர்கள் எதிர்கொள்ளும் உள்ளும் புறமுமான சகலத்தையும் தன்னுள்ளும் உணர்வது படைப்பு மனம் அது ஜெயகாந்தனிடம் இருந்தது ஆகவே அவர் படைப்பாளியாக இருந்தார். பேரன்பு என்பது ஞானம். படைப்புத்துவம். ஆகவே அவர் எழுதினார். படைப்பு என்பது பேரன்பின் விரிவாக்கம் என்பதை அவர் அறிந்திருந்தார். வாசகனும், தானுமாக மனுக்குலத்திற்கான விசேடமான அல்லது தனித்துவமான பேரன்பை புத்தகமாக்கிக் கொண்டிருந்தார்கள். காலத்தை முன்னோக்கி நகர்த்துபவர்கள், படைப்பாளிகளே ஜெயகாந்தன் ஒரு தலைமுறைக்கு முன்பாகவே தனது எழுதுகோலை மூடிவைத்துவிட்டாலும் இன்று நின்றிருப்பது அவர் விதைத்து வைத்து அறுவடைக்கு தயாராகும் காலத்தில்தான் என்பதை மறுத்துவிட இயலாது. எனினும் ஒரு சமூகமாக தனது படைப்பாளிகளை அடையாளம் கண்டு கொள்ளாத துயரம் நிறைந்த தமிழ் சூழலில் ஒரு ஆளுமை தனது பேனாவை முறித்துவைத்திருப்பது என்பது அச்சமூகத்தி்ன் தற்கொலைக்கு சமானமானதாகும். ஒரு எழுத்தாளனை மறப்பது தனது கூட்டு மனசாட்சியை கொல்வதற்கு நிகரானதாகும். ஒர் எழுத்தாளன் தனது எழுதுகோலை திறக்க எது தூண்டுதலாக இருந்ததோ, அதுவே நிரந்தரமாக மூடிவைக்கவும் காரணமாக இருப்பது சமூகத்தின் அவமானகரமான வீழ்ச்சியின் அடையாளமாகும்.
இன்றய இலக்கிய மதிப்பீடு என்பது நாளைதான் தீர்மானிக்கும் என்பதில் தீர்மானமாக இருந்தார் ஜே.கே. அதனால்தான் தனது விமர்சனத்தையும், தன்மீதான விமர்சனத்தையும் வேறுபடுத்திக் கொண்டிருந்தார். இலக்கிய விமர்சனம் என்று வரும்போது தற்போதய விமர்சனங்கள் தாங்கள் விரும்பாததை விரும்பாதமுறையில் வாசகனுக்கு சொல்வதாக இருக்கிறது என்றார் படிக்காதே என்று சொல்வதன் பொருள் அதில் இருப்பதாக அவர் கருதினார். அவரது படைப்பும் அவரும் ஒன்றே என்ற விமர்சனத்தைக் கொண்டு ஜே.கே ஒரு சுயமோகி என்று சொல்வதின் வழி 70 களின் பிரபல வெளிச்சத்தின் மீது இன்றய இருட்டுக் கற்களை வீசுகிறார்கள். உண்மையில் சுயமோகிகளே பிறரை நேசிப்பவர்களாகவும் இருந்துவிடுகிறார்கள். இலக்கிய மதிப்பீடுகள் பெரிதும் மாறி புதிய கணிப்புகள் உருவாகியுள்ள சூழலில் ஜெயகாந்தனின் காலம் முடிந்துவிட்டதாக எழுந்த பிரபல எழுத்தாளர்களின் ஆசைக்கு அவரது பதில் ஜெயகாந்தனை கடந்து செல்லுங்கள் என்பது மட்டுமே. இலக்கியம் என்பது ஜே.கேவுடன் தேங்கிவிடுவதில்லைதான். ஆனால் அவரை தவிர்த்துவிட்டு சென்றுவிட முடியும் என்பதுதான் மோசமான இலக்கிய அரசியலாக இருக்கமுடியும்.
ஜெயகாந்தன் இன்றய சூழல் பற்றி எழுதாமல் போனதால் என்ன நட்டம் என்று கேட்கலாம். எழுதாததே நட்டம்தான். அவரது எழுத்தில் நவீன சிக்கல்கள் பேசப்படாது உள்ளது. குறிப்பாக திருநங்கைகள், உலகமய நுகர்வு கலாசாரத்தின் சமூக தாக்கம் என சொல்லிக் கொண்டே போகலாம். இது ஜெயகாந்தனின் வாசகனாக, ஒர் சமூக மனிதனாக அந்த வெற்றிடத்தின் மீது கொள்ளும் பரிதவிப்பாகும். எழுதும்போது இருந்த புகழும், வசையும், எழுதாதபோதும் கொண்டிருந்த படைப்பாளி ஜெயகாந்தன் ஒருவராகத்தான் இருக்கமுடியும். அது எழுத்தின் மீதான பயம். எழுத்து சாத்தியப்படுத்தும் வாசக வட்டத்தின் மீதான பயம். ஒரு காலத்தில் ஜெயகாந்தன் எழுதிய புத்தகங்களை அடையாளமாக வைத்திருப்பதே மதிப்புக்கயதாக இருந்தது. அதுபற்றி விவாதிப்பது அறிவுஜீவி தோற்றத்தைத் தந்தது. கண்ணியமான மனிதர் என்ற பார்வையை தவிர்க்க இயலாமல் வழங்கியிருந்தது. எழுத்து என்பது மாற்றுக்கான சாத்தியத்தை முன் வைப்பது. கண்டடைவது. ஜே.கே. என்ற இரண்டு எழுத்து தமிழனுக்கு செய்தது இதைத்தான். தமிழன் என்ன செய்யப்போகிறான்.?!

