Thursday, 30 April 2015

ஜெயகாந்தனுக்கு அஞ்சலி-3

ஓங்கி ஒலிக்கும் யதார்த்தத்தின் குரல்
 மோனிகா மாறன்

மிழ் இலக்கிய உலகின் எழுத்தாளனென்றால் கம்பீரமும்,அறச்சீற்றமும் கொண்டவன் என்ற அடையாளத்தை உண்டாக்கிய ஜெகெயின் மறைவு ஊடகங்களில் இலக்கியம் பற்றிய பேச்சிற்கு வழிகோலியிருக்கிறது.
சமூகத்தின் மீதும், மனிதத்தின் மீதும் நம்பிக்கையை விதைத்த அவரின் உரத்த குரல் ஒரு தலைமுறையையே உலுக்கியது. 
இளவரசிகளின் கன்னி மாடங்களையும், குதிரையில் பறந்த வீரன்களையும், அலுவலகம் செல்லும் அம்மாஞ்சிகளையும், ஏழ்மையில் வெம்பிப்போன நடுத்தர மக்களையும் மட்டுமே சுற்றியிருந்த இலக்கியத்தை , யதார்த்த வாழ்வின் உன்னதங்களை எளிய மக்களின் மேன்மைகளைப் பற்றி பேச வைத்தவர் ஜெயகாந்தன். ரிக்ஷாக்காரர்களும்,சித்தாள்களும்,வண்டி ஓட்டிகளும்,விபச்சாரிகளும்,திருடர்களும் மட்டுமின்றி சுந்தர கனபாடிகளும்,என்ன செய்யட்டும் என்று கேட்கும் மாமிகளும் அவர் எழுத்துகளில் உண்மையாய் வந்தார்கள். யதார்த்தத்தை ஓங்கி ஒலிக்கும் குரல்களாக அவர்கள் பேசினார்கள்.
காலங்காலமாய் சமூகத்தில் வைத்திருந்த சம்பிரதாயமான அசட்டுத் தனங்களை ,போகிற போக்கில் இவையெல்லாம் எதுவுமில்லை,வாழ்க்கை எல்லாவற்றிற்கும் பதில் கூறும் என்று உடைத்தார். பெண்களின் மேன்மையை
“பெண் என்பவள் அவளே சில வேளைகளில் எண்ணி மயங்குவது போல் தனிப்பிறவியல்ல, சமூகத்தின் அங்கமே”என்றார்.
கம்யூனிசத்தையும் ஆன்மீகத்தையும் ஒரே தளத்தில் இணைக்க எண்ணினார். இந்திய மரபின் மேன்மைகளை உணர்த்தினார். தனிமனித சுதந்திரம் பற்றி ஐம்பதாண்டுகளுக்கு முன்பே உரத்துப்பேசினார். ஏனென்றால் அக்காலகட்டத்தில் மனிதர்கள் சமூகத்தில், சாதியில், குழுக்களில் கட்டுப்பட்டே இருந்தனர். சமூகத்தின் பார்வையில் தனிமனித ஒழுக்கங்களும்,கட்டுப் பாடுகளும் எத்தனை அபத்தமான கோணத்தில் நோக்கப்படுகின்றன என ஓங்கித் தலையிலடித்துக் கூறினார். கம்யூனிச சித்தாந்தங்களையும்,காந்தியின் எளிமையையும் ஒன்றாகக் கொண்டவராகவே வாழ்ந்தார்.
ஜெயகாந்தனைப் பற்றிக் கூறப்படும் விமர்சனங்களில் அவர் சங்கர மடத்தை இறுதியில் ஆதரித்தார் என்பதும்,வர்ணாசிரமத்தையும், இந்துத்துவாவையும் ஆதரித்தார் என்பதும். பாரத தேசத்தின் மரபை ,தொன்மத்தை அது உலகின் எந்த மரபையும் விட உன்னதமானது என்றே வலியுறுத்தினார். 
ஜெயஜெய சங்கர நூலிலும் அவர் வலியுறுத்தியது அடிப்படையான அறத்தை, மானிட தர்மங்களையே. தன்னை ஒதுங்கிப்போ, ஒதுங்கிப்போ என்று கூறிய சமூகத்தைப் பார்த்து ஆதியின் குரலாக அவர் கூறும் என்னை விலகிப்போகச் சொல்லுமிடத்திற்கு நான் வரமாட்டேன் என்பது அவன் மனமேன்மையை வலியுறுத்துவதே.
பொய்யான பகுத்தறிவு வாதங்களையே அவர் எதிர்த்தார்.மேம்போக்கான வாதங்களை அவரைப்போன்றதொரு கம்யூனிஸ்ட்டால் நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியாது. அவர் வலியுறுத்திய நாத்திக வாத அபத்தத்தை இன்று தமிழ் மண்ணில் கண்கூடாகக்  காண்கிறோம். பகுத்தறிவை மக்களைச் சிந்திக்கச் செய்யாமல் சும்மா மேடைகளில் அபத்தமாகப் பேசியதன் விளைவே இன்றைய சாதீய மோதல்களுக்கும், கீழ்மைகளுக்கும் காரணம். இதைத் தான் ஜெகெ தனித்து நின்று வலியுறுத்தினார்.
