Friday, 17 May 2013

ஊழலை ஒழிக்கவே முடியாது-அருந்ததி ராய்

அருந்ததி ராய்
 
 ‘‘இன்றைய அருந்ததி ராய் உருவாக, சின்ன வயது வாழ்க்கை எந்த அளவுக்கு அடிப்படையாக இருந்தது என்று சொல்ல முடியுமா?’’
‘‘எனக்கு ஒரு வயதானபோது என் பெற்றோருக்கு விவாகரத்து ஆனது. கலப்புத் திருமணம் செய்துகொண்டு, கணவனைப் பிரிந்த ஒரு பெண் ஊர் திரும்பும்போது நம் சமூகம் எப்படி வரவேற்கும் என்று நான் சொல்ல வேண்டியது இல்லை. எல்லோராலும் நிராகரிக்கப்பட்ட நிலையில் நானும் என் அம்மாவும் இருந்தோம். அப்படிப்பட்ட ஓர் இடத்தில் இருந்துதான் உறவுகளும் சமூகமும் எனக்கு அறிமுகம் ஆனார்கள்.’’
‘‘உங்கள் வாழ்க்கையை வடிவமைத்ததில் உங்கள் அம்மாவுக்கு முக்கியப் பங்கு உண்டு என்று சொல்லி இருக்கிறீர்கள்...’’
‘‘நான் பார்த்த உன்னதமான பெண்களில் ஒருவர் என் அம்மா. ஒரு சாதாரன குடும்பத்தில் பிறந்த, சிந்திக்கத் தெரிந்த பெண் என்று அவரைச் சொல்லலாம். ஒரு குடும்ப நிகழ்ச்சிக்காக வெளியூர் போய் இருந்தபோது, வந்த இடத்தில் தன்னிடம் கல்யாணம் செய்துகொள்வோமா என்று கேட்ட மனிதனைத் திருமணம் செய்துகொண்டு அங்கேயே தங்கியவர் அவர். பெரிய காதல் எல்லாம் இல்லை. வாழ்க்கையை ஏதோ ஒரு வகையில் பிடித்துக்கொள்ள வேண்டும் என்ற நிர்ப்பந்தம். ஆனால், அந்தக் குடிகாரக் கணவன் தன்னுடைய பிழைப்புக்காக எந்த எல்லைக்கும் போகலாம் என்று முடிவெடுத்தபோது உதறிவிட்டு வந்துவிட்டார்.  அப்பாவைவிட்டு பிரிந்து வந்த பிறகு, ஊட்டியில் சின்ன இடத்தில் நாங்கள் இருந்தோம். சாப்பாட்டுக்கே வழி இல்லை. அப்புறம் கேரளத்துக்குப் போனோம். வாழ்க்கையில் பெரிய போராட்டங்களை அம்மா நடத்தினார். வாழ்க்கையின் சங்கடங்களை அந்த வயதிலேயே நேரடியாகப் பார்த்ததால், ‘உன்னைப் பாதுகாக்க யாரும் இருக்க மாட்டார்கள்... நீதான் மற்றவர்களைப் பாதுகாக்க வேண்டும்’ என்கிற பாடம் கிடைத்துவிட்டது. முழுமையான சுதந்திரத்தின் பரவசம், பயங்கரம் இரண்டையும் அந்தச் சூழல்தான் எனக்குக் கற்றுக்கொடுத்தது.’’
  ‘‘உங்கள் அப்பாவைப் பற்றிச் சொல்லுங்கள்...’’
‘‘இருபது இருபத்திரண்டு வயதில்தான் நான் அவரைப் பார்த்தேன். அதுவரை அப்படி ஒருவர் இருக்கிறார் என்ற நினைப்பே எனக்குக் கிடையாது. அவர் ஒரு குடிநோயாளி. அவருக்கு ஆல்கஹால்தான் எல்லாம்.’’
 ‘‘இப்போது நீங்கள் தனியாகத்தான் இருக்கிறீர்கள் அல்லவா?’’
‘‘ஆமாம். இப்போது நான் தனியாகத்தான் இருக்கிறேன். நான் செயல்படும் முறைக்கு அளவற்ற சுதந்திரம் தேவை. அது திருமண வாழ்க்கையில் கிடைக்காது என்பதை என்னுடைய மண வாழ்க்கைகளின் மூலமும் தெரிந்துகொண்டேன். நான் நேசித்தவர்களை இன்னமும் நான் நேசிக்கிறேன். ஆனால், ஒரு சுதந்திரப் பெண்ணால் இன்னொருவர் விதிமுறைக்குக் கீழ் வாழ  முடியாது. சமயத்தில் பத்து நாள் சாப்பிடாமல், தூங்காமல் எழுதுவேன். குடும்ப வாழ்க்கையில் இருந்துகொண்டு இது எல்லாம் சரிப்படாது.’’
 ‘‘உங்களுக்குக் குழந்தைகள் இருக்கிறார்களா?’’
‘‘எனக்கு குழந்தைகள்  கிடையாது. குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் விரும்பியதும் இல்லை.’’
‘‘இந்திய ஆண்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’’
‘‘இந்திய ஆண், இந்திய பெண் என்று நான் பிரித்துப் பார்க்கவில்லை. என்னுடைய வாழ்க்கையில் இடம்பெற்ற ஆண்கள் நிறையப் பேர் அழகானவர்கள். அற்புதமானவர்கள். ஆனால், சமூகத்தில் அடக்குமுறை இருப்பது தெரிகிறது. என்னைப் பொருத்தவரை நான் அடுக்குமுறைக்கு உட்படக் கூடிய ஆள் இல்லை. ‘நீ திருமணம் செய்துகொள்ளாதே’ என்று அறிவுரை சொன்ன ஓர் அசாதாரணமான தாய் எனக்கு இருந்தார். பலருக்கு இந்த அதிர்ஷ்டம் கிடையாது. கணவனே கதி என்றுதான் வாழச் சொல்கிறார்கள். பெண்களுக்குப் பெற்றோர்கள் துணையாக இருக்க வேண்டும்.’’
‘‘இந்தியாவில் சுதந்திரமாக வாழ விரும்பும் பெண்களின் தனிப்பட்ட வாழ்க்கை பெரும்பாலும் நிம்மதி அற்ற சூழலிலேயே இருக்கிறதே... காரணம் என்ன?’’
‘‘இங்கே ஒரு பெண்ணுக்கு நிம்மதியான வாழ்க்கை என்று எது சொல்லப்படுகிறது? கணவன், அவனுக்கு அடங்கிய ஒரு வாழ்க்கை, குழந்தைகள்... என் வாழ்க்கையில் திருமணமாகி நிம்மதியாக இருக்கும் ஒரு பெண்ணைக்கூட நான் சந்தித்தது இல்லை. அதனால்தான் மாட்டக்கூடிய சந்தர்ப்பம் வரும்போதெல்லாம் எதிர்த்திசையில் நான் ஒடிவிடுகிறேன்.’’
‘‘படித்தது கட்டடக் கலை. அப்புறம் சினிமா... இப்போது எழுத்து, களப்போராட்டம்... ஏன் இவ்வளவு மாற்றங்கள்?’’
‘‘என்னுடைய இயல்பே மாறிக்கொண்டே இருப்பதுதான்.’’
 ‘‘ ‘காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ்’ வெளியாகி 15 ஆண்டுகள் ஆகின்றன. 2007-ல் அடுத்த நாவல் எழுதப்போவதாக அறிவித்தீர்கள். ஆனால், இன்னமும் எழுதவில்லை...’’
‘‘எங்கே நம் அரசியல்வாதிகள் அதற்கு இடம் கொடுக்கிறார்கள் (சிரிக்கிறார்).’’
 ‘‘உங்களுக்குள் இருக்கும் அரசியல்வாதிதான் உங்களுக்குள் இருக்கும் படைப்பாளியைச் செயல்படாமல் முடக்கிவைத்து இருக்கிறார் என்றால், ஏற்றுக்கொள்வீர்களா?’’
‘‘எனக்குள் இருப்பது அரசியல்தான். அரசியல்வாதி அல்ல.’’
‘‘இந்தியாவின் இன்றைய பிரச்னைகளுக்கு மக்களிடம் உள்ள சுயநலமும் சொரணையற்றத்தனமும் காரணம் என்று கூறலாமா?’’
‘‘அடிப்படையில் இங்கு பிரச்னைக்குக் காரணம் என்னவென்றால், சாதிய அமைப்பு. இந்தியாவின் அடிப்படைக் கட்டுமானமே சாதியில் சிக்குண்டுக் கிடக்கிறது. அந்தச் சாதிதான் ஜனநாயகம், அரசியல், ஆட்சி இயந்திரம் எல்லாவற்றையும் சூழ்ந்து இருக்கிறது. சரியாகச் சொல்ல வேண்டும் என்றால், சாதி அமைப்பு நிலப்பிரபுத்துவ முறையில் இருந்து கார்பரேட் முறைக்கு மாறி இருக்கிறது.’’
 ‘‘இன்னமும் மாவோயிஸ்ட்டுகளை ஆதரிக்கிறீர்களா?’’
‘‘நான் மாவோயிஸ்ட் கிடையாது. ஆனால், காடுகளில் கனிம வளங்களைக் கொள்ளையடிப்பதற்காக அங்குள்ள பூர்வக்குடிகளின் நிலங்களைப் பறிப்பது, அடக்குமுறையால் அவர்களை ஒடுக்குவது போன்ற பிரச்னைகளில் மாவோயிஸ்ட்டுகளின் போராட்டத்தை ஆதரிக்கிறேன். நீங்கள் நம் உள்ள வாய்ப்புகளைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். நாம் அரசு என்று குறிப்பிடும் அமைப்பு பன்னாட்டுப் பெருநிறுவனங்களிடம் தேசத்தின் சொத்துகளைக் கூறுபோட்டு விற்கத் துடிக்கிறது . நாம் பயங்கரவாதிகள் என்று குறிப்பிடுபவர்களோ அதைக் காக்கப் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். இவர்களில் யாருடைய நியாயத்தை நான் பேச வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?’’
‘‘அப்படி என்றால், மாவோயிஸ்ட்டுகளின் வழிதான் மாற்று என்று நம்புகிறீர்களா?’’
‘‘நான் அப்படிச் சொல்லவில்லை. மாவோயிஸ்ட்டுகளின் போராட்ட அணுகுமுறை காட்டுக்கு வெளியே எடுபடாது என்றே நான் நம்புகிறேன். ஆனால், இப்போது உள்ள சூழலில் வேறு எந்த ஒரு தீர்வும் தென்படவில்லை. காட்டுக்குள் துணை ராணுவப் படைகள் புகுந்த பின்னர் அங்குள்ள மக்கள் தனித்தீவாக மாற்றப்பட்டுள்ளனர். வெளி உலகத்துக்குத் தெரியாமலேயே அவர்கள் முற்றிலுமாகத் துடைத்தெறியப்படும் வாய்ப்பு இருக்கிறது. அமெரிக்கா இப்போது அதைத்தான் விரும்புகிறது. குறிப்பாக, பொருளாதார மந்தநிலைக்குப் பிறகு. இங்குள்ள கனிமங்களை அப்படியே அள்ளிச் செல்ல ஏதுவாக வனங்களில் நம் ராணுவம் புகுந்து சூறையாட வேண்டும் என்று விரும்புகிறது. மன்மோகன் சிங்கால் அதை முழு வேகத்தில் செய்ய முடியாததால்தான் செயல்பாடற்றவர் என்று அவர்களுடைய ஊடகங்கள் எழுதுகின்றன.’’
‘சரி, உங்கள் பார்வையில் தீவிரவாதம் என்பது என்ன?’’
‘‘ஒரு திருவிழாவுக்காகக் கூடிய ஆதிவாசிகளை இந்த நாட்டின் துணை ராணுவப் படைகள் சுட்டுக் கொல்வது.’’
 ‘‘இந்தியாவில் ஊழலை ஒழிக்க என்ன வழி?’’
‘‘இங்கு ஊழலை எல்லோரும் நோயாகத்தான் பார்க்கிறார்கள். அது ஒரு நோயின் அறிகுறிதான். உண்மையில் நோய் எதுவென்றால், சமச்சீரற்ற அதிகாரப் பகிர்வு. இந்தியாவில் இன்றைக்கு பணமோ, அதிகாரமோ இல்லாத சாமானியன் நீதியைக் கோரி ஒரு துறையைக்கூட அணுக முடியாது. இந்த மாதிரி ஒரு கட்டமைப்பை வைத்துக்கொண்டு, எவ்வளவு சட்டங்கள், எத்தனை போலீஸாரைக் கொண்டுவந்தாலும் ஊழலை ஒழிக்கவே முடியாது. இதைப் புரிந்துகொள்ளாமல்தான் அண்ணா ஹஜாரே இயக்கம் கோஷம் போட்டது.’’

  "ஆனால், அண்ணா ஹஜாரேவுக்கு மிகப் பெரிய கூட்டம் கூடியது அல்லவா?"
"இந்த நாட்டில் அது சகஜமானதுதான். மக்கள் கூடுகிறார்கள் சரி, எதற்காகக் கூடுகிறார்கள் என்று நாம் பார்க்க வேண்டும் இல்லையா? பாபர் மசூதியை இடிக்க இந்துத்துவ அமைப்புகள் கூப்பிட்டபோதும்கூட மக்கள் அலை அலையாகக் கூடினார்கள்.  என்னைப் பொறுத்த அளவில், தனியார்மயத்தைப் பற்றிப் பேசாமல், நாம் ஊழலைப் பற்றிப் பேச முடியாது. நாடு சந்தித்த பெரிய ஊழலான அலைக்கற்றை முறைகேட்டின் பின்னணியில் பெருநிறுவனங்கள் இருந்ததை நாம் மறந்துவிட முடியாது. அப்படிப்பட்ட பெருநிறுவனங்களின் ஆதரவோடு நடக்கும் அண்ணா ஹஜாரே பாணி போராட்டங்களால் ஊழல் முடிவுக்கு வந்துவிடும் என்று நினைத்தால் அது எவ்வளவு பெரிய அறியாமை?"

