Friday, 31 October 2014

கருவில் இருக்கும் சிசுவுக்கு அறுவை சிகிச்சை

                அறிவியல் தொலைநோக்கி 


ஐதராபாத்: நாட்டிலேயே முதல் முறையாக, கருவில் இருக்கும் சிசுவுக்கு இதய அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து ஐதராபாத் டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர். ஆந்திர மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த தம்பதியினர் அருண் (29), சிரிசா (25). சிரிசா 7 மாத கர்ப்பிணி. இவரை பரிசோதித்த டாக்டர்கள், கருவில் இருக்கும் சிசுவுக்கு இதயக் கோளாறு இருப்பதாக கூறினர். இதனால் கவலை அடைந்த அருண், சிரிசா தம்பதியினர் ஐதராபாத்தில் உள்ள அட் கேர் மருத்துவமனையை அணுகினர். அங்கு, சிரிசாவை பரிசோதித்த டாக்டர்கள், கருவில் இருக்கும் சிசுவுக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர். இதற்கு அருண், சிரிசா தம்பதியினர் முதலில் தயங்கினர். இதனால், சிரிசாவுக்கு மருத்துவ அறிவியல் பற்றி பாடமே எடுத்துள்ளனர். கருவுக்கு எவ்வாறு அறுவை சிகிச்சை செய்வார்கள் என்பதை தெளிவாக விளக்கி உள்ளனர். 


இதன்பிறகு சம்மதித்தார் சிரிசா. மிகவும் கடினமான இந்த அறுவை சிகிச்சையை ஐதராபாத் டாக்டர்கள் நேற்று முன்தினம் வெற்றிகரமாக செய்து முடித்து சாதனை படைத்துள்ளனர். நேற்று உலக கரு தினம¢. அதற்கு முந்தைய நாளான நேற்று முன்தினம் இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து குழந்தை இதய நிபுணர் டாக்டர் கே.நாகேஸ்வர ராவ் கூறியதாவது: கருவில் உள்ள சிசுவின் இதயத்தின் இடது அறையில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இதனால், இதய அறை சேதமடைந்து சுருங்கி இருந்தது. இத்தகைய பாதிப்புடன் குழந்தை பிறந்தால், அதன் பிறகு அறுவைசிகிச்சை மேற்கொள்வது சாத்தியமில்லாதது. எனவே, கருவில் இருக்கும் போதே இதய அறுவைசிகிச்சை செய்ய முடிவு செய்தோம்.கருவின் 26 வாரத்தின் போது, முதல் முயற்சி மேற்கொண்டோம். 

ஆனால் கருவின் நிலை, அறுவைசிகிச்சை செய்வதற்கு ஏற்ற வகையில் இல்லை. இதனால், ஒரு வாரத்துக்கு பிறகு மீண்டும் முயற்சி செய்தோம். மொத்தம் 12 ஸ்பெஷலிஸ்ட்கள் இணைந்து இந்த வரலாற்று சிறப்பு மிக்க அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்துள்ளோம். தற்போது, சிரிசாவும் கருவும் நலமாக உள்ளனர். கருவின் எடை இன்னும் 2 வாரத்தில் 830 கிராமில் இருந்து 1200 கிராமாக கூடும். கருவின் இதய துடிப்பு, வளர்ச்சி அனைத்தும் சரியாக உள்ளது.  

ஸ்ரீ வைஷ்ணவ ஆசார்ய வைபவம்- திருமழிசை ஆழ்வார்

ஸ்ரீ வைஷ்ணவ ஆசார்ய  வைபவம் நூலில் இருந்து 


                                                 திருமழிசை ஆழ்வார்

எம்பெருமான் திருப்பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள திருக்கோலத்தைத் தனது திருமேனியிலேயே அனைவரும் காணும்படி வெளிப்படுத்தி அனுபவித்தவர் திருமழிசையாழ்வார். காஞ்சிபுரத்திற்குக் கிழக்கில் திருமழிசை எனும் திருத்தலம் உள்ளது. 
அப்பகுதியில் பார்க்கவர் எனும் முனிவர் “தீர்க்கசந்திர யாகம்” செய்து வந்தார். அப்பெரியவருக்கும் கனகாங்கி எனும் தேவமாதிற்கும் துவாபரயுகத்தில் சித்தார்த்தி ஆண்டு தைத்திங்கள் தேய்பிறையில் மக நட்சத்திரத்தில் பிரதமை திதியில் ஞாயிற்றுக் கிழமையில் திருமாலின் திரு ஆழியின் அம்சமாய் கை கால் முதலிய உறுப்புகள் இல்லாத ஒரு பிண்டம் பிறந்தது.
                                                              

அதனைப் பெற்றவர்கள் மிகவும் வருத்தம் கொண்டனர். அதை அருகில் இருந்த ஒரு பிரம்புப் புதரில் அவர்கள் போட்டுவிட்டுப் போக திருமால் அங்கே எழுந்தருளி அதை நோக்கி அருள்புரிய அப்பிண்டம் அழகிய ஆண் குழந்தையாக உருப்பெற்றது. உடனே அது அழத் தொடங்கியது. “மகீசார க்ஷேத்ரபாதி” யான எம்பெருமான் மீண்டும் எழுந்தருளி தனது திருக்கோலத்தைக் காட்டி அக்குழந்தையின் பசி தாகம் போக்கி மறைய அது இப்போது திருமாலின் பிரிவாற்றாமையால் அழத் தொடங்கியது.

அச்சமயத்தில் அங்கு வந்த திருவாளன் என்பவர் அம்மகவை எடுத்துத் தன் இல்லம் சென்று தன் மனைவியான பங்கயச் செல்வியிடம் அளித்தார். அவர் அக்குழந்தையை வளர்க்க எண்ணி உச்சி முகர்ந்து மார்போடணைத்தார். பங்கயச் செல்விக்கு உடன் பால் சுரந்தது. ஆனால் அக்குழந்தை அப்பாலை உண்ணவில்லை, அழவும் இல்லை, சிறுநீர் கழித்தல் முதலானவையும் செய்யவில்லை. இதனைக் கேள்வியுற்று ஒரு முதிர்ந்த சான்றோர் தன் கையில் ஒரு கலத்தில் பால் காய்ச்சிக் கொண்டு வந்தார். அம்மகவின் முன் அதை வைக்க அக்குழந்தை அப்பாலை அருந்தியது.

திருவாளனும் பங்கயச் செல்வியும் அப்பெரியவரிடம் நாள்தோறும் பால் கொண்டு வந்து பாலகனைப் பருகுவிக்கச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ள அவரும் இசைந்து அங்ஙனமே செய்தார். தம் மனைவியோடு தினமும் வரும் அம்முதியவரின் எண்ணம் அறிந்த அக்குழந்தை ஒருநாள் பாலமுதில் சிறிது நிற்கும்படி செய்து மீதியை உண்டது. எஞ்சிய பாலை அப்பெரியவர்கள் அருந்தினர். அதனால் அவர்கள் இளமைப் பருவம் அடைந்தனர். சில திங்கள்கள் கழிந்து அவர்களுக்கு ஓர் ஆண்மகவு பிறக்க அப்பிள்ளைக்குக் கணிகண்ணன் எனப் பெயரிட்டு வளர்த்து வந்தனர்.

