Thursday, 31 July 2014

வைணவ ஆசார்ய வைபவம்-2:இராமபிரானும் இந்திரனும்
                        இராமபிரானும் இந்திரனும்

                      வளவ துரையன் வழங்கும் 

வைணவ ஆசார்ய வைபவம்-2:
தாதை ஏவியதானத்தாயுரை கொண்டு இராமபிரான் சீதையும் இலக்குவனும் தொடர வனம் புகுந்தார். வனத்தில் விராதனை வதம் செய்தபின் மூவரும் முனிவர்கள் வாழ்கின்ற மரங்கள் நிறைந்துள்ள சோலையை அடைந்து தங்கினர்.

அந்தச் சோலையில் உள்ள ஆசிரமத்தில் சிறந்த தவத்தை உடைய முனிவரான சரவங்கர் தங்கியிருந்தார். பிரமதேவன் கட்டளைப்படி சரவங்களுக்கு அருள் செய்ய அவரை பிரமலோகம் அழைத்துவர இந்திரன் அங்கு வந்தான்.ஆனால் சரவங்கனோ “நான் எப்பொழுதும் அழியாமல் இருக்கின்ற பரமபதத்தை அடையவே பெரிதும் விரும்புவேன்” என்று கூறினான்
.
அச்சோலையில் இந்திரன் வந்து பேசிக் கொண்டு இருப்பதை அறிந்த இராமபிரான், சீதையையும் இலக்குவனையும் சோலைக்கு வெளியே நிறுத்தி விட்டுத் தான் மட்டும் உள்ளே சென்றார். இந்திரன் இராமபிரானைப் பார்த்தான்.

இந்திரன் இராமரைப் பார்த்ததைக் “கண்தாம் அவை ஆயிரமும் கதுவ, கண்தாமரை போல் கரு ஞாயிறு எனக் கண்டான்” என்று கம்பர் பாடுவார். இராமபிரான் அழகைக் கம்பன் இல்பொருள் உவமையாக அதாவது உலகில் இல்லாத பொருளுக்கு உவமையாக்குவார்.

இராமபிரான் ஒரு கருப்புச் சூரியன் போல் ஒளிவீசுகிறார். அதே நேரத்தில் அவர் கண்கள் இரண்டும் தாமரை மலர்கள் போல் உள்ளன என்பது கம்பர் வாக்கு. “ஏரார்ந்த கருநெடுமால் இராமனாய்” என்று குலசேகர ஆழ்வார் அருளிச் செய்வார்.

இராமபிரானின் தற்போதைய தோற்றம் கண்டு மனம் வருந்திய இந்திரன் அவரைப் போற்றித் துதிக்கத் தொடங்கினான்.

“எல்லாப் பொருள்களிலும் கலந்தும் கலவாமலும் விளங்கும் ஒளியே! பெருங்கருணைக் கடலுக்கு இருப்பிடமானவனே! வேதங்களின் வழியே ஆராய்ந்து கண்ட மெய்யறிவினால் அறியப்படும் மெய்ப்பொருளே! எம் தந்தையே” என்று வணங்கும் இந்திரன்.

“இருநிலத்தவோ நின் இணை அடித்தாமரைதாம்” எனத் துதிக்கிறான். எமக்கு உதவி செய்யும் பொருட்டு உன்னுடைய திருவடிகளாகிய இரு தாமரைகள் இப்பெரிய நிலத்தில் பொருந்தியுள்ளன என்பது இவ்வடிகள் மூலம் விளக்கப்படுகிறது.

இதே உவமையைப் பயன்படுத்தி “வானவர் கைதொழும் இணைத் தாமரையடி எம்பிரான்” (1+8+3) என்று மங்கை மன்னன் பாடுவார். இதையே ‘அடித்தாமரை” (96) என்று பேயாழ்வாரும் “செந்தாமரையடிகள்” (2-5-1) என்று நம்மாழ்வாரும் அருளிச் செய்வர்.

மேலும் ‘கருங்கடலில் கண் வளர்ந்தோய்’ என்று இந்திரன், இராமபிரானைத் திருமாலின் வடிவமாகவே போற்றுவதாகக் கம்பர் பாடுவார். 
---------------------------------------------------------------------------------------------------------------------

   ஒரு முக்கிய அறிவிப்பு: கடலூர் மாவட்ட எழுத்தாளப் பெருமக்களுக்கு 
                   வரும் ஆகஸ்ட் 1ந்தேதி முதல் 31ந்தேதி வரை 
                    கடலூர் மாவட்டச சிறப்பிதழ்  மாதமாக  நமது 
                   இணையவெளி கொண்டாடத் தீர்மானித்துள்ளது. 
                   இதில் கவிதை கட்டுரை, சிறுகதை, பயணக்
                   கட்டுரை, சிறப்புச் செய்திகள், நேர்முகங்கள், 
                    புகைப்படங்கள்  என எதைவேண்டுமானாலும் 
                     எழுத்தாளப்பெருமக்கள் எழுதியனுப்பலாம் . 
                  பிரசுமாகும் ஒவ்வொரு படைப்புக்கும் ரூ.100/-பரிசு 
நூலாக விரும்பினால் நூலாகவோ பணமாகவோ 
அனுப்பி வைக்கப்படும் புகைப்படமும் அனுப்பலாம். 
ஒரே ஒரு வேண்டுகோள் 
             அன்புகூர்ந்து பிற வலைத்தளங்களில் இருந்து பிரதி 
எடுத்து அனுப்பிவைத்து விடாதீர்கள். கண்டுபிடிக்கப்படும். 
அனுப்பியவர் வருந்த நேரிடும் 
                எந்த ஒரு படைப்பும் யுனிகோட்[ஒருங்குறி] வடிவில் 
               மட்டுமே இருக்க வேண்டும்  vaiyavan.mspm @ gmail.com 
              என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டுகிறோம் 
           மிகச் சிறந்தவை தொகுக்கப்பட்டு சென்னை தாரிணி 
           பதிப்பகத்தாரால் நூலாக்கப்படும் 
-----------------------------------------------------------------------------------------------------------------------
பெருமாள் பாற்கடலுள் அறிதுயில் கொள்வதை “கடலுள் நெடுங்காலம் கண்வளர்ந்தான்” என்று பெரியாழ்வாரும், “பாற்கடலுள் கண்துயிலும்” என்று (2-6-6) குலசேகரப் பெருமாளும் “வெள்ளத்தின் மேல் கள்ள நித்திரை கொள்கின்ற” (5-1-7) என்று பெரியாழ்வார் மீண்டும் அருளிச் செய்கிறார்கள்.

“உனக்குப் பகைவர், நண்பர் இல்லை; ஒளி, இருள் இல்லை; மேல், கீழ் இல்லை; இளமை, முதுமை இல்லை; முதலும் இடையும் முடிவும் இல்லை; முன், பின் இல்லை; நீ எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்ட பெருமை உடையவன்” என்கிறான் இந்திரன்.

“மேலும் நீ நான்முகனைத் தோற்றுவித்தாய், அந்த நான்முகன் பல உலகங்களைப் படைத்தான். அந்த உலகங்களை அளவுகருவியாகக் கொண்டு அளந்தாலும் உன் குணங்களுள் ஒன்றைக் கூட அளவிட முடியாது” என்று போற்றுகிறான் இந்திரன்.மேலும்,

‘தாழி தரைஆக தண்தயிர் நீர்ஆக
தடவரையே மத்துஆக தாமரைக் கை நோவ
ஆழி கடைந்து அமுதல் எங்களுக்கே ஈந்தாய்’ என்று

‘பூமியே தயிரை உடைய பானையாகவும், பாற்கடலின் நீரே குளிர்ந்த தயிராகவும், பெரிய மந்தர மலையே கடைகின்ற மத்தாகவும் கொண்டு, தாமரை மலர்கள் போன்ற கைகள் வருந்த கடல் கடைந்து அமுதம் தந்தாயே” என்று பொருளில் இந்திரன் வணங்குவதாக கம்பர் எழுதுகிறார்.

“அமரர்க்கு அமுது ஈந்த ஆயர் கொழுந்தை” (1-7-9) என்று நம்மாழ்வாரும் “வலிமிக்க வாள் வரை மத்தாக வலிமிக்க வாணாகஞ் சுற்றி மறுகக் கடலைக் கடைந்தான்” (மூன் 46) என்று பேயாழ்வாரும் அருளிச் செய்துள்ளது இங்கு நினைவு கூறத் தக்கது.

இந்திரன் இராமபிரானை நோக்கி “நீ ஆதி காலத்தில் ஒன்றாக இருந்தாய்; பின்பு பல்வேறு வடிவங்கள் ஆகிறாய்; ஊழிக்காலம் பெரும் பிரளயத்தால் முடியம்போது முதலில் இருந்த ஒன்றாகும் நிலைபெறுகிறாய்” என்று திருமாலின் அலகிலா விளையாட்டைக் கூறிப் போற்றுகிறான்.

“ஊழிகளாய் உலகு ஏழும் உண்டான்” என்று நம்மாழ்வாரும் ‘ஊழி ஏழுலகு உண்டு உமிழ்ந்தானே” (திரு-71) “(5-1-2) என்று பெரியாழ்வாரும் அருளிச் செய்வர்.

இவ்வாறு பலவாறாகப் பெருமாளாகிய இராமபிரானைப் போற்றிய இந்திரன் விடைபெற்று தேவலோகம் போனான். சரவங்க முனிவர் இராமபிரானை வரவேற்றார். இராமபிரான் சீதையுடனும் இலக்குவனுடனும் அந்த இரவை ஆசிரமத்தில் கழித்தார்.

மறுநாள் சரவங்கர் தன் மனைவியுடன் பிறப்பு நீங்கி பரமபதம் அடைந்தார்.
[மீண்டும் வரும்]

வாழ்த்துகிறோம் கவிஞர் வெண்ணிலாவுக்கு புதுமைப்பித்தன் நினைவுச் சிறுகதை விருது

வாழ்த்துகிறோம் 
கவிஞர் வெண்ணிலாவுக்கு   புதுமைப்பித்தன் நினைவுச் சிறுகதை விருது

  வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கவிஞரும் எழுத்தாளருமான அ.வெண்ணிலா எழுதிய ' பிருந்தாவும் இளம் பருவத்து ஆண்களும் ' சிறுகதைத் தொகுப்பிற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம் மாநில அளவில் நடத்திய புதுமைப்பித்தன் நினைவுச் சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான முதல் பரிசு கிடைத்துள்ளது.  

     இதற்கான விருது வழங்கும் விழா கோவையில் கடந்த ஞாயிறு மாலை நடைபெற்றது. இவ்விழாவிற்கு தமுஎகச.வின் மாநிலத் தலைவர் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் தலைமையேற்றார். கோவை மாவட்டத் தலைவர் மணி அனைவரையும் வரவேற்றார்.    மாநில அளவில் நடைபெற்ற புதுமைப்பித்தன் நினைவுச் சிறுகதைத் தொகுப்புக்கான போட்டியில் முதல் பரிசினை வென்ற கவிஞர் அ.வெண்ணிலாவுக்கு ரூ.5000/- பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழை எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் வழங்கினார்.    

பரிசு வென்ற வெண்ணிலாவின் சிறுகதைத் தொகுப்பு பற்றி  தமுஎகச.வின் மாநிலப் பொதுச் செயலாளர் சு.வெங்கடேசன், பேராசிரியர் கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியன், செம்மலர் ஆசிரியர் எஸ்.ஏ.பெருமாள் ஆகியோர் பாராட்டிப் பேசினர்.  

    கவிஞர் அ.வெண்ணிலா இதுவரை ஆறு கவிதை நூல்களையும்,  சிறுகதைத் தொகுப்பும், கட்டுரைகள், கடித நூலொன்றும் எழுதியுள்ளார்.சாகித்திய அகாதெமிக்காக உலகமெங்குமுள்ள தமிழ்ப் பெண் கவிஞர்களின் கவிதைகளையும், என்.சி.பி.ஹெச். பதிப்பகம் வெளியிட்டுள்ள 75 ஆண்டுகால பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகளையும் தொகுத்துள்ளார். இவரது படைப்புகள் ஆங்கிலம், மலையாளம், இந்தி. தெலுங்கு ஆகிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. பல்கலைக் கழக பாடத் திட்டத்திலும் நூல்கள் இடம் பெற்றுள்ளன.  

இணையவெளியின் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்     

[தமிழ் இனி மெல்ல (22 ) “கருவூர்த்தேவர் செய்த கைங்கரியம் இது!”

[தமிழ் இனி மெல்ல (21 )சென்ற பதிவின் தொடர்ச்சி ]
இராஜராஜர் தன் தோளில் வைத்த கையின்மேல் தன் கையை வைத்து அழுத்துகிறான் இராஜேந்திரன். இருவரும் சிறிது நேரம் அப்படியே இருந்து விட்டு ஒருவரை ஒருவர் ஆரத் தழுவிக் கொள்கிறார்கள்.


குந்தவைப் பிராட்டி அவர்கள் இருவரையும் தழுவிக் கொள்கிறாள். சோழமகாதேவியின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் திரள்கிறது.

இராஜேந்திரன் அவர்களிடமிருந்து விடை பெற்றுக்கொண்டு அரண்மனையில் தன் வளாகத்திற்கு செல்கிறான்.