 ‘‘காஷ்மீர் சுதந்திரப் போராட்டத்துக்கு ஆதரவாக இருக்கிறீர்கள். ஒருபக்கம் பாகிஸ்தான், இன்னொரு பக்கம் சீனா... காஷ்மீர் தனி நாடாவது ராஜதந்திரரீதியாக சரிதானா?’’
‘‘உங்கள் தலைக்கு மேல் ஏழு லட்சம் ராணுவ வீரர்கள் நின்றுகொண்டிருக்கும்போது நீங்கள் எப்படிச் சிந்திக்க முடியும்? யோசித்துப்பாருங்கள். காஷ்மீரிகளின் பிரதிநிதியாக நான் பேசவில்லை. சுதந்திரம் என்ற அவர்களுடைய முழக்கத்துக்குப் பின் பல அர்த்தங்கள் இருக்கின்றன... முக்கியமாக அவர்களுடைய வாழ்க்கை, அதைத் தீர்மானிக்கும் அவர்களுடைய உரிமை. அந்த உரிமையைத்தான் நான் ஆதரிக்கிறேன்.’’
 "இந்திய அரசின் அணுசக்தி கொள்கையை எப்படிப் பார்க்கிறீர்கள்... குறிப்பாக, புகுஷிமாவுக்குப் பிந்தைய சுழலில்?"
"ஃபுகுஷிமா சம்பவம் நடந்த காலகட்டத்தில் நான் ஜப்பானில்தான் இருந்தேன்.  அந்த வகையில்,  நமக்கு எல்லாம் தெரிந்தது உண்மையின் ஒரு பகுதி மட்டும்தான் என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். அதாவது அரசு மறைத்தது போகக் கசிந்த உண்மை. அந்த உண்மையையே நம்மால் எதிர்கொள்ள முடியவில்லை. எனில், முழு உண்மையை? இந்திய அரசாங்கம் தன்னால், பிளாஸ்டிக் கழிவுகளை ஒழுங்காகக் கையாள முடிகிறதா என்று முதலில் யோசிக்க வேண்டும். அணுக்கழிவுபற்றி எல்லாம் அப்புறம் நாம் பேசலாம்."
 ‘‘இந்தியா உடையும் என்று தொடர்ந்து சொல்கிறீர்கள். அப்படி உடைந்தால், ஓர் இந்தியராக அது உங்களைப் பாதிக்காதா?’’
‘‘ஆமாம் இன்றைய சூழல் தொடர்ந்தால், நிச்சயம் இந்தியா உடையும். இந்தியா என்கிற  வார்த்தையை நாம் எப்படிப் புரிந்துகொள்கிறோம் என்பதே எனக்குத் தெரியவில்லை. தொன்மை மிக்க நாடு என்றா? உண்மையில் 1947-ல்தான் இந்தியா என்ற நாடு உருவானது. அதுவும் பிரிவினையில் இருந்து. அப்படிப் பிரிவினையால் உருவான ஒரு நாடு காலனி ஆதிக்கச் சக்திபோலத்தான் செயல்படுகிறது. மக்கள் போராட்டத்தை அடக்க ராணுவத்தை அனுப்புவது ஆகட்டும்; மற்ற நாடுகளையும் பிரிவினையை உருவாக்குது ஆகட்டும். தேசியம் என்பது தவறு அல்ல. ஆனால், அதில் நியாயம் இருக்க வேண்டும். வரைபடத்தில் என்னுடைய நாடு பெரியதாகவோ, சின்னதாகவோ இருக்கிறது என்பது என்னைப் பாதிக்காது. ஆனால், நான் சார்ந்திருக்கும் நாட்டின் பெயரால் நடத்தப்படும் வன்முறையும் ஒடுக்குமுறையும் என்னை வெகுவாகப் பாதிக்கும்."
‘‘இந்தியாவில், இந்தியாவிடம் உங்களுக்குப் பிடித்த விஷயங்கள் ஒன்றுமே இல்லையா?’’
‘‘இந்தியாவில் எனக்கு ஆயிரக் கணக்கான விஷயங்கள் பிடிக்கும். நீங்கள் அதையும் தேசபக்தியையும் குழப்பிக்கொள்ளக் கூடாது. தேசபக்தி என்பது இங்கு ஒரு வெற்றுப் பெருமிதமாக இருக்கிறது. ஒருபுறம் தேசபக்தி கோஷங்கள்... இன்னொருபுறம் நாட்டின் சுற்றுச்சூழலை, மொழியை, கலாசாரத்தை, வரலாற்றை, எல்லாவற்றையும் அழித்துக்கொண்டு இருக்கிறார்கள்.’’
‘‘இதுவரையிலான இந்திய பிரதமர்களிலேயே சிறந்தவர் என்று நீங்கள் யாரைச் சொல்வீர்கள்?’’
‘‘ப்ச்... ம்ஹூம்... அப்படி யாரும் இல்லை. ஆனால், மன்மோகன் சிங் மோசமானவர். இந்தியாவை விற்றவர்.’’
  ‘‘மோடி - ராகுல். பிரதமர் பதவிக்கு யாரைத் தேர்ந்தெடுப்பீர்கள்?’’
‘‘எவ்வளவு மோசமான நாடு இது... (சிரிக்கிறார்)... இருவருமே பெரும் சீரழிவையே கொண்டுவருவார்கள். மோடி இன்னமும் பேரழிவைக் கொண்டுவருவார்.’’ 
‘‘உங்கள் பார்வையில் இந்தியாவில் இன்றைக்கு நம்பிக்கை அளிக்கக் கூடிய அரசியல் தலைவர் அல்லது இயக்கம் எது?’’
‘‘இந்த மாதிரி அரசியல் சூழலில் இப்படி ஒரு கேள்விக்கு அர்த்தமே இல்லை. ம்ஹூம்...’’
  ‘‘சரி... இந்தியாவை எப்படித்தான் சீரமைப்பது?’’
‘‘அப்படியான திட்டங்கள் ஏதும் என்னிடம் இல்லை. நான் அவ்வளவு பெரிய ஆளும் இல்லை.’’
 ‘‘உங்களுக்கு காந்தியத்தின் மீது நம்பிக்கை உண்டா?’’
‘‘இந்தியாவின் முதல் சுற்றுச்சூழலியலாளர் என்பதைத் தாண்டி காந்தி மீது எந்த ஈர்ப்பும் கிடையாது. ஸ்திரத்தன்மை அற்ற ஓர் அரசியல் அவருடையது. இந்தியாவின் முதல் என்.ஜி.ஓ. அவர். சாதியத்தையும் மதத்தையும் அரசியலுக்குள் கொண்டுவந்தது கொஞ்சமும் எனக்குப் பிடிக்காதது.’’
‘‘எல்லோரையுமே நிராகரிக்கிறீர்கள்... நீங்கள் அவநம்பிக்கைவாதியா?’’
‘‘மக்களுக்காகப் பேசும் நான் எப்படி அவர்களிடம் அவநம்பிக்கையை விதைப்பேன்? எதிர்ப்பைக் காட்டுவதில் மற்ற மக்களிடம் இருந்து மிக வேறுபட்ட, தீவிரமான அணுகுமுறையை இந்திய மக்கள் கையாள்கிறார்கள். இன்றைக்கு ஜார்கண்டிலும், சட்டீஸ்கரிலும் அரசை எதிர்த்து நிற்கும் மக்களின் போராட்டம் அசாதாரணமானது. ராகுல் காந்திகளும் மோடிகளுமே மக்களாகப் பார்க்கப்படும் நாட்டில் அவர்கள் மக்கள் என்றே அங்கீகரிக்கப்படாதவர்கள். நான் அவர்களுக்காகப் பேசுகிறேன். அவர்கள் இடத்தில் இருந்து இந்த நாட்டைப் பார்க்கிறேன். அது உங்களுக்கு அவநம்பிக்கையாகத் தெரிந்தால், இந்த நாடு அவர்களிடத்தில் அவநம்பிக்கையை விதைத்து இருக்கிறது என்றே அர்த்தம்!’’

Thanks:http//:writersamas.blogspot.comஆனந்த விகடன் 2012

Monday, 13 May 2013

அரங்கனுக்கு அதிசயத் துலாபாரம்


அரங்கனுக்கு அதிசயத் துலாபாரம்
கௌதம நீலாம்பரன் 

 மாறவர்மன் சுந்தரபாண்டியன், மாபெரும் வீரன். ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ என்று வரலாறு இவனைப் புகழ்ந்துரைக்கிறது.

சோழர் ஆதிக்கத்திலிருந்து மதுரையை மீட்ட பெரும் புகழுக்குச் சொந்தக்காரனான இந்த சுந்தர பாண்டியன், சோழ நாட்டையே நிர்மூலம் செய்து விடுமளவிற்கு ஆவேசம் கொண்டவனாக இருந்தான். சோழ பூமியே இவன் வரவுகண்டு நடுநடுங்கியது. சோழ நகரங்கள் ஒவ்வொன்றும் மண்மேடாக்கப்பட்டன. குறிப்பாகத் தஞ்சையும் உறையூரும் பேரழிவைக் கண்டன. அங்கு இருந்த மாடமாளிகைகள் ஒவ்வொன்றும் இடித்து நொறுக்கப்பட்டன. சோழ அரண்மனைகள் பலவும் இடிபட்டன. அவற்றிலுள்ள தூண்கள் எல்லாம் உடைத்துப் பொடியாக்கப்ட்டன.

ஆனால், கண்மூடித்தனமான ஆவேசத்துடன் சோழ நாட்டில் அதாகதம் செய்து கொண்டிருந்த சுந்தரபாண்டியன், ஓரிடத்தில் நின்று தலை வணங்கினான் என்றால், அது எத்தனை ஆச்சரியம். அந்த இடம் ஒரு மண்டபம். அங்கேதான் கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்னும் தமிழ்ப்புலவருக்கு, அவர் தன்னைப் புகழ்ந்து ‘பட்டினப்பாலை’ என்னும் நூலை இயற்றியமைக்காகப் பதினாறு நூறாயிரம் (பதினாறு லட்சம்) பொற்காசுகளைப் பரிசாக வழங்கினான் கரிகாற் பெருவளத்தான். இந்தப் பட்டப் பெயரே கூட அம்மன்னனுக்கு அப்புலவர் வழங்கியதுதான்.

இச்செய்தியை அறிந்த சுந்தரபாண்டியன், அந்தப் பதினாறு கால் மண்டபத்தை யாரும் இடிக்கக் கூடாது என்று கட்டளையிட்டான். பழிவாங்கத் துடித்து நடத்திய போரில்கூட பாண்டியனின் பைந்தமிழ்ப் பற்றை எண்ணினால், நம் நெஞ்சம் பூரிக்கிறதல்லவா?

இத்தனைக்கும் அது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம். உருத்திரங்கண்ணனார் புகழ்ந்து பாடியதோ ஒரு சோழ மன்னனை. காவிரிக்குக் கல்லணை கட்டி, சோழ பூமியை வளங்கொழிக்கச் செய்த கரிகாலன், தன்னைப் புகழ்ந்த ஒரு புலவரைக் கௌரவித்த மண்டபம்தான் அது. இருப்பினும் அது தமிழைப் போற்றிய இடம் என்பதாலேயே, தலைசிறந்த இடமாக, தலைவணங்க வேண்டிய இடமாக எண்ணியிருக்கிறான் சுந்தரபாண்டியன்.

அவனுடைய இந்த உயரிய பண்பைப் போற்றுவதோடு, அந்த சம்பவத்தை நமக்கு இன்றைக்கும் எடுத்துரைக்கிறது திருவெள்ளறை ஆலயக் கல்வெட்டு
.
வெறியார் தவளத் தொடைச் செய மாறன்
வெகுண்டதொன்றும்
அறியாத செம்பியன் காவிரிநாட்டில் அரமியத்துப்
பறியாத தூணில்லை; கண்ணன் செய்
பட்டினப்பாலைக்கு அன்று
நெறியால் விடும் தூண் பதினாறுமே
அங்கு நின்றனவே!

சுந்தரபாண்டியன் கடுங்கோபத்தோடு சோழ நாட்டைப் பாழ்செய்து, கழுதையைப் பூட்டி ஏர் உழுது, கவடி விதைதான் (இது எதிரியின் இடத்தை மிகவும் அவமதித்து, அழிக்கிற ஒரு செயல்) என்ற போதும், அவன் தமிழையும் ஆன்மிகத்தையும் மிகமிக மதித்தான். ஆலயங்கள் எதனையும் அவன் சிதைக்கவே இல்லை. அவன் கோபமெல்லாம் மன்னர்கள், தளபதிகள், உயர்நிலை அதிகாரிகள் மீதே இருந்தது. அவர்கள் வசித்த உயரிய மாளிகைகளையே அவன் இடித்துத் தரைமட்டமாக்கினான். ஆலயங்களையோ, கல்விக் கூடங்களையோ, ஏழை எளிய மக்கள் வாழும் குடிசைகளையோ அவன் நிர்மூலமாக்க முனையவே இல்லை.

மாறாக, சுந்தரபாண்டியன் சோழநாட்டு ஆலயங்கள் பலவற்றிலும், திருப்பணிகளையே மேற்கொண்டான். அதிலும் தஞ்சை, தில்லை, திருவேங்கடம், திருவரங்கம் போன்ற இடங்களில் உள்ள ஆலயங்களுக்கு அவன் வாரி வழங்கிய கொடையும் செய்த திருப்பணிகளும் அனந்தம்.


வெற்றி வீரனான சுந்தரபாண்டியன், திருவரங்க ஆலயத்திற்கு அள்ளிக்கொடுத்த செல்வங்களை அறியும்போது, அவனுடைய பக்தி கண்டு நம் நெஞ்சம் பூரிக்கிறது; மெய் சிலிர்க்கிறது; வியப்பில விழிகள் விரிகின்றன.
பாண்டியர்கள் சந்திரகுலத்தவர்கள் என்பது வரலாறு. ‘சமஸ்த ஜகதார சோமகுலத்திலக’ எனச் சாசனங்களால் புகழப்படுபவனும், ‘எம்மண்டலமும் கொண்டு கோயில் பொன்வேய்ந்த பெருமாள் சுந்தர பாண்டியத்தேவர்’ என்று சிறப்பு விருதுகளால் கொண்டாடப்படுபவனும் சேரர், சோழர், தெலுங்குச் சோழர் - காகதீயர்-காடவர்-போசளர் ஆகியோரை வெற்றி கொண்டவனுமான சுந்தரபாண்டியன் திருவரங்கம் ஆலயத்திற்கு நான்கு விதிகளில் இருபத்து நான்கு துலாபுருஷ மண்டபங்கள் கட்டுவித்து, அவற்றில் அமைக்கப்பெற்ற பிரமாண்ட துலாக்கோலில் ஏறியமர்ந்து, தன் எடைக்கு எடை பொன்னையும் நவமணிகளையும் வாரி வழங்கினான்.
 
---------------------------------------------------------------------------------------------------------

சமையல் முடிந்தது

சமையல் முடிந்தது 
சமையல் முடிந்துப்
பரிமாறிச் சாப்பிட்ட நினைவோடு
கைகழுவி மறக்க
விடமாட்டார்கள் விமர்சன
விற்பன்னர்கள்.
என்னென்ன ஐட்டத்தில்
என்னென்ன குறைநிறை
சமுதாயப் பார்வை
எப்படித் தப்பித்தப்பி உப்புக்குப்
பதிலாய் உறைப்பைக்
கூட்டியது அல்லது குறைத்ததென
விமரிசையாக விளம்பாவிட்டால்
அவர்களுக்கென்ன மரியாதை?
ஆனால் அவர்கள் சொல்லி
இவர்கள் சொல்லி
அடுத்த சமையல்
மாறுவதே இல்லை.
ருசி மாற்றத்திற்காகச்
சமைப்போர் சமைக்கிறார்கள்
சாப்பிடுவோர் சாப்பிடுகிறார்கள்
விமர்சகர்கள் விளம்புகிறார்கள்.
ஓஹோ, அப்படியாவென்று
கேட்டபடி வந்தவர்கள்
அகல்கிறார்கள் வந்தவழியில்.
விமர்சகர்வேறு குறி  பார்க்கிறார்.
விமர்சிக்காவிட்டால் அவர்
விமரிசகராக இருக்கமுடியாது.
சிலர் சமைக்கிறார்கள்
பலர் சாப்பிடுகிறார்கள்
சிலர் சாப்பிட்டுவிட்டு
விமரிசகர்களாக ஜீவிக்கிறார்கள்.

--------------------------------------------------------------------------------------------------
--------------------------------------------------------------------------------------------------
From:     vaiyavankavithaigal.blogspot.com

இவ்வளவு செல்வங்களைத் ‘துலாபாரம்’ செய்தும் சுந்தரபாண்டியனுக்குப் போதும் என்று தோன்றவில்லை. தான் மட்டும் துலாத் தட்டில் ஏறி நின்று அறக்கொடை வழங்குவதா? தன் வெற்றிகளுக்கெல்லாம் துணை நின்ற பட்டத்து யானையோடல்லவா நாம் துலாத்தட்டில் ஏற வேண்டும் என்று எண்ணினான்.

ஆம்; அரசன் என்றால், அவன் பட்டத்து யானை மீது ஏறி நகருலா வரும் கம்பீரமான காட்சிதானே எவர் நினைவிலும் எழும்?

ஆனால், யானையை ஏற்றி நிறுத்தக்கூடிய துலாக்கோல் எங்கே இருக்கிறது?

சுந்தரபாண்டியன் யோசித்தான். அவனுக்கு ஒரு புதுமையான யோசனை தோனறியது.