திருவாளனுக்கும் பங்கயச் செல்விக்கும் வளர்ப்பு மகனாக இருந்த பிள்ளை திருமழிசை என்ற தலத்தின் காரணமாக திருமழிசை ஆழ்வார் எனும் திருநாமத்துடன் விளங்கியது.

ஏழு ஆண்டுகள் கழிந்தபின் அப்பிள்ளை பல நூல்களைக் கற்று பற்பல சமயங்களிலும் புகுந்து இறுதியில் சிவவாக்கியர் எனும் பெயருடன் சைவ சமயத்தைச் சார்ந்து ஒழுகத் தொடங்கியது. சிவவாக்கியர் பல சிவத்தலங்களுக்கும் சென்று திருமயிலையை அடைந்தார்.
                                                                     


முதலாழ்வார்களில் ஒருவரான பேயாழ்வார் அங்கிருந்த பூஞ்சோலையில் தங்கி இருந்தார். சிவவாக்கியரைத் தடுத்தாட்கொண்டு உலகின் முதற்பொருளாய் விளங்கி முக்திநிலை அளிக்கும் முதல்வன் திருமாலே என்று பேயாழ்வார் அவருக்கு உணர்த்தினார். பேயாழ்வார் திருநாராயணனின் திருமந்திரத்தை உபதேசிக்கத் திருமழிசையாழ்வார் ஸ்ரீ வைணவர் ஆனார். இதற்கு அவருக்கு நானூறு ஆண்டுகள் சென்றன.
                                                                           
திருமழிசையாழ்வார் எம்பெருமானையே தியானித்துக் கொண்டு திருமழிசையில் உள்ள “கஜேந்திர ஸரஸ்” குளக்கரையில் எழுநூறு ஆண்டுகள் யோகத்தில் மூழ்கி இருந்தார். பிறகு அவர் ஒரு மலைக் குகையை அடைந்து அங்கு சில காலம் தியானத்தில் எழுந்தருளிச் செய்தார். அப்போது உலகில் இதுவரை காணாத பேரொளி அக்குகையில் தோன்ற அதைக் கண்ட பொய்கையாழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார் ஆகிய முதலாழ்வார்கள் அங்கு வந்து திருமழிசையாழ்வாரைக் கண்டனர். அவர்கள் யாவரும் ஒருவருக்கொருவர் அன்புகொண்டு தழுவிப் பின் யோகத்தில் மூழ்கி இருந்து சிலகாலம் கழித்துத் திருமயிலை அடைந்தனர். அங்கிருந்து முதலாழ்வார்கள் விடைபெற்றபின் திருமழிசையாழ்வார் திருமழிசைக்கு மீண்டும் வந்தார்.
அங்கு ஒரு நாள் சாத்துகைக்குத் திருமண் வேண்டி அகப்படாமல் திருமழிசையாழ்வார் வருந்தினார். அவரது கனவில் திருவேங்கடநாதன் எழுந்தருளி, திருமண் உள்ள இடத்தைக் குறிப்பிட்டுக் கூறி அருளினார். அவரும் அங்கே சென்றுத் திருமண் கண்டு எடுத்துப் பன்னிரண்டு திருநாமம் அணிந்து திருமாலைத் தொழுதார். பிறகு திருமழிசையாழ்வார் கச்சியில் உள்ள திருவெஃகா சென்றார். அங்கு பொய்கையாழ்வார் அவதரித்த பொய்கைக் கரையில் ஆழ்வார் எழுநூறு ஆண்டுகள் யோகத்தில் எழுந்தருளி இருந்தார். இவரருளால் முதியவர்களுக்கு இளமைக் கோலம் வந்து பிறந்த கணிகண்ணன் இங்கு வந்து திருமழிசையாழ்வாரின் சீடர் ஆனார்.

இங்குதான் அன்பிலும், தொண்டிலும் பக்தியிலும் சிறந்திருந்த ஒரு முதிய பெண்மணி ஆழ்வாரின் திருவருள் பெற்று இளமையான அழகுப் பெண்ணாக உருமாறினாள். அவள் அழகில் மனம் பறிகொடுத்த பல்லவ வேந்தன் அவளை மணந்து மனைவியாகப் பெற்றான்.

சில ஆண்டுகளில் முதியவனான அவ்வேந்தன் தானும் இளம்பருவம் அடைய விரும்பினான். அவன் மனைவி தனக்கு இளமைத் தன்மை ஏற்பட்ட வரலாற்றினைக் கூறி “கணிகண்ணரின் துணையைப் பெற்று ஆழ்வாரின் அருளைப் பெறுவீராயின் தாங்களும் இளம்பருவம் அடையலாம்” என்று கூறினாள்.

மன்னன் கணிகண்ணரை அழைத்து அவரது ஆசானான ஆழ்வாரை அழைத்துவர வேண்டினான். “எம் குரவர் எவர் மனைக்கும் வாரார் ” என்று கணிகண்ணர் விடை கூறினார். அதற்கு அரசன் “நீரே எம்மீது ஒரு பாட்டுப் பாடுக!” என்று கூற “யான் மானிடம் பாடவந்த கவியல்லேன்” என்று கணிகண்ணன் விடையறுத்தார். மன்னர்கள் திருமாலின் அம்சம் பெற்றவர்கள். எனவே அரசர்களைப் பாடுதல் குற்றமாகாது என்று மன்னன் சொல்ல கணிகண்ணன் திருமாலைப் போற்றி ஒரு பாடல் பாடினார்.

மன்னன் இப்போது திருமாலைப் பற்றிப் பாடியது ஏன் எனக் கேட்டான். “தாங்கள்தான் மன்னர்கள் திருமாலின் அம்சம் என அறிவித்தீர்கள். திருமாலைப் பாடுவதும் மன்னரைப் பாடுவதும் ஒன்றே அன்றோ? எனவேதான் திருமாலைப் பாடினேன்” என்று கணிகண்ணர் கூறினார். உடன் மன்னன் சினம் கொண்டான். நகரை விட்டு வெளியேறுமாறு கணிகண்ணருக்கு ஆணையிட்டான். கணிகண்ணன் ஆழ்வாரிடம் விடைபெறச் செல்ல ஆழ்வாரோ நானும் எம்பெருமானை எழுப்பிக் கொண்டு வருகின்றேன் என்று சொல்லித் திருமாலை நோக்கி

“கணிகண்ணன் போகின்றான் காமரு பூங்கச்சி
மணிவண்ணா நீகிடக்க வேண்டா-துணிவுடைய
செந்நாப் புலவனும் போகின்றேன் நீயுமுன்றன்
பைந்நாகப் பாய்சுருட்டிக் கொள்” 
என்று பாடினார்.