இராஜராஜரின் தமிழ்த் திருப்பணியில் இருந்த ஆர்வமும் உற்சாகமும் திடுமென்று அவனுக்கு சற்றுக் குறைந்திருப்பது தன் தந்தை மற்றவர்முன் “அமைதி காப்பாய்!” என்று சொன்னதனாலா என்று நினைத்துப் பார்க்கிறான். இப்போது இருக்கும் மன நிலையில் அதைப் பற்றிச் சிந்திப்பதைவிட, தனக்கு நண்பனாகக் கிடைத்த சிவாச்சாரியை எதிர்காலத்தில் எப்படித் தனது திட்டங்களில் பங்குபெறச் செய்யலாம் என்பதில் சிந்தனையைச் செலுத்துவதே நல்லது என்று எண்ணியபடி தன் வளாகத்தை அடைகிறான்.“தந்தையே! இவ்வளவு விரைவில் திரும்பிவிட்டீர்களே! கருவூர்த் தேவரும், அத்தையாரும் உங்களுடன் சென்றதால் நீங்கள் நெடுநேரம் அவர்களுடன் இருப்பீர்கள் என்றல்லவா நினைத்தேன்.” என்ற மகள் அம்மங்கையின் குரல் அவனை நிகழ்காலத்திற்கு ஈர்க்கிறது.எட்டே வயதான இரண்டாம் மகளைக் கண்டதும் அவன் முகம் மலர்கிறது. கைகளை நீட்டுகிறான். ஓடிவந்து அவனைக் கட்டிக்கொள்கிறாள் அம்மங்கை.“கருவூரார் எங்களுக்கு வலுக்கட்டாயமாக ஓய்வு கொடுத்துவிட்டாரம்மா! நாளை மதிய வழிபாட்டுக்குப் பின்னர் அவரை மீண்டும் சந்திக்கச் செல்லப் போகிறோமம்மா!” என்று அவளது கன்னத்தை நிமண்டியபடி பதில் சொல்கிறான் இராஜேந்திரன்.“அதுசரி, உன் அக்கா நங்கை எங்கே?” என்று கேட்கிறான். மூத்தமகளின் முழுப்பெயர் அருள்மொழி நங்கை என்றாலும், தந்தையின் பெயரைச் சொல்வது மரியாதை இல்லை என்பதால் நங்கை என்று மட்டுமே சுருக்கி விளிக்கிறான்.“அக்காவைப் பற்றிக் கேட்காதீர்கள், தந்தையே! எப்பொழுது பார்த்தாலும் தேவாரம், திருவாசகம் என்று பாடிக்கொண்டு, சிவபூசை செய்துகொண்டு இருக்கிறாள். அரசகுமாரியாக மட்டும் இல்லாவிட்டால் கோவிலே கதியாகக் கிடப்பாள். நீங்கள் அவனுக்கு ஒரு சிறிய சிவன் கோவில் கட்டிக் கொடுத்துவிட்டால் நல்லது என்று எனக்குப் படுகிறது!” குறும்பாகப் பதில் கூறுகிறாள் அம்மங்கை.“இப்படியெல்லாம் பேசக்கூடாது மங்கை! பதினேழு வயதான அவளுக்கும் திருமண வயது வந்து விட்டது. தமக்கை என்ற மரியாதையைக் காட்ட வேண்டும், நீ!” என்று மகளைச் செல்லமாகக் கடிந்து கொள்கிறான்.“நீங்கள் கொஞ்சம் அக்காவைக் கட்டுப்பாட்டில் வைக்கவேண்டும். இல்லாவிட்டால் அவள் ஒரு சிவனடியாரைத் திருமணம் செய்து கொண்டு, அரசவாழ்வை விட்டாலும் விட்டுவிடுவாள்!” என்று குறும்பாகச் சொன்னது இராஜேந்திரனின் மனத்தில் சிறிய கலக்கத்தை உண்டு பண்ணுகிறது. நங்கையைப் பற்றி அவள் தாயான இளையராணி பஞ்சவன் மாதேவியிடத்தில் பேசவேண்டும் என்று முடிவு செய்து கொள்கிறான்.“தந்தையே! அண்ணன்மார்கள் இருவரும் வந்திருக்கிறார்கள். அன்னையார் அவர்களிடம் பேசிக் கொண்டு உள்ளார்கள்.” என்று தெரிவிக்கவும், இராஜேந்திரனின் இரு புதல்வர்களும் அவர்கள் எதிரில் வரவும் சரியாக இருக்கிறது.“வணக்கம் தந்தையே!” என்று தலை சாய்த்து வணங்குகின்றனர் இருவரும். பதினைந்து வயதான இராஜாதிராஜனையும், பன்னிரண்டு வயதான இராஜேந்திர தேவனையும் கைகளுக்கு ஒருவராகத் தழுவிக் கொள்கிறான் இராஜேந்திரன்.போர்ப்பயிற்சிக்காகச் சென்றிருந்த இருவரும் விடுமுறையில் அரண்மனைக்கு வந்திருப்பது அவனுக்கு மகிழ்வைத் தருகிறது. அவர்களைப் பார்த்து கிட்டத்தட்ட ஒரு ஆண்டு ஆகிவிட்டது. பெருவுடையார் கோவில் குடமுழுக்குக்கூட அவர்களால் வர இயலாது போய்விட்டது. இன்னும் சில ஆண்டுகள் சென்றால் அவர்களும் சோழப் பேரரசின் தூண்களாக நின்று தனக்கு உதவியாகப் போரிடுவார்கள் என்பதை நினைக்கும்போது அவனுக்குப் பெருமையாகவே இருக்கிறது.அவர்களைப் பார்த்தவுடன் அவனுக்கு சற்றுமுன் ஏற்பட்ட மனக்கலக்கம்கூட நீங்க ஆரம்பிக்கிறது. இவர்களை ஒருகாலும் தான் நடத்தப்ட்டதைப்போல நடத்தமாட்டேன் என்று மனதிற்குள் உறுதி செய்து கொள்கிறான்.“வெற்றி மாது என்றும் உங்கள் துணையாக இருப்பாளாக!”  என்று வாழ்த்தியவன், “உங்களது போர்ப் பயிற்சி எவ்வாறு இருந்தது? என்னென்னவெல்லாம் கற்றுக் கொண்டீர்கள்?”  என்று கேட்கிறான்.“தந்தையே! கடந்த ஒரு ஆண்டாக உங்கள் சொற்படி நாங்கள் கடற்படையில் பயிற்சி பெற்றோம். நக்காவரம்24 வரை சென்று வந்தோம். கடல் நீச்சல், நாவாய்ப் போர், கயிறு மூலம் ஒரு கப்பலிலிருந்து மறு கப்பலுக்குச் செல்லுதல், கடலுள் முக்குளித்து நெடுநேரம் நீஞ்சிச் செல்லுதல், கப்பல் ஓட்டுதல், இரண்டு மூன்று நாள்கள் கடலையே நம்பி மீன்பிடித்து அவற்றையே உணவாகக் கொண்டு உயிர்வாழ்தல் முதலியவற்றைக் கற்றோம்!” என்று பதிலளிக்கிறான் இராஜேந்திர தேவன். மூத்தவன் இராஜாதிராஜன் அதிகம் பேசாதவன் ஆதலால், தம்பியையே பெருமை பேசிக்கொள்ள விட்டுவிடுகிறான்.“அய்யே! பச்சை மீன்களையாக தின்று உயிர்வாழ்ந்தீர்கள்? வ்வே, நீங்கள் சொல்வதைக் கேட்டால் எனக்கு வயிற்றைப் புரட்டுகிறது!” என்று மூக்கைச் சுளிக்கிறாள் அம்மங்கை.“மீனைப் பாண்டியர்களின் தலைகள் என்று நினைத்துக் கொண்டோம் தந்தையே!” அப்பொழுது பச்சை மீனை உண்கிறோமே என்ற அருவருப்பு தெரியவில்லை!” என்று பெருமையுடன் சொல்கிறான் இராஜேந்திர தேவன்.
பதினைந்தும், பன்னிரண்டு வயதும் உள்ள தன் புதல்வர்கள் பேசும் வீரப் பேச்சு 

--------------------------------------------------------
[தமிழ் இனி மெல்ல (22 ) தொடர்கிறது ]அரிசோனா மகாதேவன் 
“மகிழ்வடைந்தேன், புதல்வர்களே!” என்று பெருமையாக அவர்களை அணைத்துக் கொள்கிறான். “உங்கள் பாட்டனார் இதைக் கேட்டால் மிகவும் பூரித்துப் போவார். சில நாள்கள் திரைகடலில் யார் உதவியும் இன்றி உயிர் வாழ்ந்திருப்பது உங்களுக்கு நிறைய மனஉறுதியைக் கொடுத்திருக்கும். இதை ஏற்பாடு செய்த கட்றபடை அரையருக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவிக்கவேண்டும்!” என்று மனம் விட்டுப் பாராட்டுகிறான்.

“எங்கே எங்களைத் தனியாக விட்டார்கள், தந்தையே?” என்று முதன்முதலாக வாயைத் திறந்து அலுத்துக் கொள்கிறான் இராஜாதிராஜன். “எங்களைச் சுற்றிச் சுற்றி பத்து நாவாய்கள் மிதந்து கொண்டே இருந்தன. அவைகள் எங்கள் கண்களை விட்டு அகலவே இல்லை. வெளியில் செல்லும் பருவப் பெண்களுக்குத் துணை போகும் மூதாட்டிகள் மாதிரி எப்போதும் எங்களைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டே இருந்தன, அந்த நாவாய்கள்!”

“பெண்கள் என்றால் உங்களுக்கு அவ்வளவு இளக்காரமா? வவ்வவ்வே!”  என்று அழகு காட்டுகிறாள் அம்மங்கை. அவளை அடிப்பது போல விளையாட்டாகக் கையை சிரித்தபடியே ஓங்குகிறான் இராஜேந்திர தேவன்.
“உன் வீரத்தை ஒரு பெண்ணிடம் காண்பி! வவ்வவ்வே!” என்று அழகுகாட்டியவாறே தந்தையின் இடுப்பில் இருந்த பிச்சுவாவை எடுத்து ஓங்குகிறாள் அம்மங்கை.

இராஜாதிராஜனின் கை மின்னலைப் போல விரைந்து கண்மூடிக் கண் திறப்பதற்குள் அம்மங்கையின் மணிக்கட்டை இறுகப் பற்றுகிறது. அந்த இறுக்கத்தின் வலி தாங்காமல் பிச்சுவாவைத் தளரவிடுகிறாள் அம்மங்கை. சிரித்தபடியே அப் பிச்சுவாவை நுனியில் பற்றித் தன் கைக்குக் கொண்டு வருகிறான் இராஜாதிராஜன்.

போர்ப்பயிற்சி பெற்று இறுகிய அவனது கைகளின் பிடியைத் தாங்க மாட்டாது, “ஆ!” என்று பெரிதாகக் குரல் கொடுக்கிறாள் அம்மங்கை. உடனே தன் பிடியை விடுகிறான் அவளது அண்ணன்.

“அரசகுமாரனைத் தாக்கும் எண்ணத்துடன் பிச்சுவாவை எடுத்தது முதல் குற்றம். சோழச் சக்கரவர்த்தியான இராஜேந்திரரின் பிச்சுவாவைத் திருடியது இரண்டாவது குற்றம். இந்த இரண்டு அரச குற்றங்களுக்காக உன் வாழ்நாள் முழுவதும் உன்னை என் இதயச் சிறையில் அடைத்து தண்டனை விதிக்கிறேன்!”  என்று குறும்பாக முழக்கமிடுகிறான் இராஜாதிராஜன். மூன்று ஆண்களும் கலகலவென்று நகைக்கிறார்கள்.

அவனது பிடியினால் சிவந்து போன மணிக்கட்டைத் தடவிக்கொண்டே அவர்களின் சிரிப்பில் கலந்து கொள்கிறாள் அம்மங்கை.

“தந்தையே! பாட்டனாரைச் சென்று பார்த்துவிட்டு வந்து விடுகிறோம்!” என்று இருவரும் விடைபெற்றுக் கொள்கிறார்கள். மகளின் தோளில் கையைப்  போட்டுக்கொண்டவாறு அந்தப் புரத்தில் நுழைகிறான் இராஜேந்திரன்.

“நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழியாண்ட குருமணி தன் தாள் வாழ்க!
ஏகன் அநேகன் இறைவனடி வாழ்க!”

இனிமையான குரலில் அருள்மொழி நங்கை திருவாசகம் ஓதும் குரல் கேட்கிறது. அருள்மொழி நங்கையின் குரலுக்கு இணைந்தவாறு வீணையின் நாதமும் ஒலிக்கிறது. மனக்கலக்கத்தோடு திரும்பிய அவனது மனதிற்கு அவளது பாட்டு அஞ்சனமாக இருக்கிறது. சந்தன மணமும், குங்கிலிய மணமும் கலந்து அவனது நாசியைத் துளைக்கின்றன. அவனையும் அறியாமல் மனம் ஒருவித அமைதியைப் பெறுகிறது.

சிறு மேடையில் பஞ்சலோகத்தில் செய்யப்பட்ட மூன்றடி உயரமுள்ள தில்லை நடராஜரின் திருவுருவம் காட்சி அளிக்கிறது. அது பொன்னாலும், மணியாலும், தங்கப்பூண் பிடித்த உருத்திராட்ச மாலைகளாலும் நன்கு அலங்கரிக்கப் பட்டிருக்கிறது. சிவனுக்கு உரித்தான கொன்றைப் பூமாலை பெரிதாகக் கழுத்தில் தொங்குகிறது. வலது பக்கம் சிவகாமி அம்மனின் சிறிய பஞ்சலோகச் சிலையும், சைவ சமய குரவர் நால்வரின் பதுமைகளும் இருபக்கமும் விளங்குகின்றன. இறைவனார்க்கு முன்னர் முவ்வகைப் பழங்களும், மலர்களும் தங்கத் தட்டுகளில் நிரப்பி வைக்கப்பட்டிருக்கின்றன. அருள்மொழி நங்கைக்கு அருகில் இராஜேந்திரனின் மூன்று மனைவியர் களான திரிபுவன மகாதேவி, வீரமாதேவி, பஞ்சவன் மகாதேவி ஆகியோர் கண்களை மூடி சிவபுராண ஓதுதலில் ஆழ்ந்திருக்கிறார்கள். 

பணிப்பெண்கள் சாமரம் வீசிக்கொண்டிருக்கிறார்கள்.

தான் நுழைவதைக் கண்டதும் மரியாதை செய்ய முயன்ற பணிப் பெண் 
களை, கையால் வாயை மூடி சைகை செய்து காட்டுகிறான் இராஜேந்திரன். ஓதி முடிக்கும் வரை அமைதியாக அம்மங்கையுடன் கைகூப்பி நிற்கிறான்.
பதினைந்து நிமிடங்களில் சிவபுராண ஓதுதல் முடிகிறது. பூசை முடிந்ததும், ஆடலரசனை வணங்கி எழுந்தவர்கள் இராஜேந்திரனைக் கண்டு திடுக்கிடுகிறார்கள். 

எவ்வளவு நேரமாக அவனை நிற்கவைத்து விட்டோம் என்ற மரியாதை கலந்த பரபரப்பு அவர்களிடம் தென்படுகிறது. அனைவரும் எழுந்து நிற்கிறார்கள். கையை அமர்த்தி பரபரப்பு வேண்டாம் என்று புன்னகையுடன் சைகை செய்த இராஜேந்திரன் அருள்மொழி நங்கை தன்னிடம் பரிவுடன் கொடுத்த மலர்களை இறைவனின் காலடியில் வைத்து, தானும் கைகூப்பி வணங்குகிறான்.

அவன் கால்களில் விழுந்து வணங்குகிறாள் அருள்மொழி நங்கை. அவள் தலையில் கைவைத்து ஆசி நல்குகிறான் இராஜேந்திரன்.

“நங்கை! உன் திருவாசக ஓதுதல் மிகவும் இனிமையாக இருந்தது அம்மா. போரில் எத்தனை விழுப்புண்கள் ஏந்தி வந்தாலும் உன் இனிய குரல் அதை ஒரு நிமிடத்தில் ஆற்றும் வல்லமை பெற்றது அம்மா!” என்று நிறைந்த மனதுடன் மகளை வாழ்த்துகிறான் இராஜேந்திரன்.

“தந்தையே! என்னை மிகவும் புகழ்கிறீர்கள். என் குரலை அளித்தவன் ஆடலரசன். என்னைப் பாடுவிப்பவனும் அவனே. என்னை இவ்வுலகில் வழி நடத்திச் செல்வதும் அவனே. இவ்வுலமே போரில்லாமல் அவன் புகழ் பாடி மகிழவேண்டும் என்பதுதான் எனது விருப்பம். போர் இல்லாது போனால் யாரும் விழுப்புண்களைத் தாங்க வேண்டிய அவசியம் இல்லையே!” என்று தங்க நாணயம் உருண்டோடும் குரலில் கனிவுடன் பதிலளிக்கிறாள் 
அருள்மொழி நங்கை. 

அவளது நெற்றியில் மூன்று சிறிய திருநீற்றுக் கோடுகளின் நடுவில் சிவந்த குங்குமம் காட்சி அளிக்கிறது. சுருண்ட கருங்குழல் பெரிய முடிச்சாகப் பின்னால் முடியப் பட்டிருக்கிறது. வில்லாக வளைந்த அடர்ந்த கரும் புருவங்களுக்குக் கீழே கருணை ததும்பும் பெரிய விழிகள். எடுப்பான நாசி, கொவ்வைப் பழத்தை ஒத்த உதடுகள்.

அரசகுமாரியாக இருந்தாலும் அணிகலன்கள் மிகவும் குறைவாகவே அவளிடம் காணப்படுகிறது. கொஞ்சம் கருமை நிறக்கலப்பு அதிகமாக இருந்தாலும் இறையழகு அவளிடம் நிறையக் காணப்படுகிறது. கிறங்க வைக்கும் அழகு அல்ல அருள்மொழி நங்கையின் அழகு - கைகூப்பி வணங்கவைக்கும் அழகு.
“இல்லையம்மா இல்லை! உன் குரலுக்குமுன் பாடலில் வல்ல விறலியர்கள்கூட தோற்றுப் போவார்கள்! நீ வேண்டியபடி போரில்லா உலகம் ஏற்படத்தான் நாங்கள் குழப்பம் செய்யும் கசடர்களைப் போரிட்டுக் களைய வேண்டி இருக்கிறது. அதற்குத்தான் உன் பாட்டனாரும் நானும் முனைந்து வருகிறோம்.” என்று மனங்கனிந்து பதில் சொல்கிறான் 
இராஜேந்திரன்.
* * *

                                                அத்தியாயம் 4
                                          கருவூரார் குடில், தஞ்சை
                              சாதாரண, ஆனி 29 - ஜூலை 14, 1010
வைப் பாட்டியார் மாதிரி திருமணமே செய்து கொள்ளாமல் காலம் முழுதும் கன்னியாகவே இருக்கப் போகிறாயா?” என்று பஞ்சவன் மகாதேவி அருள்மொழி நங்கையை அதட்டியதையும், அதற்கு அவள், “அன்னையே!
                    “உன்னைப் பிரானாகப் பெற்ற உன்சீர் அடியோம்
                     உன் அடியார் தாள் பணிவோம்
                     ஆங்கவர்க்கே பாங்காவோம்
                    அன்னவரே எம் கணவராவார் அவருகந்து
                     சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்வோம்
                     இன்னவகையே எமக்கெங்கோன் நல்குதியேல்
                   என்ன குறையும் இலோம்26
“என்று திருவாதவூரார்27 சொல்லியிருக்கிறாரே! மார்கழி மாதத்தில் நாம் அதைப் பாடி மகிழ்வதில்லையா? நான் ஒரு நல்ல சிவனடியாரைத் திருமணம் செய்துகொள்வேன்!” என்று வாயாடியதையும் நினைவுகூர்ந்து மகிழ்கிறான் இராஜேந்திரன். 