ஒரே அளவுடைய இரு படகுகள் தயார் செய்யப்பட்டன. அவை தங்கத் தகடுகளால் அலங்கரிக்கப்பட்டன. பிறகு அவ்விரு படகுகளையும் காவிரியில் மிதக்கவிடச் செய்த சுந்தரபாண்டியன், தன் பட்டத்து யானையை ஒரு படகில் ஏற்றி நிறுத்தி, அதன்மீது தானும் அமர்ந்து கொண்டான். இந்தப் படகு எந்த அளவுக்கு நீரில் அமிழ்ந்ததோ, அந்த அளவு அதாவது படகு அமிழ்ந்த நீர்மட்டம் படகில் குறிக்கப்பட்டது. இதே அளவு காலியாக இருந்த இன்னொரு படகில் குறிப்பிடப்பட்டது. பிறகு இந்த இரண்டாவது படகில் தங்கம், நவரத்தினங்கள், ஆபரணங்கள் என்று பொற்குவியல்கள் நிரப்பப்பட்டன. இந்த பொக்கிஷப் படகில் குறிக்கப்பட்ட எடைக் கோடு, நீர் மட்டத்துக்கு சரியாக வர, இந்தப் படகு, பட்டத்து யானை ஏறிய படகின் எடைக்குச் சமம் என்றாகியது! (ஆர்க்கிமிடீஸின் பௌதிக தத்துவத்தை அவர் அதைக் கண்டுபிடித்ததாகச் சொல்லப்பட்ட காலத்திற்குப் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே நம் தமிழன் ஒருவன் கண்டுபிடித்ததோடு, செயல்படுத்தியும் காட்டிவிட்டான்!) பிறகு அவ்விரு தங்கப் படகுகளும் பட்டத்து யானையின் எடை அளவுக்குக் குவிக்கப்பெற்ற பொன், முத்து, வைரக் குவியலும் அப்படியே திருவரங்கம் ஆலயத்துக்கு அளிக்கப் பெற்றன.

சுந்தரபாண்யடின், அரங்கனுக்கு அளித்த இந்தத் துலாபார அர்ப்பணிப்பு உலக அதிசயங்களில் ஒன்று என்றாலும் மிகையில்லை. வேறெங்கும் காணமுடியாத, வேறெவரும் செய்திராத  ‘அறக்கொடை’ இதுவென்று எண்ணும்போது, நாம் மகிழ்ச்சிப் பரவசப்படலாமல்லவா?

இவ்வளவு அறக்கொடைகள் வழங்கியும் இம்மன்னனின் ஒரு கோரிக்கையை அரங்கன் ஆலய நிர்வாகிகள் ஏற்க மறுத்து விட்டனர் என்பது இதனினும் ஆச்சரியமூட்டும் செய்தியாகும்.

வேறொன்றும் இல்லை, அரங்கன் சந்நிதியினுள் அரங்கனை வணங்கியபடி தான் இருக்கும் கோலத்தில் ஓர் உருவச் சிலையை வைக்க விரும்பினான் சுந்தரபாண்டியன். இதை அனுமதிக்க முடியாதென்று மறுத்து விட்டனர் அந்த அதிகாரிகள்.

சுந்தரபாண்டியனின் ஆசையோ, கோரிக்கையோ அப்படியொன்றும் அதீதமானதல்ல. தமிழ்நாட்டில், பல ஆலயங்களில் அவற்றிற்குத் திருப்பணி செய்த மன்னர்களின் திருவுருவச் சிலைகள் இடம் பெற்றிருப்பது நாம் இன்றளவும் கண்டு மகிழத்தக்கதாகவே உள்ளன. சுந்தரபாண்டியன் சிலையும் வேறுபல ஆலயங்களில் இருப்பது உண்மை. பின் ஏன் திருவரங்க ஆலய நிர்வாகிகள் மறுத்தனர்?

‘இவன் சோழநாட்டின் மீது படையெடுத்து வந்தவன்தானே? மாபெரும் அழிவுகளை நிகழ்த்தியவன் தானே?’ என்கிற எண்ணம் காரணமாக இருக்கலாமோ, என்னவோ! எதுவாயினும், அவர்கள் துணிவைப் பாராட்டுகிற அதே வேளையில் சுந்தரபாண்டியனின் பரந்த மனப்பான்மையையும் பெருந் தன்மையையும் எண்ணிப் போற்றத்தான் வேண்டியிருக்கிறது.
அதிபயங்கரனாக அவனை எண்ணி எதிரி நாட்டு மன்னர்களெல்லாம் நடுங்கிக் கிடக்கும் நிலையில், அவன் மட்டும் நீதி, நேர்மைப் பண்புகளைப் புறந்தள்ளுகிற கொடியவனாக இருந்திருப்பின், அந்த ஆலய அதிகாரிகளை அழித்தொழிக்க எத்தனை நாழி தேவைப்பட்டிருக்கும்? நொடிப்பொழுதில் அப்படிச் செய்திருக்கவியலாதா என்ன? ஆனால்? சுந்தரபாண்டியன் அவர்களிடம் மூர்க்கம் காட்டவில்லை. அமைதியான அணுகுமுறைகளையே கையாண்டு பேச்சுவார்த்தை நடத்தினான்.

எவ்வளவு நாடகள் தெரியுமா? இரண்டாண்டுக் காலம்! அதுவரை சுந்தரன் வழங்கிய பொன்மணிக் குவியலை ஆலய அதிகாரிகள் தொடவே இல்லை. அவை அப்படியே அரங்கன் சந்நதி முன் குவிந்து கிடந்தன.
பாண்டியன் படையெடுப்பு முடிந்து, அவன் மதுரை திரும்பும் வேளை வந்துவிட்டது. அவன் ஆயிரத்தளி அரண்மனையில் (கும்பகோணம் அருகில் உள்ள பழையாறையில்) அமர்ந்து வீராபிஷேகம் செய்து, தன் முழுமையான சோழ தேச வெற்றியைக் கொண்டாடி மகிழ்ந்து, தில்லையிலும் தஞ்சைப் பெரிய கோயிலிலும் திருப்பணிகள் கூட நிகழ்த்தி முடித்து விட்டான். அவ்வளவு ஏன், சோழ, பாண்டிய எல்லையில் உள்ள பொன்னமராவதியில், தோற்ற சோழ மன்னன் தன் மகனுடன் சென்று பாண்டியனைப் பணிந்தபின் அவர்களை மன்னித்து, மீண்டும் சோழநாட்டு ஆட்சிப் பொறுப்பை அவர்களுக்கே வழங்கியும் விட்டான்.

இன்னமும் திருவரங்க ஆலய அதிகாரிகள் நிலையிலிருந்து மாறவில்லை என்பதை அறிந்த சுந்தரபாண்டியன், அவர்களின் நேர்மைத் திறத்தை, நெஞ்சுறுதியைப் பாராட்டினான். ‘சரி, என் உருவச் சிலையை அரங்கன் சந்நதியில் வைக்க வேண்டாம். நான் அதை வற்புறுத்த விரும்பவில்லை. நானளித்த பொற்குவியலை வைத்து, அரங்கன் ஆலயத் திருப்பணிகளை மேற்கொள்ளவாவது சம்மதிப்பீர்களா?’ என்று கேட்டு, ஓலை அனுப்பினான்.
அரங்கன் ஆலய அதிகாரிகள் இதற்கு முழு இசைவை மகிழ்வுடன் தெரிவித்தனர்.

சுந்தரபாண்டியன், சிறந்த பொன்வினைஞர்களை அனுப்பி, அரங்கன் திருவுருவையும் தேவியர் திருவுருவங்களையும் பொன்னால் செய்தளித்தான். அத்தெய்வத் திருமேனிகளை வைரங்களாலும் நவமணியாரங்களாலும் அலங்கரிக்கச் செய்தான். அரங்கனின் ஆலய விமானம் முழுவதும் பொன் வேயப்பட்டது. முழு ஆலயமும் கோபுரங்களும் மண்டபங்களும் செப்பனிடப்பட்டன. இரண்டாம் திருச்சுற்றின் கிழக்குச் சுவரில் இருபுறமும் தன் சோழதேச வெற்றியின் நினைவாக, இணை கயல் சின்னங்களை (இரட்டை மீன்கள்) பொறிக்கச் செய்தான். ‘ஹேமாச்சாதன ராஜா’ என, பாண்டியன் விருது ஒன்றும் பொறிக்கப்பெற்றது. ‘பொன் வேய்ந்த பெருமாள்’ எனப் புலவரெல்லாம் அவனைப் போற்றிச் சிறப்பித்தனர்.
அருமையான குடமுழுக்கு விழாவை நிகழ்த்தி, அரங்கன் ஆசிபெற்றபின், அமைதியாக மதுரை திரும்பினான் சுந்தரபாண்டியன். இவனுடைய இத்திருப்பணிகளை புகழ்ந்துரைக்கும் கல்வெட்டுப் பாடல் ஒன்று.

‘பாயல் கொள்ளும் பரமயோகத்து ஒரு பெருங்
 கடவுளும்
இனிதுறையும் இருபெருங் காவிரி இடை நிலத்
 திலங்கும்
திருவரங்கம் பெருஞ்செல்வம் சிறப்புப் பன்முறை
அணி
துலாபாரமேறிப் பொன்மலையென்னப் பொலிந்து
 தோன்றவும்’

-என்று குறிப்பிடுகின்றது.

அறம் தழைக்க, ஆன்மிகம் சிறக்கப் பொன் வேய்ந்த மகிபதி சுந்தரபாண்டியன் ஆற்றிய செயல் மகத்தானது என்பதில் ஐயமில்லை.
                                                                                                                                                                                       

ரியொட் அலிமு

ரியொட் அலிமு   


எத்தியோப்பியாவில் பத்திரிகையாளராக பணியாற்றிவந்த ரியொட் அலிமு   
( REEYOT ALEMU )   இன்று சிறையில் உள்ளார். "மாற்றம்' எனும் இதழை நடத்திய இவர் சமூக அவலங்களையும் அரசியல் தகிடுதத்தங்களையும் எந்தவித அச்சமும் இன்றி ஊடகங்கள் வழியாக பொதுமக்களுக்கு எடுத்துச் சென்றதன் பயனாக 2013-ஆம் ஆண்டிற்கான சிறந்த உலக பத்திரிகையாளருக்கான "யுனெஸ்கோ குல்லெர்மோ கனோ' விருதினைப் பெறுகிறார். இவர் ஒரு பெண். இவர் 2010-இல் ஒரு பதிப்பகத்தினையும், ஒரு மாத இதழையும் சொந்தமாகத் தொடங்கினார்.

எத்தியோப்பியாவில் வாரந்தோறும் வெளியாகும் தேசிய செய்தி இதழான "ஃபெட்டி' எனும் இதழில் ஜூன் 2011-இல் பணியாற்றிக்கொண்டு இருந்தபோது கைது செய்யப்பட்டார். ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு இன்று எத்தியோப்பாவில் உள்ள கலீட்டி சிறையில் சிறை வைக்கப்பட்டுள்ளார். அவர் செய்த தவறு, மக்களை விழிப்படையச் செய்யும் வகையிலான கட்டுரைகள் எழுதியது மட்டுமே.

இலங்கையைச் சேர்ந்த லசந்தா விக்ரமசிங்கேவுக்கு 2009-ஆம் ஆண்டிற்கான "யுனஸ்கோ குல்லெர்மோ கனோ' விருது, அவரது இறப்புக்குப் பிறகு வழங்கப்பட்டது. 2009 ஜனவரி 8-இல் ஆயுதம் தாங்கிய மர்ம நபர்களால் இலங்கையில் கொல்லப்பட்டார் லசந்தா. அதற்கான காரணம் வாசகர்களுக்கே புரிந்திருக்கும் 

சீனாவைச் சேர்ந்த இருவர் யுனஸ்கோ குல்லெர்மோ கனோ விருதினைப் பெற்றுள்ளனர். ஹா யூ 1997-இலும்,

செங் ழ்யோங் 2005-இலும், இந்த உயரிய விருதினைப் பெற்றுள்ளனர். இவர்கள் இருவரும் சிறை வைக்கப்பட்டனர்.

1. ஏன், குல்லெர்மோ கனோ பெயரில் விருது வழங்கப்படுகிறது? 1925 ஆகஸ்ட் 12-இல் கொலம்பியாவில் உள்ள பகொடாவில் பிறந்த கனோவின் முழுப் பெயர் குல்லெர்மோ கனோ ஐசசா. தனது 27-ஆவது வயதில் "எல் எஸ்பக்டேடர்' எனும் அந்த நாட்டின் புகழ்பெற்ற பத்திரிகையின் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். குல்லெர்மோ கனோ, போதைப் பொருள் கடத்தும் மாபியா பற்றியச் செய்திகளைத் தனது இதழில் வெளியிட்டு வந்தார். பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் தைரியமாக தனது பணியைச் செய்து வந்தார். இவரது செய்திகள் கொலம்பிய மக்கள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்தின. மாபியாக்கள் மத்தியில் இது பிரச்னையினை ஏற்படுத்தியது. 16 டிசம்பர் 1986-இல் அவரது பத்திரிகை அலுவலகத்திற்கு வெளியில் வைத்தே கனோ சுடப்பட்டார். அவர் இறந்து மூன்று வருடத்திற்கு பின், அந்த "எல் எஸ்பக்டேடர்ட பத்திரிகைக் கட்டடமும் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது.

1991-இல் நமீபியாவில் யுனஸ்கோவின் ஆதரவுடன் நடைபெற்ற ஊடகம் தொடர்பான கருத்தரங்கில் "வின்ட்ஹாக் பிரகடனம்' வெளியிடப்பட்டது. தனித்துவமான, சுதந்திரமான அமைப்பாக ஊடகங்கள் இருக்கவேண்டும் எனக் கூறும் இந்தப் பிரகடனம் உருவான நாளே மே 3. அதனையே கடந்த பதினைந்து ஆண்டுகளாக உலக பத்திரிகைச் சுதந்திர தினமாகக் கொண்டாடி வருகிறார்கள்.                                                                                                                                   

நன்றி :- தங்க.ஜெயசக்திவேல், திருநெல்வேலி, 

சீரழிக்கும் “சீரியல்கள்”


சீரழிக்கும் “சீரியல்கள்” - 

நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை நிறுத்துவது,
 கொலைசெய்யத் திட்டமிடுவது, 
அப்பாவியைச் சிறையில் தள்ளுவது, 
வயிற்றில் வளர்ந்த கருவைக் கலைப்பது, 
கருவே உருவாகாமல் தடுத்துவிடுவது, 
பிறந்த குழந்தையைக் கடத்துவது,
 பச்சைக் குழந்தையை மாற்றுவது, 
மாமியாருக்கு மருமகள் விஷம் வைப்பது,
 மருமகளுக்கு மாமியார் விஷம் வைப்பது, 
கணவனையே கொல்ல சதித் திட்டம் தீட்டுவது, 
கணவருக்கு எதிராக எதிராளியுடன் சேர்ந்து சதி செய்வது, 
திருமணம் ஆன தம்பதியருக்கு முதலிரவுச் சடங்குகள் நடக்காமல் தடங்கல் செய்வது, 
போலியாக மணப்பெண்ணை உருவாக்குவது, 
குண்டர்களின் உதவியைக் குடும்பப் பெண்கள் நாடுவது,
காவல்துறை அதிகாரிகளைக் கைக்குள் போட்டுக்கொண்டு மற்றவர்களை ஆட்டிப்படைப்பது, 
சூனியக்காரியின் உதவியால் அச்சுறுத்துவது,
சாமியார்களின் உதவியை நாடி குடும்பங்களைக் கலைப்பது, கணவனைவிட்டுவிட்டு இன்னொருவனை நாடுவது 
சொந்த மனைவியை விட்டுவிட்டு மாற்றான் மனைவி தேடுவது ...

இதெல்லாம் என்ன குற்றங்களின் பட்டியலா என்று யோசிக்கிறீர்களா?

இவை தான் நம் அருமைத்தாய் மார்களும் இன்றைய பெண்குலமும் முற்பகலி லும் மாலையிலும் இரவு வரையும் பார்க்கும் டிவி  சீரியல்களின் கதைப்போக்கு.