நம் மரபின் யோகங்கள்,சித்தர்களின் ஞானத் தேடல்கள் பற்றிய அவரின் உண்மையான மதிப்பீடுகள் மிகச்சரியானவையே. இன்றைய கார்ப்பரேட் உலகம் தியானம்,யோகா என்றெல்லாம் செல்வதைத் தான் அவர் அன்றே ஓங்கூர்ச்சாமி போன்ற உண்மைத் துறவிகளின் பாத்திரங்கள் மூலம் வலியுறுத்தினார். அப்படி காலங்களைத் தாண்டி சிந்திப்பவனே உண்மையான படைப்பாளி.
அவரின் சில தனிமனித பலவீனங்களைச் சொல்பவர்கள் அவரின் ஒரு படைப்பையேனும் உணர்ந்து உள் வாங்கியிருக்கமாட்டார்கள். இத்தனை சிந்தனை மனமும், படைப்பூக்கமும் கொண்ட ஒரு கலைஞனின் மனநிலைக்கு அவையெல்லாம் தேவைப்பட்டிருக்கலாம். அவரே கூறியது போல படைப்பாளியின் படைப்பைப் பாருங்கள், அவன் அந்தரங்கத்திற்குள் எட்டிப் பார்க்க எண்ணாதீர்கள் என்பதே நிதர்சனம். அவர் படைப்புகளில் பிரச்சாரப் போக்கு இருக்கலாம், சில தட்டையான சொல்லாடல்கள் இருக்கலாம்.ஆனால் இலக்கிய அனுபவங்களை அவை என்றும் தருபவையே.
ஒரு சன்னலில் அமர்ந்து உலகை நோக்கும் பெண்ணின் மனமும், ஆணின் உண்மைத் துணையை நாடும் அபலைப் பெண்ணின் மன ஓட்டங்களும், அப்புவாக ஒரு தலைமுறையின் வீழ்ச்சியை நோக்கும் சிறுவனின் உள்ளமாக, எல்லோராலும் விரட்டப்படும் திருட்டுமுழி சோசப்பின் அசட்டுச்சிரிப்பாக, உலகின் ஒட்டுமொத்த பண்பாட்டின் அடையாளமான ஹென்றியின் உலகமாக, பெண்களே உங்களை இராமன்களும், இராவணன்களும் அடிமை கொள்கிறார்கள், பொருளாதார விடுதலை என்ற பெயரில் சம்பாதித்தளிக்கும் எந்திரங்களாகவே மாற்றுகிறார்கள் எனச் சீதாவின் உள்ளமாக, வீட்டைவிட்டு இமயமலைக்கு ஓடிப்போக எண்ணும் சோமு நாவல்பழம் தின்ன ஆசை கொள்வதும், பேபியைக் குழந்தையாகவே நோக்கும் துரைக்கண்ணுவின் பாசமும், மாமாவையோ, அம்மாவையோ யாரும் டைவர்ஸ் பண்றதில்ல, புருஷன் மட்டுந்தான் டைவர்ஸ் பண்ணாலும் வேற ஒண்ணத் தேட வைக்கிற உறவு, எனக்கு புருஷன் இல்லாததால வேற எந்த உறவுமே இல்ல என்ற கங்காவின் தனிமையையும், ரோஜாச் செடியிடம் கூட நிறைவடையும் கல்யாணியின் உயர்வும், இடுகாட்டின் அக்னியை நோக்கும் ரிஷிமூலம் கதாநாயகனின் உளச்சிக்கல்களுமாய் அவர் படைப்புகள் அளிக்கும் அந்தரங்க அனுபவங்களே உண்மையான இலக்கிய வெற்றி.
” காதல் என்ற பெயராலும்,கணவன்,தந்தை என்ற பெயராலும் உங்களை மதிக்கத் தெரியாத இவர்களிடம் உங்களை ஒப்படைக்காதீர்கள். மண்ணோடும்,தெய்வத்தோடும் வணங்கி லட்சுமிகரமாக்கித் தொழுவார்கள். நேரம் வரும்போது தெரியும் இந்த கசாப்புக்காரர்களின் காதல் லட்சணம்.”
இத்தகையத் தெளிவான வாதங்கள் இன்றைய மாய ஊடக காலகட்டத்தில்,பாலியல் ஈர்ப்புகளால் அலைக்கழிக்கப்படும் இளைஞர்களுக்கு அதிகம் தேவைப்படுகிறதல்லவா? ஆம் அது தான் இலக்கியவாதியின் வெற்றி.     
காலங்களைக் கடந்து நிற்கும் அக்கலைஞனின் படைப்புகள் இன்றைய தலைமுறைக்குச் சரியான முறையில் அடையாளம் காட்டப் படுவதே அவருக்கு அளிக்கும் அஞ்சலி.