                                -

Monday, 4 May 2015

ஜெயகாந்தனுக்கு அஞ்சலி-4

மீண்டும் சமர்ப்பிக்கின்றேன்
முருகபூபதி,அவுஸ்திரேலியா

ஜெயகாந்தன் – படைப்பிலக்கியவாதி – பத்திரிகையாளர் – சினிமா வசனகர்த்தா – பாடலாசிரியர் -திரைப்பட இயக்குநர்
தமிழ்நாட்டில் கடலூரில் 24-04-1934 ஆம் திகதி பிறந்து தமது 81 வயதில் கடந்த 08-04-2015 ஆம் திகதி சென்னையில் மறைந்த மூத்த எழுத்தாளர் ஜெயகாந்தன் – படைப்பிலக்கியவாதி – பத்திரிகையாளர் – சினிமா வசனகர்த்தா – பாடலாசிரியர் -திரைப்பட இயக்குநர் என பன்முக ஆளுமை கொண்டிருந்தவர். அவரது வாழ்வும் எழுத்தும் கம்பீரமானது. அவர் நீண்டகாலம் ஈடுபட்ட துறைகள் குறித்து ஏற்கனவே ஏராளமான மதிப்பீடுகள் வெளியாகியிருக்கின்றன.
அவரது படைப்புகள் இந்திய மொழிகளிலும் ஆங்கிலம் உட்பட ருஷ்ய மற்றும் ஐரோப்பிய மொழிகளிலும் வெளியாகியுள்ளன. தமது படைப்புகளுக்காக மாஸ்கோவிலிருந்து ரோயல்ட்டியும் பெற்ற ஒரே ஒரு தமிழக எழுத்தாளர். பாரதியை தமது ஞானகுருவாக வரித்துக்கொண்ட ஜெயகாந்தனிடம் பாரதியின் இயல்புகளும் இருந்தன.
சில வருடங்களுக்கு முன்னர் ஜெயகாந்தனும் தமிழ் சினிமாவும் என்ற தலைப்பில் நான் எழுதிய இக்கட்டுரையை அவரது மறைவின்பொழுது அவர் நினைவாக மீண்டும் சமர்ப்பிக்கின்றேன். ஜெயகாந்தன் என்றும் எம்முடன் வாழ்ந்துகொண்டிருப்பார்.
------------------------------------------------------------------------------------------------------------

நூறாண்டுகள் நிறைவடைந்த இந்திய சினிமாவில் ஜெயகாந்தனுக்குரிய இடம்-சத்யஜித்ரேயின் சாருலதாவுடன் போட்டியிட்ட ஜெயகாந்தனின் உன்னைப்போல் ஒருவன்-
இந்தியாவின் ஆத்மாவை யதார்த்தம் சிதையாமல் இலக்கியப்படைப்புகளிலும் திரையிலும் காண்பித்த கலைஞன் ஜெயகாந்தன்.
-----------------------------------------------------------------------------------------------------------

தமிழ்நாட்டிலிருந்து சினிமாவுக்காகவே வெளியான பொம்மை இதழில் பலவருடங்களுக்கு முன்னர் ஒரு சந்தர்ப்பத்தில் அதன் கேள்வி – பதில் பகுதியில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது.
கேள்வி: தமிழ் சினிமாவுக்குள் பிரவேசித்த ஜெயகாந்தன் ஏன் இப்பொழுது அதிலிருந்து ஒதுங்கிக்கொண்டார் ?
பதில்: தமிழ் சினிமா எதிர்பார்ப்பதுபோல் ஜெயகாந்தன் இல்லை. ஜெயகாந்தன் எதிர்பார்ப்பதுபோல் தமிழ் சினிமா இல்லை.
இந்தத்தகவலை உயிர்மை இதழின் நூறாவது இதழில் (டிசம்பர் 2011) திரையுலக விமர்சகர் தியோடர் பாஸ்கரனின் பின்வரும் கருத்துடன் ஒப்பிட்டும் பார்க்கலாம்.