எம்பெருமானும் பைந்நாகப் பாயைச் சுருட்டிக் கொண்டு தேவர்களும் பின்தொடர காஞ்சி மாநகர் விட்டு வெளியேறினார். அந்நகரம் பொலிவிழந்து இருள் பெற்றது.

அரசன் அமைச்சர்களை அழைத்துக் காரணம் கேட்டான். ஒற்றர்கள் மூலம் நிகழ்ந்ததை அறிந்த அரசன் வருந்தினான். கணிகண்ணரைத் தேடிச் சென்றுக் காலில் விழுந்து வணங்கி மீண்டும் கச்சிப்பதிக்கு எழுந்தருள வேண்டினான். கணிகண்ணரும் இசைவு தெரிவித்து ஆழ்வாரை வேண்ட ஆழ்வார் பெருமானைப் பார்த்து

“கணிகண்ணன் போக்கொழிந்தான் காமரு பூங்கச்சி
மணிவண்ணா நீகிடக்க வேண்டும் - துணிவுடைய
செந்நாப் புலவனும் போக்கெழிந்தேன் நீயுமுன்றன்
பைந்நாகப் பாய்படுத்துக் கொள்” 
என்று பாடினார்.

திருமாலும் மீண்டும் கச்சிமாநகர் அடைந்தார். பைந்நாகப் பாய்விரித்துப் பள்ளி கொண்டருளினார். பெருமாள் ஆழ்வாருடனும் கணிகண்ணருடனும் ஓர் இரவு தங்கிய இடத்திற்கு ஓரிரவிடுக்கை என்று பெயர் வந்தது.

பின்பு திருமழிசையாழ்வார் திருக்குடந்தை செல்ல எண்ணிப் புறப்பட்டார். வழியில் உள்ள பெரும்புலியூர் என்ற கிராமத்தில் ஒரு திண்ணையில் தங்கினார். ஒரு சில அந்தணர்கள் திண்ணையிலே அமர்ந்து வேதம் ஓதிக் கொண்டிருந்தனர். இவரைக் கண்டதும் “நான்காம் வருணத்தினனாகிய இவன் கேட்க வேதம் ஓதக் கூடாது” என நிறுத்தினர். அவர்கள் கருத்தறிந்த திருமழிசையாழ்வார் திண்ணையை விட்டிறங்கினார். அந்தணர்கள் வேதம் ஓதத் தொடங்கியபோது அவர்களுக்கு விட்ட வாக்கியம் தோன்றவில்லை. உடனே ஆழ்வார் ஒரு கருநெல்லை நகத்தால் பிளந்து குறிப்பால் காட்டியருளிச் செய்தார். அவர்களுக்கு விட்ட வாக்கியம் தோன்றியது. அந்தணர்கள் ஆழ்வாரிடம் பிழை பொறுக்குமாறு வேண்ட அவரும் அவர்களுக்கு இன்மொழிகள் கூறி விடைபெற்றார்.

பின்னர் அவ்வூரில் திருமழிசையாழ்வார் பிச்சை ஏற்றுச் செல்ல தெருக்கள் தோறும் எழுந்தருளினார். அவ்வூர்க்கோயிலில் குடிகொண்ட பெருமாள் ஆழ்வார் செல்லும் வீதிகள் தோறும் தம் திருமுகத்தைத் திருப்பி அருளினார். இதைக் கண்ட அர்ச்சகர் நம்பியார் வியப்படைய அந்தணர்கள் ஆழ்வார் பெருமையைக் கூறினார்கள். அனைவரும் சென்று திருமழிசையாழ்வாரை வரவேற்று யாகசாலை அழைத்துச் சென்று சிறந்த பீடத்தில் வீற்றிருக்கச் செய்தனர்.

பிறகு யாகத் தலைவர் யாகத்தில் செய்யும் அக்கிர பூசையை திருமழிசை ஆழ்வாருக்குச் செய்யும்போது சில வேள்விச் சடங்கர்கள் ஆழ்வாரை இழிவுபடுத்திப் பேசினர். யாகத்தலைவர் மனம் வருந்தி ஆழ்வாரிடம் வேண்ட ஆழ்வாரும் 

“அக்கரங்கள் அக்கரங்கள் என்றுமாவ தென்கொலோ
இக்குறும்பை நீக்கியென்னை ஈசனாக்க வல்லையேல்
சக்கரங்கொள் கையனே சடங்கர்வா யடங்கிட
உட்கிடந்த வண்ணமே புறம்பொசிந்து காட்டிடே” 
என்று பாடியருளினார்.

அவ்வளவில் யாவரும் காணும்படி திருமழிசையாழ்வாரின் திருமேனியில் எம்பெருமான் பள்ளி கொண்ட கோலத்தைக் காட்டி அருளினார். இக்காட்சி கண்ட சடங்கர்கள் ஆழ்வாரின் திருவடிகளில் விழுந்து வணங்கினர்.
                                                                                   
பிறகு ஆழ்வார் திருக்குடந்தை அடைந்தார். ஆராவமுதனைச் சேவித்தார். அப்பதியில் இதுவரையில்தான் எழுதிய பாசுரங்களை எல்லாம் எடுத்து ஆழ்வார் காவிரி ஆற்றில் விட்டார். அவற்றுள் தொண்ணூறு பாசுரங்கள் உடைய நான்முகன் திருவந்தாதியும் நூற்றிருபது பாசுரங்களை உடைய திருச்சந்த விருத்தமும் எதிர்த்து வந்தன. அவற்றை எடுத்துப் பெருமானைச் சேவித்து அவ்விரண்டு நூல்களையும் உலகிற்கு அருளினார்.

திருக்குடந்தைப் பதியில் திருமழிசையாழ்வார் இரண்டாயிரத்து முன்னூறு ஆண்டுகள் எழுந்தருளியிருந்தார் எனக் கூறப்படுகிறது. இவ்வாறு அன்ன ஆகாரங்களை விட்டு விட்டு காய் கிழங்குகளைச் சிறிது அமுது செய்து 4700 ஆண்டுகள் மண்ணுலகின் உயிர்களுக்கு நல்வழியை ஆழ்வார் உணர்த்தினார் என்பர் அறிஞர்.

இவரால் பாடப்பெற்ற திருத்தலங்களாக திருவரங்கம், அன்பில், கும்பகோணம், கவித்தலம், திருக்கோட்டியூர், திருக்கூடல், திருக்குறுங்குடி, திருப்பாடகம், திருவூர், திருவெஃகா, திருவெவ்வுளூர், திருவேங்கடம், திருப்பாற்கடல், துவாரகை, பரமபதம் போன்றவை விளங்குகின்றன.[வளரும்]தமிழ் இனி மெல்ல [3.16] தொடர்கிறது

தமிழ் இனி மெல்ல [3.15]சென்ற பதிவின் இறுதியில் 
மெதுவாக நிகழ்காலத்திற்குத் திருப்பி வருகிறான் இராஜராஜ நரேந்திரன்.