அரண்மனையிலிருந்து பெருவுடையார் கோவில் மண்டபத்திற்குச் செல்லும் சுரங்க வழியை28 நோக்கி நடக்கிறான்.

அவனுக்கு அருள்மொழி நங்கையை நினைத்தால் கொஞ்சம் மனவருத்தம் ஏற்படுகிறது. அவளின் போக்கு ஒரு அரசகுமாரியைப் போல இல்லை. அவள் வயதுக்குரிய பெண்களைப் போல ஆட்டம், பாட்டம், பொன் நகைகள், புத்தாடைகள், எதிலும் அவள் விருப்பத்தைச் செலுத்தவில்லை. 

சிவபூசையிலும், திருமுறைகளைக் கற்றுக் கொள்வதிலுமே காலத்தைக் கழித்து வருகிறாள். அவளது தமிழறிவு அனைவரையும் வியக்கச் செய்கிறது. அவள் சைவ உணவை மட்டுமே உண்ண ஆரம்பித்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன. சிவபூசை செய்யும் தான் உயிர்க்கொலை செய்து வயிற்றை வளர்க்கக் கூடாது என்று சொல்லி விட்டாள் அருள்மொழி நங்கை.

“கருவூர்த்தேவர் செய்த கைங்கரியம் இது!” என்று மனதிற்குள் எண்ணிக் கொள்கிறான் இராஜேந்திரன். அருள்மொழி நங்கைக்கு சிவபெருமான் மீதும், திருமுறைகள் மீதும் பற்று வரச் செய்தவரே அவர்தான். கொஞ்சமும் சளைக்காமல் அவளுக்கு சிவபோதம் செய்வார். சிலசமயம் மணிக்கணக்கில் அவர்கள் பேச்சு தொடரும். அவளுக்கு நேர் எதிர் அம்மங்கை. இறைவன் மேல் பற்று உண்டு. ஆனால் அருள்மொழி நங்கை மாதிரி அதிகப் பற்று கிடையாது. அக்காளுக்கும் சேர்த்து வைத்து அவளுக்குப் பொன் அணிகலன்கள் மேல் கொள்ளை ஆசை. எனவே, தனக்கு வரும் நகைகளையெல்லாம் தங்கைக்கே அளித்து விடுவாள் அருள்மொழி நங்கை.

சுரங்கப் பாதையின் வாசல் இராஜராஜரின் வளாகத்தின் மையத்தில் இருக்கிறது. அங்கு தன் தமக்கையாருடனும், சோழமகாதேவியாருடனும் அவன் வரவை எதிர்நோக்கி அமர்ந்திருந்தார். 

நேற்று சந்தித்த தந்தையா இவர் என்று எண்ணும் அளவுக்கு அரச உடையில் ஜொலித்தார் இராஜராஜர். தூக்கிக் கட்டிய முடிந்த தலை மயிரின் மேல் செருகப்பட்ட மணி மகுடம், உடல் முழுவதும் அரச ஆபரணங்கள், இடுப்பில் உறையிலிட்ட வீரவாள், என்று கம்பீரமாக சோழமண்டலம் மட்டுமின்றி பாண்டிய, சேர, சாளுக்கிய, கருநாடுகளின் பேரரசராக விளங்கினார் அவர். இராஜேந்திரனுக்கே தன்னையும் அறியாமல் அவர்மீது ஒரு மரியாதை கலந்த மதிப்பு தோன்றியது. தந்தை என்று எண்ணாமல் தரணி ஆளும் பேரரசர் என்றே மதிக்கத் தோன்றியது.

“வணக்கம் தந்தை... சக்கரவர்த்தியாரே!”  என்று தலைவணங்கினான் இராஜேந்திரன்.

புன்னகையுடன் அவனைத் தழுவிக் கொண்டார் இராஜராஜர்.

“வழக்கம்போலத் தந்தையாரே என்று விளித்தால் போதும் மதுராந்தகா!” என்று புன்னகைத்த அவர், “செல்லலாமா?” என்று வினவுகிறார்.

அவரது தலைமை மெய்காப்பாளன் அங்கிருந்த புலியின் சிலையின் வாயில் கைவிட்டு எதையோ முடுக்குகிறான். உடனே அங்கு ஆளுயரத்திற்கு வரையப்பட்டிருந்த தஞ்சைப் பெருவுடையார் கோவில் ஓவியம் அதன் சட்டங்களுடன் விலகி சுரங்கப் பாதையின் வாசலைக் காட்டுகிறது. உள்ளே தீவட்டியுடன் மெய்காப்பாளர்கள் நின்று கொண்டிருக்கின்றனர். 

தலைமை மெய்க்காப்பாளன் தலைசாய்த்து, “சக்கரவர்த்திகளே! செல்லலாமே!” என்று கையைக் காட்டுகிறான். முதலில் இராஜராஜர் சுரங்கத்தில் நுழைகிறார். 

அவரைப் பின்பற்றி இராஜேந்திரன், சோழமகாதேவி, குந்தவைப் பிராட்டியார் நுழைகின்றனர். கடைசியாகத் தலைமை மெய்காப்பாளனும், இதர காப்பாளர்கள் பத்துப் பேரும் உள்ளே செல்கின்றனர். உடனே ஓவியம் திரும்ப வந்து சுரங்க வாசலை மூடிக்கொள்கிறது.

சுரங்கம் கிட்டத்தட்ட ஏழு அடி உயரமும் ஐந்தடி அகலமாகவும் இருக்கிறது. இந்தச் சுரங்கப்பாதை வழியாகத்தான் அரச குடும்பத்தினர் பெருவுடையார் கோவிலுக்கு ரகசியமாகச் செல்வார்கள். பெரும்பாலும் இராஜராஜரும், இராஜேந்திரனும்தான் அந்தச் சுரங்கப் பாதையை உபயோகப் படுத்துவார்கள். ஈரக்கசிவு கால்களைத் தாக்காத வண்ணம் தேக்கு மரப் பலகைகள் பதிக்கப்பட்டிருக்கின்றன. உள்ளே ஒரு பல்லக்கு இருக்கிறது. அதில் சோழ மகாதேவியும், குந்தவைப் பிராட்டியும் அமர்ந்து கொள்கின்றனர். ஆறு பல்லக்குத் தூக்கிகள் அப் பல்லக்கைத் தூக்கிக் கொள்கிறார்கள். முன்னே இருவர் தீப்பந்தங்களைப் பிடித்துக் கொண்டு நடக்கின்றனர். 

அவர்களை நான்கு மெய்க்காப்பாளர்கள் உருவிய வாளுடன் பின் தொடர் கின்றனர். அவர்கள் பின் இராஜராஜரும், இராஜேந்திரனும் செல்கின்றனர். பல்லக்கு அவர்களைப் பின் தொடர்கிறது. அவர்கள் பின்னால் நான்கு மெய்க்காப்பாளர்களும், அவர்களைத் தொடர்ந்து இருவர் தீப்பந்தங்களைப் பிடித்துக் கொண்டு வந்த வழியில் யாராவது வருகிறார்களா என்று  அடிக்கொரு தடவை திரும்பிப் பார்த்தவாறே செல்கிறார்கள்.[வளரும்]
----------------------------------------------------------------------------------------------------------------------
அடிக்குறிப்பு 
26திருவாசகத்தில் உள்ள திருவெம்பாவையின் ஒன்பதாவது பாட்டில், “(சிவ பெருமானே! உன்னைத் தலைவனாகப் பெற்ற நாங்கள் உன் சிறப்பு வாய்ந்த திருவடிக்கே உரியவர் ஆகின்றோம். உன் அடியார்களின் பாதங்களை வணங்குவோம். அவர்கள் சொல்லைப் பின்பற்றி நடப்போம். அத்தகையவரே (சிவனடியார்களே) எங்களுக்குக் கணவர் ஆவார்கள். எங்கள் (சிவ)பெருமானே! இப்படிப்பட்ட அருளை எங்களுக்கு நல்குவாயானால் எந்தவிதமான குறையும் இல்லாமல் இருப்போம்!” என்று தங்களுக்கு கணவன்மார்கள் எப்படி வாய்க்கவேண்டும் என்று பெண்கள் சொல்லிப் பாடுவதாக உருவாக்கியிருப்பதையே அருள்மொழி நங்கை தன் தாயிடம் சொல்கிறாள்.
27எட்டாம் திருமுறையான திருவாசகத்தின் ஆசிரியர் மாணிக்கவாசகர். இவரைத் திருவாதவூரார் என்று அவர் பிறந்த ஊரைச் சொல்லிக் குறிப்பிடுவதும் உண்டு.
28தமிழ்நாட்டில் அரசு அரண்மனையிலிருந்து பெரிய கோவில்களுக்குச் செல்லும் சுரங்கங்கள் உண்டு. இவை கங்கைகொண்ட சோழபுரத்தில் இருந்து மண்மூடிப் போனதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். திருச்சி மலைக் கோட்டையில் தாயுமானவர் கோவில் அருகில் மலைக் கோட்டைக்கு வெளியில் செல்லும் சுரங்கப் பாதை ஒன்று இருக்கிறது. இது தவிர திருமயக் கோட்டையிலும், இன்னும் பலப்பல கோவில்களிலும் சுரங்கப் பாதைகள் உள்ளன. கோவில்களுக்கு அடியிலும் இரகசிய அறைகளில் அரசுப் பொக்கிஷங்கள் இருக்கக் கூடும். திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலிலும் இம்மாதிரி இரகசிய அறைகளில் விலைமதிப்பில்லாப் பொக்கிஷ அறைகளை பொது ஆண்டு 2011ல் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

Tuesday, 29 July 2014

தமிழ் இனி மெல்ல... [21] மதுராந்தகா! கத்தியை மட்டும் சுழட்டினால் போறாதப்பா

தமிழ் இனி மெல்ல[20] சென்ற பகுதியின் இறுதியில் 

விழா மைதானத்தை அடையும் வரை குந்தவி வாயைத் திறக்கவே இல்லை. தாயின் இந்தப் போக்கு அவ்வப்போது நரேந்திரனுக்கு வருத்தத்தை ஏற்படுத்தினாலும், அவன் உள்ளத்தில் அது ஒரு பெரிய கலக்கத்தை ஏற்படுத்தவில்லை. தமிழ், தமிழ் என்று தன் தாய் தன்னை வற்புறுத்துவது அவனுக்குப் பிடிப்பதில்லை. தன் தந்தையுடன் சிலசமயம் அதைப் பற்றிப் பேசியிருக்கிறான்.

விமலாதித்தன் அவனிடம் தெலுங்கில் சொன்னது இதுதான்:  “நரேந்திரா! இது ஆந்திர நாடு! நீ ஆந்திர அரசனாகப் போகிறாய்! அதற்கு தெலுங்கு தெரிவது மிகவும் முக்கியம். பெண்கள் எப்பொழுதும் தங்கள் முந்தானையில் ஆண்களைக் கட்டி வைக்கத்தான் முயலுவார்கள். அதற்கு நாம் அனுமதித்து விட்டால் அரசனாக அரசாட்சி செய்ய முடியாது. அவர்களின் கைப்பாவைகளாகத்தான் இருக்க முடியும். நமக்கு வேண்டுவதை நாம் பெண்களிடமிருந்து பெற்றுக் கொள்ளத்தான் வேண்டும். எனவே அவ்வப்பொழுது அவர்கள் சொல்வதற்குச் சம்மதிப்பதுபோல நடிக்க வேண்டும். இல்லாவிட்டால் உன் அம்மாவை நான் அடைந்திருக்கவே முடியாது. போகப்போக இதை நீ நன்றாகப் புரிந்து கொள்வாய்!”  என்று விஷமம் கலந்த குரலில் புத்தி சொல்வான். நரேந்திரனுக்கு அது புரிந்தது போலவும் இருக்கும், புரியாது போலவும் இருக்கும். தன்னிஷ்டப்படி நடந்து கொள்ளும்படி தந்தை சொல்கிறார் என்பது மட்டும் அவனுக்குப் புரியும்.

இரதம் பிறந்தநாள் கொண்டாட்டம் நடக்கும் மைதானத்திற்கு விரைகிறது.

விழாமேடையில் அரசர் சக்திவர்மனும், மகாராணியும் ஒரு பெரிய சிம்மாசனத்தில் ஒருவரருகில் ஒருவர் கம்பீரமாக அமர்ந்து கொண்டிருக்கிறார்கள். பலவிதமான விளையாட்டுகளும், கேளிக்கைகளும் நடந்து கொண்டிருக்கின்றன. அங்கு குந்தவி காணும் ஒரு காட்சி அவள் மனதைக் கசக்கிப் பிழிகிறது.

விமலாதித்தன் நடுவில் ஒரு சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டிருக்கிறான். அவன் இடது பக்கத்தில் உள்ள சிம்மாசனத்தில் அவனது இன்னொரு ராணியும், வலது பக்கத்து இருக்கையில் விஜயாதித்தனும் அமர்ந்து கொண்டிருக்கிறார்கள். இரதம் நிற்கிறது. கண்களில் பறக்கும் தீப்பொறிகளைக் கட்டுப் படுத்திக்கொண்டு கீழிறங்குகிறாள் குந்தவி.

தமிழ் இனி மெல்ல...தொடர்கிறது [21] 

அரிசோனா மகாதேவன் 
                                           அத்தியாயம் 3

                 
    சோழர் அரண்மனை, தஞ்சை
   சாதாரண, ஆனி 28 - ஜூலை 13, 1010

டுமீன் ஓட, உறுமீன் வருமளவும் வாடியிருக்குமாம் கொக்கு என்பது போல இராஜேந்திரனுக்கும், சிவசங்கர சிவாச்சாரியனுக்கும் இடையில் நடந்த வாட்சண்டையையும், இராஜேந்திரன் வாளைக் கோபமாகத் தூக்கி எறிந்ததையும், கடைசியில் சிவாச்சாரியனுடைய விளக்கத்தைக் கேட்டுவிட்டு, அவனை நண்பனாக ஆக்கிக் கொண்டு, தனக்கு நன்றி சொல்லி வணங்கியதையும் முகத்தில் எந்தவித சலனமுமில்லாமல் பார்த்து ரசித்த கருவூர்த்தேவர், கையை உயர்த்தி இராஜேந்திரனுக்கு ஆசி வழங்குகிறார்.

ஒருவழியாக யாருடைய இரத்தமும் சிந்தாமல் நல்லபடியாக முடிந்ததற்கு தஞ்சைப் பெருவுடையாருக்கு மனதிலேயே நன்றி செலுத்துகிறாள் சோழமகாதேவி. வழக்கம்போல மௌனமாகப் புன்னகைத்தபடியே கருவூராரின் நாடகத்தைக் கண்டு ரசிக்கிறார் இராஜராஜர். காரணமில்லாமல் எந்தக் காரியத்தையும் அவர் செய்யமாட்டார் என்பது இராஜராஜருக்கு நன்றாகவே தெரிந்திருந்ததால் இந்த நாடகத்தை நடத்தியதற்கும் காரணத்தை அவராகவே சொல்லட்டும் என்று காத்திருக்கிறார்.

ஒரு அந்தணன் இவ்வளவு திறமையாக வாட்போர் வீரனான இராஜேந்திரனை வாட்போரிலேயே தடுத்து நிறுத்தும் திறன் பெற்றிருப்பதைக் கண்டு வியக்கிறாள் குந்தவைப் பிராட்டி. இவனை இராஜேந்திரனுக்கு நண்பனாகத் தந்தது சோழநாட்டிற்கு நன்மை தரும் செயல் என்றும் மனதில் மகிழ்வு கொள்ளுகிறாள். இந்தப் பிள்ளை பலகாலம் சோழநாட்டிற்குத் தொண்டாற்றவேண்டும் என்று இறைவனை இறைஞ்சுகிறாள்.

