Tuesday, 24 June 2014

மழை நீரும் மனித முயற்சியும்

காளிமைந்தன்.வீ.செ .கருப்பண்ணன் 

நான் ஒரு பட்டிக்காட்டான். கம்பு சோளம் தின்று காட்டு வேலை செய்து-பள்ளியில் பாதிப்படிப்பில் நின்று, எருமை மேய்த்துச் சலித்துப் போய், மீண்டும் பள்ளியில் சேர்ந்து படித்தாலும், எப்போதும் பள்ளியில் கணக்கு தவிர்த்த அனைத்துப் பாடங்களிலும் முதல் மாணாக்கனாக வந்தவன். 20-ஆவது வயதில்தான் திருச்சி புனித சூசையப்பர் கல்லூரி சேர்ந்து படித்தவன். கல்லூரியிலும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முதல்வனாக நின்றவன். 

,12 வயது முதல் வள்ளுவரின் வாக்குப்படி எப்பொருள் யார் யார்வாய்க்கேட்பினும், எத்தன்மைத் தாயினும் அவற்றின் மெய்ப்பொருளைக்காண்பதில் என்னையறியாமலே ஈடுபட்டு வந்துள்ளேன். 

எனக்கு  வயது 24 முடிந்து 25 நடக்கும் போது பட்டப்படிப்பு முடித்து, சான்று கிடைத்த மறுநாள் முதல்-6 மாதம் ஆசிரியனாக உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றி, மாலை 5 மணிக்கு ராஜிநாமா செய்துவிட்டு மறுநாள் காலை காவல்துறை உதவி ஆய்வாளனாகப் பணியில் சேர்ந்து-34 ஆண்டுகளுக்குப் பிறகு 1997 கடைசி நாள் ஓய்வு பெற்று,அதிலிருந்து இன்றுவரை படிப்பது, நுகர்வோர் பாதுகாப்புச்சங்கம் நடத்துவது மற்றும்  மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் பணிகளில் ஈடுபட்டு வருகிறேன்.

என் இரு பெண்குழந்தைகள் நான் விட்ட மருத்துவப்படிப்பை வென்றெடுத்தார்கள். பட்ட மேற்படிப்பும் அதற்கு மேல் நிபுணத்துவப்படிப்பும்படித்துள்ளார்கள். அவர்களது கணவர்மார்களும் மருத்துவர்களே. ஒருவர் பிளாஸ்டிக் சர்ஜன். மற்றவர் இருதய நிபுணர். என் முதல் பேராண்டி கண்ணன் என்ற சித்தார்த்தன் 11 ஆம் வகுப்பிலேயே (16வயது) தேர்வெழுதி சர்.சி.வி. ராமன் மற்றும் அப்துல் கலாம் இருவரும் பணியாற்றிய பெங்களூரு மைய விஞ்ஞான நிறுவனத்தில் இளம் விஞ்ஞானியாகத் தேர்வு செய்யப்பட்டு 12 ஆம் வகுப்பில் மாதம் ரூ.4500/-படிப்புத் திறமைக்காகப் பரிசாகப்பெற்றவன். அதற்கு மேல்  சலுகைப் பணம் வாங்க மறுத்து, தற்சமயம் டெல்லி ஐ.ஐ.டியில் பயின்று வருகிறான். என் பெற்றோரின் மரபுக்கூறுகள் என் மூலம் என் குழந்தைகள், பேத்துக்களுக்குச் சென்றுள்ளன.

என் அண்ணன் ஆசிரியர். 2 முறை ஆசிரியர் தொகுதி எம்.எல்.சியாக இருந்தவர். என் தம்பி ஒருவர் அமெரிக்காவில் மருந்துத்துறைப் பேராசியராக இருந்துவிட்டு சுய மருத்துக்கம்பெனி நடத்துகிறார். 30 எயிட்ஸ் நோயாளிகளின் பிள்ளைகளுக்கு விடுதி கட்டிக் கொடுத்து கல்வியும் உணவும் படிப்பும் கடந்த 8 ஆண்டுகளாகத் தந்து வருகிறார். 