இப்படிக் கருணை நிறைந்த பிரம்மராயரை ஒருவேளை தவறாகவே கடந்த இருபத்திரண்டு ஆண்டுகளாக மதிப்பிட்டுவிட்டோமோ என்று நினைத்துப் பார்க்கிறான். ஒரு கணம் கனிந்த மனம் மீண்டும் கல்லாக இறுகுகிறது.

“இவரால்தானே நான் மையல் கொண்ட பெண்ணை அடையமுடியாது போனேன்! இவரால்தானே என் மாமனாரிடம் அவமானப் பட்டேன்! இவரால்தானே எனது நாட்டை நான் பெறுவதற்கு இராஜேந்திரரிடம் அவமானப்பட நேர்ந்தது! இவரை மிகவும் பாதிக்கும்படியான ஒரு செயலைச் செய்ய வேண்டும். அதுவரை இவரைப் பகைத்துக் கொள்வது சரியல்ல.” என்று மனதிற்குள் சொல்லிக் கொள்கிறான்.

“அரசே! அடங்கிக் கிடக்கும் எரிமலையின் உள்ளிருக்கும் பாறைக் குழம்பு பீச்சியடிப்பது போல மனதில் இதுகாறும் அடக்கி வைத்திருந்த உணர்ச்சிகள் பீறிட்டு வந்து விட்டன. என்னதான் இருந்தாலும் தாங்கள் ஒரு அரசர். தங்களை நான் அப்படிக் கோபத்துடன் பேசியிருக்கக் கூடாது அதற்காக நான் வருந்துகிறேன். என்னதான் இருந்தாலும் நாட்டை இழப்பது மிகவும் கொடியது. அந்த மனநிலையில் நீங்கள் ஏதோ பேசிவிட்டீர்கள் என்று விடாமல் என் சலிப்பை நான் காட்டியது தவறுதான்.

“இலங்கையிலும், பாண்டிநாட்டிலும் பல கலவரங்கள் நடந்து வருகின்றன.  அதனால்தான் அங்கு சோழப் படை கட்டிப் போடப்பட்டிருக்கிறது.  எப்படியும் அவற்றைத் தீர்த்துவிட்டு உடனே தங்கள் மைத்துனர் இராஜாதிராஜர் பெரும்படையுடன் வந்து விடுவார்.  நானும் அதற்குள் என்னால் இயன்றதைச் செய்கிறேன். பெருக்கெடுத்தோடும் கிருஷ்ணையைக் கடக்க முயற்சிப்பது தற்கொலைக்குச் சமமாகும்.” என்று நரேந்திரனைச் சமாதானப் படுத்துகிறார் பிரம்மராயர்.

சமாதானம் ஆனமாதிரி நடிக்கிறான் நரேந்திரன்.

  “அதனாலென்ன பிரம்மராயரே! அக்காள், தங்கையை மணந்து கொண்ட நாம் கொஞ்சம் மனம் விட்டுப் பேசிக் கொள்ளக் கூடாதோ! ஒருவரை ஒருவர் கடிந்து கொள்ளத்தான் கூடாதோ! ஆந்திர வெய்யில் நம் அனைவரையும் எரிச்சல் அடையத்தான் செய்துவிடுகிறது.” என்று திரும்பச் சமாதானம் கூறுகிறான்.

அதே சமயம், அவனது மனம் எதைச் செய்தால் இருவருடைய சிறந்த முயற்சியைத் தோல்வி அடையச் செய்யலாம், எதன் மூலம் இவரை வெற்றி கொள்ளலாம், என்று துருவிப் பார்த்துக் கொள்கிறது.  அவன் மனக்கண் முன் சட்டென்று ஒன்று பளிச்சிடவே, அவனது முகம் மலர்கிறது. அதைக் கண்டு கொஞ்சம் திகைப்படைகிறார் பிரம்மராயர். திடுமென்று அவனது முகம் மலர்ந்தது அவ்வளவு நல்லதற்கல்ல என்று அவரது உள்மனம் சொல்கிறது.

குதிரைக் குளம்பொலி கேட்டு இருவரும் வெளிவருகிறார்கள்.  புலிக் கொடியைக் கையில் பிடித்தவாறு குதிரையில் வந்த தூதுவன் ஒருவன் அதை நிறுத்திவிட்டுக் கீழிறங்கி இருவரையும் வணங்குகிறான்.

“வணக்கத்திற்குரிய இராஜேந்தர சோழ பிரம்மராயரையும், வேங்கை நாட்டு மன்னரையும் தலை வணங்குகிறேன். பிரம்மராயருக்கு சோழநாட்டுப் படடத்தரசர் இராஜாதிராஜரிடமிருந்து ஓலைதாங்கி வந்திருக்கிறேன்.” என்று பிரம்மராயரிடம் இராஜாதிராஜனின் இலச்சினை படிந்த ஓலைக் குழலை நீட்டுகிறான்.

அதைப்  படித்த பிரம்மராயரின் முகத்தில் கவலைக் கோடுகள் படிவதைக் கவனிக்கிறான் நரேந்திரன்.  இரண்டாம் தடவையாக இன்று அவரது முகத்தில் அமைதியைத் தவிர மற்ற உணர்ச்சிகளும் ஓடுவதைக் கண்டு உள்ளூர மகிழ்கிறான்.

“அரசே! நான் உடனே சோழநாடு திரும்ப வேண்டும். என் மகன் மறையன் அருள்மொழி கங்க நாட்டிலிருந்து இருபதாயிரம் வீரர்களுடன் தங்களுக்கு உதவியாக வந்து கொண்டிருக்கிறான்.13.  நான் இன்னும் ஒரு நாழிகையில் புறப்படுகிறேன்.  இப்படி அவசரமாகக் கிளம்புவதற்கு மிகவும் வருந்துகிறேன்.” என்ற பிரம்மராயர், “சுப்பா, மூட்டையைக் கட்டு! நாம் உடனே கிளம்ப வேண்டும்.” என்று மற்ற படைத் தலைவர்களைச் சந்திக்கக் கிளம்புகிறார்.

இவர் உடனே கிளம்பவேண்டும் என்றால் விஷயம் மிகவும் பெரிதாகத்தான் இருக்க வேண்டும், அதனால் ஆதாயமா இல்லையா என்று யோசிக்கிறான் நரேந்திரன்.