“மதுராந்தகா, இந்தக் கட்டை உனக்குக் கொடுத்த பணியாளனை உன் நண்பனாக ஏற்றுக்கொண்டு என்னைச் சிறப்பித்துவிட்டாய்!” என்று இராஜேந்திரனை வாழ்த்திய கருவூரார் சிவாச்சாரியனை நோக்கி, “சிவனே! ஒரு அரசனுக்கு உண்மையான நண்பன் பணியாளனாகத்தான் இருக்க வேண்டும். அவன் உன்னிடம் மகிழ்வு கொண்டு தருவது செல்வம், நிலம், பதவியாக இருந்தாலும், நீ எப்பொழுதும் அவனுக்கு மகிழ்வுடன் உன் உயிரையும் தர சித்தமாக இருக்கவேண்டும். இதையும் நீ கற்ற நன்னூல்கள் மூலம் அறிந்திருப்பாய். நீங்கள் இறுதிவரை நண்பர்களாக இருந்து சோழநாடு செழிக்க, சைவம் வளர நற்பணி ஆற்றுங்கள்!” என்று ஆசி நல்குகிறார்.

பிறகு இராஜராஜர் பக்கம் திரும்பி, “அருள்மொழி! நீ எனக்கு அளித்த பணியின் உருவாக்கம்தான் இப் பேழையில் இருக்கிறது” என்று சிவாச்சாரி தன்னிடம் கொடுத்த நீண்ட பேழையைச் சுட்டிக் காட்டுகிறார் கருவூரார்.

“மிக்க மகிழ்ச்சி ஐயா! என்னுடைய நீண்ட காலக் கனவுதான் நான் உங்களுக்கு அளித்த திருப்பணி. அதை நிறைவேற்ற என்ன வழி என்று அறியாமல் நான் உங்களை நாடினேன். நான் இரண்டு ஆண்டுகளாகக் காத்திருந்ததற்கு இப்பொழுது தங்களிடமிருந்து விடை கிடைத்திருக்கிறது. இப்பேழையில் என்ன கொணர்ந்திருக்கிறீர்கள்?” என்று கனிந்த குரலில் கேட்கிறார் இராஜராஜர்.

கருவூராரின் விழிச்சுட்டைக் கவனித்த சிவாச்சாரி அவரிடமிருந்து பேழையை வாங்கி, அதைத் திறந்து, அதன் உள்ளே இருந்த குழலை எடுத்து, மிகப் பணிவுடன் கருவூராரிடம் கொடுக்கிறான்.

அதை இராஜராஜரிடம் நீட்டுகிறார் கருவூரார். இறையருளைப் பெறும் உணர்வுடன் எழுந்து, அதைப் பணிந்து பெற்றுக் கொள்கிறார் இராஜராஜர்.

செம்பினால் செய்யப்பட்டு தங்கமுலாம் பூசப்பட்டதால் பளபளவென்று மின்னிய அதில் கருவூரார் தன்னிடம் ஒரு குழலை அளிப்பது போல வரிவுருவப் படம் தீட்டப்பட்டிருக்கிறது. அதற்குக் கீழே “திரிபுவனச் சக்கரவர்த்தி இராஜராஜ சோழ தேவருக்கு அவரது குரு கருவூர்த் தேவர் இப்புவியெங்கும் தமிழ் வளர்க்கத் தீட்டிக் கொடுத்த மடலைத் தன்னுள் தரித்த காப்பு” என்று எழுதியிருக்கிறது. அதைப் படித்த இராஜராஜர் முகம் மலர்கிறது. அந்தக் குழலைத் தன் கண்களில் ஒற்றிக் கொள்கிறார். உடனே அவரது கண்கள் பனித்துக் கண்ணீர் முத்துக்கள் இரண்டு வழிந்து கன்னத்தில் கோடாக இறங்குகின்றன. அவரது உதடுகள் இலேசாகத் துடிக்கின்றன.

மெதுவாகக் கருவூரார்முன் மண்டியிட்ட இராஜராஜர், நன்றி ததும்பும் குரலில், “ஐயா, என் பிறவிப் பயனை அடையும் தருவாய்க்கு என்னைக் கொண்டு சேர்த்தமைக்கு எப்படி நன்றி சொல்லப்போகிறேன்? நான் சோழ சாம்ராஜ்ஜியத்தைத் தென் குமரி முதல் துங்கபத்திரை வரை விரிவாக்கியது பெரிதல்ல, பெருவுடையாரான சிவபெருமானுக்குத் தென்னாட்டிலேயே மிகப் பெரிய கற்றளி அமைத்து சைவம் நிமிர்ந்து நிற்க சிவத்தொண்டு செய்ததே பெரிது என்று நினைக்கிறேன். அதைப்போல ஒரு சாலச் சிறந்த பணி, தமிழ் அன்னைக்குச் செய்ய வேண்டிய பணி என்று உணர்த்திய தாங்கள் எனக்குக் கொடுக்கும்  உடைவாள் இது என்று சிரமேற் கொள்கிறேன்.” என்று அக்குழலை மீண்டும் தன் கண்களில் ஒற்றிக் கொள்கிறார்.

ஒரு தகப்பன் தன் செல்லக் குழந்தையின் தலையைப் பாசத்துடன் நீவி விடுவது போல இராஜராஜரின் தலையைப் பரிவுடன் நீவி விடுகிறார் கருவூரார். குனிந்து இராஜராஜரின் தோள்களைப் பற்றித் தூக்கி நிறுத்துகிறார்.
இராஜராஜர் சொன்னது அனைவருக்கும் புரிந்தாலும், அவர் எதைச் சொல்கிறார், அப்படி என்ன பெரிய திருப்பணிக்கான திட்டம் அக்குழலுக்குள் இருக்கிறது என்று மற்றவருக்குப் புரியவில்லை. இதுவரை இராஜராஜரின் கண்களில் வீரத்தையும், பக்தியையும், அருளையும், கோபத்தையும் மட்டுமே பார்த்தவர்கள், அவர் கண்களில் கண்ணீரைப் பார்த்ததே இல்லை. ஆகவே, அக்குழலில் அவர் கண்களில் கண்ணீரை வரவழைக்கும் அளவுக்கு அப்படி என்ன இருக்கிறது என்ற ஆர்வம் இருந்தாலும், அவரது கண்ணீர் மற்றவர்களின் இதயத்தைக் கசக்கிப் பிழிந்தது.

“அருள்மொழி! உள்ளே என்ன இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளாமலேயே இப்படி உணர்ச்சி வசப்படுகிறாயே! அதில் இருப்பதை நான் நிதானமாக உனக்கு விளக்கவேண்டும். நீ பல கேள்விகளைக் கேட்டு, அதற்கு நான் விளக்கம் தந்தபின்னர் நீ அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதை நிறைவேற்றுவதற்கான வழிமுறைகளை வகுக்க வேண்டும். அதைச் செயல்படுத்த வேண்டும். உட்கார்!”  என்று கனிந்த குரலில் இராஜராஜரை நிகழ்காலத்திற்குக் கொண்டுவருகிறார்.

தன் இருக்கையில் அமர்ந்த இராஜராஜர், “ஐயா, இத்திருப்பணியை முடிக்க எத்தனை காலம் தேவைப்படும்?” என்று குழந்தையைப் போல கருவூராரிடம் வினவுகிறார். அவர் குரலில் துடிப்பு இருக்கிறது.

“சொல்லத்தான் போகிறேன் அருள்மொழி! மதுராந்தகனின் துணையும் அதற்குத் தேவை. அதுமட்டுமல்ல, அவனது வழித்தோன்றல்களும், அவர்களின் வழித்தோன்றல்களும் இத் திருப்பணியைத் தொடர்ந்து செய்து வரவேண்டும். மதுராந்தகா! நீயும் அமர்ந்து கொள்!”  என்று இராஜேந்திரனை அமரச் சொல்கிறார் கருவூரார்.

திருப்பணியா, தமிழுக்குத் திருப்பணியா என்று தனக்குள்ளே கேட்டுக்கொண்டபடியே அமர்கிறான் இராஜேந்திரன்.

“கருவூர்த் தேவரே! நானும் மகாராணியாரும் பெருவுடையாரைத் தரிசனம் செய்து வரக் கிளம்புகிறோமே!”  என்று எழுந்திருக்கிறாள் குந்தவைப் பிராட்டி. தான் இருக்கவேண்டுமா அல்லது வேண்டாமா என்பதை குந்தவைப் பிராட்டி நாசூக்காகக் கேட்கிறாள் என்பதைத் தெரிந்து கொண்ட கருவூரார் மெல்லப் புன்னகைக்கிறார்.

“ஏனம்மா பிராட்டியாரே! நீ இல்லாமல் இந்தச் சோழ சாம்ராஜ்ஜியத்தில் எதுவும் நடக்குமா? உன் தயவு இருந்தால்தானே இந்தக் கிழவன் அருள்மொழியை எதுவும் செய்யச் சொல்ல முடியும்? பெருவுடையாருக்குக் கோவில் கட்ட ஒரு தூண்டுகோலாக மட்டும் இல்லாமல் அதில் நீ காட்டிய உற்சாகத்தை யாரால் மறக்க முடியும்? மகாராணியாரே! தாங்களும் இப் பணியில் அருள்மொழிக்கு உறுதுணையாக இருந்து வருவதுதான் சாலவும் சிறந்தது.” என்று இருவரையும் அங்கேயே இருக்குமாறு பணிக்கிறார்.

“என்னை மிகவும் புகழவேண்டாம் கருவூர்த் தேவரே! இதைச் செய்யம்மா என்று ஆணை இடுங்கள்!” “என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே!” என்று திருமூலரும் இயம்பி உள்ளாரே! ஆக, தமிழன்னைக்குச் செய்யும் தொண்டு சைவத்துக்குச் செய்யும் தொண்டல்லவா? அருள்மொழி செய்யப் போகும் இந்தத் தமிழ்த் திருப்பணிக்கு நான் என்றென்றும் துணை நிற்பேன்!”  என்று திரும்ப இருக்கையில் அமர்ந்து கொள்கிறாள் குந்தவைப் பிராட்டி.

“ஐயா! என் இறைவன் எவ்வழி அவ்வழி நானும். இது தாங்கள் அறிந்ததுதானே!” என்று தன் சம்மதத்தையும் தெரிவிக்கிறாள் சோழமகாதேவி.

இத்தனை பேர்களையும் தன்வசம் ஈர்க்கிறாரே கருவூரார், தன்னை மாட்டிவிடாமல் இருக்க வேண்டுமே என்று மனதிற்குள் வேண்டிக்கொள்கிறான் இராஜேந்திரன்.

“மதுராந்தகா! இந்தத் திருப்பணிக்கு எத்தனை காலம் வேண்டும் என்று அருள்மொழி கேட்டான். நீயும் அதற்கு இந்தக் கட்டையின் பதிலைக் கேட்டுக் கொள். இந்தப் பணிக்கு மட்டுமல்ல, எந்த ஒரு பெரிய பணியையோ, திட்டத்தையோ சாதித்து நிலைநிறுத்தவேண்டும் என்றாலும் இந்தக் காலம் தேவைப்படும்.” என்று அவன் மனதில் கேட்டது தன் காதில் விழுந்தது போல இராஜேந்திரனிடம் சொல்கிறார் கருவூரார்.

“ஐயா, தங்களுக்குத் தெரியாது ஒன்றும் இல்லை. இருந்தாலும் என் மனதில் ஒரு சிறய ஐயம் தோன்றுகிறது.””” என்று இழுக்கிறார் இராஜராஜர்.

“உன் ஐயம் மதுராந்தகனுக்குச் சொல்லப்படும் பதிலில் தீர்ந்துவிடும் அருள்மொழி” என்றவர் மேலே தொடர்கிறார். “நமக்குச் சிறு வயதிலிருந்து பல விஷயங்கள் போதிக்கப்படுகின்றன. இருந்தாலும், பதினாறு வயதிலிருந்து இருபது வயது வரையில்தான் நாம் சிந்தித்து வாழும் வழி இவ்வாறுதான் இருக்கவேண்டும் என்று முடிவை எடுக்கிறோம். ஆகவே, ஒரு குழந்தை பிறந்ததிலிருந்து இருபது வயதுவரை எதைக் கற்றுக் கொள்ளுகிறதோ அதன்படியே நடக்கிறது. அந்தக் குழந்தை பெரிதாகி, இளைஞனாகவோ, இளைஞியாகவோ ஆனவுடன், பொதுவாக இருபது வயதில் அதற்கு ஒரு குழந்தை பிறக்கிறது. அந்தக் குழந்தைக்கும் இவர்களுக்கு முன்னம் கற்றுக் கொடுக்கப்பட்டதே கற்றுக் கொடுக்கப்பட்டால், அந்தக் குழந்தையும் தனது இருபதாவது வயதில் முன்னர் கற்றுக் கொடுக்கப் பட்டதையே பிடித்துக் கொள்ளும். ஆக இரு தலைமுறைகளாகத் தொடர்ந்து எது கற்பிக்கப்படுகிறதோ, அதுதான் நிலைத்து நிற்கும். ஒரு சமுதாயத்தில் என்ன மாறுதலைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறோமோ, அதை இரு தலைமுறைகளுக்குத் தொடர்ந்து செய்தால்தான் அந்த மாறுதல் நிலைத்து நிற்கும்...” என்று நிறுத்தி இராஜராஜரைப் பார்த்து விழிகளை உயர்த்துகிறார் கருவூரார்.

“ஐயா! எனக்குப் புரிந்தது. இந்தத் திருப்பணி முடியக் குறைந்தபட்சம் இரண்டு தலைமுறைகள் வேண்டும் என்று சொல்கிறீர்கள். அதாவது, நாற்பது ஆண்டுகள்...” என்று இழுத்த இராஜராஜர் முகத்தில் கவலை படிகிறது. “இந்தத் திருப்பணியை என் காலத்தில் முடித்துவிட முடியாதா?”

“அருள்மொழி! நாம் இந்தப் பூத உடலில் எத்தனை நாட்கள் இருக்கப் போகிறோம் என்பது முக்கியமல்ல. எண்பது வயதுக் கிழவன் மாமரம் நடுவது தனக்காகவா? இல்லையே! அது தனது வழித்தோன்றல்களுக்குத்தானே! நீ கட்டுவித்த பெருவுடையார் கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக உன் சைவப் பணியை உலகுக்குக் காட்டி நிற்கத்தானே போகிறது! இறை அருள் இருந்தால் உன் பணியை நிறைவேறுவதைக் காணமுடியாமலா போகும்? உன் கையில் இருக்கும் குழலைத் திற. அதில்தான் உன் திருப்பணியை எப்படித் தொடர்வது என்று எழுதியிருக்கிறது!”  என்று கருவூரார் இயம்பியதும் தன் மடியில் உள்ள குழலைத் திறக்கிறார் இராஜராஜர்.

அதிலிருந்து பத்து அங்குல நீளமும், நான்கு அங்குல விட்டமும் உள்ள தங்கச் சுருள் வெளிவருகிறது. இரு கைப்பிடிகளில் ஒன்றில் நிறையவும், மற்றொன்றில் குறைவாகவும் சுருள் சுற்றப்பட்டிருக்கிறது.

“அருள்மொழி! இந்தச் சுருளில்தான் நமது திருப்பணி முயற்சி என்ன, அது எப்படி நிறைவேற்றப்பட வேண்டும் என்று இந்தக் கட்டை சொல்லியதை இந்தச் சிவன் விரிவாக எழுதியிருக்கிறான்.” என்று சிவாச்சாரியைச் சுட்டிக்காட்டுகிறார் கருவூரார்.

“இதை பொன் சுருளில் எழுதக் காரணம் இருக்கிறது. தில்லை மூவாயிரவர் திருமுறைகளைக் காப்பாற்றி உனக்குக் கொடுத்தாலும், முந்நூறு ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் அவை சிதிலமாகத் தொடங்கி இருந்ததை நீ பார்த்தாயே! உடனே அவற்றை பல கைப்பிரதிகள் எடுக்கப் பணித்தாயல்லவா! இன்னும் பல நூறு ஆண்டுகள் வெளிவராதிருந்தால் அந்த ஓலைச் சுவடிகள் முழுவதும் அழிந்தல்லவா போயிருக்கும்? ஓலையில் எழுதினால் காலப் போக்கில் அழிந்து போக வாய்ப்பு இருக்கிறது. செப்பு ஏடுகள் கனமாக இல்லாவிட்டால் காலப்போக்கில் பச்சை பூத்து அழிந்து விடும். வெள்ளியைப் பற்றிச் சொல்லவே வேண்டாம், கருத்துப் போய்விடும். எத்தனை ஆயிரம் ஆண்டுகள் சென்றாலும் அழியாமல் நமது சந்ததிகளுக்கு உனது இந்தத் திருப்பணியின் திட்டம் கிடைக்க வேண்டும். அதனால்தான் மெல்லிய பொன் சுருள் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதில் திருப்பணித் திட்டம் போக நிறைய இடம் மிச்சமாகவே விடப்பட்டிருக்கிறது...” தான் சொல்வது அனைவரின் மனத்திலும் பதியச் சிறிது நேரம் கொடுத்தவர், மீண்டும் தொடர்கிறார்.