[நன்றி:சொல்வனம்]

ஜெயகாந்தன் நினைவுகள்


ஜெயகாந்தன் நினைவுகள் 
[இதயம் பேசுகிறது மணியன்]
’ஆனந்த விகடன்’ அலுவலகத்தில் திரு.பார்த்தசாரதி என்ற இளைஞர், அப்போது வாசகசாலையில் பணியாற்றிக் கொண்டிருந்தார். பழைய புத்தகங்களையும்-புதுப் புத்தகங்களையும் பிரித்து அடுக்கிக் கொண்டிருந்தவர். ஒரு சிறுகதைத் தொகுப்பைக் கொண்டுவந்து என்னிடம் கொடுத்தார்.
‘ஸார்! இந்தச் சிறுகதைகளைப் படித்துப் பாருங்களேன்! இவை வித்தியாசமான முறையில் அமைந்திருப்பதைப்போல எனக்குத் தோன்றுகிறது. நீங்கள் நிச்சயமாக இவற்றை ரசித்துப் பாராட்டுவீர்கள்!‘ என்றார். அந்தப் புத்த்கத்தின் தலைப்பு - ’ஒரு பிடி சோறு’ அதை எழுதியவர் ஜெயகாந்தன்.
புத்தகத்தைப் பிரித்துப் படிக்க ஆரம்பித்தேன். ஒவ்வொரு கதையும் என்னைச் சிந்திக்க வைத்தது. புத்தகம் முழுவதையும் படித்து முடிக்கும் வரையில் வேறு எந்த வேலையிலும் மனம் பதியவில்லை. துணிச்சலான கருத்துக்களை, அவருக்கே உரிய தனியான நடையில் வெகு லாகவமாகக்  கையாண்டிருந்தார் ஜெயகாந்தன். அவரை எப்படியாவது ’ஆனந்த விகடனி’ல் எழுதும்படி செய்ய வேண்டும் என்று ஆவல் எனக்கு உண்டாயிற்று. பத்திரிகையில் முழுப்பொறுப்பை ஏற்றிருந்த திரு. எஸ்.பாலசுப்பிரமணியம் அவர்களின் அனுமதியுடன் அவரைச் சந்தித்துப் பேசினேன்.
’ஆனந்த விகடனில் எழுதுங்கள்’ என்று அந்த அலுவலகத்திலிருந்து ஓர் உதவி ஆசிரியர், அழைப்புடன் வந்து நின்றால், அந்த எழுத்தாளர் மிகுந்த மகிழ்ச்சியுடன் அதை ஏற்றுக்கொள்வார் என்றுதான் எல்லாரும் நினைப்பார்கள். ஆனால் ஜெயகாந்தன் அப்படி எழுதச் சம்மதிக்கவில்லை. ‘என்னுடைய சிறுகதைகளை நீங்கள் துணிந்துபோட மாட்டீர்கள். போட்டாலும் உங்கள் பத்திரிகையின் சௌகரியத்திற்கு ஏற்றபடி ’எடிட்’ செய்து போடுவீர்கள். அதற்கெல்லாம் நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். எனக்கு இந்த வாய்ப்பு வேண்டாம்‘ என்று ஒதுங்கிக் கொள்ள முயன்றார் ஜெயகாந்தன்.
அந்த நல்ல எழுத்தாளர் எழுதக் கூடிய வாய்பை ’ஆனந்த விகடன்’ இழந்து விடக்கூடாது என்று நான் எண்ணினேன். அவருடைய நிபந்தனைகளையும் ஒப்புக்கொண்டேன். மற்றவர்களைவிட அதிகமாகச் சன்மானம் செய்து கொடுப்பது, அவருடைய தனித்தன்மை வெளிப்படும்படி சிறுகதைகளை அவர் சுதந்திரமாக எழுத இடம்கொடுப்பது, அவருடைய எழுத்துக்களை அவருடைய சம்பந்தம் இன்றி ’எடிட்’ செய்வதில்லை.. இப்படிப் பல நிபந்தனைகளையும் ஒப்புக்கொண்டேன்.
ஜெயகாந்தன் ’ஆனந்த விகடனி’ல் எழுதத் தொடங்கினார். அந்தச் சிறுகதைகளைப் படித்தவர்கள் நிமிர்ந்து உட்கார்ந்தார்கள். அவருடைய எழுத்துக்கள் எல்லா வாசகர்களுடைய கவனத்தையும் கவர்ந்தன. வாசகர்கள் பலரிடமிருந்து பாராட்டுக் கடிதங்களும் வந்தன. ஒருசில கண்டனக் கடிதங்களும் வந்தன. இது நாங்கள் எதிர்பார்த்ததுதான். ஜெயகாந்தனின் சிறுகதைகளில் போலிச் சம்பிரதாயங்களை உடைத்து எறியும் துணிச்சல் இருக்கும். மேலோட்டமான ரசனைகள் உள்ளவர்கள் மத்தியில் இது பெரும் சலசலப்பை ஏற்படுத்திற்று.