தமிழ் இனி மெல்ல [3.16] தொடர்கிறது 
அரிசோனா மகாதேவன் 
                                                         

சோழர் அரண்மனை, கங்கைகொண்ட சோழபுரம்
சுபானு, வைகாசி 21 - ஜூன் 6, 1043

சேர்த்துக் கூப்பிய பிரம்மராயரின் கைகளை மெல்லப் பிடித்துக் கொள்கிறார் இராஜேந்திர சோழர். சோழநாட்டின் தலைமைப் படைத்தலைவரும், அமைச்சருமான இராஜேந்திர சோழ பிரம்மராயரை, தன் மூத்த மகள் அருள்மொழிநங்கையின் மணாளனை, தனது தந்தையார் திரிபுவனச் சக்கரவர்த்தி இராஜராஜசோழரின் தமிழ்த் திருப்பணி ஆலோசகரும், சோழநாட்டின் திருமந்திர ஓலைநாயகமும், தனது அந்தரங்க நண்பனுமான சிவசங்கர சிவாச்சாரியனை, பாசத்துடன் பார்க்கிறார். தன்னை வாட்ட ஆரம்பித்த நோய் தனது கண்பார்வையையும் சிறிது மறைப்பதையும், எதிரிகளும் முன்னால் வந்து நிற்க அச்சப்படும் தன் கூரிய பார்வையைக் காலன் சிறிது சிறிதாகப் பறித்துக்கொண்டு வருவதைப் பற்றி ஒன்றும செய்ய இயலாமலிருப்பதைப் பற்றியும், வீர ஆவேசத்துடன் போரிடும் தன்னைக் குதிரையில் கூட ஏறக் கூடாது என்று மருத்துவர் தடுத்து விட்டதையும் எண்ணிப் பார்க்கிறார்.

“அரசே! இவ்வளவு அவசரமான என்னை அழைத்ததன் காரணம் என்னவோ? தங்கள் உடல் நலம் எப்படி இருக்கிறது? “ உடல்நிலை சரியில்லை, உடனே கிளம்பி வரவும்!” என்று மட்டுமே எழுதி அனுப்பியிருந்த ஓலையைப் பார்த்துப் பதறிப் போய்விட்டேன். எவ்வளவு விரைவாகப் பயணித்தும் இங்கு வந்து சேர நாற்பது நாள்களாகிவிட்டன.  தங்கள் உடல்நிலை தேறவேண்டும் என்ற கவலையில் எனக்கும் தளர்ச்சி வந்துவிட்டது, அரசே!” என்று தழுதழுத்த குரலில் கூறுகிறார் பிரம்மராயர்.

அவரை மெதுவாகத் தன்னருகில் அமர்த்திக் கொள்கிறார் இராஜேந்தரர். கம்பீரமான அவரது உடல் மெலிந்துவிட்டிருக்கிறது. வெண்ணிற மீசையும், நீண்ட தாடியும் முகத்தில் பாதியை மறைக்கிறது.  நீண்ட வெண்ணிறக் கேசம் தோளில் புரண்டு கொண்டிருக்கிறது. சேர, சோழ பாண்டிய, கருநாடுகள், ஆந்தரம், வேங்கை, கலிங்கம், வங்கம், இலங்கை, கடாரம், ஸ்ரீவிஜயம், லட்சத்தீவுகள், நக்காவரம் இவற்றை ஒரு குடைக்கீழ் ஆளும் பேரரசனான அவர்தான் எப்படித் தளர்ந்து போயிருக்கிறார்! இருவரும் ஒன்று சேர்ந்து நிகழ்த்திய போர்கள்தான் எத்தனை! தாங்கிய விழுப்புண்கள்தான் எத்தனை! புலியைப் போலச் சீறிப் பாய்ந்த கோப்பரகேசரி இராஜேந்திர சோழதேவரா இவர்!

கண்கள் கலங்குகின்றன பிரம்மராயருக்கு.

“சிவசங்கரா!” முதன்முதலாக பிரம்மராயரின் பெயரைச் சொல்லி நட்புரிமையுடன் அழைக்கிறார் இராஜேந்திரர்.

மனம் நெகிழ்ந்து போன பிரம்மராயர், சொல்லுங்கள் அரசே! என்று குழைகிறார்.

“நண்பனாக மதுராந்தகா என்று அழை, சிவசங்கரா!” என்று உரிமையுடன் அன்புக் கட்டளை இடுகிறார் இராஜேந்திரர்.

“அப்படியே அர… மதுராந்தகா! கடந்த ஒரு ஆண்டில் இப்படித் தளர்ந்து போய் விட்டாயே! உன்னைப் பார்த்தாலேயே என் நெஞ்சு கனக்கிறதப்பா! மருத்துவர்கள் தனது வேலையைச் சரியாகச் செய்வதில்லையா? கையைக் கொடு. உனது நாடி என்ன சொல்கிறது என்று பார்க்கிறேன்!” என்று மணிக்கட்டைப் பிடிக்க முயன்ற பிரம்மராயரைத் தடுக்கிறார் இராஜேந்திரர்.

“மருத்துவர்கள் சொல்லாத ஒன்றை நீ என்ன புதிதாகச் சொல்லப் போகிறாய்! வீரனாக போர்க்களத்தில் விழுப்புண் தாங்கி வீரமரணம் அடையமுடியாமல் நரை, திரை, மூப்பு அடைந்து நடை தளர்ந்து, வாளைச் சுற்றிய கை, கோலை மூன்றாவது காலாக ஊன்றி நடக்கும் நிலைக்கு வரத்தான் வேண்டுமா! நினைத்துப் பார்! இவ்வாறு எனது உயிரை நீடிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. ஒரு போரில் கலந்துகொண்டு, மார்பில் விழுப்புண் தாங்கி எனது மூதாதையர் வாழும் இடத்திற்கு வீரனாகச் செல்லவே நான் விரும்புகிறேன்.” அவரது குரலில் விரக்தி இருக்கிறது.

“அப்படிச் சொல்லாதே, மதுராந்தகா! உன்னை நம்பி எத்தனை லட்சக் கணக்கானோர் இருக்கிறார்கள்! உன் உயிருக்காகத் தங்கள் உயிரை மகிழ்வுடன் கொடுக்க எத்தனை பேர் காத்துக்கொண்டிருக்கிறார்கள்! நீ கண்ட கனவை நிறைவேற்றி விட்டாயே! இதுவரை எந்தத் தமிழன் உன்னைப் போல பரந்த நாட்டை தன்வசப்படுத்தி இருக்கிறான்! சீன நாட்டில் கூட உன் அரசப் பிரதிநிதி இருக்கிறாரே! கிழக்குக் கடலில் உனது நாவாய்கள்தானே ஆட்சி செலுத்துகின்றன! தஞ்சைப் பெருவுடையார் கோவிலுக்கு இணையாக கங்கைகொண்ட சோழபுரத்திலும் சிவபெருமானுக்கு ஒரு கற்றளி எழுப்பி இருக்கிறாயே! உனது புகழை என்றும் பாடிவரும் அளவுக்கு - சோழர் குலத்தை ஏத்தி பேசும் அளவுக்கு - ஒரு புத்தம் புதிய தலைநகரை நிர்மாணித்து இருக்கிறாயே! சிங்களத் தீவு முழுவதும் தமிழர்களின் புலிக்கொடியைப் பறக்கவிட்டு இருக்கிறாயே! சாதிக்க இன்னும் என்னதான் இருக்கிறது மதுராந்தகா?