எனது கடைசி இரண்டுஆண்டுப்பணி க்யூ பிரிவு துணைக்காவல் கண்காணிப்பாளர் பணி. நாமக்கல்லிலேயே தங்கிப் பணி புரிந்தேன்.
தனது தவறை அரசு ஏற்று, என்னை இறுதி இரண்டு ஆண்டுகள் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றியதாகப் பாவிக்கப்பட்டாலும், ஒரே மாதம் மட்டும் தேனி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப் பாளராகப் பணியாற்றி ஓய்ந்தேன்! பணி முடிந்த தேதியில் இருந்து மக்களுக்கு நுகர்வோர் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டு வருகிறேன். 

1997 இல் ஓய்வுபெற்ற நான் 2000 முதல் ஊமையர் குரல் பத்திரிகை மூலம் மக்களின் பிரச்சினைகளை உலகறியச் செய்கிறேன். நாமக்கல் பஸ்நிலையத்தில்-நகராட்சி அனுமதி பெற்று- ஒரு 20 அடி அகலம் 10 அடி உயர் கரும்பலகை ஒன்றைச் செய்வித்து,அதில் அவ்வப்போது மக்களை விழிப்படையச் செய்யும் செய்திகளை எழுதிப் போடுகிறேன். 

எதற்கு இந்த சுயபுராணம்.?இதையெல்லாம் ஏன் சொல்கிறேன்? ஒரு போலீஸ் கமிஷனருக்கு மழை நீர் மீது என்ன அக்கறை? அதுவும் ரிடயர்  ஆன பிறகு?
எழலாம் கேள்விகள்.

                                                     இது தான் பதில் 

“குடிநீர் பிரச்சினை தீர்க்க,கூரைமீது விழும் மழைநீரை நிலத்துக்குள் அனுப்பு!அல்லது மின்சாரம் துண்டிக்கப்படும்!”-2001 இல் தமிழக அரசின் எச்சரிக்கை என்னைச் செயல்பட வைத்தது!

2001-இல் இன்றைய இதே முதல்வரின் கீழ் இருந்த ஆட்சி,மிக்கடுமையான குடி தண்ணீர்த் தட்டுப் பாட்டைச் சமாளிக்க,நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் முயற்சியாக,தமிழகத்தில் நகரமோ பட்டிக்காடோ தோட்டமோ, மலை உச்சியிலோ (ஓலை புல் முதலிய னவற்றால் வேய்ந்த கூரை தவிர்த்த),எந்த கான்க் கிரீட் கூரை, ஓட்டுக்கூரை வீடானாலும் அதன் கூரை மேல் விழும் மழை நீர்,ஒரு பக்கமாகக் கொணரப் பட்டு-பைப் மூலமாக தரையில் தோண்டப்பட்ட ஒரு இரண்டடி ஆழமாவது உள்ள குழியில் கல்மணல் போட்டு அதில் விட வேண்டும். கிணறு அருகில் இருந்தால் அதில் விட வேண்டும் என்று உத்தரவிட்டது. அதை நிறைவேற்றாது போனால்,அக்கட்டிடத்துக்கு மின்சாரம் துண்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அனைத்தும் குடிநீர்ச் சிக்கலைத் தீர்க்கும் நல்லெண் ணத்தோடு செய்யப்பட்டாலும்,அது அவ்வளவு விஞ்ஞானபூர்வ திட்டமில்லை என்பதுதான் உண்மை!

மின்சாரம் துண்டிக்கப்பட்டால், கற்காலத்துக்கு வாழ்க்கை போய்விடும். எனவே, அனைவரும் அதை நிறைவேற்றினர். நான் சற்று யோசித்தேன். நீரை கல் மண்நிரப்பிய இரண்டடி சின்னக் குழியில் விட்டால்-2 செகண்டில் அது நிரம்பி மீண்டும் வெளியில் தான் ஓடப்போகிறது என்று எண்ணிப் பார்த்தேன். அதிகாரி களுக்கு அவ்வளவுதான் சொல்லத் தெரிந்திருக்கிறது! என்ன செய்ய?