“இது வாழும் திருப்பணி. நீ சோழ சாம்ராஜ்ஜியத்தை துங்கபத்திரையின் தென்பகுதி வரைதான் விரிவு படுத்தியுள்ளாய். சிங்களத் தீவும் பாதிக்கும் சிறிது மேலாகத்தான் உன்வசம் வந்திருக்கிறது. இதில் வடவேங்கடத்திலிருந்து தென்குமரிவரையிலும், ஈழத்தின் வடபகுதிகளிலும்தான் தமிழ் பேசப்படுகிறது. கருநாட்டில்23 கன்னடமும், துளுவும், ஆந்திரத்தில் தெலுங்கும், நடு, மற்றும் தென் ஈழத்தில் சிங்களமும்தானே வழக்கில் உள்ளது? இதிலும் நம்பூதிரிப் பிராமணர்கள் மேற்குச் சேரநாட்டில் மணிப்பிரவாளம் என்று ஒரு வழக்கைத் துவங்கி உள்ளார்களாம். அவர்கள் சோழ, பாண்டி நாட்டு அந்தணர்கள் போலத் தமிழ்ப் பற்று உள்ளவர் அல்லர். அவர்கள் கொடுந் தமிழில் நிறைய வடசொற்களோடு மட்டுமல்லாமல், வடமொழியின் வினைச் சொற்களையும் தமிழ்ப்படுத்திக் கையாளுகிறார்களாம். இப்படியே போனால் கேரளத்தில் அந்த மணிப் பிரவாளமே வேறு தனிமொழியாகும் வாய்ப்பும் ஏற்படும் போல இருக்கிறது. ஆகவே உனது திருப்பணியைத் தொடங்கத் தகுந்த காலம் இதுதான்.”

இராஜேந்திரனுக்குத் தலை சுற்றியது. தந்தை இது என்ன புதுமாதிரிப் பணியில் ஈடுபட முயல்கிறார்? கருவூரார் வேறு இரண்டு தலைமுறை, தான், தனது வழித்தோன்றல்கள், ஆயிரம் ஆண்டுகள் தொடரும் திருப்பணி என்று குழப்புகிறாரே! அரசர்கள் நாட்டின் எல்லையை விரிவு படுத்துவதிலும், தங்கள் புகழ் நிலைக்குமாறு பெரிய கற்றளிகள், சாலைகள் என்று கட்டுமானங்களில் ஈடுபடாமல், தமிழ்ப் பண்டிதர்கள் மாதிரி தமிழைக் கற்றுக்கொடுக்க கருநாடு, ஆந்திரம், தென் ஈழம், மேற்குச் சேரநாட்டுக்குச் செல்லுங்கள் என்கிறாரா என்று சிந்தித்தால், அவனுக்கு ஒன்றும் புரிபடவில்லை.

“மதுராந்தகா! கத்தியை மட்டும் சுழட்டினால் போறாதப்பா. அதைவிடச் சிறந்த ஆயுதமான புத்தியையும் சுழற்றவேண்டும். வாளினால் வெல்லமுடியாத வீரனையும் அணங்குகள் தன் கயல் விழிகளின் கூரிய பார்வையால் கட்டிவிடுவார்கள் என்பது உனக்கு தெரியாததா?” என்று குறும்புடன் இராஜேந்திரனிடம் திடுமென்று அவர் சொன்னது மற்றவருக்குப் புரியவில்லை, அவனுக்குத்தான் புரிந்தது. தன்னைச் சீண்டுவது தன் சிந்தனையை அலைபாய விடாமலிருக்க அவர் கையாளும் தந்திரம்தான் என்று அறிந்ததும் உடனே கடகடவென்று நகைக்கிறான் இராஜேந்திரன்.

“நீங்கள் சொல்வது எனக்கு முழுவதும் விளங்கவில்லை ஐயா! இந்தத் திருப்பணியின் நோக்கம் என்ன என்று தெளிவாகச் சொன்னால் என்போன்ற வீரர்களுக்கு சுலபமாக இருக்கும். முதலில் இது தந்தையின் திருப்பணி என்றும், அவர் இத் திருப்பணியைச் செய்வதற்காக நான் அரசுப்பட்டம் ஏற்கவேண்டும் என்றும் சொன்னீர்கள். அதற்குப்பிறகு இது இரண்டு தலைமுறைப் பணி என்றீர்கள். கடைசியில் இது ஆயிரமாயிரம் ஆண்டும் தொடரக்கூடிய வாழும் திருப்பணி என்றும் உரைக்கின்றீர்கள். எனக்குத் தெளிவு தேவை ஐயா, தெளிவு தேவை!”  என்று தன் குழப்பத்தை எடுத்து உரைக்கிறான் இராஜேந்திரன்.

“மதுராந்தகா! சைவத் திருப்பணி என்று ஆரம்பித்தது? அது எப்பொழுது முடியப் போகிறது?” கேள்வி பிறக்கிறது கருவூராரிடமிருந்து.

“பெரிய பாட்டனார் விஜயாலய சோழர்...” என்று இழுத்த இராஜேந்திரனை இடைமறித்த இராஜராஜர், “அது எப்பொழுது தொடங்கியது என்று சொல்ல இயலாது, இராஜேந்திரா! அது தலைமுறை தலைமுறையாகத் தொடர்கிறது. அது உன்காலத்திலும் தொடரும், உன் வழித் தோன்றல்கள் காலத்திலும் தொடரத்தானே போகிறது!”  என்கிறார்.

“பாண்டியர்களையும், சேரர்களையும், சாளுக்கியர்களையும், இன்னும் இந்தப் பாரத மண்ணில் தோன்றிய எத்தனை எத்தனை மன்னர்களையும், தமிழ்நாட்டின் நாயன்மார்களையும், சமய குரவர்களையும் விட்டுவிடலாமா?” என்று தொடர்கிறார் கருவூரார்.

“சைவப்பணி வாழும் திருப்பணி. சைவம் மட்டுமல்லாமல், வைணவ, சமண, புத்த சமயங்களும் தமிழ்ப்பணி செய்து வருகின்றன. தமிழில் எத்தனை பக்திப் பாடல்கள், பிரபந்தங்கள், காவியங்கள், இலக்கணங்கள் எழுதப்பட்டு வருகின்றன? இவை எல்லாம் தமிழ்ப் பணிதானே! புலமை பெற்ற மன்னர்களும் இருக்கிறார்கள், புலவரை ஆதரிக்கும் மன்னர்களும் இருக்கிறார்கள். இருந்தபோதிலும் அருள்மொழியின் நோக்கு தொலைநோக்கு. இப்பொழுது தமிழ்நாட்டிலேயே தமிழ் சுருங்கும் நிலையைத் தவிர்த்து, சோழ பேரரசு முழுவதும் தமிழ்கூறும் நல்லுலகமாக ஆக்குவதே அவனது திருப்பணியாகும். அவன் குறிக்கோள் சோழ பேரரசு மட்டுமல்ல, இப்பாரதமே தமிழ் கூறும் நல்லுலகம் ஆகவேண்டும், ஆக்கப்படவேண்டும் என்பதுதான். இப்பொழுது புரிகிறதா மதுராந்தகா?”

“புரிகிறது ஐயா! ஆனால் வாளெடுத்துப் போர்புரிந்து சோழ சாம்ராஜ்ஜியத்தைப் பரப்புவது போல மக்களைக் கத்தியைக் காட்டி, மிரட்டி, தமிழ் பேச வைக்கமுடியுமா? எனது மருமகன் நரேந்திரனே தமிழைச் சரியாகப் பேசுவதில்லை என்று தங்கை குந்தவி புகார் செய்து சேதி அனுப்பியிருக்கிறாள்!” என்று விவாதம் செய்கிறான் இராஜேந்திரன்.

“அந்த நிலையைத் தவிர்ப்பது எப்படி, தமிழை நிலைநாட்டுவது மட்டுமன்றி அவளை அனைவரும் தாயாக வரிப்பது எப்படி என்றுதான் நாம் இப்பொழுது விவாதிக்கிறோம், இராஜேந்திரா! ஆகவே நீ அமைதி காப்பாய்!” என்று புன்னகையுடன் இராஜராஜர் சொன்னாலும், அவர் தன்னைக் கன்னத்தில் அறைந்தது போலத்தான் உணர்ந்தான் இராஜேந்திரன். சோழ சாம்ராஜ்ஜியத்திற்குச் சக்கரவர்த்தியாக அறிவிக்கப்போவதற்குச் சம்மதித்துவிட்டு, சிறிது நேரம் சென்று நம்மை இத்தனை பேர் முன்னால் ஒரு சிறுவனைப் போல் நடத்துவதா...?

அமைதியாகிவிட்டான் இராஜேந்திரன். அவன் முகத்தில் இதுவரை இருந்த ஆர்வம், உற்சாகம், பங்குபெறும் தன்மை எல்லாம் மறைந்துவிடுகிறது. தன் சொற்களுக்கு மதிப்பு இல்லையா, தனக்குப் பேசத் தெரியாது என்று தந்தைக்கு நினைப்பா, அல்லது அவரது திருப்பணியைத் தான் விரும்பவில்லை என்று நினைத்துக் கொண்டு தன்னை அடக்க முயற்சிக்கிறாரா என்று நினைத்தால் அவனுக்கு ஆத்திரமும், எரிச்சலும் உண்டாகிறது.

அவன் அதை என்னதான் அடக்கிக்கொண்டாலும் அவனது முகவாட்டம் குந்தவைப் பிராட்டிக்கும், கருவூராருக்கும் தெரியாமல் போகவில்லை. என்னதான் பிள்ளையானாலும், மற்றவர்முன் சட்டென்று “அமைதி காப்பாய்!” என்று சொல்வது “வாயை மூடிக்கொள்!” என்பதற்கு ஈடாகாதா, இப்படிச் சொல்லக்கூடாது என்பதை எப்படி சோழ ராஜ்ஜியச் சக்கரவர்த்தியான தனது தம்பிக்கு இத்தனைபேர் முன்பு எடுத்து உரைப்பது என்று கலங்குகிறாள் குந்தவைப் பிராட்டி.

அங்கு ஒரு சங்கடமான அமைதி நிலவுகிறது.

வாய்விட்டுச் சிரித்து அந்த அமைதியைக் கலைக்கிறார் கருவூரார்.

“அருள்மொழி! தந்தை என்ற முறையில் உனக்கு இருக்கும் உரிமையைவிட, தமிழ்த் திருப்பணியை மதுராந்தகன் தொடர்ந்து நிறைவேற்றுவது அதைவிட முக்கியம் அல்லவா? வருங்காலச் சோழச் சக்கரவர்த்தி தனது தந்தையின் ஆசானிடம் திருப்பணியை நிறைவேற்றுவதில் உள்ள இடையூறுகளை எடுத்து உரைப்பது அவனது கடமை அல்லவா?”

மீண்டும் தொடர்ந்து சிரிக்கிறார் கருவூரார்.

“அனைவரும் நன்கு உண்டு உறங்கி ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள். நாளை மதிய ஆராதனைக்குப் பிறகு பெருவுடையார் கோவில் மண்டபத்துக்கு அருகில் இருக்கும் இந்தக் கட்டையின் குடிசையில் நமது திருப்பணியைப் பற்றித் தொடர்ந்து பேசுவோம். மதுராந்தகா! இரவு முழுவதும் நன்கு சிந்தித்து உன்னுள் எழும் இன்னும் பல ஐயங்களையும் கொண்டுவா. அவைகளைக் களைவது பற்றியும் விவாதிப்போம்!” எழுந்து கொண்டு இராஜராஜரிடம் கைகளை நீட்டுகிறார்.

தயக்கத்துடன் தங்கச் சுருளை குழலில் செருகி, குழலின் வாயை மூடி, கருவூராரிடம் கொடுக்கிறார் இராஜராஜர். கருவூரார் பதிலே பேசாமல் அதைப் பேழையில் வைத்து, அதைச் சிவாச்சாரியிடம் கொடுத்துவிட்டு நடக்கிறார்.

இராஜராஜரையும், இராஜேந்திரனையும் பணிந்த பிறகு, மகாராணி, குந்தவைப் பிராட்டி இவர்களுக்குத் தலை சாய்த்துவிட்டு கருவூராரைப் பின்தொடர்கிறான் சிவாச்சாரி.

வெண்ணெய் திரண்டு வரும்பொழுது தாழி உடைகிறதோ என்று கவலை கொள்கிறார் இராஜராஜர். இராஜேந்திரன் அருகே சென்று அவன் தோளில் கையை வைத்து இலேசாக அழுத்துகிறார். அவரைத் திரும்பிப் பார்க்கிறான் இராஜேந்திரன். இருவரின் உதடுகளும் துடிக்கின்றன, கண்கள் மௌனமாகப் பேசிக்கொள்கின்றன, ஒலியெழுப்பாமல்...

“இராஜேந்திரா! நான் என்றுமே உன்னை எனது சிறுவனாக நினைத்து வந்து விட்டேனடா. அது தவறுதான்!”

“இல்லை தந்தையே! நான் தனியாக இருக்கும் பொழுது என்றும் உங்களுடைய சிறுவன்தான்!”

“இந்தத் திருப்பணியின் ஆர்வத்தில் அது எனக்குச் சற்று மறந்து போய்விட்டதடா!”

“அது எனக்கும் தெரியும் தந்தையே! அன்னையும், அத்தையாரும், அரசகுருவும் எனக்கு உங்களைப் போலத்தான். இருந்தாலும் சிவாச்சாரி முன்னிலையில்...”

“தெரியுமடா கண்ணா! ஆர்வத்தில் அவனை மறந்து விட்டேன்!”

“தெரிந்து கொண்டேன் தந்தையே!”

“நீ என் கண்ணின் மணியடா, இராஜேந்திரா!”

“அறிவேன் தந்தையே!”

“இந்த மோசமான நிலைமையை மறந்து விடுவோமடா!”

“அப்படியே தந்தையே!”

இராஜராஜர் தன் தோளில் வைத்த கையின்மேல் தன் கையை வைத்து அழுத்துகிறான் இராஜேந்திரன். இருவரும் சிறிது நேரம் அப்படியே இருந்து விட்டு ஒருவரை ஒருவர் ஆரத் தழுவிக் கொள்கிறார்கள்.

குந்தவைப் பிராட்டி அவர்கள் இருவரையும் தழுவிக் கொள்கிறாள். சோழமகாதேவியின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் திரள்கிறது.
இராஜேந்திரன் அவர்களிடமிருந்து விடை பெற்றுக்கொண்டு அரண்மனையில் தன் வளாகத்திற்கு செல்கிறான்.

இராஜராஜரின் தமிழ்த் திருப்பணியில் இருந்த ஆர்வமும் உற்சாகமும் திடுமென்று அவனுக்கு சற்றுக் குறைந்திருப்பது தன் தந்தை மற்றவர்முன் “அமைதி காப்பாய்!” என்று சொன்னதனாலா என்று நினைத்துப் பார்க்கிறான். இப்போது இருக்கும் மன நிலையில் அதைப் பற்றிச் சிந்திப்பதைவிட, தனக்கு நண்பனாகக் கிடைத்த சிவாச்சாரியை எதிர்காலத்தில் எப்படித் தனது திட்டங்களில் பங்குபெறச் செய்யலாம் என்பதில் சிந்தனையைச் செலுத்துவதே நல்லது என்று எண்ணியபடி தன் வளாகத்தை அடைகிறான்.

“தந்தையே! இவ்வளவு விரைவில் திரும்பிவிட்டீர்களே! கருவூர்த் தேவரும், அத்தையாரும் உங்களுடன் சென்றதால் நீங்கள் நெடுநேரம் அவர்களுடன் இருப்பீர்கள் என்றல்லவா நினைத்தேன்.” என்ற மகள் அம்மங்கையின் குரல் அவனை நிகழ்காலத்திற்கு ஈர்க்கிறது.

எட்டே வயதான இரண்டாம் மகளைக் கண்டதும் அவன் முகம் மலர்கிறது. கைகளை நீட்டுகிறான். ஓடிவந்து அவனைக் கட்டிக்கொள்கிறாள் அம்மங்கை.

“கருவூரார் எங்களுக்கு வலுக்கட்டாயமாக ஓய்வு கொடுத்துவிட்டாரம்மா! நாளை மதிய வழிபாட்டுக்குப் பின்னர் அவரை மீண்டும் சந்திக்கச் செல்லப் போகிறோமம்மா!” என்று அவளது கன்னத்தை நிமண்டியபடி பதில் சொல்கிறான் இராஜேந்திரன்.