அவர் சொல்கிறார்:
எழுத்தாளர்களை நல்ல முறையில் ஒரு சினிமா பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்றால் இயக்குநர்களுக்கு ஆழமான இலக்கியப்பரிச்சயம் தேவை. எழுத்தாளர்களுக்கும் சினிமாவின் தனி இயல்புகள் சாத்தியக்கூறுகள் – இவை பற்றிய ஒரு பிரக்ஞை வேண்டும். அதுமட்டுமல்ல திரையும் எழுத்தும் தத்தம் இயல்புகளில் மிகவும் வேறுபட்ட ஊடகங்கள் என்பதையும் உணர்ந்திருக்கவேண்டும். வங்காள – மலையாள சினிமாக்களில் இத்தகைய புரிதல் இருபுறமும் இருப்பதைக்காணலாம். அங்கிருந்து வரும் பன்னாட்டுப்புகழ்பெறும் திரைப்படங்களில் பெருவாரியானவை ஒரு இலக்கியப்படைப்பையே சார்ந்திருப்பதைக்கவனிக்கலாம்.
ஜெயகாந்தனுக்கு முன்பே பல இலக்கியப்படைப்பாளிகள் தமிழ் சினிமாவுக்குள் பிரவேசித்துவிட்டு வெளியே வந்தவர்கள்தான் அல்லது ஓதுங்கிக்கொண்டவர்கள்தான். அவர்களில் புதுமைப்பித்தன், விந்தன் ஆகியோரைக்குறிப்பிடலாம். இவர்கள் இருவரும் சில படங்களுக்கு வசனம் எழுதியதுடன் தமது எல்லையை வகுத்துக்கொண்டார்கள். கல்கியின் சில தொடர்கதைகள் திரைப்படமாகியிருக்கின்றன. பொன்னியின் செல்வனை முதலில் எம்.ஜி.ஆர் விலைக்கு வாங்கி இயக்குநர் முள்ளும் மலரும் மகேந்திரனிடம் கொடுத்து வசனம் எழுதச்சொல்லிவிட்டு பின்னர் திரைப்பட தயாரிப்பு முயற்சியை கைவிட்டவர்.
மகேந்திரன் சிறுகதை – நாவல்களை திரைப்படமாக்கிய அனுபவம் உள்ளவர்.
புதுமைப்பித்தனின் சிற்றன்னை குறுநாவல்தான் மகேந்திரனின் உதிரிப்பூக்கள். உமாசந்திரனின் முள்ளும் மலரும் அதே பெயரில் மகேந்திரனால் இயக்கப்பட்டது. பொன்னீலனின் உறவுகள் கதையும் மகேந்திரனால் பூட்டாத பூட்டுக்கள் என்ற பெயரில் எடுக்கப்பட்டது. கந்தர்வன் எழுதிய சிறுகதை சாசனம். இக்கதையையும் அதே பெயரில் மகேந்திரன் எடுத்திருந்தார்.
பாலகுமாரன், சுஜாதா ஆகியோர் சிறுகதைகள் நாவல்கள் எழுதி புகழ்பெற்றவர்கள். இவர்கள் பின்னர் பல படங்களுக்கு வசனம் எழுதினார்கள். சுஜாதாவின் பல கதைகள் படங்களாகவும் தொலைக்காட்சி நாடகங்களாகவும் மாறியிருக்கின்றன.தற்காலத்தில் ஜெயமோகன், ராமகிருஷ்ணன் ஆகியோர் பல படங்களுக்கு வசனம் எழுதிக்கொண்டிருக்கின்றனர்.
ஆனால் – ஜெயகாந்தன் இவர்களிடமிருந்து வேறுபட்டு தாமே தமது கதைகளுக்கு திரைப்படவடிவம் கொடுத்து தயாரித்து இயக்கி வெளியிட்டவர்.மிகவும் குறைந்த செலவில் உன்னைப்போல் ஒருவனையும் யாருக்காக அழுதானையும் எடுத்தார்.
ஜெயகாந்தன் கடலுர் மஞ்சகுப்பத்திலிருந்து 12 வயதில் சென்னைக்கு வந்தபின்னர் அவரை அரவணைத்தது தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சியின் கம்யூன் வாழ்க்கை. எத்தனையோ அன்றாடக்கூலி கிடைக்கும் தொழில்களையெல்லாம் பார்த்துவிட்டு ஒப்புநோக்காளராக (Proof Reader) தமக்கு நிரந்தர வருமானம் தரக்கூடிய தொழிலை தேர்வுசெய்துகொண்டவர். ஒப்புநோக்காளர் ஜெயகாந்தன் படைப்பிலக்கியவாதியானது முன்னுதாரணம் மிக்க சரிதை.
அவரது இலக்கியப்படைப்புலக வளர்ச்சியென்பது பலருக்கும் பாலபாடமாக அமையக்கூடியது.
