Monday, 25 November 2013

எனக்கும் கடவுள் உண்டு.

என் கடவுளுக்கு மதம் கிடையாது

                            VKT6 

சொல்லத்துடிக்குது மனசு 

christ
Jesus
  
20.11.2007, பிற்பகல் 1.30.
அன்று இரவு எட்டு மணிக்கு 26 வது முறையாகச் சபரி மலைக்குச் செல்ல பூஜை செய்துவிட்டு, இருமுடி கட்ட  இரயிலைப் பிடிக்கும் தறுவாயில் தாகம் ஆசிரியரின் தொலைபேசி அழைப்பு. டிசம்பர் இதழுக்கான கட்டுரை வேண்டும் என்று. நினைத்துப் பார்க்கிறேன். 1981ஆம் ஆண்டு ஒரே ஆடையுடன் சென்னையில் அலைந்து திரிந்துகொண்டிருந்த நான், முதலில் கிடைத்த வருமானத்தில் மாற்றுடை வாங்கும் நிலையில் துணிக் கடைகளில் ஏறி இறங்கினேன். நான் கடைகளிலிருந்து இறங்கக் காரணம், துணிகளின் விலை ஏற்றம் தான். தேடிப்பிடித்து, எட்டு ரூபாயில் ஒரு வேஷ்டி வாங்கி அணிந்து கொண்டேன்.
இரவு பத்து மணியிருக்கும், தூங்கிப் போயிருந்த என்னை எழுப்பினர் சிலர்.”என்ன?’ என்ற கேள்வியுடன் விழித்து, விழிப்போடு கேட்டேன். “” பக்கத்துத் தெருவில் அய்யப்பசாமி பூஜை நடக்கிறது, வந்து கலந்து கொள்ளுங்க சாமிஎன்றொரு அழைப்பு. அழைத்தவர்கள் கூட்டத்தைப் பார்த்தேன். ஒவ்வொருவரும் கருப்பு, காவி, நீல நிற உடையணிந்து கழுத்தில் விதவிதமான மாலைகள் அணிந்து கொண்டிருந்தார்கள். அவர்களின் முகங்களைத் தாடியும், நெற்றியைச் சந்தனமும் குங்குமமும் நிரப்பியிருந்தன.
அவர்கள் கூப்பிட்ட தோரணையில் “” சரி, போய்த்தான் பார்ப்போமேஎன்று அவர்கள் சொன்ன இடத்திற்குச் சென்று, அங்கு நடந்து கொண்டிருந்த அய்யப்பபூஜையில் கலந்து கொண்டேன்.
பூஜையில் கலந்து கொண்டிருந்தவர்களைப் பார்த்தவுடன்தான் புரிந்தது… அவர்கள் ஏன் என்னை பூஜைக்கு அழைத்தார்கள்..? என்ற கேள்விக்குப்  பதில் அளித்தது என் வேட்டி.  மாற்றுடையாக நான் வாங்கிய வேட்டியின் நிறம் காவியாக அமைந்து போயிருந்தது மாத்திரமே அழைப்பிற்கான  காரணம். அவர்கள் நடத்திய பூஜையோ, அதற்குரிய ஐதீகங்களோ, திட்டமிடலோ இல்லாமல் நான் அங்கு அமர்ந்திருந்ததுதான் உண்மை. ஆனாலும் அங்கு களைகட்டிய இசையும் சங்கீதமும், அனைத்திற்கும் மேலாக அங்கு பரிமாறப்பட்ட சர்க்கரைப் பொங்கல், வடை, பாயாசம், சாப்பாடு எல்லாம் எனக்கு விருந்தாக அமைந்திருந்தன. பன்னும்  வடையுமே கிடைப்பதற் கரிய உணவுகளாக இருந்த எனக்கு, இந்தப் பூஜை சாப்பாடு எப்படியிருந்திருக்கும் என்றுசொல்லித் தெரிய வேண்டியது இல்லை.
அக்கூட்டத்தில் பேச்சுக் கொடுத்ததில் அய்யப்பன்கோவில் செல்வதற்கான பூஜை புனஸ்காரங்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிய வந்தன. மறுநாள் விடியற்காலை  50 – க்கும் மேற்பட்ட “சாமிகள்சபரி மலை செல்லக்  கிளம்பினர். சபரி மலை செல்வதற்கான மற்றச்  சடங்குகளையும் புரிந்து கொண்டேன். அவர்களை வழியனுப்பி விட்டுத் திரும்பி வரும் போது ஒரு குரல் ,”"சாமிமாரே, இன்னைக்குச் சாயங்காலம் வெள்ளாளத் தெருவுல மணி வீட்டுல அய்யப்பபூஜை … வந்து கலந்துக்குங்ககூவிய சத்தத்தில் மனதில் குளிர் மழை பெய்தது. “” ஆகா! இன்றிரவும் ஒரு பிடிபிடிக்கலாம்.