அப்போது ஆசிரியர் வாசன் வாரம் ஒருமுறை ஆசிரியர் குழுவைக் கூட்டி விவாதிப்பார். எல்லாரும் அவரவர் கருத்துகளை வெளிப்படையாக எடுத்துச் செல்லலாம். அப்படி ஒரு கூட்ட்த்தில், ஆசிரியர் குழுவைச் சேர்ந்த திரு.ஸ்ரீதர் மிகுந்த மனத்தாங்கலுடன் ஜெயகாந்தனின் கதைகளைக் கண்டித்துப் பேசினார். ‘ஜெயகாந்தனின் சிறு கதைகளில் தவறான, ஒழுக்கக்கேடான கருத்துக்கள் வெளிவருகின்றன. அவற்றைப் படிக்கவே பெண்கள் கூசுகிறார்கள். ’ஆனந்த விகடனை’ வழக்கமாக வாங்கிப் படிக்கும் குடும்பங்களில் பெரியவர்கள் வெள்ளிக் கிழமை வந்தாலே மனங்கலங்கும் நிலை ஏற்பட்டு விட்டது ! என்று கொஞ்சம் காரசாரமாகவே தாக்கிப் பேசினார். நேர்மை, ஒழுக்கம், நியாயம் இவற்றுக்கெல்லாம் தானே காவலர் என்ற தற்பெருமை கொண்டவர் அவர். போலிவேதாந்தம் பேசுவது தவிர, இலக்கியத் தரமான கதைகளை மதிப்பிடத் தகுதியில்லாதவர். கொள்கைகளைப் பற்றியும், ஜெயகாந்தனின் சிறுகதைகளைப் பற்றியும் அந்தப் போலிமனிதர் ஒரு பிரச்சனையாக எடுத்துக் கொண்டு சண்டை போட்டது எனக்கு வியப்பாக இருந்தது.
ஆசிரியர் வாசன் எல்லாருக்கும் சுதந்திரம் கொடுப்பவர். எல்லாருடைய கருத்துக்களையும் பாரபட்சமின்றிப் பரிசீலனை செய்பவர். அதனால், ‘இதுவரை வெளிவந்த ஜெயகாந்தனின் சிறுகதைகளை எனக்கு அனுப்பி வை‘ என்று கூறிவிட்டுப் போய்விட்டார். கதைகளை அனுப்பி வைத்தேன். எனக்குச் சிறிது கலக்கமாகவே இருந்தது. மறுநாள் வாசன் என்னிடம் ’போன்’  மூலமாக ’ஜெயகாந்தனை நான் சந்திக்க விரும்புகிறேன்’ என்று வேறு சொல்லிவிட்டார். என்னுடைய கலக்கம் மேலும் அதிகமாயிற்று. ஆனால், தொடர்ந்து நடந்த நிகழ்ச்சி என்னை மனம் நெகிழ்ந்து வியக்கச் செய்துவிட்டது ! என்னை அழைத்து ’ஜெயகாந்தனைன் கதைகளைப் படித்தேன். பண்போடு நயமாக எழுதியிருக்கிறார். அவரைத் தொடர்ந்து எழுதச் செய்ய வேண்டும்!’ என்று சொன்னார் ஆசிரியர் வாசன். நேரில் அவரைச் சந்தித்த ஜெயகாந்தனிடமும் அவரை மிகவும் பாராட்டி, தொடர்ந்து எழுதும்படி கேட்டுக் கொண்டார். ஆசிரியர் வாசனின் பாரபட்சமற்ற மதிப்பீடும், கருத்தாழமும் இதில் தெளிவாக வெளிப்பட்டது. போலிவேதாந்தம் பேசியவரின் முகமூடியும் இதில் கிழித்தெறியப்பட்டது !
ஜெயகாந்தனின் எழுத்தில் உள்ள வேகம் அவருடைய மேடைப் பேச்சுகளிலும் இருக்கும். தனது கொள்கைகளை எடுத்துவைக்க, எந்தச் சந்தர்ப்பமானலும் - எவர் முன்னிலையிலும் தயங்க மாட்டார். பெரியாரை எதிர்த்து அவர் முன்னிலையே, அவர் திருச்சியில் மேடையில் பேசியதை நான் கேட்டிருக்கிறேன். திருமதி. இந்திரா காந்தியை எதிர்த்து 1971ம் ஆண்டு தேர்தல் கூட்டங்களில் அவர் பேசியதையும் கேட்டிருக்கிறேன்.
தன்னுடைய தனிச் சிறப்பை எடுத்துச் சொல்லிக் கொள்ள அவர் தயங்க மாட்டார் ’அன்று புதுமைப்பித்தன் - இன்று ஜெயகாந்தன்!’ என்று அவர் தனது திறமையைப் பற்றி அடித்துச் சொல்லிப் பேசுவார். ’தமிழ்ச் சிறுகதைகளின் உலகில் இந்த அரைநூற்றாண்டு காலத்தில், உலகின் தரத்துக்கு உகந்த சிறுகதைகளை எழுதி, தமிழையும் - தங்களுடைய தரத்தையும் உயர்த்திக் கொண்ட எழுத்தாளர்கள் ஒருசிலர் உண்டு. அவர்களில் நானும் ஒருவன்’ என்று தனது அனைத்திந்திய நூல் வரிசை புத்தகத்தின் மதிப்புரையில் எழுதி இருக்கிறார் அவர்.