ஏராளமான சிறுகதைகள் அதேபோன்று நாவல்களும் கட்டுரைகளும் எழுதியிருக்கும் ஜெயகாந்தனை சினிமா உலகிற்கு அழைத்ததும் அவர் நேசித்த கம்யூனிஸ்ட் இயக்கப் பாசறைதான்.
கட்சியில் கலை இலக்கிய ஈடுபாடு மிக்கவர்களின் முயற்சியினால் எடுக்கப்பட்ட படம் பாதை தெரியுது பார். இப்படத்தில் இரண்டு பாடல்களையும் எழுதியதுடன் சிலரது நிர்ப்பந்தம் காரணமாக ஒரு காட்சியில் தோன்றி நடித்துமிருக்கிறார்.
ஆனால் – அவருக்கு நடிக்கப்பிடிக்காது. அரிதாரம் (மேக்கப்) பூசிக்கொள்ளமாட்டேன் என்ற கொள்கையை சபதமாகவே கொண்டிருந்தவருக்கு – அந்தப்படத்தில் வரும் சிறிய காட்சியில் தோன்றியது குற்றவுணர்வாகவே இருந்ததாம். எப்படியாவது அந்தக்காட்சியை படத்திலிருந்து நீக்கிவிடவேண்டும் என்ற எண்ணத்திலிருந்தவருக்கு – தயாரிப்பாளர்களும் இயக்குநரும் படத்தின் நீளம் கருதி நீக்க விரும்பிய காட்சிகளில் – தான் தோன்றும் காட்சியையும் நீக்கிவிடுமாறு வற்புறுத்தி எப்படியோ படத்தில் நடித்ததாகவே ஜெயகாந்தன் காண்பித்துக்கொள்ளவில்லை.
எனவே – அவருக்கு திரைப்படத்தில் நடிக்க முற்று முழுதாக விருப்பம் இல்லை என்பது அவரது வாக்குமூலத்திலிருந்து தெரிகிறது. ( ஆதாரம்: ஒர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்)
பிரபல்யமான – ஜனரஞ்சக – வசூலை மாத்திரம் குறியாகக்கொண்ட ஏராளமான தமிழ்ப்படங்களுக்கு வசனம் எழுதிய ஏ.எல். நாராயணன் என்பவருக்கு ஜெயகாந்தன் சிறிதுகாலம் உதவியாளராக இருந்தார் என்றும் தகவல் உண்டு.
பாரதி சொல்லும் ரௌத்திரம் பழகு ( கோபம்) என்றவாறு வாழ்ந்து காட்டிய ஜெயகாந்தனிடம் அமைதியும் நிதானமும் அசாத்தியமான துணிச்சலும் குடியிருந்தன. தாம் எழுதிய உன்னைப்போல் ஒருவன் நாவலுக்கு திரைப்பட வடிவம் கொடுத்து மூன்று வாரங்களில் தாமே இயக்கி வெளியிட்டார்.
1946 ஆம் ஆண்டில் ஜெயகாந்தன் தமது 15 வயது இளம்பருவத்தில் ஒரு சோப்பு – இங்க் தொழிற்சாலையில் வேலை செய்தபொழுது தன்னோடு வேலை செய்த – அவர் உள்ளன்போடு ‘மொட்டை” என அழைத்த ஒரு சிறுவனின் கதைதான் உன்னைப்போல் ஒருவன். நாவலில் வரும் சிட்டிதான் அவன் என்று அந்நாவலின் முன்னுரையில் குறிப்பிடுகிறார். அவரது பால்யகால அனுபவம் நாவலாகி பின்னர் திரைப்படமாகவும் உருவாகியிருக்கிறது.( உன்னைப்போல் ஒருவன் நாவலை – இலங்கையில் பிரபல வில்லிசைக்கலைஞர் லடீஸ் வீரமணி மேடை நாடகமாக்கி அரங்கேற்றினார். இந்நாடகத்தில் சிட்டி என்ற சிறுவன் பாத்திரம் ஏற்று நடித்தவர் கலைஞர் ஸ்ரீதர் பிச்சையப்பா. லடீஸ_ம் ஸ்ரீதரும் மறைந்துவிட்டனர்)
எவரது தலையீடுகளும் இன்றி திரையுலக தொழில் நுட்பங்கள் எதுவுமே தெரியாத நிலையில் சில நண்பர்களின் துணையுடன் உன்னைப்போல் ஒருவனை ஜெயகாந்தன் எடுத்திருந்தார்.
இந்நாவல் ஆனந்தவிகடனில் தொடராக வெளிவந்து பல இலட்சம் வாசகர்களை ஈர்த்தது.
தாமே திரைக்கதையையும் வசனத்தையும் எழுதி இயக்கி – தயாரித்து தாமே புதுமையான முறையில் அதனை விநியோகமும் செய்தார். தமது படத்தை எந்த விநியோகஸ்தரும் வாங்கமாட்டார்கள் என்பது தெரிந்தபின்னர் விநியோகப்பொறுப்பையும் தாமே ஏற்றுக்கொண்டார்.