அந்த கார்த்திகைமார்கழி இரு மாதங்களிலும் இருபதிற்கும் மேற்பட்ட அய்யப்பபூஜைகளில் கலந்து கொண்டு, பூஜை விருந்தினை உண்ணக் கூடிய வாய்ப்பினை அந்த எட்டு ரூபாய்க் காவி  வேட்டி ஏற்படுத்திக் கொடுத்தது.
1982 ஆம் ஆண்டு, மீண்டும் அந்தக் கார்த்திகைமார்கழி மாதங்கள் வந்தன. அப்போது நான் மாதம் ஆயிரம் ரூபாய் வரையிலும் வருமானம் கொண்டிருந்தேன். கருப்புடை, காவியுடைச் சாமிகள் தெரியத் தொடங்கினாலும் இப்போது அய்யப்பபூஜைகளில் கலந்துகொண்டு, அந்த உணவைச் சாப்பிடுவதில் எனக்கு உடன்பாடில்லாமல் போனது.
ஆனாலும், ஒரு வருடத்திற்கு முன்பு சப்புக் கொட்டிக் கொண்டு உண்ட உணவுகள் என் மனதில் நிழலாடத் தொடங்கின. என்னையறியாமலே என் தலை குனிந்தது. மாற்றுடைக்காக நான் பயன்படுத்திய காவியுடை, அய்யப்பசாமிகளை, என்னையும் சாமியாக நினைத்து எனக்கு விருந்திட்ட சமயங்கள் என் மனதை வெட்கப்பட வைத்தது.
இதற்குப்  பிராயச்சித்தமாக ஏதாவது செய்யலாமே… என்ன செய்யலாம்?” உடன் முடிவு செய்தேன் . நேராகப்போய் , ஒரு வேட்டி, மாலை வாங்கிக் கொண்டு  குளித்துவிட்டு, எனக்கு நானே மாலை போட்டுக் கொண்டு, அய்யப்பசாமியாகி, விரதமிருந்து கன்னி சாமியாக முந்நூறு ரூபாய்ச்செலவில் சபரிமலைக்குச் சென்று அய்யப்பனை வணங்கி விட்டு வந்தேன். 
ஆத்திகம் அறியாத மனசு. நாத்திகம் புரியாத வயசு. சூழ்நிலை எனக்கு வழிகாட்டியாக இருந்தது. நான் ஆத்திகனா? நாத்திகனா? புரியாமலே புனிதப் பயணம் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.
3 ஆவது வருடம் சபரி மலைக்கு மாலைபோட வேண்டியிருந்த போது, நான் ஒரு லாட்ஜில் தங்கியிருந்தேன். தங்கியிருப்பவர்களுக்கு ஆதியோடு அந்தமாக அத்தனை வேலைகளையும் செய்யக் கூடியவராக இருபது வயது நிரம்பிய பழனி என்பவர் இருந்தார். எவ்வித உறவுகளுமற்ற அவரை அன்புத் தம்பியாகவே நான் பார்த்தேன், அவரையும் நம் செலவிலேயே சபரி மலைக்கு அழைத்துச் செல்லலாம் என்று நினைத்து, அவ்வருடத்தில்  வேட்டி , மாலை அணிவித்து, அவரையும் சாமி ஆக்கி விட்டேன்.
45 நாள்கள் விரதமிருந்து கிளம்புவது என்று திட்டம். மாலை போட்டு இருபது நாட்களிருக்கும். என் அறைக்கு அடிக்கடி வந்து செல்லும் என் இஸ்லாமிய நண்பன் உபயதுல்லா அவர்களின் ஆறு மாதக் கைக்குழந்தை இறந்துபோன செய்தி எனக்கெட்டியது. அவரின் மனைவி, தம்பி மற்றும் குடும்ப உறவினர்களைக்கூட நான் நன்கு அறிவேன்.
சபரிமலைக்கு மாலை போட்டு விட்டால் மரணச் சம்பவங்களிலோ அவர்களின் வீடுகளிலோ கலந்து கொள்ளக்கூடாதுஎன்பதை அப்போது நான் அறிந்திருந்தேன்.”என்ன செய்வது?’ ஒரு பரிதவிப்பு. கழுத்திலிருந்த மாலையைப் போலவே, இதயத்திலும் ஏதோவோர் மாலை தொங்குவது போன்றதோர் உணர்வு.கழுத்திலிருந்த மாலையைக் கழற்றி, அறையில் வைத்து விட்டு, மரண வீட்டிற்குச் சென்றேன். இறந்த குழந்தையின் உடலைத் தூக்கிச் சென்ற தோள்களில் என் தோளும் ஒன்று.