 யோசித்தேன். படித்த விஞ்ஞானம் கை கொடுத்தது. என் வீடு காங்கிரீட் கூரையால் ஆனது. 2500 சதுரபரப் புள்ளது. எனது கான்கிரீட் கூரை நீரை,நிலத்தடித் தொட்டி கட்டி, சேமித்து காற்று வெளிச்சம் படாமல் மூடிவிடுவது என்று முடிவு செய்து-என் வீட்டு வாசலில் முன்புறக்காலியிடம்) கார் நிறுத்த இடையூறின்றி–இடக்கைப்பக்கம் 14 அடி நீளம் 8 அடிஅகலம் 10அடி ஆழம் உள்ள தொட்டியைக் கட்டி நீர் கசியாத் தூளை சிமெண்ட்டுடன் சேர்த்துப் பூசி மேலேயேயும் காற்று வெளிச்சம் படாமல்–ஒரு ஆள் நுழையும் மூடிக்கு (Manhole) இடம் விட்டு காங்கிரீட் போட்டு தொட்டியை முடினேன். அதன் மேல் எனது சிறிய நூல் நிலையத்தைக் கட்டி அதை என் அலுவலகமாகவும் கணிணி தட்டச்சு செய்யுமிடமாகவும் இன்றுவரை பயன் படுத்தி வருகிறேன்.

மாடி மேல் விழுந்த நீரை முதலில் விவரம் தெரியாமல்,தொடர் மழை காலத்தில் இரண்டொரு நாள் மழைநீரை மண்ணில் பாய விட்டுவிட்டு-தூசு துப்பில் லாமல் நீர் வருவம் நாள் பார்த்து தொட்டிக்குள் செலுத்தி னேன். மழைக்காலத்தில் இரண்டு நாளில் அந்தத் தொட்டி நிரம்பி விடுகிறது. பிறகு சில நாட்களிலேயே யோசித்து–சிறு தொட்டி ஒன்றை நிலத்துக்கு மேலே கட்டி அதில் மணல் ஜல்லி அதன் மேல் மணல் ஜல்லி-மணல் என்று பல அடுக்குகள்கொட்டி அதற்குள் மாடி மழைநீரைப் பாய்ச்சினேன். 

அது பன்னாடை  போல் நீரில் தப்பித் தவறி வரும் அனைத்து அழுக்குகளையும் தூசு துப்புகளையும் அகற்றி உள்ளே அனுப்பியது. துவக்கத்தில் மழை நீரில் ஏதாவது கிருமி கள் இருந்தால் என்ன செய்வது என்றுபயந்து காய்ச்சி ஆறவைத்துக் குடித்தோம். சமையலுக்கு அந்தக்கஷ்டம் இல்லை. சோறு சீக்கிரம் வெந்தது. வெள்ளையாக இருந்தது! பெருமகிழ்ச்சி! ஆனால் காய்ச்சி ஆறிய நீர் குடிக்க சுடியாய் இல்லை. எப்படி இருப்பினும் கலர் கலராக முனிசிபாலிடி அனுப்பிய காவிரி நீரை விட இது சிறந்ததுதான்.

மாதம் முடிந்து, ரத்தப் பரிசோதனை நிலையத் தில் இருந்துகிருமிகள் அகற்றப்பட்ட சுத்தமான சிறு மூடியோடு கூடிய டப்பாவைக்கொண்டு வந்து, தொட்டியில் இருந்து,மாதிரி நீரை எடுத்துச் சென்று சோதனைக்குக் கொடுத்தேன். ஒரு நுண்கிருமியும்(பாக்டீரியா) இல்லை என்று 4 நாள் வைத்திருந்து பார்த்துவிட்டுச் சான்று தரப்பட்டது. அது முதல் காய்ச்சிக் குடிப்பதை விட்டு மழைநீரை நேரடியாகக் குடித்தோம். மிக ருசியாக இருந்தது. அதன் பின் 11 ஆண்டுகள் கழித்து 2013-இல் இதே சோதனையை மீண்டும் செய்த போதும் எந்த நுண்கிருமிகளும் இல்லை.