“அதுசரி, உன் அக்கா நங்கை எங்கே?” என்று கேட்கிறான். மூத்தமகளின் முழுப்பெயர் அருள்மொழி நங்கை என்றாலும், தந்தையின் பெயரைச் சொல்வது மரியாதை இல்லை என்பதால் நங்கை என்று மட்டுமே சுருக்கி விளிக்கிறான்.

“அக்காவைப் பற்றிக் கேட்காதீர்கள், தந்தையே! எப்பொழுது பார்த்தாலும் தேவாரம், திருவாசகம் என்று பாடிக்கொண்டு, சிவபூசை செய்துகொண்டு இருக்கிறாள். அரசகுமாரியாக மட்டும் இல்லாவிட்டால் கோவிலே கதியாகக் கிடப்பாள். நீங்கள் அவனுக்கு ஒரு சிறிய சிவன் கோவில் கட்டிக் கொடுத்துவிட்டால் நல்லது என்று எனக்குப் படுகிறது!” குறும்பாகப் பதில் கூறுகிறாள் அம்மங்கை.

“இப்படியெல்லாம் பேசக்கூடாது மங்கை! பதினேழு வயதான அவளுக்கும் திருமண வயது வந்து விட்டது. தமக்கை என்ற மரியாதையைக் காட்ட வேண்டும், நீ!” என்று மகளைச் செல்லமாகக் கடிந்து கொள்கிறான்.

“நீங்கள் கொஞ்சம் அக்காவைக் கட்டுப்பாட்டில் வைக்கவேண்டும். இல்லாவிட்டால் அவள் ஒரு சிவனடியாரைத் திருமணம் செய்து கொண்டு, அரசவாழ்வை விட்டாலும் விட்டுவிடுவாள்!” என்று குறும்பாகச் சொன்னது இராஜேந்திரனின் மனத்தில் சிறிய கலக்கத்தை உண்டு பண்ணுகிறது. நங்கையைப் பற்றி அவள் தாயான இளையராணி பஞ்சவன் மாதேவியிடத்தில் பேசவேண்டும் என்று முடிவு செய்து கொள்கிறான்.

“தந்தையே! அண்ணன்மார்கள் இருவரும் வந்திருக்கிறார்கள். அன்னையார் அவர்களிடம் பேசிக் கொண்டு உள்ளார்கள்.” என்று தெரிவிக்கவும், இராஜேந்திரனின் இரு புதல்வர்களும் அவர்கள் எதிரில் வரவும் சரியாக இருக்கிறது.

“வணக்கம் தந்தையே!” என்று தலை சாய்த்து வணங்குகின்றனர் இருவரும். பதினைந்து வயதான இராஜாதிராஜனையும், பன்னிரண்டு வயதான இராஜேந்திர தேவனையும் கைகளுக்கு ஒருவராகத் தழுவிக் கொள்கிறான் இராஜேந்திரன்.

போர்ப்பயிற்சிக்காகச் சென்றிருந்த இருவரும் விடுமுறையில் அரண்மனைக்கு வந்திருப்பது அவனுக்கு மகிழ்வைத் தருகிறது. அவர்களைப் பார்த்து கிட்டத்தட்ட ஒரு ஆண்டு ஆகிவிட்டது. பெருவுடையார் கோவில் குடமுழுக்குக்கூட அவர்களால் வர இயலாது போய்விட்டது. இன்னும் சில ஆண்டுகள் சென்றால் அவர்களும் சோழப் பேரரசின் தூண்களாக நின்று தனக்கு உதவியாகப் போரிடுவார்கள் என்பதை நினைக்கும்போது அவனுக்குப் பெருமையாகவே இருக்கிறது.

அவர்களைப் பார்த்தவுடன் அவனுக்கு சற்றுமுன் ஏற்பட்ட மனக்கலக்கம்கூட நீங்க ஆரம்பிக்கிறது. இவர்களை ஒருகாலும் தான் நடத்தப்ட்டதைப்போல நடத்தமாட்டேன் என்று மனதிற்குள் உறுதி செய்து கொள்கிறான்.

“வெற்றி மாது என்றும் உங்கள் துணையாக இருப்பாளாக!”  என்று வாழ்த்தியவன், “உங்களது போர்ப் பயிற்சி எவ்வாறு இருந்தது? என்னென்னவெல்லாம் கற்றுக் கொண்டீர்கள்?”  என்று கேட்கிறான்.

“தந்தையே! கடந்த ஒரு ஆண்டாக உங்கள் சொற்படி நாங்கள் கடற்படையில் பயிற்சி பெற்றோம். நக்காவரம்24 வரை சென்று வந்தோம். கடல் நீச்சல், நாவாய்ப் போர், கயிறு மூலம் ஒரு கப்பலிலிருந்து மறு கப்பலுக்குச் செல்லுதல், கடலுள் முக்குளித்து நெடுநேரம் நீஞ்சிச் செல்லுதல், கப்பல் ஓட்டுதல், இரண்டு மூன்று நாள்கள் கடலையே நம்பி மீன்பிடித்து அவற்றையே உணவாகக் கொண்டு உயிர்வாழ்தல் முதலியவற்றைக் கற்றோம்!” என்று பதிலளிக்கிறான் இராஜேந்திர தேவன். மூத்தவன் இராஜாதிராஜன் அதிகம் பேசாதவன் ஆதலால், தம்பியையே பெருமை பேசிக்கொள்ள விட்டுவிடுகிறான்.

“அய்யே! பச்சை மீன்களையாக தின்று உயிர்வாழ்ந்தீர்கள்? வ்வே, நீங்கள் சொல்வதைக் கேட்டால் எனக்கு வயிற்றைப் புரட்டுகிறது!” என்று மூக்கைச் சுளிக்கிறாள் அம்மங்கை.

“மீனைப் பாண்டியர்களின் தலைகள் என்று நினைத்துக் கொண்டோம் தந்தையே!” அப்பொழுது பச்சை மீனை உண்கிறோமே என்ற அருவருப்பு தெரியவில்லை!” என்று பெருமையுடன் சொல்கிறான் இராஜேந்திர தேவன்.


பதினைந்தும், பன்னிரண்டு வயதும் உள்ள தன் புதல்வர்கள் பேசும் வீரப் பேச்சு இராஜேந்திரனுக்குப் பெருமிதத்தை வரவழைக்கிறது.[வளரும்]
-----------------------------------------------------------------------------------------------------------------------அடிக்குறிப்பு 

23பழங்காலத்தில் தற்பொழுதைய கர்நாடக மாநிலத்தைக் “கருநாடு” என்று தமிழர்கள் அழைத்தனர்.
24 தற்பொழுதைய அந்தமான், நிக்கோபார் தீவுகளுடைய சோழர்காலப் பெயர்.
25மீன் பாண்டியர்களின் அடையாளம் ஆனதால், அது பாண்டியர்களுக்கு ஒப்பிடப் படுகிறது.

Monday, 28 July 2014

வைணவ ஆசார்ய வைபவம்-1:திருமாலின் பெருமைகளை அறுதியிட்டு எவராலும் அறிய முடியாது

              
திருமாலின் பெருமை
       வைணவ ஆசார்ய வைபவம்-1

           [பாச்சுடர் வளவ.துரையன்]  

          இராமபிரானும் வருணனும்


இராமபிரானின் தூதனாக இலங்கை சென்ற சிறிய திருவடியாகிய ஆஞ்சநேயர் அசோகவனத்தில் தவம் செய்த தவமாம் சீதாபிராட்டியைக் கண்டார். பின் அசோக வனத்தை அழித்தார். இலங்கைத் தீக்கிரையாக்கி அயோத்தி வள்ளலை அடைந்தார்.

எம்பெருமானிடம் “கண்டனன் கற்பினுக்கணியைக் கண்களால்” என்று மாருதி கூறினார். அண்ணனுக்கு மொழிந்த நீதிகள் பயனளிக்காததால் வீடணன் இலங்கையை விட்டு நீங்கி இராமபிரானிடம் அடைக்கலமானார்.
பின்னர் சுக்ரீவனும், அனுமனும், வீடணனும் வானரப் படையும் உடன்வர இராம இலக்குவர் இலங்கையை அடைய வேண்டி கடற்கரையை அடைந்தனர்.

அப்பொழுது வீடணன் “பெருமானே! இந்தக் கடலானது மறைந்துள்ள உன் தன்மையை முழுவதும் அறியும். மேலும் உமது மரபில் முன்தோன்றிய சகரால்தான் இது தோண்டப்பட்டது. எனவே இக்கடல் அன்புடன் நீ வேண்டும் வரத்தைத் தரும். இக்கடலை நாம் கடந்து செல்ல வழிவிடுமாறு இதனிடம் நீர் வேண்டுவாயாக” என்று கடலைக் கடக்க வழியைக் கூறினான்.
இராமபிரான் வருணனை வேண்டியதைக் கம்பர் “கருணை அம்கடல் கிடந்தனன் கருங்கடல் நோக்கி வருண மந்திரம் எண்ணினன் விதிமுறை வணங்கி” என்று பாடுவார்.

அதாவது கருணைக் கடலான இராமன் கரிய கடலை நோக்கி விதிமுறையே வருண மந்திரத்தை எண்ணியபடியே தர்ப்பைப் புல்லில் அமர்ந்திருந்தான்.
இத்தகைய முறையில் ஏழுநாள்கள் கழிந்தன. வருணன் வரவில்லை. “சங்கு தங்கு தடங்கடல் துயில் கொண்ட தாமரைக் கண்ணினன்” என்று திருமங்கையாழ்வார் அருளிச் செய்த தாமரைக் கண்கள் சினம் கொண்டு சிவந்தன. நீண்ட புருவங்களும் வில்லைப் போல வளைந்தன.

வில்லைத் தருவாயாக என்று இலக்குவனிடமிருந்து வில்லை வாங்கிய இராமபிரான் கடலின் மீது கணைகளை விடுத்தார். உடன் கடல்கள் ஏழும் எரியத் தொடங்கின. பல அம்புகள் பாய்ந்தும் வருண தேவன் வரவில்லை. எனவே இராமன் பிரம்மாத்திரத்தை மந்திரித்து விடத் தொடங்கினான் உலகம் முழுவதும் வெப்பம் பரவியது. எல்லா உயிர்களும் அஞ்சின.
நிலம், நெருப்பு, காற்று, வானம் ஆகிய மற்ற பூதங்கள் நீர்ப் பூதமாகிய வருணனை இகழ்ந்துரைத்தன. தீய்ந்து போன தலையுடன், வெந்து அழிந்து உருகிய உடலுடன், புகைப்படலத்தில் வழிதடுமாறி வருணன் குருடரைப் போல வந்தான்.

நீங்கள் என்னை நினைந்ததைப் பெரிய கடலின் கோடியில் நின்ற யான் அறியேன். எல்லார்க்கும் தலைவராகிய தாங்களே சினம் கொண்டால் அதிலிருந்து காத்துக் கொள்வதற்கு உரிய கவசம் உன் திருவடிகளே அல்லாது வேறு உண்டோ “கவயம் நின் சரணம் அல்லால் பிறிது ஒன்று கண்டதுண்டோ” அடைக்கலம், உமக்கு நான் அடைக்கலம் என்று வருணன் வேண்டினான்.

மேலும் வருணன்

ஆழிநீ அனலும்நீயே அல்லவை எல்லாம் நீயே
ஊழிநீ உலகும்நீயே அவற்றுறை உயிரும் நீயே
என்று இராமனின் அவதாரத்தை உணர்ந்து போற்றினான்.
“எம்பெருமானே நீ உலகங்களைப் படைப்பாய்! படைத்துக் காத்து முடிவில் தீ உண்ணுமாறு செய்வாய்! இல்லையேல் அவற்றை நீயே உண்பாய்! உன்னால் முடியாதது உண்டோ” எனும் பொருளில்
“காட்டுவாய் உலகம் காட்டிக் காத்து அவை கடையில் செந்தீ
ஊட்டுவாய் உண்பாய் நீயே உனக்கு உண்ணாததுண்டோ”
என்று வருணன் வேண்டினான்.
உலகெல்லாம் தானே படைத்து இடந்து தானே
உண்டு உமிழ்ந்து தானே ஆள்வானே (10-5-3)
என நம்மாழ்வாரும்

“பாரைப் படைத்துக்காத்து உண்டு உமிழ்ந்த பரமன்”
என்று திருமங்கை மன்னனும் (7-8-10)

படைத்தபார் இடந்து அளந்து அது உண்டு உமிழ்ந்து”(திரு-28)

என்று திருமழிசையாழ்வாரும் அருளிச் செய்திருப்பதை கம்பர் வருணன் மூலமாக எடுத்துரைக்கிறார்அடைக்கலமாய் வந்த வருணன் 
“சோதி வள்ளலேமறையின் வாழியவே! புண்டரீகத்து வைகும் புராதனா
போற்றி போற்றி” என்று துதிக்கிறான்.

“மறையாய நால்வேதத்துள் நின்ற மலர்ச்சுடரே”என்று நம்மாழ்வார் அருளிச் செய்வார்.அடைக்கலமாய் வந்த வருணன் கசேந்திர எனும் யானைஅடைக்கலமாய் வந்து வேண்டியதை நினைவுபடுத்துகிறான்

“வள்ளலே என்று மா கரி வருத்தம் தீர
புள்ளின் மேல் வந்து தோன்றும் புராதனா போற்றி போற்றி”
என்று வருணன் வணங்குவது“புள்ளூர்ந்து வந்து துறை வேழம் மூவாமை நல்கிமுதலை துணித்தானை” என்று மங்கை மன்னன் திருநறையூர் பெருமாளைப் புகழ்வதை நினைவூட்டுகிறது.

திருமாலின் பெருமைகளை அறுதியிட்டு எவராலும் அறிய முடியாது; உணர முடியாது. இதையே வருணன் அவர் பெருமையை அவரே உணர மாட்டார்; நாய் போல கீழானவான நான் எங்ஙனம் உணர்வேன் என்கிறான் “உன்னை நீ உணராய் நாயேன் எங்ஙனம் உணர்வேன் உன்னை” எனப் 
பெரிய திருமொழியில் (5-7-6) திருமங்கையாழ்வாரும் 

“ஆயிரம் பெயரால் அமரர் சென்று இறைஞ்ச
அறிதுயில் அலைகடல் நடுவே
ஆயிரம் சுடர்வாய் அரவணைத் துயின்றான்” என்று திருவரங்கப் பெருமாளைப் போற்றுவார்.

“நாமம் ஆயிரம் ஏத்த நின்ற நாராயணா” என்றுவேண்டும் சிறுமியர் ‘எம் சிற்றிலைச் சிதைக்காதே” என்று கேட்டுக் கொள்வதாக நாச்சியார் அருளிச் செய்வார்.
“நாமங்கள் ஆயிரம் உடைய நம்பெருமான்’ (5-9-10) என்று நம்மாழ்வார் புகழ்ந்துரைப்பார்.

ஆழ்வார் பெருமக்களின் இவ்வாறான அருளிச் செயல்களை உள்வாங்கிய கம்பர் வருணனின் சரணாகதியைக் கூறும்போது “சிறியனவற்றைத் தீயவர் செய்தால் அவற்றைப் பொறுத்துக் கொள்ளுதல் பெரியோர் செயலன்றோ” என்று வேண்டி“ஆயிர நாமத்து ஐயா சரணம் என்று அடியில் வீழ்ந்தான்” என்று எழுதுவார்.

இராம பிரானும் சினம் தணிந்து “உன்பால் அளித்தனம் அபயம்” என்றார். “ஏழாம் கடலில் சுறாக்களின் போர்ச் செயலை விலக்கி விடப் போயிருந்தேன். அதனால் தாமதம்” என்று வருணன் தலைதாழ்ந்தான். என் பிரம்மாத்திரத்துக்கு இலக்கு யாது என்று இராமன் வினவ “மருகாந்தரம் எனும் தீவில் வாழும் தீயவரான அவுணர் நூறு கோடிக்கு மேல் உள்ளனர். உங்கள் அம்பு அவர்மீது ஏவி அழிக்கட்டும் என்று வருணன் வேண்ட இராமபிரான் அவ்வாறே செய்து அருள்புரிந்தார். பிறகு வருணன் இராமபிரானிடம் “என்மேல் கிட்ட கல் அழியாதபடி காலமெல்லாம் தாங்குவேன்; என்தலை மேல் சேது எனும் அணையைக் கட்டிச் செல்வீர் என மொழிந்தான். வானரர் அணைகட்ட இராமன் இலங்கை சென்று வென்றார்.