தமிழ்ப்படங்களே பார்த்தறியாத கர்மவீரர் – பெருந்தலைவர் காமராஜர் மீது பற்றும் மரியாதையும் கொண்டவர் ஜெயகாந்தன். அவரையும் அழைத்து உன்னைப்போல் ஒருவனைக் காண்பித்தார்.
காமராஜரும் படத்தைப்பார்த்துவிட்டு பாராட்டினார்.
ஏராளமான பல மொழிப்படங்ளை வெளியிட்ட தமிழக முன்னணித் தயாரிப்பாளர் ஏ.வி.மெய்யப்பச்செட்டியார் ( ஏ.வி.எம்) காமராஜருடன் இந்தப்படத்தைப்பார்த்துவிட்டு – ஜெயகாந்தனிடம் ‘ இப்படத்தை தேசியவிருதுக்கு வேண்டுமென்றால் அனுப்புங்கள். கதையை எனக்குத்தாருங்கள். வர்த்தக ரீதியில் லாபம் கிட்டக்கூடியவிதமாக இதனை நான் எடுக்கிறேன்” என்றாராம். ஆனால் – ஜெயகாந்தன் அதற்கு மறுத்துவிட்டார்.
1964 இல் நடந்த தேசிய திரைப்படவிழாவில் உன்னைப்போல் ஒருவன் மூன்றாவது இடத்தில் தெரிவானான். ஜெயகாந்தனுடன் இத்திரைப்பட விழாவில் போட்டியிட்டு சத்யஜித்ரேயின் சாருலதா வெற்றிபெற்றது.
அந்த வெற்றி எவ்வளவு பொருத்தமானது என்று நான் மகிழ்ந்திருக்கிறேன் எனக்கூறும் ஜெயகாந்தன், தான் ரேயின் படைப்புகளுக்கு நிகரான அமைதியான ரசிகன் என்றும் ஒப்புக்கொண்டவர்.
ஜெயகாந்தனின் யாருக்காக அழுதான் கதையை இயக்குநர் ஸ்ரீதர் கேட்டார். அதற்கும் ஜெயகாந்தன் மறுத்துவிட்டார்.
யாருக்காக அழுதான் மிகக்குறைந்த செலவில் 1966 இல் ஜெயகாந்தனால் எடுக்கப்பட்டது.
நாகேஷ் – திருட்டுமுழி ஜோசப் பாத்திரமேற்று திறம்பட நடித்திருந்தார். கே.ஆர். விஜயா, பாலையா, சகஸ்ரநாமம் முதலானோர் நடித்த படம்.நடிகர் நாகேஷ் குறித்து உயர்வான அபிப்பிராயம் கொண்டிருந்த ஜெயகாந்தன் இவ்வாறு பதிவு செய்கிறார்:
‘நாகேஷின் நடிப்பு தமிழ்த்திரைப்பட உலகிற்கு, இதன் தகுதிக்கு மிஞ்சிய ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லவேண்டும். நல்லவேளையாக டைரக்டர்களின் ஆளுகை தன்மீது கவிழ்ந்து அமிழ்த்தி விடாதவாறு பாதுகாத்துக்கொள்ளும் அதேசமயத்தில் ஒரு நடிகனுடைய எல்லைகளை மீறி நடந்துகொள்ளாதவர். தனது பாத்திரத்தைத் தன் கற்பனையினால் டைரக்டரோ, தயாரிப்பாளரோ எதிர்பாராத முறையில் மிகவும் சிறப்பாக அமைத்துக்கொள்கிற ஒரு புதுமையான கலைஞராகவும் இருந்தார்.’
ஜெயகாந்தன் தமிழ் சினிமா உலகில் பிரவேசித்த காலப்பகுதியில் அவருக்கு பக்கத்துணையாக விளங்கிய இருவர் – பின்னாளில் கவனிப்புக்குள்ளான பிரபல இயக்குநர்களாக விளங்கினார்கள்.
அவர்கள்தான்: கே. விஜயன், மல்லியம் ராஜகோபால்.
ஜெயகாந்தனின் மற்றுமொரு நாவல் கைவிலங்கு. கல்கியில் வெளியான குறுநாவல். பின்னாளில் காவல் தெய்வம் என்ற பெயரில் ராணிமுத்து பிரசுரமாகவும் வெளியானது. இக்கதையை ஜெயகாந்தனிடமிருந்து வாங்கிய எஸ்.வி. சுப்பையா காவல் தெய்வம் என்ற பெயரிலேயே வெளியிட்டார்.