“சோழர்கள் பெருமையை நிலைநாட்டுவேன், என் தந்தை அடித்தளம் அமைத்த பேரரசை விரிவாக்கிக் கட்டிடம் எழுப்புவேன் என்று சூளுரைத்த நீ, அதைச் சிறப்பாகச் செய்து முடித்திருக்கிறாயே! முதுமையைக் கண்டு நீ கலங்கலாமா? அதல்லவா உன்னைக் கண்டு கலங்கி ஓடவேண்டும்! மனத் திண்மைக்குமுன் உடல் நலிவு என்ன செய்யும்? சித்தத்தைச் சிவன்பால் செலுத்து. இவ்விதக் கலக்கம் உனக்கு வராது. இராஜாதிராஜன் நீ எழுப்பிய கட்டிடத்திற்குப் பொற்கூரை வேய்ந்து அழகு படுத்துவான்.” என்று இராஜேந்திரரைத் தேற்றிப் பேசுகிறார் பிரம்மராயர்.

“நீ என்னருகில் இருக்கும் பொழுது எனக்கு ஒரு புதுவிதமாக உற்சாகம் ஏற்படுகிறது சிவசங்கரா!” என்று நட்பு ததும்பும் குரலில் கூறுகிறார் இராஜேந்திரர்.

“மிக்க மகிழ்ச்சி மதுராந்தகா. உரு அருகிலேயே இருந்து விடுகிறேன். நீ பல நூறாண்டு காலம் வாழ்ந்து நாட்டைச் சிறப்பிப்பாயாக!” என்று வாழ்த்துகிறார் பிரம்மராயர்.

வரட்டுச் சிரிப்பு வெடிக்கிறது இராஜேந்திரரிடமிருந்து.

“காட்டில் இருக்கும் பெரிய மரம் விழாதவரை கீழிருக்கும் மரங்கள் வளமுடியாது என்று உனக்குத் தெரியாதா, சிவசங்கரா! எனக்கு இடம் தந்து என் தந்தையார் ஒதுங்கிக் கொண்ட மாதிரி, நானும இராஜாதிராஜனுக்கு இடத்தைத் தந்து விட்டு ஒதுங்க வேண்டியது தானே!“

“மதுராந்தகா, நீ தான் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னரே இராஜாதிராஜனுக்கு இளவரசுப் பட்டம் கட்டிவிட்டாயே! அவனும் பாண்டிய, சேரநாடுகளையும், இலங்கையையும் தானாகத்தானே ஆண்டுவருகிறான்! இப்பொழுது கருநாட்டு விவகாரங்களையும் அவன்தானே கவனித்துக் கொள்கிறான். நீயே பெருமைப் படும் அளவுக்குச் சிறந்த வீரனாகத்தானே அவன் இருக்கிறான்!” என்று இராஜேந்திரரின் மனஓட்டத்தை வேறு திசைக்கு மாற்ற முயற்சிக்கிறார் பிரம்மராயர்.

“எனக்காக நீ எவ்வளவு தியாகம் செய்திருக்கிறாய், சிவசங்கரா! நான் இங்கு மூன்று மனைவிகளுடன் மகிழ்வாக இருந்து கொண்டிருக்கும் பொழுது, நீ எத்தனை காலம் மனைவி மக்களை பிரிந்து வாழ்ந்திருக்கிறாய்! உன் வாழ்வையே ஒரு தவமாகத்தான் இயற்றிக் கொண்டு வந்திருக்கிறாய். உனக்கென்று ஒன்றையும் தேடாமல், ஒரு ஏழை அந்தணனாகத்தானே வாழ்வை நடத்திக் கொண்டு வருகிறாய்! நான் பொன் முலாம் பூசிய, இறக்கைகள் நிரப்பிய மெத்தை விரித்த மஞ்சத்தில் ஸ்ரீ பணிப்பெண்கள் சாமரசம் வீச, அடைப்பக்காரன் காலைப் பிடித்துவிட, பாணர்கள் யாழிசை செய்து உறங்கச் செய்யும்போது - நீ தினமும் ஒரு கயிற்றுக் கட்டிலிலேதான் உறங்கிக் கொண்டு வந்திருக்கிறாய்!

“நான் உனக்கு பரிசாகக் கொடுத்த உன் சொந்த ஊரையும் என் மூத்தமகன் ஆளவந்தானைச் சிறப்பிக்கும் வகையில் “கேரளாந்தக சதுர்வேதி மங்கலம்”14 என்று பெயரிட்டு வேதியர்களுக்கு அதை வழங்கி விட்டாயே! சோழ வீரர்கள் உன் தலைமைத் திறமைக்கும், அந்தணர்கள் உனது அறிவுக்கும், அமைச்சர்கள் உன் நிர்வாகத் திறமைக்கும் தலை வணங்கும் போது, நீ மட்டும் கடந்த முப்பத்திமூன்று ஆண்டுகளாக ஏன் ஒரு ஏழையாகவே வாழ்ந்து வருகிறாய்?” இராஜேந்திரரர் குரலில் ஒரு ஆதங்கம் இருக்கிறது.

“மதுராந்தகா, எனது குருநாதர் கருவூரார் அளித்த அறிவுரைப்படிதான் நான் நடந்து கொண்டு வருகிறேன். பொன், பெண், மண் எதிலும் பற்று வைக்காமல் வாழ்ந்து வரவேண்டும் என்ற அவரது அறிவுரையைத்தான் என்னால் இயன்ற அளவுக்குப் பின் பற்றி வருகிறேன். என்னை உன் தோழனாக ஏற்றுக் கொள்ளும் முன்னர் நீ கேட்ட கேள்விகளுக்கு என்ன பதில் சொன்னேனோ அதன்படிதான் நான் நடந்து கொள்கிறேன். எதன் மீதும் பற்று இருந்தால்தான், அது கிட்டாது போனால் வருத்தம் இருக்கும். தாமரை இலை தண்ணீரிலேயே பிறந்து அழிந்தாலும், தண்ணீரைத் தன்மீது ஒட்டவிடுவதில்லை. அது போலத்தான் எனக்கு அரச போகத்திலும், செல்வத்திலும் நாட்டம் செல்லவில்லை.  என் ஒரே மனவருத்தம் என்னவென்றால் - என்னை மணந்ததால் அருள்மொழிநங்கையும் அரச வாழ்வைத் துறக்கவேண்டி வந்ததே என்பது தான்.” என்று நிறுத்துகிறார் பிரம்மராயர்.

“அது அவள் மனமுவந்து தேடிக்கொண்ட வாழ்வு, சிவசங்கரா. அவள் மகிழ்ச்சியாக இருக்கும் வரை அவள் வாழும் விதம் எனக்கு ஒரு குறையாகப் படவில்லை.” என்கிறார் இராஜேந்திரர்.

“அப்பொழுது மருத்துவருடன் வருகிறாள் அருள்மொழிநங்கை.