தவறு செய்தவர் திருந்தி அடைக்கலம் என வரின் அழகியபெருமாள் அபயமளிப்பார் என்பதை வருணனின் சரணாகதி உணர்த்துகிறது.
[விட்டு விட்டு  வைணவ ஆசார்ய வைபவம் தொடர்ந்து வெளிவரும் ]

இலக்கியப் பிரமுகர் அறிமுகம்:1:பாச்சுடர் வளவதுரையன்

                                                         

                             இலக்கியப் பிரமுகர் அறிமுகம்:1
[இப்பகுதி தொடர்ந்து வெளிவரும்  தகுதியுடைய பெருமக்கள் தம் முழுத்தகுதி மற்றும் புகைப்படத்துடன் இணையவெளிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். [vaiyavan.mspm@gmail.com]உடனே இது  பரிசீலிக்கப்பட்டு வெளியிடப்படும்]  
 பாச்சுடர் வளவதுரையன்


இயற்பெயர் :அ.ப.சுப்பிரமணியன்
கல்வித் தகுதி:முதுகலை தமிழ்
பிறந்த இடம்:வளவனூர் (விழுப்புரம் அருகில்)
பிறந்த நாள் :15.07.1949
பெற்றோர் :அ.பரமேசுவரன்,  ப. இலலிதா
குடும்பத்தினர்:
வை.அலர்மேல்மங்கை (மனைவி)
சு.எழிலன் - எ.சித்ரா (மகன், மருமகள்)
சு.அல்லி - க.சிவக்குமார் (மகள், மருமகன்)
சு.முகிலன் - மு.முத்துலட்சுமி (மகன், மருமகள்)

ஆர்வமான துறைகள்:
மரபிலக்கியம், சிறுகதை, புதினம், கவிதை, கட்டுரை, விமர்சனம்
எழுதியுள்ளவை:
1. அர.இராசாராமன் ஆற்றுப்படை (மரபிலக்கியம்-1996)
2. தாயம்மா (சிறுகதைகள்-2000)
3. சிகரங்கள் (சங்க இலக்கியம்-2002)
4. வைணவ விருந்து (சமயம்-2004)
5. நேரு பிறந்தகதை (சிறுகதைகள்-2005)
6. பெரியோர் சிந்தனைகள் (வானொலி உரைகள்)
(கட்டுரைகள்-2006)
7. கூச்சம் (சிறுகதைகள்-2007)
8. மலைச்சாமி (புதினம்-2009)
9. பசிமயக்கம் (மரபுக்கவிதை-2009)
10. விடாத தூறலில் (நவீன கவிதை-2011)
11. சின்னசாமியின் கதை (புதினம்-2012)
தொகுப்பு நூல்:
அதிகாரம் இழந்த அதிகாரங்கள் (கவிதைகள்-1998)
விருது, பரிசு, பாராட்டு:
1. தினமணி கதிர் - ஒரு பக்கச் சிறுகதைப் போட்டி - முதல் பரிசு
2. கடலூர் தமிழ்ச்சங்கம் - பாரதிதாசன் விருது
3. கம்பம் பாரதி இலக்கியப் பேரவை - சிறுகதை நூலுக்கு - முதல் பரிசு
4. சேலம் கே.ஆர்.ஜி அறக்கட்டளை சிறுகதை நூலுக்கு - முதல் பரிசு
5. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், எட்டயபுரம்
பாரதி விழாவில் சிறுகதை நூலுக்கான - முதல் பரிசு
6. திருப்பூர் தமிழ்ச்சங்கம் புதினத்துக்கான - முதல் பரிசு
7. சேலம் எழுத்துக்களம் - தாரைப்புள்ளி அறக்கட்டளை - புதினம் - முதல் பரிசு
8. வளவனூர் திருக்குறட்கழகம் மற்றும் தமிழ் இலக்கியப் பேரவை பாராட்டு
9. கடலூர் கவிச்சித்தர் க.பொ.இளம்வழுதி அறக்கட்டளை பாராட்டு
10. “சங்கு” இதழுக்காக தமிழ்நாடு சிற்றிதழ்கள் சங்கம் அளித்த நல்லிதழ் விருது.
11. கரூர் திருக்குறள் பேரவை - தமிழ் இசைச் சங்கம் மரபுக்கவிதை நூல் - சிறப்புப் பரிசு
12. சென்னை கவிஞர் தாராபாரதி அறக்கட்டளை நவீன கவிதை நூலுக்குப் பரிசு.
13. சென்னை என்.தங்கமுத்து நினைவு அறக்கட்டளை நாவலுக்கு முதல் பரிசு
14. வள்ளியப்பா இலக்கிய வட்டம் - சிறுவர் பாடல் பரிசு
சிறப்பு நிலைகள்:
1967 முதல் இலக்கிய ஈடுபாடு
ஆசிரியர் இயக்கத்தில் இருமுறை சிறை புகுந்து பல்வேறு பொறுப்புகள் ஏற்றுள்ளமை
வளவனூர் திருக்குறட் கழக நிறுவனர்களில் ஒருவர்
கூத்தப்பாக்கம் இலக்கியச்சோலை தலைவர்
மணவாளமாமுனிகள் சபை செயலாளர்
“சங்கு” சிற்றிதழின் பொறுப்பாசிரியர்
தொடர்பு முகவரி:
20, இராசராசேசுவரி நகர்,
கூத்தப்பாக்கம்,
கடலூர்-607 002.
பேசி: 93676 31228
மின் அஞ்சல் :valavaduraiyan@gmail.com
-----------------------------------------------------------------
இவரைப்பற்றி  அவர் 
   [கடலூர் வழக்கறிஞர் மற்றும் இலக்கிய ஆர்வலர் கோ.. மன்றவாணன்] 
இந்த உலகம் உயிரோட்டமாக இருப்பதற்கும் புதுப்பொலிவோ டு சிறப்பதற்கும் ஒரு காரணம் உண்டு. அது காலத்திற்கு ஏற்ற மாற்றங்களை ஏற்றுக்கொள்வது தான் இதில் கவிதை விதிவிலக்கல்ல. காலத்துக்கேற்ப கவிதை மாறிக்கொண்தே  இருக்கிறது. ஒரு கவிஞனின் வாழ்நாளிலேயே கவிதையின்போக்கு வெகுவாக மாறிப் போய் விடுகிறது.
புளித்துப்போன சொற்களாலும்,ச லித்துப்போன உவமை களாலும் அலுத்துப்போன உத்திகளாலும் இனி கவிதை எழுதினால் யாரும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்.கவிதை மாறும்போது கவிஞனும் மாறவேண்டும். இல்லை எனில் இக்கவிதையின் முதல் கவிதையான பார்வை என்ற கவிதையில்சொல்லப்படும் பழுதாகி நிற்கும் பேருந்து போல் கவிஞனின் நிலை மாறிவிடும்.

நம் கவிஞர். வளவ.துரையன் தன் இலக்கிய வாழ்வின் ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஏற்ப கவிதையின் போக்கிலேயே  பயணம் செய்திருக்கிறார்.சிலவேளைகளில் 

கவிதையின் போக்கையே  மாற்றி மற்றவர்களுக்கு வழிகாட்டியும் இருக்கிறார்.

வெண்பா விருத்தப்பா வகைகளில் விளையாடிய நம் கவிஞர் இன்றைய நவீன கவிதைகளிலும் ஒரு நட்சத்திர மேடையை அமைத்துக் கொண்டிருக்கிறார்.

மரபுக் கவிதை , வசன  கவிதை, புதுக்கவிதை,  நவ கவிதை, நவீன கவிதை , சிறுகதை, புதினம், கட்டுரை, சொற் பொழிவு எனப் பன்முக ஆற்றல்களை நிறைவாகப் பெற்றவர் பாச்சுடர் வளவ. துரையன் அவர்கள். இவையன்றி மாதம் தோ றும் இலக்கியக் கூட்டங்கள், இறையியல் நிகழ்ச்சிகள் நடத்தி ஒரு சிறந்த தமிழ்வளர்ச்சிச் செயல்பாட்டாளராகவும் திகழ்கிறார். பல நூல்களை எழுதிப் பல பரிசுகளும் பெற்றிருக்கிறார்.

வளவ.துரையன் அவர்களின் நுட்பமான கவியுணர்வின் செப்பமான வெளிப்பாடு தான் ‘ஒரு சிறு தூறல்’  என்ற கவிதை நூல். 

ஒவ்வொரு நாளும் புதிய ஒன்றைத்;தேடிக்கொண்டே  இருக்கிறார் வளவ.துரையன். அவரை வாழ்த்த நானும் புதிய சொ ல்லைத் தேடிக் கொண்டே  இருக்கிறேன். 
-----------------------------------------------------------------------------------------------------------------------                          
 வைணவ ஆசார்ய வைபவம் என்ற தலைப்பில் 
                      
வளவ.துரையன்  கட்டுரைகள் ஒவ்வொன்றாய் நம் இணையவெளி இதழில் வெளியிடப்படும் 
நிர்வாக ஆசிரியர் 

தமிழ் இனி மெல்ல 20:“நரேந்திரா! உன் தாயிடம்கூடத் தாய் மொழியில் பேசமாட்டாயா?”

தமிழ் இனி மெல்ல [19] சென்ற பதிவின் இறுதி
“மகிந்தரே! பாண்டிய நாட்டின் விலைமதிக்க முடியாத பொக்கிஷங்களைச் சுமந்து கொண்டு அந்தக் கப்பல்கள் வந்திருக்கின்றன. அவை தற்பொழுது பாண்டிய நாட்டில் இருந்தால் சோழர்களின் கழுகுக் கண்களிலிருந்து தப்பாது. அவர்கள் எங்கள் பொக்கிஷங்களுக்காக நாயைப் போல மோப்பம் பிடித்துக் கொண்டு திரிகிறார்கள். அதை அவர்களுக்குத் தெரியாமல் இங்கு கொண்டு வந்திருக்கிறேன். பாண்டி நாட்டை அவர்களின் பிடியிலிருந்து மீட்டுக் கொண்டவுடன் நான் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். என் பொக்கிஷங்களையே உங்களிடம் ஒப்படைக்கப் போகும் எனக்கு தங்கள் படைகளை உதவியாகத் தரலாம் அல்லவா?” என்று மனதில் எரிச்சலுடனும், உதட்டில் புன்னகையுடன் கேட்கிறான் அமரபுஜங்கன்.

“பாண்டிநாட்டுப் பொக்கிஷமா!” இலங்கை அரசனின் வாய் அவனையும் அறியாமல் இலேசாகப் பிளக்கிறது. “கப்பல் கப்பலாக அப்படி என்ன கொண்டு வந்திருக்கிறீர்கள்?”

“மகிந்தரே! பரம்பரை பரம்பரையாகப் பாதுகாத்து வந்த எங்கள் நாட்டுப் பொக்கிஷத்தைதான் நாங்கள் கொணர்ந்திருக்கிறோம். இவற்றில் தலையாயது எங்கள் அரியணை, களப்பிரர்களை ஒழித்த எங்கள் கடுங்கோள்19 முதன்முதலாக ஏறிய அரியணை, அரிகேசரி மாறவர்மன் நின்றசீர் நெடுமாறன் தமிழ் பேசும் மூன்று நாடுகளையும் தனது ஒரு குடையின்கீழ் அமர்ந்து ஆட்சி செய்த அரியணை. ஐநூறு ஆண்டுகளுக்கும் மேலாகப் பாண்டியர்கள் அமர்ந்து யாருக்கும் தலைபணியாமல் ஆட்சி செய்து வந்த அரியணை. அந்த அரியணையில் அமர்ந்து ஆட்சி செய்ய அடிமையாகச் சோழனுக்குக் கப்பம் கட்டும் எனக்கு ஏது மகிந்தரே தகுதி இருக்கிறது? அது மட்டுமல்ல அவர்கள் பல போர்கள் செய்து பாண்டிநாட்டைப் பாதுகாத்து வந்த வீர வாட்கள் பல இருக்கின்றன. இவற்றிற்கும் தலையாய எங்களது பாண்டிநாட்டின் மணி மகுடமும் உள்ளது.20 இவை எங்கள் உயிருக்கும் மேலானவை. இவைகள் இல்லாத பாண்டிநாடு பாண்டிநாடே அல்ல. இருந்தாலும் அவை அனைத்தையும் உம் ரோகணத்திற்கு பாதுகாப்பிற்காகக் கொண்டு வந்திருக்கிறோம். எங்கள் உயிரிலும் மேலான எங்கள் பரம்பரைச் சொத்தை உம்மிடம் ஒப்பித்து அதைப் பாதுகாக்கும்படி கேட்டுக் கொள்ளத்தான் வந்திருக்கிறோம். நீர் எமக்குப் படை உதவி செய்யாவிட்டாலும் கவலை இல்லை என்று எங்கள் பரம்பரையில் வரும் ஒரு பாண்டியன் எப்பொழுது சுதந்திரமாக பாண்டிய நாட்டை ஆளுவானோ அப்பொழுது அவன் சிங்களநாட்டிலிருந்து அவற்றைப் பெற்றுக் கொள்ளுவான். வேறு எந்த உதவி செய்யாவிட்டாலும் இந்த உதவியைச் செய்யுங்கள் மகிந்தரே!” உணர்ச்சிப் பெருக்குடன் மகிந்தனை வேண்டிக் கொள்கிறான் அமரபுஜங்கன்.

“பாண்டியரே! என்மீது இவ்வளவு நம்பிக்கை வைத்திருப்பதற்கு எப்படி நான் நன்றி சொல்லப் போகிறேன்? என் உயிரைக் கொடுத்தாவது உம் நாட்டுப் பொக்கிஷத்தைக் காப்பேன்!”  என்று வீரமாகப் பாண்டிய மன்ன்னுக்கு வாக்களிக்கிறான் மகிந்தன்

தமிழ் இனி மெல்ல 20 [தொடர்கிறது]


அரிசோனா மகாதேவன்


“மூன்று கப்பல்களில் பொக்கிஷங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றை எனக்குப் படை திரட்டிக் கொடுக்க உமக்கு அன்பளிப்பாக அளிக்கிறேன். இன்னொன்றில் இருக்கும் எங்கள் பரம்பரைச் சொத்தைப் பாதுகாத்து வருவீராக. மூன்றாவதில் இருப்பதை எனக்குத் தேவைப்படும் காலத்தில் வாங்கிக் கொள்கிறேன். இந்த மூன்றையும் உம் அனுமதியின் பேரில் நாங்கள் நீங்கள் சொல்லுமிடத்தில் இறக்கி வைக்கிறோம். எங்கள் பொக்கிஷத்துடன் என் மெய்காப்பாளன் ஒருவனும் இருப்பான். அவனுக்கும், அவனது உதவியாளர்களுக்கும் தங்க வசதி செய்து கொடுப்பீராக. ஒரு கப்பலில் நானும், என் அந்தரங்கப் படையும், இன்னொரு கப்பலில் பாண்டிய வீரர்களும், படைத் தலைவர்களும் இருக்கிறார்கள். நீர் தரும் படைகளை நான் காலியாகும் மூன்று கப்பல்களில் ஏற்றிச் செல்வேன். நீரும் கொஞ்சம் கொஞ்சமாக மேலும் மேலும் படைகளை அனுப்பி வைத்தால், சமயம் பார்த்து பாண்டி நாட்டை மீட்டுக் கொள்வேன்,” என்று தன் திட்டத்தை மேலும் விவரிக்கிறான் அமரபுஜங்கன்.

அதற்குச் சம்மதிக்கிறான் மகிந்தன். சபை கலைந்து பாண்டியன் தன் பரிவாரங்களுடன் விருந்தினர் மாளிகைக்குக் கிளம்புகிறான். வலப்புறம் திருமாறனும், இடப்பக்கம் முருகேசனும் காவலாகக் குதிரையில் வருகிறார்கள்.

“முருகேசா! நீதான் பாண்டி நாட்டுப் பொக்கிஷத்திற்குக் காவலாக இருந்து வர வேண்டும்! உனக்குத் துணையாக நூறு சிறந்த பாண்டிய வீரர்கள் இருப்பார்கள். அதனால்தான் உன்னையும், அவர்களையும் குடும்பத்துடன் வரச்சொன்னேன். உன் அண்ணன் திருமாறன் என்னுடன் பாண்டியநாடு திரும்புவான்.” என்று தன் மகனின் பின்னால் நிற்கும் முருகேசனிடம் சொல்கிறான் அமரபுஜங்கன்.