சிவகுமார், லட்சுமி, எஸ்.வி.சுப்பையா எஸ்.ஏ. அசோகன், நம்பியார் நடித்த இத்திரைப்படத்தில் சிவாஜிகணேசன் சாமுண்டி என்ற கள்ளிறக்கும் தொழிலாளி வேடத்தில் கௌரவ நடிகராகத் தோன்றி அட்டகாசமான கோபக்கனல் பொங்கும் சிரிப்புடன் உணர்ச்சிப்பிழம்பாக நடித்திருப்பார். சிவாஜி தூக்குத்தண்டனை கைதியாக வித்தியாசமான பாத்திரம் ஏற்று நடித்த படம் காவல் தெய்வம்.
ஜெயகாந்தனின் மற்றுமொரு நாவலான பிரம்மோபதேசம் கதையையும் வாங்கி திரைப்படமாக்க முயற்சித்த எஸ்.வி.சுப்பையா – பின்னர் அதனைக்கைவிட்டார்.
ஜெயாகந்தன் அக்கினிப்பிரவேசம் சிறுகதையை ஆனந்தவிகடனில் எழுதியவேளையில் விமர்சன சர்ச்சைகளை எதிர்நோக்கினார். அதேசமயம் அந்தக்கதைக்கு பாராட்டுக்களும் குவிந்தன. இக்கதை அந்நாட்களில் ஜெயகாந்தனின் ஆளுமைக்கும் துணிவுக்கும் அத்தாட்சி.இச்சிறுகதையை காலங்கள் மாறும் என்ற பெயரிலேயே முதலில் தொடர்கதையாக விரிவுபடுத்தினார்.
வசதி படைத்த ஒருவனால் ஒரு மழைநேரத்தில் அவனது காரினுள்ளே வைத்து பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட அப்பாவி பிராமண மாணவி பின்னாளில் எப்படி ஒரு அறிவுஜீவியாக மாறி தன் வாழ்வை அழித்தவனுடனேயே சினேகிதமாக பழகத்தொடங்கினாள் ? அதில் அவள் எதிர்நோக்கிய முடிச்சுகள் – சிக்கல்களை சித்திரித்த வித்தியாசமான கதை.
காலங்கள் மாறும் (தொடர்கதை) நாவல் – சிலநேரங்களில் சில மனிதர்கள் என்ற பெயரில் வெளியாகி இந்திய தேசிய சாகித்திய அக்கடமி விருதைப்பெற்றது.
இக்கதைக்குத்  திரைப்பட வடிவம் கொடுத்து திரைப்படச்சுவடியும் வெளியிட்டார். அந்நாட்களில் வெளியான தமிழ் சினிமாக்களின் கதை – வசனம் மற்றும் பாடல்கள் அடங்கிய சிறிய பிரசுரங்கள் விற்பனைக்கு வரும்.உதாரணமாக கலைஞரின் பராசக்தி, சக்தி கிருஷ்ணசாமி வசனம் எழுதிய வீரபாண்டிய கட்டபொம்மன், திருவாருர் தங்கராசு எழுதிய நடிகவேள் எம். ஆர். ராதாவின் இரத்தக்கண்ணீர், எம்.ஜி.ஆரின் உலகம் சுற்றும் வாலிபன் முதலான படங்களின் வசனம் – பாடல்களின் தொகுப்பாக குறிப்பிட்ட பிரசுரங்கள் வெளிவந்தன.
ஆனால் ஜெயகாந்தன் தமது சிலநேரங்கள் சில மனிதர்களை அவ்வாறு மலினப்படுத்தாமல் திரைக்கதையின் முழுவடிவத்துடன் திரைப்படச்சுவடியே வெளியிட்டார். திரைப்படங்களுக்கு காட்சிகளை அமைப்பதற்கும் இயக்குவதற்கும் ஏற்றவாறு அந்தச்சுவடி இருந்தமையால் இத்துறையில் ஈடுபட விரும்பியவர்களுக்கும் அது பாட நூலாகவே விளங்கியது எனலாம்.
பா மற்றும் ப வரிசையில் பல படங்களை இயக்கியவர் பிம்சிங். பா – ப என்ற முதல் எழுத்துக்கள் அவருக்கு மிகவும் ராசியான எழுத்துக்களாகியிருக்கலாம்.
பாசமலர், பாலும் பழமும், பார்த்தால் பசி தீரும், பாவ மன்னிப்பு, பாலாடை, பார் மகளே பார், பாதுகாப்பு – பந்தபாசம், படித்தால் மட்டும் போதுமா? பழநி, பச்சை விளக்கு என அடுத்தடுத்து பல படங்களைத் தந்த பிம்சிங் – தற்காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணியில் திகழும் சினிமா எடிட்டர் லெனினுடைய தந்தை.
ஏ.பீ ம்சிங்கின் இயக்கத்தில் வெளியான சில நேரங்களில் சில மனிதர்கள் நூறு நாட்கள் ஓடியது. லட்சுமி, ஸ்ரீகாந்த், நாகேஷ், சுந்தரிபாய் உட்பட பலர் நடித்த இத்திரைப்படத்திற்காக நடிகை லட்சுமிக்கு தேசியவிருதும் கிடைத்தது.