                மழை அளவு பற்றிய புள்ளிவிவரம் சேகரிப்பு:

 பிறகு என் வீட்டின் மேல் விழும் முழு நீரையும் சேகரித்தால் எவ்வளவு நீர் கிடைக்கும் என்று அறிய மண்டை அரிப்பெடுத்தது. சார்பதிவாளர் அலுவலகம் ஒவ்வொன்றிலும்,நாடு முழுதும் மழைமானி உண்டு என்பதறிந்ததே! வட்டார அலுவலகம் இருக்கும் இடத்தில் அந்த மழை நீர் அளவுகள் வட்ட அலுவலக மழைநீர் கிளார்க்கிடம் அது இருக்கும். வட்டார அலுவலகம் இல்லையானால் அதே சார்பதிவாளரின் சம்பந்தப்பட்ட கிளார்க்கிடம் இருக்கும்.

நான் தற்போது வாழும் நாமக்கல், படித்து வளர்ந்த சேந்தமங்கலம், தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னை மூன்றுக்கும் அதற்குரிய கட்டணங்களைக் கட்டி 2000 முதல் 2013 முடிய காலண்டர் ஆண்டுகளுக்கு (ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை) பெய்த மழையளவைப் பெற்றேன். இதர அண்டை வட்டங்களான ராசிபுரம், திருச்செங்கோடு, பரமத்தி வேலூர், கரூர் ஆகிய ஊர்களில் உள்ள மழையளவுகளை நேரில் சென்று,கெஞ்சிக் கேட்டுப் பதிவேடுகளில் பார்த்துக் குறித்துக் கொண்டேன். எல்லா ஊர்களிலும் கிட்டத்தட்ட இதே மாதிரி மழை அளவுதான் இருந்தது.

தமிழகத்தின் பாலை நிலம் என்பது கொங்குநாடுதான். அதாவது கரூர், ஈரோடு, நாமக்கல், கோவை-மாவட்டங்கள்தான். இதே போல இன்றைய பெரம்பலூர் மாவட்டமும் சிவகங்கை மாவட்டமும் பாலை நிலங்கள்தான்.

கொல்லி மலை ஓரம் உள்ள ஊர்களில் மட்டும் சற்றே அதிகமாக மழை பெய்திருந்தது. நாமக்கல்லின் சராசரி மழை அளவு 650 மி.மீ. ஆகும். 300 மி.மீ. என்பது 30 செ.மீ. அல்லது ஒரு அடி உயரமாகும். ஒரு கனஅடி நீர் என்பது 28.32 லிட்டர் கொண்டதாகும். 200 லிட்டர் ஒரு பெரிய பேரல் ஆகும்.

எனவே என் வீட்டுக்கூரையில் சராசரியாக ஆண்டுக்கு 2500x  28.32 x 2.16=1,52,928. அதாவது தோராயமாக 1,50,000 சதுர அடி என்று வைத்துக்கொண்டாலும் அது தினம் ஒன்றுக்கு(15000 வகுத்தல் 365 நாள் வகுத்தல் 200லிட்டர்=) 2.05 அல்லது தோராயமாக 2 பேரல் நீராகிறது! எவ்வளவு பெரிய குடும்பமும் இந்த நீரை வைத்து குடிக்க, சமைக்க, குளிக்க துணிகளை வெளுக்கப் போதுமானது!

[சமைக்கவும் குடிக்கவும் என்ன செய்வது?எந்த நீரைத் தேடிப்போவது ]
அடுத்த பதிவில் தொடருகிறார் காளிமைந்தன் 

1 comment:

  1. மிகவும் உபயோகமுள்ள கட்டுரைத் தந்த உயர்திரு கருப்பண்ணன் அவர்களுக்கு பாராட்டுகள்.

    வீடு கட்டும்போழுதே, underground tank கட்டி, அதன் மீது வீடு கட்டினால், மழை நீரை வீணாக்காமல் சேமித்து வைக்க இயலும்.

    குஜராத் மாநிலத்தில், அஹமதாமபாத் நகரில் இம்மாதிரி மழைத் தண்ணீர் தொட்டிகளை நான் பார்த்ததுண்டு.

    ReplyDelete