அவர்களின்  துக்கத்தில் பங்கேற்றது, எனக்கோர் ஆத்ம திருப்தியைத் தந்தது. மீண்டும் அறைக்கு வந்து, குளித்துவிட்டு, மாலையைப் போட்டுக் கொண்டேன். அப்போது அறைக்குள் நுழைந்தான் நான் “தம்பிஎன்று பழகிய பழனி.
ஐயோ ! இதென்ன அநியாயம் ? சாமிகுத்தம் பொல்லாததுஎன்று சொல்லியபடியே அறையை விட்டு வெளியேறிவிட்டான். பிறகு இரண்டு,மூன்று தினங்களாக என் அறைப் பக்கமே அவன் தென்படவில்லை. நானே ஒரு நாள் சத்தமெழுப்பிய பிறகு என் முன் வந்தான்.
என்னடா…. ஆளையே காணலைஎன்று நான் கேட்க, “ கோயில்ல போய் ஒரு பூசாரிகிட்ட இப்படி மாலையக்கழற்றி வெச்சுட்டு மரண வீட்டுக்குப் போய்வந்துட்டு மறுபடியும் மாலையப்  போட்டுக்கலாமான்னுகேட்டேன். அவரு,”" அப்படி பண்ற ஆளு பெரிய பாவி. அவனுக்கு என்னாகும்னு பாரு…நீ அவனோட மலைக்குப் போனா, உனக்கும் அந்தப்  பாவம் வந்துடும்னு சொன்னாரு.அதனால நான் உங்களோட சபரிமலைக்கு வரலைஎன்று சொல்லிவிட்டு, அனல் உலையில் அகப்பட்டு வெளியேறுபவனைப் போல விறு விறு வென்று என்னறையிலிருந்து வெளியேறி விட்டான்.
சும்மா கெடந்தவனை மாலையும் போட்டு, என் சொந்தச்  செலவிலேயே மலைக்குக் கூட்டிச் செல்லலாமென்றிருந்தவனின் மனத்தில் ஐதீகத்தின் ஆளுமை எந்த அளவு இறுக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறதென்பதை நினைத்துத் திடுக்கிட்டேன்.
எனக்கே தெரியாது,நான் செய்தது சரியா… பிழையா என்று. இதில் அவனெடுத்த முடிவைப் பற்றி நானென்ன பிழை சொல்வது?
என் குழுவினர் பத்து பேரும் சேர்ந்துகொள்ள ஒரு வேனில் சபரிமலை செல்ல ஆயத்தமானோம். புறப்படும் நாளும் வந்தது. வரிசையாகக் குருசாமி முன்னால் சாமிகள் இருமுடிகள் கட்டிக் கொண்டிருந்தனர். என் முறையும் வந்தது. என் இருமுடியில் தேங்காயில் நெய் ஊற்றி, உள்ளே வைத்து இறுகக்கட்டி,”" சாமியே சரணம் அய்யப்பாஎன்ற சரண கோஷத்துடன் இருமுடியை என் தலையில் வைத்தபோது, இடி விழுந்தது போலொரு முழக்கம். நான் தங்கியிருந்த லாட்ஜின் நுழைவாயிலில் போட்டிருந்த தகரக்கூரை உடைந்து விழுந்திருந்தது.
அனைவரும் இருமுடிகளைக் கீழே வைத்து விட்டு என்ன நடந்ததென்று பார்க்க ஓடினோம். “நம்ம பழனிதகர கொட்டாயின் கீழே விழுந்து கிடக்கிறான். அவனுடைய கை உடைந்திருக்க, உடம்பெங்கும் இரத்தச் சிராய்ப்புகள்.அவன் உடம்பில் ஆங்காங்கேயிருந்து இரத்தம் பீறிட்டு வர, ஓடிப்போய் அவனை நான் தூக்கினேன். 
நாங்கள் மலைக்குச் செல்ல இருந்த வேனிலேயே அவனை ஏற்றிக் கொண்டுபோய்ச்  சைதாப்பேட்டையிலிருக்கும் பொது மருத்துவமனையில் சேர்த்தோம்.முதலுதவி அளிக்கப்பட்டது. லேசான மயக்கத்தில் இருந்த அவனிடம் கேட்டேன்…”"என்னாச்சு பழனி? ”