எப்படி எப்படி எல்லாம் மேற்கண்ட ஐட்டங்களில் ஒன்றை  மிகவும் சுவையோடு திட்டம் தீட்டி அரங்கேற்றி அடுத்து நடக்கப்  போவதற்கு ஆவலோடு காத்திருக்கச் செய்வது .. இப்படிபோகும் சீரியல்கள் குற்றம் செய்யத் தெரியாதவர்களுக்கு பாடம் நடத்திப்பக்குவமான முறையில் குற்றம்  செய்வதைக் கற்றுத்தருவதுதான் இன்றைய சீரியல்கள்.
இதெல்லாம் ஆண்கள் செய்வது பழைய பேஷன் 

இந்த தீங்குகளையெல்லாம் கதைகளில் பெரும்பாலும் பெண் கதாபாத்திரங்கள்தான் செய்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள மகளிர் அமைப்புகளும் மகளிர் நலம்நாடும் ஆர்வலர்களும், பெண்ணுரிமைக்காகவே கொடிபிடிக்கும் இயக்கங்களும் இதைப்பற்றியெல்லாம் கொஞ்சமும் சூடு சொரணையில்லாமல் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் வேதனையை என்னவென்பது?

இல்லத்தரசிகள், "ஹோம்-மேக்கர்'கள், "ஹௌஸ் -ஒய்ஃப்' என்றெல்லாம் பட்டம் தாங்கி பெருமைப்படும் பெண்கள் ஒட்டுமொத்தமாக இந்தத் தொடர்களைப் புறக்கணித்தால் (அது நடக்கிற காரியமா?) நல்ல பொழுதுபோக்கு அம்சமுள்ள, தரமான கதைகளைத் தயாரிப்பார்கள்; இல்லையென்றால் எல்லோருடைய மனங்களிலும் விஷத்தைத் தூவும் இந்த சாக்கடைகளே தொடர்ந்து தொலைக்காட்சிகளில் ஓடும்.

உருப்படுமா நாடு?

ஆண்களைக் கெடுக்க மதுக்கடைகளும் பெண்களைக் கெடுக்க இந்த நெடுந்தொடர்களும் தமிழ்நாட்டைப் பிடித்த இரட்டைச் சாபங்களாகத் தொடர்கின்றன.

இளம்பெண்கள், கருவுற்ற பெண்கள், குடும்பப் பெண்கள் தொடர்களைப் பார்க்க வேண்டாம், தவிர்த்துவிடுங்கள் என்று ஆன்மிகச் சொற்பொழிவாளர் ஒருவர் சமீபத்தில் உருக்கமாக வேண்டுகோள்கூட விடுத்தார்.

மத்திய, மாநில அரசுகள் இந்தத் தொடர்களையெல்லாம் கட்டுப்படுத்த முயற்சிகள் எடுக்காது.கேட்டால் கருத்து சுதந்திரம் , தலையிடக்கூடாது என்பார்கள்.

மிக முக்கியமான காரணம்  அது மட்டுமா?

தொலைக்காட்சி நிறுவனங்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் அரசியல்வாதிகள்தான் நடத்துகிறார்கள். அவர்களுக்கு இந்தச் சமுதாயம் உருப்பட்டுவிடுவதை  விட கெட்டுப்போவதில்தான் ஆவல். 

உருப்பட்டால் ஒரு சிங்கிள் பைசா கிடைக்காது.அவர்கள் குடும்பத்துக்கு "நிதி' வேண்டுமே! யார் கொடுப்பது? இருக்கவே இருக்கிறது மக்களின் மதி. மகளிருக்கும்  எப்படி ஐயா பொழுது போகும்?
தங்களுடைய "மதி'யை அடகுவைத்து இவற்றைத் தொடர்ந்து பார்ப்பதையே அவர்கள் விரும்புவார்கள். ஊக்குவிப்பார்கள்.
உற்சாகமூட்டி வளர்ப்பார்கள்.

நாம்தான் விழிப்போடு இருக்க வேண்டும்

நமக்குத்தான் விழிப்பு வேண்டும்.

எப்படி வரும் விழிப்பு என்கிறீர்களா?

யோசிக்க வேண்டிய கேள்வி.

நன்றி:ஜி.கிருஷ்ணமூர்த்தி, சத்தியமங்கலம்

Sunday, 12 May 2013

எம்.ஜி.ஆர். மாதிரி இருக்கிறார் நா.பா

நா.பா

இவர் நடிக்க வந்திருந்தால் எனக்கு ஒரு போட்டி

நா.பா.வின் எழுத்தில் மயங்கியவர்களும் உண்டு; அவருடைய தோற்றப் பொலிவில் மயங்கியவர்களும் உண்டு. கம்பீரமான தோற்றம். அவர் நடந்துசென்றால், ‘யாரோ நடிகர் மாதிரி இருக்கே... இவர் யாராக இருக்கும்’ என்று பலரும் காதுபடவே பேசுவர். இப்படிச்சிலர் என்னை அழைத்து விசாரித்ததுண்டு. நிமிர்ந்த நடை, யார்க்கும் அஞ்சாத தோற்றம். இத்தனைக்கும் ஒப்பனைகள் ஏதுமின்றி, எளிய கதராடைகளிலேயே அவர் வலம் வருவார்.

கட்சி மேடைகளாயினும் சரி, இலக்கிய மேடைகளாயினும் சரி, அவர் தங்களோடு வீற்றிருப்பதை அனைவரும் பெருமையாகவே எண்ணினர்.
ஜெமினி அதிபர் வாசன் ஒருமுறை நா.பா.வை ‘நீங்கள் என் படங்களில் நடிக்க விரும்புகிறீர்களா?’என்று கேட்டதாக ஒரு செய்தி நான் கேள்விப்பட்டதுண்டு.
நா.பா.ரஷ்யா, ஜெர்மனி, பிரான்ஸ் இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு ஒரு இலக்கியச் சுற்றுப்பயணம் சென்று திரும்பிய சமயம், அவருக்கொரு பாராட்டுவிழா சென்னை, அண்ணாசாலையிலுள்ள தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ‘எனக்கு நா.பா.வைப் பார்க்கும் பொழுது பொறாமையாக இருக்கிறது. இவர்மட்டும் நடிக்க வந்திருந்தால் எனக்கு ஒரு போட்டியாக இருந்திருப்பார். இவரளவு நான் அழகாக இருந்திருந்தால் இன்னும் எத்தனையோ வெற்றிச் சிகரங்களை எட்டியிருப்பேன். அப்பா... என்னவொரு கம்பீரம்!’ என மனம்விட்டுப் பாராட்டினார்.

இன்னும் எத்தனையோ பேர், ‘எம்.ஜி.ஆர். மாதிரி இருக்கிறார் நா.பா.’ என்று புகழ்ந்ததைக் கேட்டிருக்கிறேன்.
ஒருமுறை சத்தியமூர்த்தி பவனில் நா.பா.வின் ‘சத்திய வெள்ளம்’ நாவல் வெளியீட்டு விழா நடந்தது. பெருந்தலைவர் காமராஜர் நூலை வெளியிட்டு, நா.பா.வை வாழ்த்திப் பேசினார். பேராசிரியர் பா.ராமச்சந்திரன் தலைமை ஏற்றிருந்தார். அப்போது காங்கிரஸ் கட்சி பிளவுற்று, தமிழகத்தில் பழைய காங்கிரஸ் என்ற பெயரில் இயங்கியதாக நினைவு இதற்கு பா. ராமசந்திரன்தான் தலைவர். நூல் வெளியீட்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. நானும் திருமலையும் ஓடிஓடி உழைத்தோம். பெருந்தலைவர் காமராஜர் மீது நா.பா.வுக்கு ஈடுபாடு அதிகம். அடிக்கடி அவரைச் சந்திக்கச் செல்வார். அவரும் நா.பா.வின் புதல்வன் நாராயணனை மடிமீது தூக்கி வைத்துக் கொஞ்சுவார்.

கட்சிக் கூட்டங்களுக்கு தேதி வாங்க, பயணச்சீட்டு வாங்கவெல்லாம் பெரும்பாலும் நான்தான் செல்வேன். இந்த வகையில் மூப்பனார், திண்டிவனம் ராமமூர்த்தி, டி.என். அனந்தநாயகி, குமரி அனந்தன், தி.சு. கிள்ளிவளவன், பி.ஜி. கருத்திருமன் எனப் பலரை நான் சந்திக்க நேர்ந்திருக்கிறது. இவர்களிடம் சிறு சிறு பேட்டிகளும் எடுத்து நான் தீபத்தில் எழுதியதுண்டு.

இதயம் பேசுகிறது மணியன்


‘நீ வேறு இடம் தேடு

தி.மு.க.விலிருந்து எம்.ஜி.ஆர் பிரிந்து, அ.தி.மு.க.வை ஆரம்பித்திருந்தார். நா.பா. சில கூட்டங்களில் எம்.ஜி.ஆரை விமரிசித்துப் பேசியதால் ரசிகர்கள் நா.பா.மீது கோபத்துடன் இருந்தனர். ஒரு நாள் நா.பா.வின் கார் தாக்கப்பட்டது. அதுவும் அவர் வீட்டுக்கு அருகிலேயே, சாலையிலிருந்து அவர் வீட்டுக்குத் திரும்புகிற முனையில் ஒரு ஹாஸ்டல் உண்டு. அதில் தங்கியிருந்த மாணவர்கள் சிலர் நா.பா.வைத் தாக்கத் திரண்டு வந்தனர். காரை நா.பா.பதற்றத்தில் திருப்ப முயல, சிறுவிபத்து நிகழ்ந்தது. கார் ஒரு கல் மேடையில் மோதி நிற்க, அவர் இறங்கி எப்படியோ தப்பிவிட்டார். கோபத்தோடு வந்தவர்கள் காரை அடித்து நொறுக்க, உள்ளே நான் மாட்டிக் கொண்டு விட்டேன். இரத்தம் சொட்டக் கிடந்த என்னை போலீஸ் உதவியோடு, பொது மக்கள்தான் மீட்டனர். அதற்குள் நா.பா.வும் ஆட்களைத் திரட்டி வந்தார்.

1976-ல் என் மகன் பிறந்தான். மனைவி பிரசவத்திற்காகத் திருச்சி சென்ற பிறகு நான் வீட்டைக் காலி செய்து விட்டு, தீபம் அலுவலகத்திலேயே தங்கியிருந்தேன். ஓட்டல் சாப்பாடு ஒத்துக் கொள்ளாமல், வயிற்று வலியால் சிரமப்பட்டேன். ராயப்பேட்டை மருத்துவமனையில் ஒரு நள்ளிரவில் சேர்க்கப்பட்டு, வயிற்றில் குடல் வால் அறுவை சிகிச்சை நிகழ்ந்தது.  ஆறுமாதம் கழித்து மனைவி வந்தாள் மகனுடன். வீடு பார்த்துக் குடியேறினேன். செலவுகள்.... பணம் போதவில்லை. நா.பா.விடம் சொன்னேன். ‘சரி, நீ வேறு வேலை தேடு’ என்று கூறினார். இடையில் நா.பா.ரஷ்யா சென்றிருந்த சமயம் நான் ஒன்றிரண்டு மாதம் ‘அலை ஓசை’ நாளிதழில் புரூப்ரீடராக வேலை பார்த்தேன்.

திருவாரூர் தியாகராஜன் (சின்னக்குத்தூசி) இந்த வேலையை எனக்கு வாங்கித் தந்திருந்தார். நாளிதழ் என்பதால், மதியத்துக்கு மேல் வேலை இராது. உடனே ‘தீபம்’ அலுவலகம் வந்துவிடுவேன். இதுவும் சம்பத் என்று சொன்னேனே, அவருக்கு உடல் நலமில்லையென்று லீவு போட்டிருந்ததால் கிடைத்த வேலை தான். சம்பத் அங்கு திரும்பிவந்ததும் நான் அந்த வேலையை விட வேண்டியதாகி விட்டது. அப்போது தான் இரத்தினகிரி பாலமுருகடிமை சாமியார் ஒரு கொலை வழக்கில் சிக்கி, அச்செய்தி பரபரப்பாக ‘அலை ஓசை’யில் வந்து கொண்டிருந்தது.

நா.பா. வே, ‘நீ வேறு இடம் தேடு’ என்று கூறிவிட்டதால், நான் பெரியவர் கி.வா.ஜ. அவர்களிடம் போய் நின்றேன். ‘கலைமகள்’ இதழில் என் சிறுகதைகள் ஒன்றிரண்டு பிரசுரமாகியிருந்தன. நா.பா. முற்போக்குச் சிந்தனை உள்ள ஒரு சினிமா இயக்குநரை நாயகனாக வைத்து, ‘நீல நயனங்கள்’ என்றொரு தொடர்கதையைக் கலைமகளில் எழுதினார். இதற்காக நான் அடிக்கடி அந்த அலுவலகம் செல்வேன். கி.வா.ஜ நன்கு அறிமுகமாகியிருந்தார். அவரிடம் போய் என் கஷ்டங்களைச் சொன்னேன்
.
அவர் உடனே ஒரு கடிதம் எழுதிக் கொடுத்து, ‘இன்று ஹிண்டு நாளிதழில் மணியன் ‘இதயம் பேசுகிறது’ வார இதழ் ஆரம்பிக்கப்போவதாக விளம்பரம் வந்துள்ளது. நீ உடனே மணியனைப் போய்ப்பார். நல்லதே நிகழும்’ என்றார்.
கிண்டியில், ஸ்பிக் பில்டிங்கில் இருந்தது அந்த அலுவலகம். அங்கே போய், மணியனைச் சந்தித்து, கி.வா.ஜ.வின் கடிதம் கொடுத்தேன். அவர் மகிழ்ந்து போய், ‘பெரியவர் - தமிழறிஞரின் ஆசி உன் மூலம் வந்துள்ளது. நீ நாளைக்கே வந்துவிடு’ என்றார். எஸ். லட்சுமி சுப்பிரமணியம், தாமரை மணாளன் போன்றோர் அங்கு இருந்தனர். அது தீபாவளி சமயம். ‘தீபம்’ தீபாவளி இதழ் தயாராகிறது. ‘ஒரு வாரம் டைம் கொடுங்கள்’ என்று கேட்டேன். மணியன் கோபத்தோடு ‘போ...போ’ என்றார். வெளியே நல்ல மழை. நானும் மனசுக்குள் அழுதபடி வந்து பஸ் ஸ்டாப்பில் நின்றேன்.

நா.பா.மீது மணியன் ஏதோ வருத்தத்தில் இருந்தார். இது எனக்குத் தெரியும். நான் மணியனை முன்பே சந்தித்திருக்கிறேன். அதுவும் நா.பாவுக்காகத்தான். எனவே ‘இந்த வேலை கிடைக்காது’ என்றே திரும்பிக் கொண்டிருந்தேன். ஒரு ஆள் ஓடிவந்து, ‘உங்களை மணியன் அழைக்கிறார்’ என்று கூப்பிட்டார். திரும்பிச் சென்றேன். மணியன், ‘எத்தனை பெரிய இடத்து சிபாரிசுகளோடு எல்லாம் என்னைப் பலரும் வந்து சந்தித்து வேலை கேட்கிறார்கள் தெரியுமா? நீ. நா.பா.விடம் இருப்பவன், பெரியவர் கி.வா.ஜ வேறு கடிதம் தந்து அனுப்பியுள்ளார் என்று தானே ‘உடனே வா’ என்றேன். புரியவில்லையே உனக்கு. சரி, போய்விட்டு முதல்தேதி வந்து விடு’ என்றார்.

இதையெல்லாம் நான் நா.பா.விடம் கூறி, ‘எனக்கு வேலை கிடைத்துவிட்டது’ என்றேன். நா.பா. அனுமதிக்க மறுத்தார். ‘அந்த இடம் உனக்கு சரிப்படாது. போகாதே. பிறகு பார்க்கலாம்’ என்றார். இதுதான் எனக்கும் அவருக்கும் ஏற்பட்ட வருத்தம். நான் பிடிவாதமாக வெளியேறி, ‘இதயம் பேசுகிறது’ அலுவலகம் சென்று விட்டேன். அதுவும் தீபம் தீபாவளி இதழை முடித்து விட்டுத்தான்.

பெருமாள் சிலையைக் கிடத்தி வைத்திருப்பது போல...