காஞ்சிப் பெரியவர்களைச் சந்திக்க வேண்டும் என்று அவர் பெரிதும் விரும்பினார். அவர்களுடைய ஆசிகளைப் பெற நானும் ஜெயகாந்தனும் சென்னையில் புறப்பகுதியில் இருந்த திரு.எஸ்.வி.சுப்பையாவின் தோட்டத்துக்குப் போனோம். அங்கே அவர் காஞ்சி முனிவரின் முன் நின்று மெய்மறந்து, மனம் உருகிப்போன நிகழ்ச்சி இன்னும் என் நினைவில் பசுமையாக இருக்கிறது. அன்றிலிருந்து அவருடைய வாழ்க்கையிலேயே ஒரு புதிய மாறுதல் உண்டாயிற்று. சுவாமிகளை ஒரு பாத்திரமாக வைத்து அவர் எழுதிய நாவல், தமிழ்ப் புத்தக வெளியீட்டில் பிரமிக்கத்தக்க சாதனையையே ஏற்படுத்திற்று.
ஜெயகாந்தன் எழுத்தாளர் என்று முறையில் சாகித்ய அகாடமி பரிசு பெற்றவர். அவருடைய ’சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்ற நாவல் திரைப்படமாக உருவாக்கப்பட்ட போது, அனைத்திந்திய அளவில் புகழ் பெற்றது. பல மொழிகளிலும் அவருடைய எழுத்துக்கள், மொழி பெயர்க்கப்பட்டிருக்கின்றன. இந்த அளவு எல்லாத் துறைகளிலும் பெருமையும் புகழும் பெற்ற எழுத்தாளர்கள் ஒரு சிலரே. தமிழுக்கு அப்படி ஒரு ஜெயகாந்தன் கிடைத்தது, தமிழுக்குப் பெருமை.
சுமார் இருபத்தைந்து ஆண்டுகளாக என்னுடன் நெருங்கிப் பழகிவரும் நண்பர் அவர். எங்களுக்குள் கருத்துவேறுபாடுகள் நிறைய உண்டு. அதேபோல எண்ண ஒற்றுமைகளும் பலவிதத்தில் உண்டு. இவை எதுவும் எங்களுடைய நட்பைப் பாதித்ததில்லை. என்னுடைய குடும்பத்தில் ஒருவராக இடம்பெற்றவர் அவர். ‘ஜெயகாந்தன் என்னுடைய மூன்றாவது மகன்‘ என்றே எனது தாயார் சொல்வது வழக்கம்.
துணிச்சலுக்கு மறுபெயர் ஜெயகாந்தன் !தன்னம்பிக்கைக்கு மறுபெயர் ஜெயகாந்தன் !தமிழ் சிறுகதைகளுக்கு மறுபெயர் ஜெயகாந்தன் !
(மார்ச் 1982 - மணியன் எழுதிய கட்டுரை)

Wednesday, 29 April 2015

ஜெயகாந்தனுக்கு அஞ்சலி -2


ஜெயகாந்தனும் நானும் 
தேவபாரதி 
ஜெயகாந்தனை நான் முதன்முதலில் சந்தித்தது 1961 ஆகஸ்டில் ஒரு நாள். தேதி நினைவில்லை. இடம் நினைவிருக்கிறது. கன்னிமாரா நூலகத்திற்குப் போக ஜெயகாந்தன் குடியிருந்த 26, எழும்பூர் ஹைரோடு வீட்டிற்கு அருகே ஒரு பின்வழி உண்டு.. அங்கு நானும் என் நண்பரும் அற்புதமான கவிஞருமான   தமிழ் ஒளியும் வந்து கொண்டிருந்தோம். ஜெயகாந்தன் தம் வீட்டிலிருந்து வந்துகொண்டிருந்தார். தமிழொளியைப்  பார்த்து அவர் தம் ஆட்காட்டி விரலை உயர்த்தி ஆட்டிக்காட்டினார். தமிழொளியும் அவ்வாறே ஆட்டிக்காட்டினார். நான் புதிர் விளங்காமல் இருவரையும் மாறிமாறிப் பார்த்தேன். 