நீங்க சபரிமலைக்குப் போக மாட்டீங்கன்னு அந்த பூசாரி சொன்னதை நினைச்சுகிட்டு.. இன்னமும் உங்களுக்கு ஒண்ணுமே ஆகலை யேன்னு ரெண்டாவது மாடியிலிருந்து, எட்டிப் பார்த்துக்கிட்டிருந்தேன்.கொஞ்சம் அதிகமாகக் குனிஞ்சிட்டேன் போலிருக்கு.. அப்படியே விழுந்திட்டேன்..என்று அவன் சொல்ல, எனக்கு அழுவதா… சிரிப்பதா…? பெருமைப்பட்டுக் கொள்வதா? அல்லது அவனின் செய்கை சிறுமையானதா? என் அறிவுக்கு எட்டவில்லை.
சரி, நடந்து விட்டது. உனக்கு நான் சொன்ன மாதிரி பணம் கொடுத்து விடுகிறேன், உன் சிகிச்சைக்கும் சேர்த்து. நீ நினைக்கறபடி நல்ல சாமியாரோட மலைக்கு வாஎன்று, அவன் மருந்து, மாத்திரைக்கெல்லாம் பணம் கொடுத்து விட்டு, நாங்கள் மலைக்குக் கிளம்பினோம்.சென்று விட்டு சுகமாகத் திரும்பினோம். ஆனால் காயங்களின் கடும்தன்மை காரணமாக, பழனியால் அப்போது சபரி மலைக்குச் செல்ல முடியாமல் போனது.
இப்போதும் குழந்தை குட்டிகளோடு என் வீட்டிற்கு அவனும், அவன் வீட்டிற்கு நானும் வந்து செல்லக் கூடிய குடும்ப நண்பர்கள் நாங்கள். தற்போது, பிரபல திரைப்பட இயக்குநர் திரு. இராஜீவ் மேனன் அவர்களிடம் பழனி ஓட்டுநராகப் பணி புரிந்து வருகிறார்.
அப்புறம், எனக்குத்  திருமணம் முடிந்து குழந்தை, குட்டி பந்தமெல்லாம் விளைந்துவிட்ட நேரம். மந்தைவெளியில் ஒரு மாடி வீட்டின் கீழ்த்தளத்தில் மாதம் 300 ரூபாய் வாடகையில் குடியிருந்தோம்.மேலே மாடியில் வீட்டின் உரிமையாளர் வசித்திருந்தார். அவர்கள் கிறிஸ்துவர்கள். அவருக்கு இரண்டு குழந்தைகள். வீட்டு உரிமையாளர், வாடகைதாரர் என்ற பிரிவினை இல்லாமல் எங்கள் இரண்டு குடும்பங்களும் சொந்தக்காரர்கள்போலப் பழகிக் கொண்டிருந்தோம்.
1991ஆம் ஆண்டு நான் 10 வது முறையாகச் சபரிமலைக்கு மாலை போட்டு விரதமிருந்து, செல்வதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தேன். அன்று… கிறிஸ்துமஸ் நாள்.  வீட்டு உரிமையாளரின் எட்டு வயது மகன் மாடியிலிருந்து இறங்கி வந்தான். அந்த வீட்டிற்கு நாங்கள் குடிபுகுந்த நாள் முதல் கிறிஸ்துமஸ் நாளில் சிக்கன், மட்டன் பிரியாணி அவர்கள் வீட்டிலிருந்து எங்கள் வீட்டிற்குள் வந்திறங்கும்.
அவ்வருடம் நான் விரதமிருந்து கொண்டிருந்த வேளையிலும் அச் சிறுவனை நோக்கி விளையாட்டாக, “இன்னைக்கு எங்க வீட்டுக்குச் சிக்கன் பிரியாணியா… மட்டனா?” என்று கேட்டேன். உடனே அந்தச் சிறுவன் சொன்னான், “ நீங்க எப்பவுமே கிறிஸ்துமஸ்க்கு முன்னாடியே மலைக்குப் போய் வந்துடுவீங்க… நாங்க எங்க வீட்டிலிருந்து பிரியாணி தருவோம். இந்த முறை நீங்க விரதமிருக்கீங்கன்னு எங்க வீட்ல பிரியாணி பண்ணவேணாமுன்னு அப்பா அம்மா சொல்லிட்டாங்க.
சாமியே சரணம் அய்யப்பா!என்று கோஷமிட வேண்டிய இதயம்,
சாமியே சரணம் ஏசப்பா!என்று கோஷ மிட்டது.
எப்போதும் என் நெற்றியில் இடம்பெற்றிருக்கும் சந்தனமும் குங்குமமும் சிறு வயது முதல் உள்ள பழக்கத்தினால் வைத்துக் கொள்கிறேனேதவிர, வேறு நோக்கம் எதுவும் கிடையாது.