நா.பா.வின் மரணச் செய்தி

பிறகு நா.பா.வே. ‘தினமணி கதிரில்’ வேலைக்குச் சேர்ந்ததும் ‘தீபம்’ கொஞ்சநாள் வந்து, நின்று போனதும் வேறு விஷயம். நா.பா.வின் மகள் பூரணி கல்யாணப் பத்திரிகை வந்தது. சென்றேன். நா.பா. என்னை அன்புடன் வரவேற்று, நலம் விசாரித்தார். அவருடைய துணைவியார் மற்றும் குழந்தைகள் எல்லாருமே என்னிடம் பிரியம் காட்டினர். நாராயணன் கொஞ்சம் பெரியவனாகியிருந்தான். மீரா சிறுமியாக இருப்பதைப் பார்த்தேன். நா.பா.வுக்கும் தினமணி கதிர் நிர்வாகத்துக்கும் ஏதோ தகராறு. வழக்கு நடந்ததாகவும் கேள்விப்பட்டேன்.

‘இதயம் பேசுகிறது’ வார இதழில் நான் ஓர் உதவி ஆசிரியன் என்ற நிலையிலிருந்ததால், புதிய தொடர்கதை யாரிடம் கேட்கலாம் என மணியன் கேட்டபோது, நான் நா.பா. அவர்களின் பெயரைச் சொன்னேன். அங்கு நான் ஏழு ஆண்டுகள் செல்வாக்கான நிலையில் இருந்தேன். என் பேச்சுக்கு அங்கு மதிப்பு இருந்தது. எடிட்டோரியல் மீட்டிங்கில் நான் நா.பா. பெயரைச் சொன்னதும், ‘என்ன... நன்றிக் கடனா?’ என்று கேட்டு ஒருவர் ஏளனம் செய்தார். நா.பா.வுடன் வருத்தங்கள் இருந்தாலும் அவர்மீது மணியனுக்கு நிறைய மரியாதை உண்டு. சாகித்ய அகாடமி சம்பந்தமாகத் தான் ஏதோ பிரச்சனை என்று கேள்விப்பட்டிருந்தேன். உண்மை விவரம் தெரியாது.

நான் தீபத்திலிருந்த போது நா.பா. ‘மணியனிடம் போய் உதயமூர்த்தி அமெரிக்காவிலிருந்து சென்னைக்கு வந்து எங்கு தங்கியிருக்கிறார் என்று விசாரித்து, முகவரி வாங்கி வா’ என்று அனுப்பினார். விகடன் அலுவலகம் சென்று, மணியனுக்காக காத்திருந்து சந்தித்து, கேட்டேன். அவர் மிகுந்த அன்புடன் என்னை அறைக்கு அழைத்துச் சென்று, அவர் கைப்பட முகவரி எழுதித் தந்தார். ‘நானே வேண்டுமானால், நா.பா.வை அழைத்துச் செல்கிறேன். போனில் பேசச் சொல்’ என்றார். பிறகு மணியனின் ‘மோகம் முப்பது வருடம்’ கதை சினிமாவாக எடுக்கப்பட்டு, ‘தேவி’ தியேட்டரில் பத்திரிகையாளர் காட்சி நடந்தது. இதற்காக நா.பா.வுக்கும் அழைப்பு வந்தது. 

நா.பா. அதை என்னிடம் கொடுத்து, ‘நீ போ. மணியனைப் பார்த்து, ‘ஏதோ அவசர வேலை இருந்ததால் நா.பா. வர முடியவில்லை’ என்று கூறிவிடு...’ என்றார். நானும் அவ்வாறே சென்று, மணியனைச் சந்தித்து, விவரம் கூறினேன். அவர் கோபமாக, ‘ஒரு எழுத்தாளன் கதை சினிமாவாக ஆகியிருக்கிறது என்று மகிழ்ந்து நா.பா.வந்திருக்க வேண்டாமா?’ என்றார். பிறகு ‘சரி, உட்கார்ந்து படம் பார்த்துவிட்டுப் போ’ என்றார். பார்த்தேன். அதைத் தொடர்ந்து ‘பாம்குரோவ்’ ஓட்டலில் நடந்த விருந்துக்கும் சென்று வந்தேன்.

புதிய தொடருக்கு நான் நா.பா. பெயரைச் சொன்னதும் ஒருவர் விமரிசித்தார். ‘சுதந்திரத்திற்குப் பிறகு உள்ள சமுதாயநிலை,  அரசியல் பாதிப்புகள் பற்றியெல்லாம் ஒரு தொடர் எழுதப்பட வேண்டும்’ என்று மணியன் கூறியதை எடுத்துக் காட்டி, ‘இதனால்தான் நா.பா.பெயரைக் கூறினேன்’ என்றேன். நா.பா.வின் ‘ஆத்மாவின் ராகங்கள்’, ‘கங்கை இன்னும் வற்றிவிடவில்லை’, ‘சத்திய வெள்ளம்’ போன்ற கதைகள் அப்படிப்பட்டவை என்பதையும் விவரித்தேன். உடனே மணியன் இசைவு தெரிவித்தார். ஆனால், ‘நா.பா. எழுதுவாரா... நீதான் அவரிடம் பேசவேண்டும்’ என்றார்.

நான் மணியன் தந்த கடிதத்துடன் நா.பா.வை சந்தித்தேன். அவர் எளிதாகச் சம்மதிக்கவே இல்லை. அடுத்தடுத்து போனில் தொடர்பு கொண்டு விசாரித்தேன். அவர், ‘அகிலனிடம் பேசினேன். அவர் இதயம் பேசுகிறது இதழ் பற்றி விமரிசனம் செய்தார். எனக்கும் தயக்கமாக இருக்கிறது’ என்றார். இதயம் பேசுகிறது இதழில் சினிமாவும் கவர்ச்சியும் அதிகம் என்பது அவருடைய குற்றச்சாட்டு. நான் அதை ஒப்புக்கொண்டு, ‘வாரம் இரண்டு லட்சம் காப்பிக்கு மேல் விற்பனையாகும் இதழ். நீங்கள் நல்ல கதை எழுதுங்கள். அதில் கைவைக்க மாட்டோம்... மணியனிடம் எப்படியும் உங்களை எழுத வைப்பதாகச் சொல்லி வந்துள்ளேன்’ என்றேன். நா.பா.சம்மதித்தார். அவர் கேட்ட பணமும் வாங்கிக் கொடுத்தேன். 

‘சுந்தரப் புன்னகை’ என்ற அந்த நாவல் ‘இதயம் பேசுகிறது’ இதழில் தொடராக வந்து முடிவதற்கு முன்பே நான் அங்கிருந்து, வேலையை விட்டு வெளியேறினேன் என்பது வேறு விஷயம்.

கடைசியாக நான் நா.பா.வைச் சந்தித்தது சிவசங்கரி ஆரம்பித்த ‘அக்னி’ அமைப்பின் துவக்க விழாவில்தான். தாஜ்ஓட்டலில் நடைபெற்றதாக நினைவு. அப்போது நான் ஆனந்தவிகடனில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். ‘பஃபே’ சிஸ்டத்தில் அவரவர் உணவை அவரவர் எடுத்து வந்து உன் கையில், நா.பா.என்னருகே வந்து நின்று பேசியபடி சாப்பிட்டார். 

‘ஏன் மணியனிடமிருந்து விலகினாய்?’ என்று கேட்டார். இப்படி வீண் கோபங்களால் அடிக்கடி வேலையைத் தொலைப்பதும் இடம் மாறுவதும் உனக்கு நல்லதில்லை’ என அன்புடன் கடிந்து கொண்டார். ‘நீ என்னிடம் வந்து சொல்லியிருந்தால், நான் உனக்காக மணியனிடம் பேசி, சமாதானம் செய்திருப்பேனே’ என்றார்.

உண்மைதான். நான் ‘இதயம் பேசுகிறது’ இதழிலிருந்து விலகிய செய்தி அறிந்ததும், நா.பா. என்னைச் சந்திக்க விரும்பினார். இது பற்றி தி.க.சி. எனக்கொரு தபால் போட்டு அழைத்தார். பெரியவர் வல்லிக் கண்ணன் வீட்டில் சென்று தி.க.சி அவர்களைச் சந்தித்தேன். அவர் நா.பா.வின் விருப்பம் கூறி,  ‘நீங்கள் போய் நா.பா.வைச் சந்தியுங்கள். நல்லது நிகழும். கவிஞர் விக்கிரமாதித்தன் மாதிரி நீங்கள் ஒவ்வொரு இடத்திலும் கோபத்தால் வேலையை விடுவது சரியல்ல. மணியனுக்கு நான்கூட தபால் எழுதுகிறேன் என்றார். வல்லிக்கண்ணனும் சமாதானமாகப் போகுமாறு கூறினார். நான் அவர்களிடம் நன்றி தெரிவித்து விட்டு, நிலைமையின் சிக்கலை விவரித்தேன். தி.க.சி. அவர்கள் ‘மணியன் மீது வழக்கு தொடுக்கவும் ஆலோசனை கூறினார்.

 ஒரு சிறு பிரச்னைக்காகத் தபால் மூலம் என்னை வேலை நீக்கம் செய்து, கணக்கையும் முடித்திருந்தனர். இதில் சில நியாயங்கள் என் பக்கம் இருந்த போதும், நான் அங்கு திரும்பவும் வேலைக்குச் செல்ல விரும்பவில்லை. எனக்கு ஆனந்த விகடனில் வேலை கிடைத்துவிட்டதைக் கூறி, நா.பா.வுக்கும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டு வந்துவிட்டேன்.

மறுபடியும் மூன்றாண்டுகளுக்குள் வேலையை இழந்து, சின்னக்குத்தூசி அவர்கள் மூலம் நான் குங்குமம் வார இதழில் பணிபுரிந்து கொண்டிருந்த போதுதான் நா.பா.வின் மரணச் செய்தி என்னை வந்து தாக்கியது. மயானம் வரை சென்று மனமுடைந்து நின்றேன். அங்கு நா.பா. அன்பர்கள் ஒரு இரங்கல் கூட்டமும் நடத்தினர். நா.பா.வின் திருத்தோற்றம், அவரது இறுதிக்கிடத்தலில், ஒரு பெருமாள் சிலையைக் கிடத்தி வைத்திருப்பது போலவே தோன்றியது. சாவின் அவல ரேகைகள் எதுவும் அவரது திருவதனப் பொலிவில் மாற்றம் ஏற்படுத்தி விடவில்லை.

மீண்டும் குறிஞ்சி பூத்தது

அகிலன்

அகிலன் ‘சித்திரப்பாவை’ நாவலுக்காக ‘ஞானபீடம்’ விருது பெற்றிருந்த நேரம். நா.பா.வீட்டில் அகிலனுக்கு விருந்தளிக்கப்பட்டது. நிறைய எழுத்தாளர்கள் வந்திருந்தனர். நானும் திருமலையும் ஓடி ஓடிப் பரிமாறி, எல்லோரையும் உபசரித்தோம். ஓட்டலில் இருந்தெல்லாம் எதுவும் வரவழைக்கப்படவில்லை. நா.பா.வீட்டிலேயே அவரது துணைவியார் சுந்தரம் அம்மையார் இனிப்பு மற்றும் சித்ரான்ன வகைகளை அருமையாகத் தயார் செய்திருந்தார். திருமலையின் தங்கையும் (டீச்சர்) ஒத்தாசைகள் புரிந்தார். அது ஒரு குடும்ப நிகழ்ச்சி போலவே அமைந்திருந்தது.


இதே போல் அகிலன் வீட்டிலும் ஒருமுறை விருந்து பரிமாறப்பட்டது. அது, அவர் கஸ்டியன் பீச் சாலையில் புதுவீடு கட்டிப் ‘புதுமனைப் புகு விழா’ நிகழ்த்திய போது

அகிலன் ஞானபீட விருது பெற்றமைக்காக அவருக்கு மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் ஒரு பாராட்டுவிழா ஏற்பாடாயிற்று. இதற்காக நா.பா. காரில் புறப்பட்டார். வழியில் வந்தவாசி, பரங்கிப்பேட்டை, சிதம்பரம் என்று சில ஊர்களில் பொதுக்கூட்டங்களில், நா.பா. பேசவேண்டியிருந்தது. அவர் அப்போது மொரார்ஜி தேசாயின் கட்சியில் இருந்ததாக நினைவு. நா.பா.வுடன் நானும் சென்றேன். கூட்டம் நடக்கிற ஊர்களில் நான் தனியே சென்று, தீபம் ஏஜெண்டுகளிடம் பணம் வசூலிக்கும் வேலையைப் பார்ப்பேன்.

பரங்கிப்பேட்டையில் ஒரு நாளும் சிதம்பரத்தில் ஒரு நாளும் தங்கினோம். சிதம்பரம் கூட்டம் இரவு, டிராவலர்ஸ் பங்களாவில் தங்கியிருந்தோம். பகலில் அண்ணாமலைப் பல்கலை மாணவர்கள் நா.பா.வைச் சந்திக்க வந்திருந்தனர். அவர்களிடம் நா.பா. என்னை ஓர் எழுத்தாளன் என்றே அறிமுகப்படுத்தினார். நான் ஒன்றிரண்டு கதைகள்தான் எழுதியிருந்தேன். இருப்பினும் நா.பா.அறிமுகம் செய்ததால், அவர்கள் என்னை மிகவும் மதித்தனர். விழா ஒன்றில் பேச அழைப்பதாகவும் கூறினர்.

சிதம்பரத்திலிருந்து நள்ளிரவுக்கு மேல் காரில் திருச்சி புறப்பட்டோம். வழியில் கார் ஓரிடத்தில் நிறுத்தப்பட்டு, நா.பா. இறங்கி ஒரு கோவிலைப் பார்த்துக் கொண்டு நின்றார். தூக்கக் கலக்கத்திலிருந்த என்னையும் எழுப்பி, கீழிறங்கச் சொன்னார். இறங்கி வந்து பார்த்தால், நிலா வெளிச்சத்தில் கங்கை கொண்ட சோழபுரம் கோவில் கோபுரம் காட்சியளிக்கிறது. எனக்கு ஆச்சர்யம் தாளவில்லை. புத்தகங்களில், படத்தில் மட்டுமே பார்த்திருந்த, ஒரு புகழ் பெற்ற கோவிலின் அருகிலா நிற்கிறோம் என வியந்து போனேன். இன்னமும் அது கனவு மாதிரி இருக்கிறது. இன்னும் கூட நான் அந்த ஆலயத்தை உள்ளே சென்று தரிசிக்க வாய்ப்பு அமையவில்லை, அன்று நா.பா.வுடன், நள்ளிரவில் பார்த்ததோடு சரி.

நா.பா. அந்தக் கோவில்பற்றியும், சோழர்காலச் சிறப்புகள் பற்றியும் பேசிக்கொண்டே வந்தார். அடுத்து ஓரிடத்தில், ‘இது கீழப்பழுர். கல்கியின் பொன்னியின் செல்வனில் வரும் பழுவேட்டரையர்கள் வாழ்ந்த ஊர்’ என்று கூறினார். அதுபோன்ற இடங்களில் காரை நிறுத்தச் செய்து, ஒரு நிமிட நேரமாவது கீழிறங்கி நின்ற பின் புறப்படுவது நா.பா.வின் வழக்கமாய் இருந்தது. அவர் மனக்குதிரை அங்கெல்லாம் வரலாற்று உணர்வோடு சஞ்சரிக்கும் போல.

நான் அந்த ஊரிலிருந்து திருவையாறு செல்லும் வழியில்தான், கொள்ளிடக் கரையில் எங்கள் சொந்த ஊர் இருப்பதாகவும், அங்கேதான் சின்ன அண்ணன் வீட்டில் என் அம்மா வசிப்பதாகவும் கூறினேன். பார்த்து பத்தாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது என்றேன். நா.பா. ‘நீ மதுரைக்கு வரவேண்டாம். திருச்சியில் இறங்கி, ஊருக்குப் போய் அம்மாவைப் பார். பிறகு சென்னைக்குத் திரும்பு’ என்று கூறிவிட்டார். செலவுக்குப் பணமும் தந்தார். திருச்சியில் இறங்கி, காவிரியில் நீராடி, ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் கோவில்களில் சுவாமி தரிசனம் செய்தபின், டோல்கேட்டில் பஸ் ஏறி, திருமானூர் சென்றேன். இது பெரிய திருப்பமாய் அமைந்தது.