“என் உயிரைக் கொடுத்து நம் பாண்டிநாட்டுப் பொக்கிஷத்தைக் காப்பேன்! இது மதுரை மீனாட்சி மீது ஆணை, அரசே!”  என்று பணிவுடன் பதில் சொல்கிறான் முருகேசன்.

“உன் பாட்டன் வெற்றிமாறன் மகாவீரன் முருகேசா! என் பாட்டனாருக்குக் கொடுத்த வாக்குறுதிக்காகத் தன்னுயிரைக் கொடுத்து ஆதித்த கரிகாலனை அழித்தான். அவனது போர்கள் அனைவரும் பாண்டிநாட்டு வீரர்கள் அல்லவா? உன் தமையன் வீரமாறன் என்னுடனும், இளவரசனுடன் திரும்புவான்.”

“தங்கள் ஆணை, அரசே!”  என்று தலை வணங்குகிறான் முருகேசன். பாண்டிய நாட்டுக்குத் திரும்பிச் செல்லவே முடியாது போய்விடும் என்று அவனால் உணர்ந்து கொள்ள முடியவில்லை.

                                                                  * * *
                            சளுக்கியர் அரண்மனை, வேங்கை நாடு
                        சாதாரண, ஆனி 28 - ஜூலை 13, 1010

வேங்கை நாட்டின் தலைநகர் வெங்கியில் மன்னர் சக்திவர்மனின் தம்பி மகன் இராஜராஜ நரேந்திரனின் பிறந்தநாள் விழாவைச் சிறப்பாகக் கொண்டாட அரண்மனை விழாக்கோலம் கொண்டிருக்கிறது. இளவரசன் விமலாதித்தனின் முதல் மனைவியும், சக்கரவர்த்தி இராஜராஜ சோழரின் மகனும், இராஜேந்திர சோழனின் தங்கையுமான குந்தவியின் மகனான அவனுக்கு தாய்வழிப் பாட்டனார் இராஜராஜரின் பெயரைச் சூட்டியிருக்கிறான் விமலாதித்தன். தன்னிடம் அடைக்கலம் புகுந்த சக்திவர்மனுக்காக மேலைச் சாளுக்கியனான சத்யாஸ்ரயனைப் போரில் வென்று, வேங்கை நாட்டை மீட்டு, வேங்கை நாட்டை சக்திவர்மனுக்கே திரும்ப அளித்ததோடு மட்டுமல்லாமல் தனது மகளாக குந்தவியையும் அவனது தம்பி விமாதித்தனுக்கு மணம் செய்து கொடுத்திருந்தார். அந்த நன்றிக்காகவே, இராஜராஜனின் பெயரைத் தனது மகனுக்குச் சூட்டியிருந்தான் விமலாதித்தன்.

“நரேந்திரா, தாமதம் செய்து கொண்டிருக்காதே. நாம் உன் பிறந்த நாள் விழாவுக்குப் புறப்பட வேண்டும்!” என்று செல்லமாக அதட்டுகிறாள் குந்தவை.

“ஒக நிமிஷமண்டி, நேனு ஒஸ்தானன்டி.” தான் என்னதான் தமிழில் பேசினாலும், அவன் தெலுங்கிலேயே பதிலளிப்பது குந்தவைக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. தமிழ் தெரிந்த விமாதித்தனும் இப்பொழுது தெலுங்கிலேயே அவனுடனும் நரேந்திரனிடமும் பேச ஆரம்பித்து இருக்கிறான். ஆரம்பத்தில் தன்னுடன் தமிழில் பேசிவந்த விமலாதித்தன் வேங்கை நாட்டிற்குத் திரும்பி வந்ததும் ஏன் இப்படி நடந்து கொள்ள ஆரம்பிக்கிறான் என்று குழம்புகிறாள் குந்தவி.

தன் பேரன் தமிழில் பேசத் தெரியாமல் இருக்கிறான் என்று தெரிந்தால் தனது தந்தை என்ன நினைப்பார் என்று எண்ணினாலே மிகவும் வேதனையாக இருக்கிறது அவனுக்கு. முதலில் விமலாதித்தனுக்கு மேல் ஏற்பட்ட தனது காதலை அவர் விரும்பவில்லை. ஆயினும் அண்ணன் இராஜேந்திரன் தன் பக்கம் பேசியதால்தான் தன் காதல் திருமணமாகக் கனிந்தது என்றும் அறிவாள். இப்பொழுது அவனிடம், “உன் மருமகனுடன் பேசவேண்டுமென்றால் நீ தெலுங்கைக் கற்றுக்கொள்ள வேண்டும்!”  என்று எப்படிச் சொல்லமுடியும்?

மேலும், அவனது மகளான அம்மங்கைக்கு (அம்மங்கைத் தேவி) தனது மகனைத் திருமணம் செய்துவை என்று எப்படிக் கேட்கமுடியும்? நரேந்திரனுக்கும் பதினேழு வயது இன்று பிறக்கிறது. கோபக்காரனனான அண்ணன் இராஜேந்திரன் விஷயம் தெரிந்தால் என்ன செய்வானோ, எப்படிக் கத்துவானோ? தமிழ்த் திருமறைகளை தில்லைவாழ் அந்தணர்கள் மூலம் பரிசாகப் பெற்ற தனது தந்தை, அவரது பேரன் தமிழைப் பேச மறுக்கிறான் என்றறிருந்தால் சினத்தில் என்ன செய்வாரோ?

விமலாதித்தனுக்குத் தன்பால் ஈர்ப்பு குறைகிறது என்பதைத் திருமணம் ஆன சில ஆண்டுகளிலேயே தெரிந்து கொண்டாள் குந்தவி. அவன் வேறொரு பெண்ணை இரண்டு ஆண்டுகளுக்குள்ளேயே மணந்தது அவளுக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஆயினும் மன்னர்கள் பட்டத்து ராணியைத் தவிர மற்றவர்களையும் மணப்பதும் அவள் அறிந்ததுதான். இதற்குத் தன் தந்தையும், அண்ணனும்  விலக்கு அல்ல என்றும் அவள் அறிந்திருந்ததால் அதை ஒரு பெரிய குறையாகக் குந்தவி நினைக்கவில்லை. தவிர, விமலாதித்தன் குந்தவியிடம் காட்டிய அன்பையும், மரியாதையையும், மற்ற மனைவியிடம் காட்டவில்லை.

கிட்டத்தட்ட ஓராண்டு இடைவெளிக்குள்ளேயே மற்றவளுக்கும் ஒரு ஆண்குழந்தை பிறந்தது குந்தவிக்கு ஒரு மாதிரியாகத்தான் இருந்தது. விஜயாதித்தன்21 என்று பெயரிட்டு வளர்ந்த அந்தப் பையனிடமும் அன்பைத்தான் காட்டினாள் குந்தவி. இருந்தாலும் தன் மனக்கசப்பை இராஜராஜனிடமோ, இராஜேந்திரனிடமோ சொல்ல அவள் விரும்பவில்லை.
தமிழ்ச் சோழச் சக்கரவர்த்தியின் பேரனான நரேந்திரனுக்கு தெலுங்கு அறிஞரான நன்னய்ய பட்டாரகரை22 தெலுங்கைக் கற்பித்து வர விமலாதித்தன் ஏற்பாடு செய்ததனால், அவனுக்குத் தமிழைவிட தெலுங்கிலேயே ஈர்ப்பு அதிகமாகி வருவதையும் குந்தவியால் அறிந்து கொள்ள முடிகிறது.

 நரேந்திரனும், நன்னய்ய பட்டாரகரும், அடிக்கடி தெலுங்கிலேயே நிறைய தங்களுக்குள் பேசிக் கொள்வதையும் கவனித்திருக்கிறாள். நன்னய்யா சொல்வதற்கு நரேந்திரன் அடிக்கடி தலையாட்டுவதுதான் என்ன என்று தெலுங்கு தெரியாத அவளுக்குப் புரியவில்லை. தன் புகுந்தவீடு தமிழ் நாடாக இல்லாததாலும், தன் மகனே தாய்மொழியான தமிழை விடுத்துத் தெலுங்கிலேயே பேசிவருவதும் அவளுக்கு தான் தனித்து விட்டது போன்ற  ஓர்  உணர்ச்சியைத் தோற்றுவிக்கிறது.

திரிபுவனச் சக்கரவர்த்தியான இராஜராஜ சோழரின் ஒரே மகளான தான் இப்படித் தன் மகனைப் பற்றிக் கவலைப் படுவது அவளுக்கே சில சமயம் புரியாத புதிராக இருக்கும். சோழப் பேரரசின் வடகோடியில் கோதாவரி, கிருஷ்ணா நதிகளை உள்ளடக்கிய வேங்கை நாட்டிற்குத் தன்னைப் பட்டத்து ராணியாவதற்கு அனுப்பி வைத்தது தன் தகப்பனார் நன்கு சிந்தித்து எடுத்த முடிவுதான் என்றும் அவளுக்குப் புரியாமல் இல்லை.

ஆயினும் ஒரு சுட்டிக் குழந்தையாக, சிறுமியாக, பாவையாக, தஞ்சாவூர் அரண்மனையில் சுற்றி வந்ததும், தனது வாய் ஓயாத பேச்சு அங்கு எதிரொலித்ததையும், தான் விரும்பியதற்கு மாறாக பேசக்கூட யாருக்கும் துணிவு இல்லாததையும் நினைவு கூர்கிறாள். அப்படியிருந்த தான் வேங்கை நாட்டு அரண்மனையில் பேசாமடந்தையாகி வருவதையும், வாய்விட்டுச் சிரிப்பதைக்கூட வெகுவாக நிறுத்திவிட்டதையும், எப்பொழுதும் எதையோ பறிகொடுத்ததைப் போலவும், விடியாத தனிமையில் மாட்டிக் கொண்டது போலத் தவிப்பு ஏற்படுவதையும் எண்ணிப் பார்க்கிறாள்.
.
“ஏமண்டி அம்மகாரு, மீரு எந்துகு  சிந்த சேஸ்தாரு? ஒஸ்தாரா லேதா? (அம்மா, நீங்கள் என்ன யோசனை செய்கிறீர்கள்? வருகிறீர்களா, இல்லையா)” என்று நரேந்திரன் அவளை நிகழ்காலத்திற்குக் கொண்டு வருகிறான்.

“நரேந்திரா! உன் தாயிடம்கூடத் தாய் மொழியில் பேசமாட்டாயா?” என்று விரக்தியுடன் கேட்கிறாள் குந்தவி. அவள் கண்களில் நீர் கோர்த்து நிற்கிறது. தன் தாயின் கண்களில் நிறைந்து நிற்கும் கண்ணீரைப் பார்க்க நரேந்திரனுக்கு என்னவோ செய்கிறது.

“அம்மகாரு, மீரு...” என்று தெலுங்கில் ஆரம்பித்தவன், “அம்மா, நீங்க... அலாதண்டி. நாக்கு சால துக்கம் வர்தண்டி...” என்று தெலுங்கில் ஒரு சில தமிழ்ச் சொற்களைக் கலந்து பேசுகிறான். பதிலே பேசாமல் நடக்க ஆரம்பிக்கிறாள் குந்தவி.

“அம்மகாரு, அம்மகாரு!”  என்று அழைத்தபடியே அவளைப் பின்தொடர்கிறான் நரேந்திரன். “மீரு அல ஒத்தண்டி.” என்று தமிழும் தெலுங்கும் கலந்த மொழியில் பேசிக் கொண்டு அவளைப் பின் தொடர்கிறான்.

“நான் சோழச் சக்கரவர்த்தி இராஜராஜரின் ஒரே மகள். என் மகன் முன் ஒரு சாதாரணப் பெண்ணைப் போல அழமாட்டேன்!” என்று மனதைத் திடப் படுத்திக்கொண்டு விறுவிறுவென்று நடக்கிறாள் குந்தவி. நான்கு குதிரைகள் பூட்டிய இரதம் தயாராக நிற்கிறது. அதில் ஏறிக்கொள்கிறாள். கதவைத் திறந்து விட்ட தேரோட்டிக்குக்கூட வழக்கமான புன்னகையைக்கூட உதிர்க்காமல், தனது கலங்கிய கண்களை தேரோட்டி பார்த்துவிடக்கூடாது என்று தலையைத் திருப்பிக்கொண்டு இரதத்தில் ஏறி அமர்ந்து கொள்கிறாள். மகாராணி அடிக்கடி இப்படி நடந்து கொள்வது தேரோட்டிக்குப் பழக்கமான ஒன்றுதான். எனவே, அவன் மனதை அலட்டிக் கொள்ளவில்லை.

விழா மைதானத்தை அடையும் வரை குந்தவி வாயைத் திறக்கவே இல்லை. தாயின் இந்தப் போக்கு அவ்வப்போது நரேந்திரனுக்கு வருத்தத்தை ஏற்படுத்தினாலும், அவன் உள்ளத்தில் அது ஒரு பெரிய கலக்கத்தை ஏற்படுத்தவில்லை. தமிழ், தமிழ் என்று தன் தாய் தன்னை வற்புறுத்துவது அவனுக்குப் பிடிப்பதில்லை. தன் தந்தையுடன் சிலசமயம் அதைப் பற்றிப் பேசியிருக்கிறான்.

விமலாதித்தன் அவனிடம் தெலுங்கில் சொன்னது இதுதான்:  “நரேந்திரா! இது ஆந்திர நாடு! நீ ஆந்திர அரசனாகப் போகிறாய்! அதற்கு தெலுங்கு தெரிவது மிகவும் முக்கியம். பெண்கள் எப்பொழுதும் தங்கள் முந்தானையில் ஆண்களைக் கட்டி வைக்கத்தான் முயலுவார்கள். அதற்கு நாம் அனுமதித்து விட்டால் அரசனாக அரசாட்சி செய்ய முடியாது. அவர்களின் கைப்பாவைகளாகத்தான் இருக்க முடியும். நமக்கு வேண்டுவதை நாம் பெண்களிடமிருந்து பெற்றுக் கொள்ளத்தான் வேண்டும். எனவே அவ்வப்பொழுது அவர்கள் சொல்வதற்குச் சம்மதிப்பதுபோல நடிக்க வேண்டும். இல்லாவிட்டால் உன் அம்மாவை நான் அடைந்திருக்கவே முடியாது. போகப்போக இதை நீ நன்றாகப் புரிந்து கொள்வாய்!”  என்று விஷமம் கலந்த குரலில் புத்தி சொல்வான். நரேந்திரனுக்கு அது புரிந்தது போலவும் இருக்கும், புரியாது போலவும் இருக்கும். தன்னிஷ்டப்படி நடந்து கொள்ளும்படி தந்தை சொல்கிறார் என்பது மட்டும் அவனுக்குப் புரியும்.

இரதம் பிறந்தநாள் கொண்டாட்டம் நடக்கும் மைதானத்திற்கு விரைகிறது.

விழாமேடையில் அரசர் சக்திவர்மனும், மகாராணியும் ஒரு பெரிய சிம்மாசனத்தில் ஒருவரருகில் ஒருவர் கம்பீரமாக அமர்ந்து கொண்டிருக்கிறார்கள். பலவிதமான விளையாட்டுகளும், கேளிக்கைகளும் நடந்து கொண்டிருக்கின்றன. அங்கு குந்தவி காணும் ஒரு காட்சி அவள் மனதைக் கசக்கிப் பிழிகிறது.
விமலாதித்தன் நடுவில் ஒரு சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டிருக்கிறான். அவன் இடது பக்கத்தில் உள்ள சிம்மாசனத்தில் அவனது இன்னொரு ராணியும், வலது பக்கத்து இருக்கையில் விஜயாதித்தனும் அமர்ந்து கொண்டிருக்கிறார்கள். இரதம் நிற்கிறது. கண்களில் பறக்கும் தீப்பொறிகளைக் கட்டுப் படுத்திக்கொண்டு கீழிறங்குகிறாள் குந்தவி.[வளரும்]
 -----------------------------------------------------------------------------------------------------------------------                                                        * * *
அடிக்குறிப்பு 
21விஜயாதித்தன் என்பது அவனுடைய பட்டப்பெயர்தான். அவன் இயற்பெயர் என்ன என்று தெரியாததால் இந்தப் பெயரே உபயோகிக்கப் படுகிறது.
22தற்காலத் தெலுங்கு எழுத்துக்களை வடிவமைத்தவரும், அம்மொழியை வளர்த்தவரும் நன்னய்ய  பட்டாரகர் ஆவார் என்று வரலாறு கூறுகிறது