ஆனால் என் கடவுளுக்கு மதம் கிடையாது !
 
 சொல்லத்துடிக்குது மனசு

குடியைக் கெடுக்கும் கடன்


Credit Cards on a White Background
கடன் அட்டை
கால் நூற்றாண்டுக்கு முன்னால், ஒரு பத்து ரூபாய் கடன் வாங்கவேண்டுமென்றாலும் மொத்தக் குடும்பமே வெற்றுப்பத்திரத்தில் கையெழுத்து – கையொப்பமிட்டுக் கொடுத்தால்தான் கடன் கிடைக்கும்எனும் நிலை இருந்தது. அதனடிப்படையில் கடன் கொடுத்தவர்கள் காலப்போக்கில் அந்தவெற்றுப்பத்திரத்தில் தாம் விரும்பிய வகையில் எழுதி, கடன் பெற்றவர்களின் வீடு – நிலபுலன்களையும் அநியாயமாக அபகரிப்பாகர்கள். இப்படி இழந்த குடும்பங்கள் எத்தனைஎத்தனையோ! இன்றைய நவீன வாழ்க்கைச்சூழலில்கூட காலனிகள், சேரிகள், பிளாட்பாரங்களில் வாழ்ந்து – தொழிலும்செய்து பிழைப்பவர்கள்கூட ‘தண்டல்கடன் மூலம் பிழிந்தெடுக்கப்படுகிறார்கள். வாங்கும்கடனுக்கு மாதவட்டியாக 10 வீதமும், இன்னொருவகையில் தினந்தோறும் செலுத்தப்படும் முறையின்மூலம் மாதத்திற்கு 30 வீதவட்டியும் கட்டிவருகிறார்கள் என்பது அவர்களுக்கே புரியாத கணக்காகும். தண்டல் கடன் வாங்காத சேரி, காலனி மக்களோ, பிளாட்பார, நடைபாதை, நடைவண்டி வியாபாரிகளோ இல்லை எனும் அளவு அவர்களின் சமூகப் பொருளாதாரத்தைக் கடன்கள் நீக்கமறச் சூறையாடி வருகின்றன.
இத்தண்டல் முறைக் கடன் அரசினால் தடைசெய்யப்பட்டதும் மீறினால் தண்டனைக்குரிய குற்றமும் ஆகும். ஆனால், அதிகமாக உள்ள சட்டப்பிரிவுகளில் அதிகம் மீறப்படுவது இந்தச்சட்டம்தான் என்பது புள்ளி விவரம். இச்சட்டத்தின்படி கைது செய்யப்படுபவர்கள் மிகமிகக் குறைந்த அளவினர் கூட இல்லை என்பது வேதனைக்குரிய உண்மையாகும். இதற்கு மிகமிக முக்கியமான காரணம், இந்தத் ‘தண்டல்’ தொழிலில் ஈடுபட்டுவரும் அநேகம்பேர் பல்வேறு அரசியல் கட்சிகளிலும் பொறுப்புகளிலும் இருந்துகொண்டு அவர்கள் செல்லும் கார்களில் கட்சிக்கொடியை மாட்டி, பாதுகாப்பைத் தேடிக் கொள்வதுதான்.
தண்டல்காரர்களிடம் கடன் பெற்றுத் திருப்பிக்கட்ட முடியாமல் மனைவியையும் மகள்களையும் இழந்த குடும்பங்களும் உள்ளன என்பது வெட்கக்கேடானது. அது மாத்திரமில்லாமல் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்வதும் பரபரப்பான செய்திகளாக அரங்கேற்றப்படாமல் நடைபெற்று வருகின்றன.
நாட்டின் முன்னேற்றம், சமூகத்தின் வளர்ச்சி என்பதெல்லாம் 20% வீதமக்களுள் நடைபெறும் பரமபத விளையாட்டு மட்டுமே. 80% வீத மக்களின் நிலைமை எல்லாவகையிலும் கேள்விக்குறியே. இப்படியான பழைய பேய்களைச் சமாளிப்பதே சிரமமாக இருக்கும் நிலையில், தற்போது புதியப் பேயாகக் கடன் அட்டைகள் நுழைந்துள்ளன. 18 வயதிற்கும் 28 வயதிற்குமிடைப்பட்ட இளைய தலைமுறையினர் அதை எப்படிக் கையாள்வதென்றே தெரியாமல் பல கடன் அட்டைகளைப் பெற்றுத்தம் குடும்பத்தை விழிபிதுங்கச் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் சம்பளப்பணம் வட்டியாகவே பறிபோகிறது.
credit1
கடன் அட்டை