அம்மா, அண்ணனைச் சந்தித்ததும் துண்டிக்கப்பட்டிருந்த குடும்ப உறவு மீண்டும் துளிர்விட்டது. மறுநாளே நான் சென்னை வந்துவிட்டேன். கடிதத் தொடர்புகள் வளர்ந்து, அடுத்த சில மாதங்களிலேயே என் திருமணம் நடந்தேறியது. மனைவி அகிலாவின் ஊர் திருச்சி! சம்பளம் போதவில்லை. நூற்று ஐம்பது ரூபாய்க்கு மேல் சம்பளம் தருகிற நிலையில் ‘தீபம்’ இல்லை. ஒருவருடம் மிகவும் சிரமப்பட்டேன். ‘தீபம்’ இதழின் தோற்றத்திலும் நிறைய மாற்றங்கள். பக்கங்கள் குறைக்கப்பட்டன. அட்டையில் வண்ணப்படம் அச்சிட முடியாத நிலை. காகிதம், அச்சுமை, அலுவலக வாடகை எல்லாம் செலவுகள் கூடின. தீபத்தின் விற்பனை அதிகரிக்கவில்லை. சந்தாதாரர்கள் தீபத்திற்கு அதிகம். மெல்ல மெல்ல சந்தாக்களும் குறையத்துவங்கின. (படைப்புகள் எழுத விரும்புவோர் எண்ணிக்கை மட்டுமே கூடியது.)

நா.பா. நிறைய வெளியூர் சொற்பொழிவுகளுக்குச் சென்று வருவார். இந்த வருமானம்தான் அவருக்கு கைகொடுத்துக் கொண்டிருந்தது. தீபத்தின் தரத்தில் எந்த மாற்றமும் செய்வதை நா.பா. அனுமதிக்க மாட்டார். சினிமா விளம்பரங்கள் போட்டால் கூட, திருமலையை அழைத்துக் கண்டிப்பார். ‘கல்கி’ பத்திரிகையுடன் சில காலம் வருத்தம் கொண்டிருந்த நா.பா. ‘மீண்டும் குறிஞ்சி பூத்தது’ என்று ஒரு கட்டுரை எழுதினார். அதை நான்தான் கொண்டு போய், கல்கி ஆசிரியர் திரு.கி.ராஜேந்திரன் அவர்களிடம் கொடுத்து வந்தேன். இப்போது இருக்கும் வள்ளுவர் கோட்டம் அப்போது இல்லை. ஒரு பெரிய ஏரிப் பள்ளத்தில் இறங்கி, திரு. ராஜேந்திரன் அவர்களின் இல்லத்திற்குச் சென்றேன். கட்டுரை ‘கல்கி’ இதழில் பிரசுரமாயிற்று. நா.பா. - கல்கி உறவில் மீண்டும் குறிஞ்சி பூத்தது.

தொடர்ந்து நா.பா. கல்கி இதழில் ‘தீரன்’ என்ற பெயரில் ‘தமிழ்நாட்டிலே’ எனும் தலைப்பில், வாரம் தோறும் அரசியல் விமரிசனங்களை எழுதினார். பரபரப்பான கட்டுரைகள், சில கட்டுரைகளால் கண்டனங்களுக்கும் ஆளானார். ‘சத்திய வெள்ளம்’ என்ற சமூகத் தொடர்கதை ஒன்றையும் கல்கியில் எழுதினார். இது சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில் நடந்த உதயகுமார் கொலை நிகழ்ச்சியைப் பிரதிபலிப்பதாக அரசியல் நெடியுடன் இருந்தது.

Thursday, 9 May 2013

எங்கள் பாசறை கவிஞர் பொன்னடியானின் பாட்டுப் பாசறை.

கலைமாமணி ஏர்வாடி எஸ். ராதாகிருஷ்ணன்

சரித்திர நாவலாசிரியர் சிறுகதையாசிரியர் தமிழ்மாமணி திரு. கௌதம நீலாம்பரன் அவர்களைப் பற்றி

பெரிய பணக்காரர்கள், பிரபலமான அரசியல்வாதிகள், புகழ்வாய்ந்த கலைஞர்கள், பெரும்பதவி வகிக்கிறவர்களைத் தெரிந்து வைத்திருப்பதில் அல்லது அவர்களோடு பழகுவதில் கிடைக்கிற பெருமையும், பெருமிதமும் பெருந்திறன் வாய்க்கப்பெற்ற படைப்பாளர்களுடனான நட்பிலும், நெருக்கத்திலும் பெற முடியும். இன்னும் சொல்லப் போனால் அதிகமாகவே பெறுதல் கூடும் என்பதைப் பெற்றுணர்ந்து பெருமையுறுகிறவன் நான். மூத்த தலைமுறையாயினும் சரி இளைய தலைமுறையாயினும் சரி அல்லது சமகாலத்துப் படைப்பாளர்களாயினும் சரி அவரை எனக்குத் தெரியும், என்னை அவருக்குத் தெரியும் என்று ஒரு எளிமையான ரசிகனாகக்கூட மாறிப் பெருமகிழ்ச்சியடைவேன்.

அப்படி ஒரு பெருமைதான் கௌதம நீலாம்பரன் என்கிற புகழ்வாய்ந்த படைப்பாளருடன் எனக்கான தொடர்பும் தோழமையும். எனக்குப் பின்னால் இரண்டாண்டுகள் கழித்து இப்போதுதான் அவர் மணிவிழாக் கண்டிருக்கிறார். என்றாலும் நூறாண்டு காலச் சாதனைகளை எழுத்தில் நிகழ்த்தியிருக்கிற இமயமாகவே அவர் எனக்குக் காட்சியளிக்கிறார். அதற்கு எழுத்தை மட்டுமே அவர் நம்பியிருக்கிறார் என்பது மட்டும் காரணமல்ல;  எழுத்துலகமும் அவரை நம்பியிருப்பது கூடுதல் காரணம்.

நாங்கள் இருவருமே சமகாலத்தில்தான் எழுதத் தொடங்கினோம். எங்களுடைய பாசறை கவிஞர் பொன்னடியான் அவர்களுடைய பாட்டுப் பாசறை. எங்களைப் பட்டை தீட்டத் தொடங்கியவரே கவிஞர் பொன்னடியான் அவர்கள்தான். அவருடைய இல்லத்திலும்,  கடற்கரைக் கவியரங்குகளிலும்தான் நானும் நண்பர் கௌதம நீலாம்பரனும் அடிக்கடிச் சந்தித்துக் கொள்வோம்.

எப்போதும்போல அவர் இப்போதும் எளிமையாகத்தான் தோன்றுகிறார். என்றாலும் அப்போது அவரைக் கொஞ்சம் வசதியின்மை வறுத்து வைத்திருந்தது. அலட்டிக் கொள்ள மாட்டார். ஆழ்கடல் போல அமைதியாக இருப்பார். சென்னைக்கு வந்த புதிதில் அவர் அனுபவித்த துன்பங்கள்,  மேற் கொண்ட பணிகளால் நேர்ந்த வலிகள் சொல்லி மாளாது. ஆனாலும் ஒரு பிரகாசமான எதிர் காலத்துக்காகத் தன்னுள் ஆற்றலை வளர்த்துக் கொள்ளத் தவறவில்லை. வாழ்க்கைக்கான வசதிகளை அவர் அதிகமாகப் பெறாது போயினும் நல்ல வாழ்க்கையைப் பெற்றுள்ளார் என்பதை இன்று அவர் வாழும் நிலையான நல்ல வாழ்வு நமக்குப் புலப்படுத்துகிறது.

 ஸ்ரீ அரவிந்தர் அன்னை “நீங்கள் வேண்டிப் பெறவேண்டியது வாழ்க்கை தானே தவிர வாழ்க்கைக்கானவற்றை அல்ல” என்றது நினைவுக்கு வருகிறது. வாழ்வாங்கு வாழ்வதற்கும், வசதியான வாழ்க்கைக்கும் தொடர்பு கிடையாது. நண்பர் கௌதம நீலாம்பரன் நிறைவாக உணரும் நல்ல வாழ்க்கை வாழ்கிறார்.
தமிழில் சரித்திர நாவல்கள் எழுதுவோரின் எண்ணிக்கை எப்போதும் குறைவாக - மிகக் குறைவாக இருக்கும். இருக்கிற பத்து விரல்களே இவர்களை எண்ணிவிடப் போதுமானவை என்றுகூடக் கூறலாம். கல்கி, சாண்டில்யன், ஜெகசிற்பியன், விக்கிரமன், கோவி. மணிசேகரன் போன்ற சரித்திர எழுத்துச் சான்றோர் வரிசையில் வைக்கத்தக்க அளவுக்கு நண்பர் கௌதம நீலாம்பரன் வளர்ந்திருக்கிறார் உயர்ந்திருக்கிறார் என்பதற்கு இத்துறையில் அவருக்கு ஈர்ப்பு,  ஆய்வு நோக்கு,  அபாரமான நினைவாற்றல், ஆழமான சரித்திர அறிவு, எழுத்தாற்றல் போன்றவை காரணம். 

சரித்திரத்தைப் போலவே சமூகக் கதைகளும் அவருக்குச் சிறப்பாக எழுத வருகிறது.‘சரித்திரமும் சமூகமும்’ அவருக்குப் பெரிய புகழைப் பெற்றுத் தந்துள்ளன. ‘சமூகமும் சரித்திரமும்’ என்ற இவரது நூல் வெளியீடு இணைந்த மணி விழாவில் நானும் கலந்து கொள்கிற பேறெனக்கு வாய்த்தது. விழாவில் பங்கேற்பதே பரிசு... கூடவே இந்த நூலும் பரிசாகக் கிடைத்ததில் கனமாவேன். இந்நூலின் பதிப்புரையில் பதிப்பித்த நண்பர் நிவேதிதா சுவாமிநாதன் அவர்கள்,  “உச்சரிக்கும் போதே ஒரு ராஜ கம்பீரத்தை உணர்த்துகிற கௌதம நீலாம்பரன் என்னும் பெயர் தமிழ் வாசகர்களுக்கு நன்கு பரிச்சயமானதுதான்” என்று குறிப்பிட்டிருப்பது முற்றிலும் சரியானது. ஏற்கத்தக்கது. உண்மையிலேயே என் நண்பர் கைலாசநாதனுக்கு கௌதம நீலாம்பரன் என்ற புனைபெயர் ஒரு ராஜ கம்பீரத்தை அளித்துள்ளது.

நண்பர் கௌதம நீலாம்பரனின் பெயர் மட்டுமல்ல. பெயருக்குரிய அவரும் கர்வமறியாத கம்பீரமானவர் (கர்வத்திற்கும் கம்பீரத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளனவென்பது வேறு விஷயம்) சரித்திரமும் சமூகமும் கதை கூறலின் இருவேறு பெரும் பிரிவுகள். இரட்டைத் தண்டவாளங்கள். இரண்டிலும் தடம் பதிப்பதும்,  நடம் புரிவதும் இலகுவான வேலையல்ல;  ஆனால் இவருக்கு எளியது என்றும் அவற்றும் எந்த எழுத்தும் இனியது என்றும் வரலாற்றுப் புகழை வசமாக்கிக் கொண்டுள்ளார்.

எழுத்தில் இவருக்கான பயிற்சி பல்வேறு தமிழ் இதழ்களில் பணியாற்றிய அனுபவத்திலிருந்து மட்டுமல்ல;  பயின்றது புகழ்மிக்க எழுத்துச் சிற்பிகளிடமிருந்து என்பதும் குறிப்பிடத்தக்கது. ‘தீபம்’ பார்த்தசாரதி, ‘இதயம் பேசுகிறது’ ‘ஞானபூமி’ மணியன்,  ‘ஆனந்த விகடன்’  பாலசுப்பிரமணியன்,  ‘குங்குமம்’,  ‘சாவி’ பராசக்தி என்ற பட்டியலே போதும் இவர் பயின்றது பிரமாண்டமான புகழ் வாய்ந்த எழுத்துப் பல்கலைக்கழகங்களில் என்பதற்கான சான்று கூற. இப்போது ‘குங்குமச் சிமிழ்’ மாதம் இரு முறை இதழின் பொறுப்பாசிரியாகப் பணியாற்றுகிறார்.

எழுத்தாளனாகும் எண்ணமே இவருக்குத் தொடக்கத்தில் இல்லையாம். சென்னைக்கு வந்தது ஒரு சினிமா நடிகனாகத்தானாம். ஆகியிருக்கலாம். அழகாகவும் இருக்கிறார். ‘இதயநதி’ என்ற இவரது நூல் கிட்டத்தட்ட ஒரு சுயசரிதை. அதில் இந்த தகவல் அறியத் தரப்பட்டுள்ளது. குறைந்தது பாடலாசிரியராகவாவது முயன்ற இவரைக் கதாசிரியராக்கியவர் தங்கவேலு நாயக்கர் என்பவர்தானாம். கிராமத்திலிருந்தபோது தங்கவேலு நாயக்கர் இராமாயண, மகாபாரதக் கதைகளைச் சொல்லுகிற பாணி, சுவையாகவும், கம்பீரமாகவும் இருக்குமாம்.

சென்னையில் கௌதம நீலாம்பரன், தீபம் பார்த்தசாரதியுடன் பணியாற்றிய நாள்களில் இரவில் தன்னுடைய அறையில் கதை எழுதிப் பார்க்கும் முயற்சிக்கு இக்கதை கேட்ட அனுபவங்கள் உதவியுள்ளன. எல்லா எழுத்தாளர்களுக்கும் நிகழ்ந்தது போலவே பத்திரிகைகளுக்கு எழுதுவதும் அவை பிரசுரமாகாமல் திரும்புவதுமாக ஏமாற்றங்களே தொடக்கமாகி இன்று எழுத்தில் இமயம் காணுமளவு பொறுமையாகப் பயிற்சியும்,  பெருமைகளும் தொடரப் பெற்றுள்ளார்.

கௌதம நீலாம்பரன் அவர்களின் முதற் சிறுகதை என்பதைவிட முதலில் வெளியான சிறுகதையாக  ‘புத்தரின் புன்னகை’ சுதேசமித்திரன் நாளிதழின் வார இதழில் 1970ல் வெளியானது. 

இரண்டாவது சிறுகதை ‘கீத வெள்ளம்’ அக்பர் - தான்சேன் பற்றிய சரித்திரக் கதை வாகீச கலாநிதி கி.வா.ஜ. அவர்களின் ஆசியுடன் கலைமகள் இதழில் வெளியானது. பிறகென்ன உற்சாகம் பெற்றிருப்பார். நிறைய எழுதத் தொடங்கி பிரபலமான வார, மாத இதழ்கள், வானொலி, தொலைக்காட்சி என்று சிறுகதைகள், தொடர்கதைகள், வானொலி நாடகங்கள் பல எழுதிப் புகழ்வாய்ந்த பிரபலமான தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராகி விட்டார். இப்போதும் அவரது எழுத்துப் பணி குன்றாத திறத்தோடும், குறையாத ஆர்வத்தோடும் தொடர்ந்தும், துலங்கியும் நாடறிந்த நல்ல தமிழ் எழுத்தாளராகப் பொலிகிறார். 

கௌதம நீலாம்பரன் நிறைய எழுதினாலும் பேசுவது மிகவும் குறைவு. அதிர்ந்து பேசாத அமைதியான மனிதர்.கௌதம நீலாம்பரன் சிறந்த கவிஞரும் கூட. படைப்பாளர்கள் உரைநடையாளர்களாக மட்டுமல்ல கவிஞர்களாக இருப்பதிலும் வியப்பில்லை. கவிஞர்கள் பிறவகை எழுத்தாற்றலிலும் பொலிவதுண்டு. எங்கள் குருநாதர் கலைமாமணி டாக்டர் விக்கிரமன் அவர்களே கவிதை எழுதித்தான் களம் இறங்கியிருக்கிறார்.