                                                        
[‘வந்த விடுதலை யாருக்கென்றே அதை வாங்கிய வீரரைக் கேட்டிடுவோம் நொந்து கிடப்பவர் வாழவில்லை எனில் நொள்ளை விடுதலை யாருக்கடா?’ என கேட்டு 1947லேயே கேள்வி தொடுத்தார்.தமிழ் ஒளி
‘கண்ணின் கருமணியே காசினிக்கு மாமணியேகண்ணீர் துடைக்க வந்த காலமே நீ வருக’ என்று மேதினத்தை முதலில் தமிழில் நெடுங்கவிதையாகப் பாடியவரும் தமிழ்ஒளிதான்.‘காதெலாம் கிழியும் வணம் பறையடித்து விட்டான்கவுண்டருக்கும் பறைச்சிக்கும் கலியாணம் என்று’ 1947ல் எழுதிய வீராயி காவியத்தில் இப்படி ஓர் இடம் வருகிறது. இந்த காவியம் தலித் மக்களைப் பற்றி தமிழில் பதிந்த முதல் காவியம்.பஞ்சம் பிழைக்க கிழக்காசிய நாடுகள்,ஆப்பிரிக்க நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்ட தலித் மக்கள் படும் வாதைகளை பாடும் காவியம் ]அது தான் அவர்கள் பரஸ்பரம் வணக்கம் செய்து கொள்ளும் வழக்கமான சமிக்ஞை என்று பின்னால் விளங்கியது 
சற்று நேரம் பேசியதும் "வாங்க காபி சாப்பிடுவோம்" என்று அருகில் இருந்த பங்கஜ விலாஸ் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றார்.இருவரும் சிரிக்கச் சிரிக்க அன்னியோன்னியமாக பேசிக்கொண்டிருந்ததை நான் மௌனமாகக் கவனித்தேன்.குள்ளமான பேண்டும் சட்டையும் போட்டு இன் பண்ணியிருந்த  தோற்றமும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நிமிர்வும் என்னைக் கவர்ந்தன.
தமிழொளி "இவரும் எழுத்தாளர்.காலடிப்பேட்டையில் இருக்கிறார் " என்று அறிமுகம் செய்தார்.
அப்போது கூட என் சுபாவமான கூச்ச உணர்வால் அவர் யார் என்று கேட்டுத் தெரிந்துகொள்ளவில்லை.
"வீட்டுக்கு வாங்க ஒரு நாளைக்கு" என்று கூறிவிட்டுப் பில் கொடுத்தார். நாங்கள் கூட இறங்கி நடந்தோம். 26, எழும்பூர் ஹைரோடு வீட்டைக் காட்டிவிட்டு விடை பெற்றார். 
"இவர் யாருங்க?" என்று அவர் விடைபெற்றபின் நான் கேட்டேன்.
"அட.. உனக்குத் தெரியும்னு நெனச்சேம்பா!" என்று வியந்து விட்டு "இவர் தாம்பா ஜெயகாந்தன்" என்றார்.
அப்போது நான் சந்தித்த மனிதர் மீது ஏற்கெனவே இருந்த மதிப்பு கூடியது. 
அது சரஸ்வதி பத்திரிகையில் அவர் எழுதிய கதைகளைப் படித்ததாலும் அவர் அந்தப் பத்திரிகையில் சென்னைக்கு வந்தேன் தொடர்ப் பகுதியில் அவர் தம் அனுபவத்தை எழுதியதாலும் உண்டான மதிப்பு. 
அடுத்த வாரமோ அதற்குப்பின்போ நான் அவரைச் சந்தித்தேன். அந்த வீட்டின் முன்பகுதியில் எதிர் எதிராக இரு குறுகிய திண்ணைகள். உட்கார்ந்து பேசினோம் ..பேசிக்கொண்டே இருந்தோம்.சாப்பாட்டு நேரம் வரவே அவரது தாயார் வந்து "காந்தா, சாப்பிட வாப்பா" என்று அழைத்தார்.
"இதோ இவரும் என்னோட சாப்பிட வருவார்" என்று அறித்தார். 
"அதுக்கென்ன.. வரட்டுமே!" என்று அன்போடு கூறிவிட்டு அவர் உள்ளே சென்றார். 
இப்படித் தொடங்கியது எங்கள் நட்பு. 
பின்னாளில் அது படிப் படியாக வளர்ந்து அவரது நெருங்கிய வட்டத்தில் நானும் ஒருவனாகுமளவு  வளர்ந்தது. பல கருத்துவேற்றுமைகள்.  முகத்தில் அடித்தாற்போல் பேசும் அவரது வெளிப்படையான பேச்சு இவற்றினால்  எங்கள் நட்பு பாதிக்கப்படவில்லை. 
1961 டிசம்பரில் ஆனந்த விகடனில் என் சிறுகதை முத்திரைக் கதையாக வெளிவந்து பிறரால் கவனிக்கப்படும் அந்தஸ்து எனக்குக் கிட்டியது.
"நான் தான் உங்க பேரிலே எழுதறேன்னு விகடன் துணை ஆசிரியர் மணியன் நினைக்கிறார். நீங்க  போய் அவரைப் பார்த்துட்டு வாங்க" என்று அருகாமையில் இருந்த  மணியனின் சேட் காலனி வீட்டுக்குப் போய்ப் பார்க்கச்சொன்னார். மணியனுக்கும் என்னைப் பார்த்ததில் மகிழ்ச்சி. அடிக்கடி எழுதுங்கள் என்று உற்சாகப் படுத்தினார்.