“உன்னைப் பற்றித்தானம்மா பேசிக்கொண்டிருந்தோம். நீயே வந்துவிட்டாய். உனக்கு நூறு வயது.” என்று வாழ்த்துகிறார் இராஜேந்திரர்.

“அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் தந்தையே! தாங்கள் திடகாத்திரமாக இருந்தால், அதுவே போதும். மருத்துவர் தங்களைப் பார்த்துவிட்டுப் போக வந்திருக்கிறார்.” என்று பரிவுடன் பதிலளிக்கிறாள் அருள்மொழிநங்கை.

ஐம்பது வயதான அவள் அதற்கும் மேலே இரண்டு மூன்று வயதானவள் மாதிரித்தான் காட்சி அளிக்கிறாள். அவளுக்கும் பாதிக்குமேல் தலை நரைத்துவிட்டது. நெற்றியிலும், முகத்திலும் முதுமைக்கோடுகள் இலேசாகத் தெரிகின்றன. அவளையும் பிரம்மராயரையும் சேர்த்துப் பார்க்கும்  யாரும் அவருக்கும் அவளுக்கும் பதிமூன்று வயது வித்தியாசம் என்று சொல்ல மாட்டார்கள். நான்கிலிருந்து ஆறு வயது என்றேதான் மதிப்பிடுவார்கள்.

அவளைப் பார்த்ததும் இராஜேந்திரரின் நெஞ்சம் நெகிழ்கிறது. சிவத்தொண்டிலேயே தனது வாழ்நாளைக் கழித்துவரும் அவளைக் கண்டால் அவருக்கு ஏதோ நெஞ்சில் அடைக்கும். அவளே தேர்ந்தெடுத்துக் கொண்ட ஏழ்மை வாழ்வுதான்  என்று மனதைத் தேற்றிக் கொண்டாலும், அவளையும் அம்மங்கையையும் ஒன்றாகப் பார்க்கும் பொழுதுதான், அருள்மொழிநங்கைக்குத் தான் ஏதோ ஒரு குறை வைத்துவிட்டமாதிரி தோன்றும்.

அம்மங்கையின் பகட்டும், அருள்மொழி நங்கையின் எளிமையும் ஒரு மாறுபாடாகத்தான் இருக்கும். ஆனால் அருள்மொழிநங்கையின் முகத்தில் இருக்கும் அமைதியும், நிறைவும் அம்மங்கையின் முகத்தில் ஒருபொழுதும் தென்படாது. எப்பொழுதும் ஏதோ ஒரு குறை இருப்பது போலத்தான் இருக்கும் அவளது முகம். அவள் முகத்தில் இருந்த குழந்தைத் தனமும், குறுகுறுப்பும், நரேந்திரனை மணந்து சில ஆண்டுகள் ஆனபிறகு மறைந்து வருவதையும், அதே சமயத்தில் அருள்மொழிநங்கையின் முகத்தில் அருள் களையும், நிறைவும் கூடிவருவதையும் இராஜேந்திரர் கவனிக்காமல் இல்லை.  எந்த மகள் எளிய வாழ்வு நடத்துகிறாள் என்று குறைப் பட்டுக் கொள்கிறோமோ, அவள் நிறைவுடனும், அரசியர்க்கு உரிய பகட்டுடன் இருக்கும்  இன்னொரு மகள் எதையோ பறிகொடுத்தது மாதிரி இருப்பதும் அவருக்கு ஏதோ மாதிரித்தான் இருக்கிறது. நரேந்திரனுக்கு அவளை மணம் செய்து கொடுத்தது தவறோ என்று கூட சிலசமயம் எண்ணுவதுண்டு,

ஆனால் ஒருபொழுதும் அருள்மொழிநங்கையின் திருமணத்தைப் பற்றி அப்படி நினைக்கத் தோன்றியதே இல்லை.  அவளது மகனான மறையன் அருள்மொழியும் சிறந்த வீரனாகப் புகழ் பெற்று வருவது மிகவும் மகிழ்வாகத்தான் இருக்கிறது.

ஐந்து வயது நிரம்பிய இராஜேந்திர நரேந்திரன் - அம்மங்கயை?ன் மகன் - பிறந்ததிலிருந்து கங்கைகொண்ட சோழபுரத்தில்தான் இருந்து வருகிறான். அவனது காலில் இருக்கும கோடுகளைக் கண்ட சோதிடர் அவன் ஒரு பெரிய மன்னனாக ஆட்சி செய்வான் என்று சொன்னது மகாராணி திரிபுவனமாதேவிக்கு மட்டுமல்லாது இராஜேந்திரருக்கும் பெருமையாகத்தான் இருக்கிறது. அவனாவது அவன் தந்தை மாதிரி இல்லாமல் சிறந்த வீரனாக, கலிங்கம், வங்கம், இன்னும் நடுநாடுகளையும் தன் குடைக்கீழ் கொண்டுவந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று எண்ணி மகிழ்வதும் உண்டு.

அதே சமயம், மறையன் அருள்மொழி அரசுரிமை ஏற்கக் கூடாது என்று கண்டிப்பாக பிரம்மராயரும், அருள்மொழிநங்கையும் சொல்லிவருவது இராஜேந்திரருக்கு அவ்வளவு ஏற்புடையதாகப் படவில்லை. அவன் கருநாட்டை ஆளும் பொறுப்பேற்றால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்றும் எண்ணுவதுண்டு. அவன் அங்கு சென்று வந்த ஆறு திங்கள்களிலேயே கன்னட மொழியைப் பேசக் கற்றுக் கொண்டுவிட்டான் என்று அருள்மொழி நங்கை மூலம் அறிந்து கொண்ட போது அப்படிப்பட்ட எண்ணம் தோன்ற ஆரம்பித்தது.  ஆனாலும் தனது நண்பன் பிரம்மராயரின் குணம் தெரிந்ததால் அந்த எண்ணத்திற்கு அணை போட்டு வருகிறார்.

மருத்துவர் கையைப் பிடித்து நாடி பார்க்கும் போது மனதிற்குள் சிரித்துக் கொள்கிறார். பிரம்மராயரைத் தடுத்துவிட்டார். ஆனால் மருத்துவரை எப்படித் தடுக்க முடியும்? யார் விடுவார்கள்?

“அரசே! நாடியில் சிறிது தெளிவு வந்திருக்கிறது. மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்படியே நிலைமை தேறினால் நீங்கள் ஓடி விளையாட ஆரம்பித்து விடுவீர்கள்!” என்று வாயெல்லாம் பல்லாகத் தெரிவிக்கிறார் அரச மருத்துவர்.
“மருத்துவரே! உமது மருந்தால் எமது நிலைமை தேறவில்லை.  எமது நண்பருடன் பேசியதுதான் அஞ்சனமாக இருந்திருக்கிறது.” என்று சிரிக்கிறார் இராஜேந்திரர்.

“அப்படியானால் இவர் உங்கள் அருகிலேயே இருக்கட்டும் தந்தையே!” என்று பரிவுடன் கூறுகிறாள் அருள்மொழிநங்கை.  மெல்லத் தலையாட்டுகிறார் இராஜேந்திரர்.