ரொக்கமாக நூறுரூபாய் கொடுத்தால் கிடைக்கக்கூடிய ஒரு பொருளை, கடன் அட்டை உபயோகித்து வாங்க முன்னூறு ரூபாய் செலுத்த வேண்டியுள்ளது. இப்படிப் பலவகைகளிலும் தங்களது உழைப்பையும் ஊதியத்தையும் இழக்கிறார்கள்.
கடன் அட்டையைக் கன்னாபின்னா என்று பயன்படுத்திவிட்டு, அந்தப்பணத்தைக் கட்டாமல் இருப்பவர்களின் வீடுதேடி வங்கிக்காரர்கள், வசூல் என்ற பெயரில் குண்டர்களை அனுப்ப, கடன்அட்டை வாங்கியவர்கள் ஓடிஒளிந்து, வேலையும் பறிபோய், குடும்ப நிம்மதியையும் கெடுத்துக் கொண்டிருப்பவர்கள் ஏராளம்.
நெஞ்சு நிமிர்த்திச் சொல்வேன். என்னிடம் பணியாற்றுபவர் எவரும் சீதனம் வாங்கமாட்டார்கள்; கடன் வாங்க மாட்டார்கள். தமது ஊதியத்தை அடிப்படையாகக் கொண்டு, செலவினங்களையும் சேமிப்பையும் வரையறுத்து வாழ்ந்து உயர்ந்து வருகிறார்கள்.
பலர் திருமணம் போன்ற முக்கியமான நிகழ்வுகளின் போது கடன் வாங்காமல் முடியாதே என்ற ஒரு மன அமைப்பை ஏற்படுத்திக் கொண்டு, அதன் காரணமாகவே அடமானம் வைத்துக் கடன் வாங்கிச் செலவு செய்து விட்டு, கடனைத் திருப்பிச்செலுத்த முடியாமல் ஏற்படும் அவமானங்களையும், அவலங்களையும் சுமக்கிறார்கள். அத்துடன், திருமணம்மூலம் இவ்வளவு கடன் சுமையாகிவிட்டதே எனமணமக்கள் பரிதவித்து, இல்லற அமைதியைச் சீர்குலைவு செய்து கொண்டவர்கள் ஏராளம். திருமணச் செலவென்பது மொய் எவ்வளவு வரும் என்பதை அளவுகோலாகக் கொண்டு நிறைவேற்றிக் கொள்ளக்கூடிய ஒரு நிகழ்வேதவிர வேறொன்றுமில்லை.
எங்களுக்கான சம்பிரதாயமுறையும் காலம்காலமாக அதனையே சொல்லிவருகிறது.
பொதிகையில் ‘வெளிச்சத்தின் மறுபக்கம்’ நிகழ்ச்சியினை நான் நடத்தி வந்தபோது ஒரு பெண்மணியைப் பேட்டிக் காண நேர்ந்தது. அவர் ரூ. 600 சம்பளத்திற்கு ஒரு சத்துணவுக் கூடத்தில் பணிபுரிந்து வருபவர். அவரது கணவர் ரிக்ஷா ஓட்டும் தொழிலாளி. கையில் கிடைக்கும் பணத்தையெல்லாம் மதுவுக்கே செலவழித்துவிட்டு மயங்கிக்கிடப்பவன். இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள்.
முதல்பெண்ணுக்கு 20 வயது, இன்னொன்றுக்கு 18 வயது, கடைசிப்பெண்ணுக்கு 16 வயது. எப்படித்தம் பெண்களைக் கரையேற்றப் போகிறோம் என்றதவிப்பு அந்தப்  பெண்மணிக்கு. வரன் கிடைத்தாலும் அவர்கள் கேட்டதும், கல்யாணச்செலவுக்கும் சேர்த்து 12 ஆயிரம் ரூபாய் தேவைப்பட்டது. இவர்களைப் போன்றவர்களுக்கெல்லாம் ஆபத்பாந்தவனாக ஆரம்பத்தில் தெரிவது தண்டல் வட்டிக்காரர்கள்தான்
.
கை நீட்டுகிறாள்.
கடன் கேட்கிறாள்.
கிடைத்து விடுகிறது.
பெருத்த வட்டி.
இதைப்பற்றிக் கவலைகொள்ளும் நிலையில்அவளில்லை.
அவள் முதல்மகளின் திருமணம் சுற்று வட்டாரம் மெச்ச, நடந்தேறுகிறது. வாங்கிய கடனுக்கு  வட்டிகூடக் கட்டமுடியாமல் மாதங்கள் உருள்கின்றன. ஆறு மாதங்களைத் தாண்டிவிட்டதால் தண்டல்காரன் பொறுமை இழந்து போகிறான். அவனது நடவடிக்கைகள் பயத்தை வரவழைப்பதாக மாறிவருகிறது. இன்னும் இரண்டு பெண்களைக் கரையேற்ற கையில் வைத்துக்  கொண்டிருக்கும் பதைப்பு ஒருபுறம். கட்டவேண்டிய கடன், வட்டியுடன் சேர்ந்து 18 ஆயிரம் ரூபாயாக உயர்ந்த விட்ட திகில் மறுபுறம். விரைந்து முடிவெடுக்க வேண்டிய நிர்ப்பந்தம்… எடுத்துவிட்டாள், தற்கொலை செய்துகொள்வது என்று. ஆனால் விதி, பக்கத்து வீட்டுப்பாட்டி உருவத்தில் வந்து கடனை அடைக்க வழிகாட்டியது. புரோக்கர்மூலம் ஒரு மருத்துவ மனையில் தனது கிட்னியை விற்றுக் கடனை அடைக்கநேரிட்டது.