அவர் உன்னைப் போல் ஒருவன் படத்தை எடுக்கும்போது "பாரதியார், நீங்க தான் இதற்கு ப்ரொடக்ஷன் மேனேஜர்" என்றார்.எனக்கு மறுக்கத் தோன்றவில்லை. எனக்கும் வேலை இல்லாத காலம் அது. கம்பெனிக்கு ஆசிய ஜோதி பில்ம்ஸ் என்று பெயர் வைத்தார்கள் . படம் வளர்ந்து வெளியிடப்பட்டு வரலாறாகியது .அடுத்து யாருக்காக அழுதான். அந்தப்படத்திலும் என் பங்கேற்பு தொடர்ந்தது.அது வெற்றி பெறவில்லை. எனினும் ஜெயகாந்தனின் செல்வாக்கு உயர்ந்தது. அதன் காரணமாக  ஒரு டாகுமெண்டரி தயாரிக்கும் வாய்ப்பு கிடைத்தது . எங்கள் நட்பில் ஒரு சிறு விரிசல் விழுந்தது .இரண்டு ஆண்டுகள் நான் அவரைச் சென்று காணவில்லை. 
நண்பர் ஜெயகாந்தனின் ஆசிய ஜோதி பிலிம்ஸில் நான் பணியாற்றிய போது யாருக்காக அழுதான் என்ற படத்தில் என்னோடு வேலை செய்த டைரக்டர் K.சுப்பிரமணியத்தின் இளைய குமாரர் ரமணனும்எடிட்டர் K.செல்வராஜூம் எனக்கு நண்பர்களாயினர்அவர்கள் ஒரு படமெடுக்கிற முயற்சியில் இருந்தனர்.
அபிராமபுரத்தில் சுடர்க்கொடி பிலிம்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கியிருந்தார்கள்தங்குவதற்கு இடமும்வேலையுமில்லாமல் இருந்த நான் செல்வராஜை போய் சந்தித்தேன்.
பாரதியார் நீ ஒன்றும் கவலைப்பட வேண்டாம்ஓரிரு மாதத்தில் நான் படத்தை ஆரம்பித்து விடுவேன்அதுவரை நீ இங்கேயே தங்கிக்கொள்ளலாம்சாப்பாட்டை நான் கவனித்துக்கொள்ளுகிறேன்.
அவர் சொன்னவாறே இரண்டு மாதங்கள் கழித்து, T.R.மகாலிங்கத்தையும்சௌகார் ஜானகியையும் வைத்து ‘திருநீலகண்டர்’ என்ற படத்தைத் தயாரித்தார்நான் நிர்வாகம்.
அந்தச் சமயங்களில் திருப்பூரிலிருந்து எங்கள் அலுவலத்துக்கு வந்து போயிருந்த சின்னராமலிங்கம் என்பவர் எனக்கு நண்பரானார்.
பேச்சுவாக்கில், "பாரதியார் நானும் கூட ஒரு படம் தயாரிக்க விரும்புகிறேன்ஆனால் பணம் என்னிடம் கிடையாதுவீட்டுப் பத்திரத்தை வேணுமானால் அடகு வைத்து படம் எடுக்கலாம்பிறகு மூட்டுக் கொள்ளலாம்!" என்றார்.
அப்போது நான் ‘சத்திரமும் சபிக்கப்பட்டவர்களும்’ என்று கைவசம் ஸ்கிரிப்ட் வைத்திருந்தேன்
இதைப் படம் எடுக்க முயற்சிக்கலாமே என்ற யோசனையில் எனக்கும் செல்வராஜுக்கும் பொதுவான நண்பராக இருந்த தனசேகரிடம் இது குறித்துப் பேசினேன்தனசேகர் சொன்னார்என் மாமா ஒருவர் இருக்கிறார்அவர் சினிமா சம்பந்தப்பட்டவர்அவர் மூலம் பைனான்ஸ் ஏற்பாடு செய்து கொள்ளலாம்முதலில் நாம் ஒரு அலுவலகத்தைத் திறப்போம்அப்புறம் சின்னராமலிங்கத்தின் பத்திரத்தை வைத்து மாமா மூலம் பணம் ஏற்பாடு செய்துகொள்வோம்ஆபீஸ் ஆரம்பிப்பதற்கு நான் பத்தாயிரம் தருகிறேன் என்றார்.
நானும் நண்பர் தனசேகரும் கையில் பத்தாயிரத்துடன் அலுவலகம் தேட ஆரம்பித்தோம்.
ஆழ்வார்பேட்டைராமசாமி நாயக்கன் (இப்போது ராமசாமி தெருதெருவில் 46ம் எண்ணுள்ள ஒரு வீட்டின் மாடி காலியாக இருக்கிறது என்று சொன்னார்கள்போய் பார்த்தோம்எங்களுக்கு மிகவும் பிடித்துவிட்டதுஅந்தத் தெரு மௌபரீஸ் ரோட்டை ஒட்டி இருந்த சின்னத் தெருஇந்தத் தெரு தொடங்கும் இடத்தில் ஓர் அழகிய பிள்ளையார் கோயில்கவிழ்ந்த நிழல் பரப்பி நிற்கும் பெரிய அரசமரம் கோயிலுக்கு குடை பிடித்து நிற்கும்மாதவாடவை 130 ரூபா இரண்டுமாக வாடகை முன் பணம்கையில்தான் பணம் இருக்கிறதே!