ஜெயகாந்தனின் ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் நாவலும் பீ ம்சிங்கின் இயக்கத்தில் வெளியானது. ஆனால் அதன் தயாரிப்பு முடியும் தறுவாயிலிருந்தபொழுது இயக்குநர் பிம்சிங் காலமானார். அதனால் டைட்டிலில் இயக்குநர் என வருமிடத்தில் பிம்சிங்கின் பெயரும் அவரது ஆசனமும் காண்பிக்கப்பட்டது.
ஜெயகாந்தனின் கருணையினால் அல்ல – கருணை உள்ளம் என்ற பெயரில் தயாராகியது.ஆனால் வெளியாகவில்லை.
கவிஞர் கண்ணதாசனுடன் இணைந்து நியாயம் கேட்கிறோம் என்ற படத்தையும் எடுத்தார். ஆனால் அந்த முயற்சியும் கைவிடப்பட்டதனால் படம் வெளியாகவில்லை.
புதுச்செருப்பு கடிக்கும் என்ற கதையும் திரைப்படமாகியது. இதனை இயக்கிய அன்பழகன் தற்பொழுது சிங்கப்பூரில் வசிக்கிறார். அவர் ஏற்கனவே கே. பாலச்சந்தரிடம் துணை இயக்குநராக பல படங்களுக்கு பணியாற்றியவர். பீம்சிங்கின் நண்பர். புதுச்செருப்பு கடிக்கும் படமும் வெளியாகவில்லை.
பீம்சிங்கின் மகன் லெனின் ஜெயகாந்தனின் எத்தனை கோணம் எத்தனை பார்வை சிறுகதையையும் படமாக்கினார். ஆனால் வெளியாகவில்லை.
ஜெயகாந்தனின் ஆனந்தவிகடனில் வெளியான தொடர்கதை பாரிசுக்குப்போ. இக்கதை நல்லதோர் வீணை என்ற பெயரில் தொலைக்காட்சி நாடகமாக ஒளிபரப்பானது. இதிலும் லட்சுமி லலிதா பாத்திரம் ஏற்றார். நிழல்கள் ரவி சாரங்கனாக நடித்திருந்தார்.
மௌனம் ஒரு பாஷை என்ற ஜெயகாந்தனின் மற்றுமொரு சிறுகதையும் தொலைக்காட்சி நாடகமாகியது. எஸ்.எஸ். ரஜேந்திரன் வெண்ணிற ஆடை நிர்மலா ஆகியோர் நடித்திருந்தனர். பேரப்பிள்ளைகளும் கண்டுவிட்ட ஒரு முதிய தாய் தனது கணவனால் மீண்டும் எதிர்பாராத விதமாக கர்ப்பிணியாகிறாள். ஆனால் அதனை அவமானமாகக் கருதி தற்கொலை செய்துகொள்ள அரளி விதையை அரைத்து சாப்பிடுகிறாள். ஆனால் அவள் காப்பாற்றப்பட்டதும் ஏன் அவள் தற்கொலைக்கு முயன்றாள் என்பது தெரியாமல் குடும்பத்தினர் மனம் குழம்பியிருக்கும் வேளையில் நகரத்தில் ஒரு மேல்நாட்டு வெள்ளை இனப்பெண்ணை மணம் முடித்து தந்தையின் கோபத்திற்கு ஆளாகி புறக்கணிக்கப்பட்ட டா க்டர் மகன் தாயைப்பார்க்க வந்து தனியே சந்தித்து கைநாடி பார்த்து தாய் தாய்மையானது கண்டு உள்ளம் பூரிப்படைந்து தாயை சமாதானப்படுத்தி பிரசவ காலத்தில் தனது பராமரிப்பில் வைத்திருக்க அழைத்துச்செல்கிறான். அந்த வீட்டில் ஒரு பலாமரத்தின் கிளையில் அல்ல வேரில் காய்த்த பலாப் பழத்தை ரசித்து ருசிக்கிறான்.
அந்த முதிய தாயின் தாய்மைப்பேறை வேரில் பழுத்த பலாவுக்கு ஜெயகாந்தன் உவமைப்படுத்தும் மற்றுமொரு அவரது வித்தியாசமான கதைதான் மௌனம் ஒரு பாஷை.
பல ஆண்டுகளுக்கு (1962) முன்பே ஜெயகாந்தன் காலத்தையும் மீறி சிந்தித்தவர் என்பதற்கு இக்கதையும் சிறந்த உதாரணம்.