பாவம்! இன்னும் மூச்சிரைக்க, நடக்க முடியாமல் சத்துணவுக் கூடத்துப் பணியைத் தொடர்ந்து செய்து கொண்டு, பாதி உயிரோடு வாழ்ந்து வருகிறாள்.
ஜப்பான் நாட்டில் ஒருவர் கடன் அடைக்காமல் இறந்து போனால் கடன் கொடுத்த அனைவரும் ஒரு வேனில் வந்து அவர் வீட்டுக்கு முன்னால் காரில் பொருத்தியிருக்கும் ஒலிபெருக்கியின் மூலம் அவர் கடன் தொகையை அறிவிப்பார்கள். அந்தக் கடனை ஏற்றுக்கொண்ட பின்னர்தான் பிணம் அடக்கம் செய்யப்படும்.
போர்க்களத்தில் சகோதரர்கள், சொத்து, சுகம், நாடு என அனைத்தையும் இழந்து நிற்கிறான் இராவணன். கோபலகிருஷ்ண பாரதியார் தாம் எழுதிய இராமநாடகக் கீர்த்தனைகள் என்ற நூலில்
“கடன் பட்டார் நெஞ்சம் போல்
கலங்கினான் இலங்கை வேந்தன்” – என்று குறித்துள்ளார்.
அப்படியானால் கடன் எவ்வளவு கொடுமையானது என்பதை இதைவிட எவர் சொல்லிவிட முடியும்?
உலகிலேயே மிகப் பெரியதுன்பமாக  இராமாயணம் கடனைத்தான் குறிப்பிடுகிறது. கடன் பட்டுத்தான் வாழ்க்கை நடத்த வேண்டும் என்ற மனநிலையிலுள்ள மனிதர்கள் காலப்போக்கில் கடனுக்காக ஏந்திய கைகளைப் பிச்சைக்காக ஏந்தி நிற்பார்கள்.
இதில் இன்னொருவகை, நன்றிக்கடன். இதனால் புழுங்கி வாழ்ந்து வரும் எத்தனையோ மேதைகளை, வெற்றியாளர்களை நான் அறிவேன். இன்றைய மிகப்பெரிய இசையமைப்பாளர் 30 வருடங்களுக்கு முன்னால் வெடித்துக் கிளம்பிய இசை ஞாயிறு. அவர் வெற்றி அடைந்தவுடன் ஒரு பாடகி, பத்திரிகையொன்றில் பேட்டியில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்..
.
“இவர்கள் சோற்றை மாத்திரம் அவித்து வைத்து விட்டுச்  சாம்பாருக்கும் ரசத்திற்கும் எங்கள் வீட்டிற்கு வந்து தட்டேந்தியவர்கள்”
இவ்வாறான அவமானங்கள் பல பேரது வாழ்க்கையில் கூனிக்குறுக வைத்துக் கொண்டிருக்கிறது.
பாத்திரமறிந்து பிச்சையிடு என்பார்கள். ‘பிச்சையிடுபவனை அறிந்து பாத்திரம் ஏந்து’ என்பதை வாழ்வில் புரிந்து கொள்ள வேண்டும்.
வங்கிகள் கடன் தருகின்றனவே… பெற்றுக் கொள்ளக்கூடாதா என்ற நினைப்பு தேவையில்லை. அவைதகுதி அடிப்படையில் தரப்படும் மூலதனமாகும். வீட்டுக்கடன், வாகனக்கடன், கல்விக்கடன் என்று வங்கிகளிடமிருந்து கடன்பெற்று உங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ள நீங்கள் உரிமை பெற்றவர்கள்தான்.வங்கிகளில் பெறும் கடன் அட்டைக்கடன், தனிப்பட்ட கடன்களைக் கட்டாவிட்டால் அப்புறம் அவர்களுக்கு எக்காரணம் கொண்டும் வேறுகடன்அட்டை, தனிப்பட்டகடன் மாத்திரமல்லாது வீட்டுக்கடன், வாகனக்கடன், வர்த்தகக்கடன்கூடக்   கிடைக்காது என்பதைக் கட்டாயம் புரிந்துகொள்ள வேண்டும்.
ஒன்றே ஒன்றுதான்.
நாணயம் தவறாமல் இந்தக்கடன்களைத் திருப்பிச்செலுத்தினால் வங்கிகளைவிட வேறு எந்தப்பெரிய மனிதனும் உங்களுக்கு உதவிவிட முடியாது.
வங்கிக்கடன், தோழமை கொண்டமூலதனம்.  நன்றிக்கடன், தேள்கள்கொட்டும் ஆறாரணம்.