.நானும் தனசேகரும்படத்தை இயக்கப் போகிற நண்பர் K.விஜயனும்தன சேகரின் மாமாவும் போய் எங்கள் கம்பெனிக்கு நாங்கள் சூட்டியிருந்தஅம்மா புரடக்ஷன் என்ற பெயர் பலகை வைத்துப் பூசை போட்டோம்.
மறு நாள் காலை 10 மணிக்கு நாங்கள் அனைவரும் அலுவலகத்துக்கு வந்தோம்அலுவலகத்துக்கு சாமான்கள் வாங்க வேண்டியிருந்தது.
ஆகவே தனசேகரின் காரில் பாண்டி பஜாருக்குப் போனோம்அகஸ்மாத்தாக எனது நண்பர் ஜெயகாந்தனை அங்கே சந்தித்தேன்.
ஆசிய ஜோதி பிலிம்ஸ் சார்பில்உன்னைப் போல ஒருவன்யாருக்காக அழுதான்என்ற படங்களுக்குப் பிறகுஅரசாங்கத்துக்காகநேற்று – இன்று – நாளை என்கிற டாக்குமென்ட்ரியை நாங்கள் தயாரித்த போது ஒரு சிறு மன வருத்தத்தில் அங்கிருந்து நான் ஜெயகாந்தனைப் பிரிந்து நான் வந்துவிட்டேன்.
அதற்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து இப்போது தான் பாண்டி பஜாரில் நான் ஜெயகாந்தனை சந்திக்கிறேன்.
"எங்கே பாரதியார்இங்கே?" என்றார் ஜே.கேஒரு படம் எடுப்பதற்காக ஆபீஸ் எடுத்திருக்கிறோம்சில சாமான்கள் வாங்குவதற்காக இங்கே வந்தேன்.
ஆபீஸ் எந்த இடம்?
ஆழ்வார் பேட்டை ராமசாமி நாயக்கன் தெருவில்
ஒரு நாளைக்கு வாருங்கள் ஜே.கே
வர்றேன் பிறகு எங்கள் வேலையாக நான் அவரிடம் இருந்து விடை பெற்றேன்
பாண்டி பஜாரில் எங்கள் வேலையை முடித்துக் கொண்டு எங்கெங்கோ எங்கள் வேலைகளைப் பார்த்துக்கொண்டு இரவு நாங்கள் அலுவலகம் போய் சேர்ந்தோம்.
அங்கிருந்த சில தோழர்கள் வந்து சொன்னார்கள். "உங்களைப் பார்க்க ஜெயகாந்தன் வந்து போனார்".
அன்றைக்கேஅவர் வருவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
மறுநாள் காலையில் தான் அவருக்குப் போன் செய்தேன்.
"ஜே.கேநான் நேற்று வருவதற்கு இரவாகிவிட்டதுநீங்கள் வருவது தெரிந்திருந்தால் நான் இருந்திருப்பேன்."
"நாளைக்குப் பதினொரு மணிக்கு இருப்பாயா?"
"வாங்க ஜே.கே நான் இருக்கிறேன்".
மறுநாள் காலை அவர் சொன்ன மாதிரியே பதினொரு மணிக்கு வந்துவிட்டார்.
எங்கள் அலுவலகத்துக்குக் கீழே மோகன் என்பவரின் டீக்கடைமேலே இருந்து குரல் கொடுத்தால் போதும்.
நான் டீ சொன்னேன்.
நாங்கள் டீ சாப்பிட்டவுடன்நான் ஏற்கனவே தீர்மானித்தபடி ஜே.கே.யின் கையில் ஒரு சாவிக் கொத்தைக் கொடுத்தேன்மூன்று சாவிகள் அடங்கியது.
ஜே.கேநீங்கள் எப்போது வேண்டுமானாலும் வரலாம்படவேலையாக நாங்கள் அங்கே இங்கே போயிருந்தாலும் நீங்கள் காத்திருக்க வேண்டியதில்லை
ஏறக்குறைய இந்த சாவிக்கொத்தை கால் நூற்றாண்டு காலம் அவர் வைத்திருந்தார்.
எப்போதும் அந்த அலுவலகம் பெரும்பாலும் திறந்தே இருந்ததுநண்பர்களும் அன்பர்களும் எங்களை சூழ்ந்தே இருந்தார்கள்.
இன்னார் இனியர் என்று இல்லாமல் அடையா நெடுங்கதவாக அந்த அலுவலகம் புழங்கியதால் – அது மடம் என்று பெயர் பெற்றது. அங்கே தான் ஜேகே என்று தமிழகமே அழைக்கும் அளவு அந்தஸ்தின் உயரத்தை அவர் பெற்றார். [தொடரும்]