*** *** ****
அடிக்குறிப்பு 
14இராஜேந்திர சோழ பிரம்மராயர் கேரளாந்தக சதுர்வேதி மங்கலத்தைச் சேர்ந்தவர் என்று சரித்திரம் கூறுகிறது,

இலக்கிய வாழ்க்கை-2


                       இலக்கிய வாழ்க்கை-2
சென்னையில் பிராட்வேவுக்கு அருகில் இருந்தது கொத்தவால் சாவடி காய்கறி மார்க்கெட். அங்கே நண்பர் ஒருவரின் ஒத்தாசையமால் ஒரு கடையை அன்றாட வாடகை பிடித்து அதில் தக்காளி வியாபாரம் செய்யத் தொடங்கினார். அது 1944 – 45. வையவனுக்கு மூன்று வயது. தம் மகன் ஆங்கிலம் படிக்க வேண்டும் எம்.. பட்டம் பெறவேண்டும் என்ற கனவுகள் உள்ள தந்தையாக அவர் இருந்தார்

பரமசிவம் ஒரு நல்ல வாசகர். செய்தி தாள்கள் கதைகள்.. நாவல்கள் வாசித்தல் என்று அவருக்கு வாசிப்பில் ஒரு தனி ஆர்வம் உண்டு. தம் மகனுக்கு (வையவன்) ஆங்கிலம் கற்பிக்க பீடி மண்டியில் குமாஸ்தாவாக வேலை செய்த ஒரு மராட்டியரிடம் தன் டியூஷன் ஏற்பாடு செய்தார். தமிழைக் கற்கும் முன்பே வையவன் ஆங்கிலமே முதலில் அறிமுகமாயிற்று. ஆங்கில மொழியின் மீதும்.. ஆங்கில இலக்கியத்தின் பாலும் வையவனுக்கு தனிப்பிரியம் ஏற்பட அதுவே காரணம்.

வையவனின் தாய் அமிர்த சிகாமணி ஒரு நல்ல கதை சொல்லி. உணர்ச்சி பூர்வமாக மனதில் பதியும்படி கதைகள் சொல்வார். மிகுந்த பக்தியுள்ள அவர் சென்னையில் தாம் வசித்த தங்கசாலை சௌகார்ப்பேட்டை திருவல்லிக்கேணி மயிலாப்பூர் திருவொற்றியூர் திருவள்ளூர் உள்ளிட்ட எல்லாப் பகுதிகளிலும் உள்ள ஆலயங்களுக்குத் தாம் செல்வதோடு வையவனையும் அழைத்துச் செல்வார். அமிர்த சிகாமணி ஸ்ரீ வைஷ்ணவத்தில் பெரிதும் ஈடுபாடு கொண்டு முறைப்படி முத்திரை குத்திக்கொண்டவர். அவரிடமிருந்து மகனுக்கு அந்த செல்வாக்கு தானே தன்னையறியாமல் பரவியது.

அந்தக் காலத்தில் தினசரி என்ற செய்தித்தாளில் (.எஸ். சொக்கலிங்கம் ஆசிரியர்) வார மடல் வரும். அதற்குப் பொறுப்பாசிரியர் எஸ்.எஸ். மாரிசாமி. கற்பனைச் சுவை மிகுந்த சிறுகதைகளும் பொற்றாமரை என்ற சீனக்கதையின் தொடரும் அதில் வாராவராம் வெளிரும். பரமசிவம் தன் மகன் வாசிக்க அதை வாங்கி வந்து தருவார்.

நான்கு வயது நிரம்பியதுமே வையவன் கொத்தவால் சாவடிக்கும் அவர்கள் வசித்த ரெட்டிராம்ன் தெரு வீட்டுக்கும் அருகிலிருந்த சாவடிக்கும் அவர்கள் வசித்த ரெட்டிராமன் தெரு வீட்டுக்கும் அருகிலிருந்த மெட்ராஸ் புரோக்ஸிவ் யூனியன் உயர்நிலைப்பள்ளியில் முதல் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை படித்தார். அது இரு மொழி மாணவருக்கான பள்ளி. அங்கு முதல் வகுப்பு தொடங்கி மூன்றாம் வகுப்பு வரை தமிழ் மாணவர்களும் தெலுங்கு மாணவர்களும் ஒன்றாகவே படிக்க வேண்டும். மொழிப் பாடங்களுக்கு மட்டும் வேறு பிரிவிற்குச் செல்ல வேண்டும்.

அவர்கள் குடியிருந்த வீடு ஒரு தெலுங்கர் வீடு. கூடவே வாடகைக்கு இருந்தவர்களும் தெலுங்கர்கள். வையவனின் சொந்த ஊர் வெள்ளக்குட்டையில் எதிர்வீடு ஒரு தெலுங்கு பேசும் சாத்தானி பிராம்மணர்கள் வசித்த வீடு. இவ்வாறு சிறு வருவத்திலேயே தெலுங்கின் சுற்றுச் சூழல் அவருக்கு ஏற்படவே தெலுங்கு வெகு சரளமாகப் பேசும் திறன் அவருக்கு அமைந்தது.

அவர்களது குடும்ப டாக்டர் முத்தையா பிள்ளை என்பவர் ஒரு மலையாளி. அவரது மனைவி வையவனுக்கு ஆறு வயதிலேயே மலையாளம் கற்றுக்கொடுத்தார். அந்த டாக்டர் மாறிவிடவே மலையாளக் கல்வி நின்று விட்டது. வையவன் ஆறாம் வகுப்பில் ஹிந்திபடித்தார். பிறகு இந்தி எதிர்ப்புப் போராட்டம் காரணமாக ஹிந்தி வகுப்புகள் நின்று போனதால் அவரால் தொடர முடியவில்லை.

இந்தச் சூழ்நிலைகளால் வையவனுக்கு எல்லா மொழிகளின் மீதும் நேசம் ஓர் இயல்பாயிற்று. புரொக்ரஸிவ் யூனியன் உயர்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு முடித்த போது வையவன் வாழ்வில் ஒரு துயரமான திருப்பம் நேரிட்டது. முன்னுக்கு வரவேண்டும் என்ற ஊக்கமும் உந்துதலும் உள்ள அவரது தந்தை பரமசிவம் கொத்தவால் சாவடியில் தக்காளி வியாபரம் செய்வதில் சலிப்புற்று புளி சீயக்காய் ஆகிய பொருள்களை கர்நாடகத்தில் டும்கூரில் மொத்தமாக வாங்கி வந்து சென்னை மண்டிகளுக்கு கொண்டு வந்து விற்கும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது அதில் நேரிட்ட எதிர்பாராத சந்தை வீழ்ச்சியால் பரமசிவம் கை முதல் அனைத்தையும் இழந்து குடும்பத்தை வறுமையில் ஆழ்த்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார் [வளரும் ]