Wednesday, 6 November 2013

ஒரு பெண்ணின் பார்வையில் காதலை....

இது நிகழாது இருந்திருக்கலாம் - எனது (முதல்) பார்வையில்
காதல் காலந்தோறும் கவிஞர்களையும் கவிதைகளையும் வாரி வழங்கி வந்தாலும் பெண் கவிஞர்களை குறைவாகவே உருவாக்கி வந்திருக்கிறது. இது, காதலில் உருகுபவனும் சரி, காதல் தோல்வியில் வாடுபவனும் சரி அது ஆணாகத் தான் இருக்க முடியும் என்கிற பிம்பத்தைக் கட்டமைத்து விட்டது. பெண்களுக்குள்ளும் காதல் இருக்கிறது, அவர்கள் காதல் உணர்வும் ஆண்களுக்கு சளைத்தது அல்ல என்பதை பொதுவெளியில் பெண்கள் கவிதையாக பகிர்வதில் ஏனோ ஒரு சுதந்திரமான சூழல் இன்னும் இங்கு உருவாகவில்லை. 
இருப்பினும், அங்கொருவர் இங்கொருவராக பெண்களும் காதல் குறித்த தங்கள் உணர்வுகளை கவிதைகளாக வடித்து வருவதை படிக்கும் வாய்ப்பு கிடைக்கத்தான் செய்கிறது. அந்த வரிசையில் சமீபத்தில் நமது அனைவருக்கும் பரிட்சயமான தமிழ்ச்செல்வி அக்கா எழுதிய "இது நிகழாது இருந்திருக்கலாம்" கவிதைத் தொகுப்பு வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
தமிழ்ச்செல்வி
இது முழுக்க முழுக்க ஒரு பெண்ணின் பார்வையில் காதலைச் சொல்லும் ஒரு கவிதைத் தொகுப்பு. கலையாத கனவுகள் என்று கவிதைத் தொகுப்பு எதைப் பற்றியது எனச் சொல்வதில் இருந்து, முதல் பார்வை, முதல் தீண்டல், முதல் முத்தம், ஊடல், காத்திருப்பு, பரிசு, குறுஞ்செய்தி, புறக்கணிப்பு, அணைப்பு, காமம் என காதலர்களுக்குள் நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் பெண்ணின் பார்வையில் பெண்ணே சொல்வதால் வார்த்தைகள் யாவும் இயல்பாக பெண்ணின் உணர்வுகளை வெளிக்காட்டியுள்ளது.

கவிதைத் தொகுப்பில் உள்ள அனைத்து கவிதைகளும் காதலின் ஏதாவது ஒரு படிநிலையை, மகிழ்வை, வருத்தத்தை என ஏதாவது ஒரு உணர்ச்சியை பிரதிபலிப்பதாக இருந்தாலும் நான் அதிகம் இரசித்த ஒரு கவிதையின் வரிகளை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.  

குறுஞ்செய்தி என்னும் கவிதையில் வரும் வரிகளான
என்னால் அனுப்பப்படுகிற
ஒவ்வொரு குறுஞ்செய்தியும்
என் கவனம் உன்மேல்
என உறுதிபடுத்தத் தான்
பதில் வராத போதும் கூட
நான் நினைப்பதுண்டு
என் நினைவுக் கரைதலில்
நீ குறுஞ்செய்தியை
பார்க்க மறந்தாய் என்று.
என்பது காதலர்களின் இயல்பான மனநிலையான புறக்கணிப்பையும் காதல் என உருவகப்படுத்தும் தன்மையைக் காட்டுமிடத்தில் கவிஞராக/காதலராக நம் மனம் கவர்கிறார் ஆசிரியர்.

அதே கவிதையின் இறுதியில் முத்தாய்ப்பாய்
நம்பிக்கை ஒன்றில் தான்
காதலின் விதை
ஆழப் பதியப்படுகிறது
விருட்சமாய் உருமாற...
என்ற வரிகளில் காதலைப் பற்றிய தனது பார்வையை தெளிவாக எடுத்துரைக்கும் இடத்திலும் கவிஞர் மனம் கவர்கிறார்.

இந்த கவிதை மட்டுமல்ல கவிதைத் தொகுப்பில் இருக்கும் நாற்பத்தைந்து கவிதைகளிலும் இப்படி பெண்ணின் பார்வையில் காதலைக் காணுமிடத்து மனம் அந்த உணர்வுகளை எளிதில் உள்வாங்கி இரசிக்க முடிகிறது.
பல கவிதைகள் நன்றாக அமைந்திருந்தாலும் சில கவிதைகளை வாசிக்கும் போது இன்னும் சற்று இக்கவிதையை மெருகேற்றி இருக்கலாமோ என்ற எண்ணம் எழுந்தாலும் கவிஞருக்கு இது முதல் கவிதைப் புத்தகம் என்பதால் அதனை அப்படியே ஏற்றுக் கொள்ளலாம்; என்றாலும் வரும் படைப்புகளில் இன்னும் மேம்பட்ட அதே சமயம் கவிதை என்னும் போர்வாளை காதலுக்குள் மட்டும் அடைக்காது சமுதாயத்தின் அவலங்களையும் சீர்கேடுகளையும் சாடியும் சமகால சமூக நிகழ்வுகளை பிரதிபலித்தும் வீச வேண்டும் என்ற கோரிக்கையை கவிஞருக்கு முன்வைத்து இன்னும் பல கவிதை புத்தகங்களை எழுத வாழ்த்தி அமரும் அதே வேளையில் கவிஞராய் தமிழ்ச்செல்வி அக்கா மென்மேலும் பல உயரங்களைத் தொட இறையருள் என்றும் துணை நிற்க பிரார்த்திக்கிறேன்.
PRASATH