கௌதம நீலாம்பரனின் ‘அம்பரம்’ கவிதை நூல் படித்திருக்கிறேன். எல்லாமும் புதுக்கவிதைகள். அன்பைப் பற்றி எண்ணற்ற கவிதைகள் படித்திருக்கிறோம். மிகச் சுறுக்கமாக நறுக்குத் தெரித்தாற்போல் “விதைக்கும் போதே விளைச்சலைக் காணும் ஓர் அற்புத விவசாயம் அன்பு செய்வது” போன்ற கௌதம நீலாம்பரனின் கவிதை வரிகள் அவரை ஒரு கவிஞராகவும் கருதும் கனத்தைத் தந்துள்ளது.

அண்மையில் கௌதம நீலாம்பரன் அவர்களின் மணிவிழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது என்கிற பேற்றுடன் அறுபதாண்டு வாழ்ந்த நிறைவிலும் நாற்பதாண்டு எழுதிச் சிறந்த பெருமையிலும் செம்மாந்திருந்த அந்த நண்பரின் சிறந்த அவரது சிறுகதைகளின் தொகுப்பும் (சரித்திரமும் சமூகமும்) பரிசாகப் பெற்றேன். 109 மணியான சிறுகதைகள். ஆற அமர்ந்து படிக்க வேண்டும். சிறுகதைக் கலையை ஒரு பல்கலைக்கழகத்தில் பயின்ற நிறைவைப் படித்தால் பெறலாம். மணிவிழாவில் கலந்து கொண்ட பெருமக்களின் பட்டியலே தேரந்தெடுக்கப்பட்ட சிறந்த மனிதர்களின் திருக்கூட்டமாயிருந்தது. ஒவ்வொருவரும் எழுத்துலகில் இவரை வரவேற்று வாழ்த்தியவர்கள்.

 கலைமாமணி விக்கிரமன், கவிஞர் பொன்னடியான், பேராசிரியர் ராஜா, பேராசிரியை பத்மாவதி விவேகானந்தன், நல்ல நண்பர்களான நான், வாணியம்பாடி டாக்டர் அப்துல் கவுசர், பேராசிரியர் இராம. குருநாதன், நூலக மேனாள் இயக்குநர் திரு. பி. ஆவுடையப்பன், இவர்களுக்கெல்லாம் சிகரமாக அரசியலுக்கு அப்பால் அருந்தமிழ் வளர்க்கும் அமைப்பான ‘பொற்றாமரை’ நிறுவனர் திரு. இல. கணேசன். அன்று விழாவில் கலந்து கொண்ட ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் கௌதம நீலாம்பரனை மதிப்பிட்டாலும் பெருவாரியான வாக்குகள் ‘சிறந்த மனிதர்’ என்கிற இவரது கூடுதல் தகுதிக்கே கொடுக்கப்பட்டன. சிறந்த எழுத்தாளர் சிறந்த மனிதராகவும் இருப்பது கௌதம நீலாம்பரனின் கனம், கௌரவம் எல்லாமும். இவையே இவர் என் இதயத்தில் பதிந்ததற்கான காரணங்களாகும்.

ஏராளமான விருதுகள், பட்டங்கள் பெற்றிருக்கிறார். சேலம் தமிழ்ச்சங்கம் இவருக்கு ‘தமிழ் வாகைச் செம்மல்’ விருதளித்துச் சிறப்பித்துள்ளது. அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் அளித்த பேராசிரியர் கல்கி இலக்கிய விருது, மன்னார்குடி செங்கமலத் தாயார் அறக்கட்டளை 2008ஆம் ஆண்டின் சிறந்த எழுத்தாளர் விருதுடன் வழங்கிய பொற்கிழி ரூ.50,000/-  ஆகியன குறிப்பிடத்தக்க விருதுகளாகும். இவரது வரலாற்றுச் சிறுகதைத் தொகுதியான ‘ராஜபீட’த்துக்கு கோவை வில்லி தெய்வசிகாமணி சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது. அண்மையில் கவிதை உறவும் யுனிவர்சல் அகடமியும் இணைந்து காமராசர் அரங்கில் என் தலைமையில் நடத்திய மாபெரும் கூட்டத்தில் இவருக்குத் ‘தமிழ் மாமணி’ விருது கலைமாமணி டாக்டர் வாசவன் அவர்களால் வழங்கப்பட்டது.

தம் எழுத்துக்கான அங்கீகாரம் மட்டுமே தமக்கு வேண்டுமேயன்றி எவரிடத்திலும் எதையும் வேண்டிப் பெறாத கம்பீரத்தை கௌதம நீலாம்பரன் அவர்களிடம் நான் கண்டு பெருமைப்படுவதுண்டு. இவரது மணி விழாவில் கலந்து கொண்ட வாணியம்பாடி காசினி டாக்டர் அக்பர் கவுசர் ஒரு செய்தியைப் பெருமையோடு குறிப்பிட்டார். ஒருமுறை அவர் கௌதம நீலாம்பரன் அவர்களின் இல்லத்துக்குச் சென்றிருக்கிறார்.

\திருவல்லிக்கேணி ஜாம்பஜார் அருகே ஒரு ஒண்டிக் குடித்தனம். வசதிகள் குறைந்த வாழ்க்கை. அதிகப் பரப்பளவில்லாத வீடு. நண்பருக்கு அவர் ஒரு கணிசமான தொகையை உதவியாகக் கொடுத்த போது நன்றியுரைத்துவிட்டு அதை வாங்க மறுத்துவிட்டார் கௌதம நீலாம்பரன். வருகிற ஸ்ரீதேவியை விரட்டக்கூடாதுதான். ஆனால் அவள் காரணமின்றி வரக்கூடாதென்கிற கவனம் கம்பீரமானவர்களுக்கு மட்டுமே இருக்கும். எங்கும் போய் நின்று நேரம் போக்காமலும், எவரிடத்தும் சென்று சோரம் போகாமலும் வாழ இன்று இவரைப்போல் வெகு சிலரால் மட்டுமே முடியும்.

பெரிய தொடர்புகளெல்லாம் உண்டு. ஆனால் பெருமையடித்துக் கொள்ளமாட்டார். இதமாக இயல்பாக இருத்தல் இவரது போற்றுதற்குரிய பண்புகளில் ஒன்றாகும். பழகுதற்கினியவர். நிரம்பப் படிப்பது இவரது நிறைவான படைப்பிலக்கிய ஆற்றலுக்கு உதவுகிறது. சரித்திர நாவல்கள் எழுதுதற்குரிய தலையாய எதிர்பார்ப்பிது. சரித்திரம் தொடர்பாக யாருக்கும் எந்தத் தகவலையும் பெற்றுத் தருவதைப் பெருமையாக கருதி உதவுகிறார்.

அமைதியான குடும்பம். ஒரு எழுத்தாளரின் மனைவிக்கு அசாத்திய பொறுமை வேண்டும். போராடி அவன் வெற்றியைப் பெறுகிறவரை கூடவே பொறுமையாக போராட வேண்டும். இன்னமும் போராடினாலும் இதயத்துள் தம் கணவரைப் பற்றிய பெருமிதம் கொள்ளும் பெண்மணியாகத் திகழ்கிறார் திருமதி அகிலா அவர்கள். ஆசைக்கும் ஆஸ்திக்குமாக ஒரே மகன் விஜயசங்கர். காக்னிசன்ட் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் பொறியாளராகப் பணியாற்றுகிறார். இவர்தம் திருமணம் நாகர்கோவிலில் நடந்தபோது கலந்துகொண்டு வாழ்த்தினேன். பேரக் குழந்தை கண்ட கௌதம நீலாம்பரன் அவர்களின் மணிவிழாவின்போது எல்லோரையும் மீண்டும் மகிழ்ச்சியான சூழலில் சந்திக்கப் பெருமையாக இருந்தது.

விழாவில் கௌதம நீலாம்பரன் தன்னுடைய மூத்த சகோதரர் திருமிகு சட்டநாத குருக்கள் அவர்களை மேடைக்கு அழைத்து தம்பதி சமேதராய் அவருக்கு மரியாதை செய்தது எல்லோரையும் நெகிழ்வித்தது. மேடைக்கு அண்ணனையும் அண்ணியையும் அழைக்கும் முன் அவர்கள் தம்மைப் பிள்ளையாக வளர்த்த பாசத்தை விவரித்திருந்தது வந்திருந்தோரின் கண்களைப் பணிக்கச் செய்தது.

Wednesday, 8 May 2013


சாத்துக்கூடல்

“விருத்தாசலம் - கடலூர் (பழைய தென்னாற்காடு) மாவட்டத்தில், மணிமுத்தா நதிக் கரையில் உள்ள நகரம்! அதன் அருகில் உள்ள சாத்துக்கூடல் கிராமம்தான் நான் பிறந்து வளர்ந்த ஊர். இப்போது சாத்துக்குடல் என்று தவறாக எழுதப்படுகிறது. ‘சாத்து’ என்பது உப்பு வண்டிகளைக் குறிக்கும். பல சுற்றுப்புறச் சிற்றூர்களுக்கு உப்பு விற்கச் செல்லும் வண்டிகள் இங்கே கூடி நிற்குமாம். அந்தக் காலத்தில் உப்பு மண்டி ஏதும் இருந்திருக்கலாம். அப்படி வந்த ‘கூடல்’, இப்போது ‘குடல்’ என்று ஆகிவிட்டது!” திருத்தம் சொல்லி, தன் ஊரின் வரலாறு ஆரம்பிக்கிறார் வரலாற்று நாவலாசிரியர் கௌதம நீலாம்பரன்!

“விவசாயப் பெருங்குடி மக்கள் அதிக அளவில் வாழும் விவசாய பூமி எங்கள் ஊர். ஊரின் தெற்கில் திருமால் ஆலயம், கிழக்கில் சிவன் கோயில் இருந்தாலும் சுற்றுவட்டாரக் கிராம மக்கள் விருத்தாசலம் பழமலைநாதரைத் தரிசிப்பதில்தான் மிகுந்த ஆர்வம் காட்டுவர்; மிகப் பழமையான ஆலயம் இது. ராஜராஜ சோழன் தஞ்சைப் பெரிய கோயிலை எழுப்பும் முன், அவனுடைய பெரிய பாட்டி செம்பியன் மாதேவியாரால் கட்டப்பெற்ற ஆலயம்.
விருத்தாசலம் டவுனுக்குச் செல்ல வேண்டும் என்றால் எங்கள் ஊர் மக்கள் உற்சாகமாகக் கிளம்புவார்கள். மொத்த மளிகை, ஜவுளி, நகை, விசேஷ காலங்களில் தேவைப்படும். பூ, பழம் எது வாங்கவும் இங்குதான் வர வேண்டும். பெரிய மருத்துவமனையும் இங்குதான். டவுனில் காலை 8 மணிக்கும் இரவு 8 மணிக்கும் ஒரு சங்கு ஊதப்படும். சுற்றுப்புற ஊர்கள் சுறுசுறுப்புடன் இயங்கவும், அடங்கித் துயில்கொள்ளவும் இரு ஓர் அடையாளம். இப்போதைய நிலை எப்படியோ?
நான் 1965-ம் ஆண்டு சென்னைக்கு வந்துவிட்டேன். சாத்துக்கூடலில் என் அக்கா வீடு. அங்குதான் நான் பிறந்தேன். இன்னும் உள்ளே தள்ளி, சில ஓடைகள், உளைக் காடுகள் தாண்டி உள்ள இடையூரில் என் பெற்றோர் வசித்தனர். டவுனை ஒட்டி, போக்குவரத்து வசதி உள்ள ஊர் என்பதால் அம்மா இங்கு வந்து தங்கி என்னை பெற்று இருக்கிறார். அக்காவுக்கு அப்போது குழந்தை இல்லாத நிலையில், அடுத்த 10 ஆண்டுகள் நான் அங்கேயே வளர்ந்தேன். ஆரம்பக் கல்வி அந்த ஊரில்தான். பள்ளி மாணவர்களோடு சுற்றுலா மாதிரி டவுனுக்கு வந்து சர்க்கஸ் பார்த்தது இன்னும் நினைவில் இருக்கிறது. அந்த சர்க்கஸில் ஒரு பிரமாண்ட சர்ச் லைட்கொண்டு வானில் ஒளி வெள்ளம் வீசச் செய்வார்கள். அது மக்கள் கவனம் ஈர்க்கும் விளம்பர உத்தி என்பது புரியாமல், மேகத் திட்டுகளில் வந்து விழும் அந்த அதீத ஒளியைக் கண்டு, அத்தனை கிராம மக்களும் ‘பறக்கும் தட்டு’ என்று ஆச்சர்யமாகப் பேசியது இன்னும் மறக்கவில்லை.
விருத்தாசலத்தில் அப்போது தங்கமணி பேலஸ், ராஜ ராஜேஸ்வரி என இரு தியேட்டர்கள் இருந்தன. அவற்றில்தான் எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் நடித்த படங்கள் நிறையப் பார்த்தேன். 10 வயதுக்குப் பிறகு தனியாகவே டவுனுக்கு வந்து செல்வேன். அப்போது எல்லாம் பேருந்து வசதி இல்லாததால், டவுனுக்கு நடந்துதான் செல்வேன். புதன்கிழமைகளில் வாரச் சந்தை உண்டு. அன்று அத்தனை கிராமத்து ஆட்களும் ஆஜராகிவிடுவார்கள்.
மாசி மகம் இங்கே மிகப் பிரபலம். 10 நாட்களும் ஊர் திமிலோகப்படும். டவுனில் இருந்து சேலம் ரோட்டில் ஒன்றிரண்டு கல் தொலைவில் கொளஞ்சியப்பர் கோயில் என்று ஒரு முருகன் தலம் உள்ளது. இங்கு உருவம் கிடையாது. அரு உருவம் எனப்படும் ஒரு பீடமே முருகனாக அமைந்து, அருள்பாலிக்கிறது. பங்குனி உத்திரம் 10-ம் நாள் விழா அமர்க்களப்படும். வாரியார், கே.பி. சுந்தராம்பாள், டி.எம்.எஸ். என, பக்திப் பிரபலங்கள் அத்தனை பேரையும் இங்கு நான் பார்த்திருக்கேன்.
ஒருமுறை விருத்தாசலத்தில் நவாப் ராஜமாணிக்கம் பிள்ளையின் நாடகங்கள் நடைபெற்றுக்கொண்டு இருந்தன. கறுப்பு - வெள்ளை சினிமா நாட்களில் இந்த நாடகங்கள் வண்ண விசித்திரங்களாக இருக்கும். வியப்பில் விழி விரியவைக்கும் மேடை நாடகங்கள் இவருடையவை. பெரும்பாலும் புராண நாடகங்கள்தான். வீட்டுக்குத் தெரியாமல் ஓடிப்போய், நான் இந்த கம்பெனியில் சேர்ந்து, சில மாதங்கள் நடித்துக்கொண்டு இருந்தது ஒரு மறக்க முடியாத அனுபவம். பிறகு வீட்டில் கண்டுபிடித்து அழைத்துப் போய்விட்டார்கள் என்பது வேறு கதை.
சென்னைக்கு வந்து ஆண்டுகள் பல கடந்து விட்டாலும் இன்னமும் விருத்தாசல நினைவுகள் உள்ளுக்குள் அலையடித்துக்கொண்டேதான் இருக்கின்றன!”

Tuesday, 7 May 2013

நினைவின் நதிக்கரையில்:6-நடந்தே ஏழுமலைகளையும் கடந்தோம்
திருமலை

நடந்தே ஏழுமலைகளையும் கடந்தோம்

((கௌதம நீலாம்பரன்)

இத்தனைக்கும் கே. பாலசந்தரின் நெருங்கிய நண்பரும், இணைத் தயாரிப்பாளர்களில் ஒருவருமான கலாகேந்திரா கோவிந்தராஜன் தீபம் அலுவலகத்திற்கே அடிக்கடி வருவார். அருகில் மவுண்ட்ரோடு போஸ்ட் ஆபிஸில்தான் வேலை பார்த்தார். நா.பா.வுக்காக நான் இவரைப் பலமுறை சந்தித்ததுண்டு.