ஜெயகாந்தனின் சினிமாவுக்குப்போன சித்தாளு சென்னை சேரிப்புற ரிf;க்ஷா தொழிலாளர்கள் பற்றிய குறுநாவல். ரிf;;க்ஷா தொழிலாளரின் பேச்சு மொழியிலேயே எழுதப்பட்டது. கண்ணதாசன் இதழில் வெளியானது. எம்.ஜி.ஆர் கடுமையாக விமர்சிக்கப்பட்ட கதைதான் சினிமாவுக்குப்போன சித்தாளு, இதுவும் தொலைக்காட்சி நாடகமாகியது.
நக்சலைட் தீவிரவாதிகள் குறித்து ஜெயகாந்தன் எழுதிய நாவல் – ஊருக்கு நூறுபேர்.சுயநலம் கருதாத தியாக மனப்பான்மை கொண்ட நூறு இளைஞர்களைத்தாருங்கள் இந்த உலகத்தையே மாற்றிக்காட்டுகிறேன். என்று விவேகானந்தர் சொன்ன கருத்தொன்று கவனிப்புக்குரியது.
அந்தக்கருத்தை பின்னணியாகக்கொண்டு ஜெயகாந்தன் எழுதிய நாவல் ஊருக்கு நூறுபேர். இந்நாவல் வெளிவந்த பின்னர் சில நக்சலைட் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலுக்கும் ஜெயகாந்தன் ஆளாகியதாகவும் அப்பொழுது முதலமைச்சராக பதவியிலிருந்த எம்.ஜி.ஆர் – ஜெயகாந்தனுக்கு போலிஸ் பாதுகாப்புத்தர முன்வந்ததாகவும் – ஆனால் ஜெயகாந்தன் தனக்கு எந்தப்பாதுகாப்பும் தேவையில்லை என மறுத்ததாகவும் தகவல் இருக்கிறது.ஊருக்கு நூறுபேர் திரைப்படமாகியது. பிம்சிங்கின் மகன் லெனின் இந்தப்படத்தையும் எடுத்தார்.
தமிழ் இலக்கிய உலகில் ஆழமாக தடம்பதித்த ஜெயகாந்தன் தமிழ் சினிமாவிலும் தனது ஆற்றலை பதிவு செய்துவிட்டுத்தான் மிகவும் கௌரவமாக ஒதுங்கிக்கொண்டார்.
தமிழ் சினிமாவை தரம் உயர்த்த பல புதிய இளம் இரத்தங்கள் அறிமுகமாகிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு ஜெயகாந்தன் ஆதர்சமாக விளங்குவார்.
ஜெயகாந்தனின் திரையுலக அனுபவங்களை அவரது ஒரு இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள் நூலில் விரிவாகப்பார்க்க முடியும். இதுவரையில் ஐந்து பதிப்புகளை இந்நூல் கண்டுவிட்டது.
நூறாண்டுகள் கண்டுவிட்ட இந்திய சினிமாவின் வரலாற்றில் ஜெயகாந்தனின் பங்களிப்பு குறிப்பிடத்தகுந்தது. பாடல் காட்சிகளுக்காக அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, சிங்கப்பூர், மலேசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஓடிக்கொண்டிருக்கும் தமிழ் திரைப்படத்துறையினருக்கு ஒரு காலகட்டத்தில் இந்திய மண்ணின் – குறிப்பாக தமிழகத்தின் மனிதர்களின் வாழ்வை யதார்த்தம் சிதையாமல் காண்பித்தவர் ஜெயகாந்தன்.
தான் மனிதர்களைத்தான் காண்பித்தேன். தனது கதைகளில் மண்ணின்  நெடி இருக்காது மனிதர்களின் நெடிதான் இருக்கும் எனவும் சொன்னவர் ஜெயகாந்தன்.
பலகோடி ரூபா செலவில் தமிழக அரசும் தென்னிந்திய சினிமா வர்த்தக சபையும் இணைந்து இந்திய சினிமாவின் நூற்றாண்டை சமீபத்தில் கொண்டாடியிருக்கிறது.
ஆனால் – இந்திய மக்களின் ஆத்மாவை தனது படைப்புகளிலும் தனது திரைப்படங்களிலும் பிரதிபலித்த கலைஞன் ஜெயகாந்தனையும் – பல தரமான படங்களை எடுத்த பாலுமகேந்திரா, மகேந்திரன், ருத்ரய்யா முதலானோரையும் இந்த நூற்றாண்டு விழா கண்டுகொள்ளவில்லை. அதனால் யாருக்கு நட்டம்…?
நிச்சயமாக இவர்களுக்கு அல்ல. அரசுக்கும் சபைக்கும்தான்.இந்தக்கலைஞர்களின் திரையுலக பங்களிப்பு பலனை எதிர்பாராதது என்ற ஆறுதல் தேர்ந்த சினிமா ரசிகர்களுக்கு கிட்டும்.
ஜெயகாந்தனின் சில படங்களை வலைத்தளத்தில் யூ டியூபிலும் தற்பொழுது பார்க்க முடியும்.