நா.பா. அனுப்பி, நான் யாரையெல்லாம் சந்தித்தேனோ இச்சந்திப்புகள் ஒவ்வொன்றும் எனக்கு நெஞ்சார்ந்த பெருமிதங்களை ஏற்படுத்தியது. நிறைய எழுதலாம். தமிழ்ப்புத்தகாலயம் பெரியவர் கண.முத்தையா, கு.அழகிரிசாமி, ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, கு.ராஜவேலு, ந.சிதம்பர சுப்பிரமணியம் என்று எத்தனையோ பேரைச் சந்தித்திருக்கிறேன். நா.பா.வுடன் காரில் சிதம்பரம் சென்றபோது, முதுபெரும் எழுத்தாளர் மௌனியை அவருடைய இல்லம் சென்று சந்தித்தோம்.

நா.பா. கார் வாங்கிய புதிதில் ஒருமுறை அவருடன் திருப்பதி சென்றேன். நா.பா.வின் குழந்தைகளும் உடன் வந்தனர். எதிர்வீட்டு மணி என்ற நண்பர் காரை ஓட்டி வந்தார். மலை அடிவாரத்தில் நானும் நா.பாவும். இறங்கிக் கொண்டு, அவர்களை மேலே செல்லுமாறு கூறிவிட்டு, நடந்தே ஏழுமலைகளையும் கடந்தோம். மூன்று மணி நேரத்திற்கு மேலானது. நா.பா.நிறைய விஷயங்கள் பேசிக்கொண்டு வந்தார். நான் கொஞ்சகாலம் தெய்வநம்பிக்கையே அற்றவன் போல இருந்தேன். 


ஒருமுறை திருவல்லிக்கேணியில் உள்ள திருவேட்டீஸ்வரன் பேட்டை சிவன் கோவிலருகே நடந்த போது, நா.பா. செருப்பைக் கழற்றிவிட்டு, கும்பிட்டார். நான் ஒதுங்கி நின்றிருந்தேன். ‘ஏனப்பா, நீ சுவாமி கும்பிடும் பழக்கம் இல்லையா?’ என்று நா.பா. கேட்டார். நான் கொஞ்சகாலமாகப் பலவிதக் குழப்பமான சிந்தனைகளோடு இருப்பதைக் கூறி, வைணவரான அவர் சிவன் கோவிலைக் கும்பிடுவது வியப்பாக இருப்பதாகச் சொன்னேன். நா.பா. ‘எனக்கு அது போன்ற பேதங்கள் கிடையாது. மேலும் இந்தக் கோவிலைப் பார்க்கும் போதெல்லாம் தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதய்யர் அவர்களின் நினைவுதான் எழும். அவர் இங்குதான் குடியிருந்தார். தினமும் நாலு வீதிகளையும் சுற்றி வருவார். அதே போல் பார்த்தசாரதி ஆலயத்தைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு பாரதியார் நினைவுதான் எழும்... ’ என்று கூறினார்.

திருப்பதி செல்லும்போது நா.பா.கூறினார்.... திருப்பதி சென்று வந்தால் ஒரு திருப்பம் நேரும்’ என்பார்கள். உனக்கும் ஒரு திருப்பம் வரப்போகிறது பார்’ என்றார். நாங்கள் சுமார் ஏழுமணி நேரம் வரிசையில் காத்திருந்தே சுவாமி தரிசனம் செய்தோம். இத்தனைக்கும் நா.பா.விடம் முன்னாள் தமிழக முதல்வர் பக்தவத்சலம் அளித்த சிபாரிசுக் கடிதம் இருந்தது. ஆனால், அவர் அதைப் பயன்படுத்தவில்லை. முன்னிரவில் பெருமாளைத் தரிசனம் செய்துவிட்டு, நள்ளிரவில் சென்னை வந்து சேர்ந்தோம்.

நா.பா. சொன்னது போல் ஒரு திருப்பம் அடுத்த சில மாதங்களில் வந்தது. அகிலன் ‘சித்திரப்பாவை’ நாவலுக்காக ‘ஞானபீடம்’ விருது பெற்றிருந்த நேரம். நா.பா.வீட்டில் அகிலனுக்கு விருந்தளிக்கப்பட்டது. நிறைய எழுத்தாளர்கள் வந்திருந்தனர். நானும் திருமலையும் ஓடி ஓடிப் பரிமாறி, எல்லோரையும் உபசரித்தோம். ஓட்டலில் இருந்தெல்லாம் எதுவும் வரவழைக்கப்படவில்லை. நா.பா.வீட்டிலேயே அவரது துணைவியார் சுந்தரம் அம்மையார் இனிப்பு மற்றும் சித்ரான்ன வகைகளை அருமையாகத் தயார் செய்திருந்தார். திருமலையின் தங்கையும் (டீச்சர்) ஒத்தாசைகள் புரிந்தார். அது ஒரு குடும்ப நிகழ்ச்சி போலவே அமைந்திருந்தது. 

இதே போல் அகிலன் வீட்டிலும் ஒருமுறை விருந்து பரிமாறப்பட்டது. அது, அவர் கஸ்டியன் பீச் சாலையில் புதுவீடு கட்டிப் ‘புதுமனைப் புகு விழா’ நிகழ்த்திய போது.அகிலன் ஞானபீட விருது பெற்றமைக்காக அவருக்கு மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் ஒரு பாராட்டுவிழா ஏற்பாடாயிற்று. இதற்காக நா.பா. காரில் புறப்பட்டார். வழியில் வந்தவாசி, பரங்கிப்பேட்டை, சிதம்பரம் என்று சில ஊர்களில் பொதுக்கூட்டங்களில், நா.பா. பேசவேண்டியிருந்தது. அவர் அப்போது மொரார்ஜி தேசாயின் கட்சியில் இருந்ததாக நினைவு. நா.பா.வுடன் நானும் சென்றேன்

. கூட்டம் நடக்கிற ஊர்களில் நான் தனியே சென்று, தீபம் ஏஜெண்டுகளிடம் பணம் வசூலிக்கும் வேலையைப் பார்ப்பேன். பரங்கிப்பேட்டையில் ஒரு நாளும் சிதம்பரத்தில் ஒரு நாளும் தங்கினோம். சிதம்பரம் கூட்டம் இரவு, டிராவலர்ஸ் பங்களாவில் தங்கியிருந்தோம். பகலில் அண்ணாமலைப் பல்கலை மாணவர்கள் நா.பா.வைச் சந்திக்க வந்திருந்தனர். அவர்களிடம் நா.பா. என்னை ஓர் எழுத்தாளன் என்றே அறிமுகப்படுத்தினார். நான் ஒன்றிரண்டு கதைகள்தான் எழுதியிருந்தேன். இருப்பினும் நா.பா.அறிமுகம் செய்ததால், அவர்கள் என்னை மிகவும் மதித்தனர். விழா ஒன்றில் பேச அழைப்பதாகவும் கூறினர்.

சிதம்பரத்திலிருந்து நள்ளிரவுக்கு மேல் காரில் திருச்சி புறப்பட்டோம். வழியில் கார் ஓரிடத்தில் நிறுத்தப்பட்டு, நா.பா. இறங்கி ஒரு கோவிலைப் பார்த்துக் கொண்டு நின்றார். தூக்கக் கலக்கத்திலிருந்த என்னையும் எழுப்பி, கீழிறங்கச் சொன்னார். இறங்கி வந்து பார்த்தால், நிலா வெளிச்சத்தில் கங்கை கொண்ட சோழபுரம் கோவில் கோபுரம் காட்சியளிக்கிறது. எனக்கு ஆச்சர்யம் தாளவில்லை. புத்தகங்களில், படத்தில் மட்டுமே பார்த்திருந்த, ஒரு புகழ் பெற்ற கோவிலின் அருகிலா நிற்கிறோம் என வியந்து போனேன். இன்னமும் அது கனவு மாதிரி இருக்கிறது. இன்னும் கூட நான் அந்த ஆலயத்தை உள்ளே சென்று தரிசிக்க வாய்ப்பு அமையவில்லை, அன்று நா.பா.வுடன், நள்ளிரவில் பார்த்ததோடு சரி.

நா.பா. அந்தக் கோவில்பற்றியும், சோழர்காலச் சிறப்புகள் பற்றியும் பேசிக்கொண்டே வந்தார். அடுத்து ஓரிடத்தில், ‘இது கீழப்பழுர். கல்கியின் பொன்னியின் செல்வனில் வரும் பழுவேட்டரையர்கள் வாழ்ந்த ஊர்’ என்று கூறினார். அதுபோன்ற இடங்களில் காரை நிறுத்தச் செய்து, ஒரு நிமிட நேரமாவது கீழிறங்கி நின்ற பின் புறப்படுவது நா.பா.வின் வழக்கமாய் இருந்தது. அவர் மனக்குதிரை அங்கெல்லாம் வரலாற்று உணர்வோடு சஞ்சரிக்கும் போல.

நான் அந்த ஊரிலிருந்து திருவையாறு செல்லும் வழியில்தான், கொள்ளிடக் கரையில் எங்கள் சொந்த ஊர் இருப்பதாகவும், அங்கேதான் சின்ன அண்ணன் வீட்டில் என் அம்மா வசிப்பதாகவும் கூறினேன். பார்த்துப் பத்தாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது என்றேன். நா.பா. ‘நீ மதுரைக்கு வரவேண்டாம். திருச்சியில் இறங்கி, ஊருக்குப் போய் அம்மாவைப் பார். பிறகு சென்னைக்குத் திரும்பு’ என்று கூறிவிட்டார். செலவுக்குப் பணமும் தந்தார். திருச்சியில் இறங்கி, காவிரியில் நீராடி, ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் கோவில்களில் சுவாமி தரிசனம் செய்தபின், டோல்கேட்டில் பஸ் ஏறி, திருமானூர் சென்றேன். இது பெரிய திருப்பமாய் அமைந்தது
.
(வரும்)

மே 5.

மே 5.
 "காரல் மார்க்ஸ்" பிறந்த தினம் 
-----------------------------------------------------------------------------------------------------
மனிதகுலத்தை உய்விக்கும் சிந்தனை எழுச்சியை தந்த கார்ல் மார்க்ஸ் பிறந்த தினம் மே - 5  .உலகின் தலைசிறந்த காதல்,நட்பு ,சித்தாந்தம் எல்லாம் ஒரே ஒரு மனிதன் வசம் என்றால் மார்க்ஸுக்கு தான் அப்பெருமை .

போராட்டம்,வறுமை,வலிகள்,பசி இவையே வாழ்க்கையின் ஒவ்வொரு அங்குலத்திலும் நிறைந்திருந்த பொழுது எளியவர்களும்,பாட்டாளிகளும் எப்படி துன்பத்தில் இருந்து விடுதலை பெறுவது என ஓயாமல் சிந்தித்த அசாதாரணமான மனிதர் அவர் .ஜெர்மனியில் மே - 5 -1818 இல் பிறந்த மார்க்ஸுக்கு அவரின் அப்பா எல்லையற்ற சுதந்திரம் தந்தார் ;மகனின் போக்கிலேயே இருக்க விட்டார் .
மார்க்ஸ் இறக்கும் வரை அப்பாவின் புகைப்படம் சட்டைப்பையில் இருக்கிற அளவுக்கு இருவருக்குமான பந்தம் உறுதியானது .

தத்துவஞானி ஹெகலை ஆதரித்த குழுவில் தன்னையும் இணைத்துக்கொண்ட மார்க்ஸ் மதத்தை மறுத்தார் ;மதம் என்பது மனிதத்தன்மை அற்றது,அது போதைப்பொருளை போன்றது என கடுமையான விமர்சனங்களை வைத்தார் ஷேக்ஸ்பியர் கதே என எண்ணற்ற இலக்கிய ஆளுமைகளின் எழுத்துக்களில் ஆர்வம் கொண்டிருந்த அண்டை வீட்டு நண்பரிடம் அடிக்கடி உரையாடும் பொழுது தான் அவரை விட ஏழு வயது முதிர்ந்த ஜென்னியிடம் காதல் பூத்தது .

கரடுமுரடான சுபாவம் கொண்ட,ஏழ்மையில் உழன்ற மார்க்ஸை அரச குல நங்கையான ஜென்னி மனதார நேசித்தார் .அவர்களின் காதல் பல வருடங்கள் காத்திருப்புக்கு பின் கனிந்தது -அப்பொழுது தான் மார்க்ஸ் ஒரு பத்திரிக்கையின் ஆசிரியர் ஆகியிருந்தார்;அவரின் எழுத்துகள் பாட்டாளிகள் எப்படி முதலாளிகளால் சுரண்டப்படுகிறார்கள் என தெளிவுப்படுத்தின .எப்படி சிலரிடம் செல்வம் தேங்கி கிடக்கிறது என்பதையும் விளக்கினார் .எல்லாவித அடக்குமுறைகளையும் பாட்டாளிகள் தகர்த்தெறிய ஒன்று சேர வேண்டும் என அவரின் எழுத்துகளின் மூலம் உத்வேகப்படுத்தினார் .

பிரஷ்ய அரசு நாடு கடத்தியது ;இவரின் சிந்தனை வேகத்தை பார்த்து பிரான்ஸ் அரசு ஒரு நாளுக்குள் வெளியேற வேண்டும் என்றது . பெல்ஜியத்தில் போய் குடியேறினார் மார்க்ஸ் .நிலைமை இன்னமும் மோசம் ;எல்லா இடங்களுக்கும் ஜென்னி புன்னகை மாறாமல் உடன் வந்தார் .

ஒரு முறை விபசார விடுதியில் ஒரு நள்ளிரவு முழுக்க சந்தேகப்பட்டு போலிஸ் அடைத்துவைத்த பொழுது கூட சின்ன முகச்சுளிப்பை கூட மார்க்ஸை நோக்கி காட்டாத மங்கை அவர் .எங்கெல்ஸை ஏற்கனவே ஒரு முறை சந்தித்திருந்த மார்க்ஸ் மீண்டுமொரு முறை சந்தித்த பொழுது எண்ணற்ற தளங்களில் தங்களின் சிந்தனை ஒத்திருப்பதை கண்டார் .இவரை காப்பதை தன் வாழ்நாள் கடமையாக செய்தார் ஏங்கல்ஸ் .வருடத்திற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை அனுப்பிக்கொண்டே இருந்தார் .

இங்கிலாந்தின் நூலகங்களில் தவங்கிடந்து மூலதனத்தை உருவாக்கினார்கள் ;ஒரு பொருளை நீங்கள் வாங்குகிறீர்கள் என்றால் அதற்கு ஒரு விலை தந்தே அதை வாங்குவீர்கள் .அந்த பொருளை பல்வேறு துன்பங்களுக்கு உள்ளாகி தயாரிக்கும் தொழிலாளிக்கு நீங்கள் கொடுக்கும் பணம் போய் சேர்கிறதா என்றால் இல்லை -மூலதனத்தை போட்ட முதலாளி ஒட்டுமொத்த லாபத்துக்கும் சொந்தக்காரர் ஆகிறார் .


அப்படியில்லாமல் மூலத்தை உழைக்கிறவனுக்கு பிரித்து தரவேண்டும் என்பதே அதன் சாரம் .உலகின் பொருளாதரத்தை பற்றி மார்க்ஸ் எழுதிய காலத்தில் வீட்டு நிலைமை ஏகத்துக்கும் மோசமானது .பிள்ளைகள் மாண்டு போனார்கள் ;"பிறந்த பொழுது உனக்கு தொட்டில் கட்ட காசில்லை ;இப்பொழுது அடக்கம் செய்ய காசில்லை !"என ஜென்னி கண்ணீர் விடுகிற அளவுக்கு நிலைமை மோசம் ,பசியால் நொடிந்து போய் மார்பிலிருந்து ரத்தம் சொட்ட பிள்ளைக்கு பாலூட்டிய கொடுமையிலும் மார்க்ஸை அன்போடு சுருட்டு வாங்கித்தந்து காத்தார் ஜென்னி .

ஜென்னி இறந்த இரண்டு வருடங்களில் ஏற்கனவே மனதளவில் இறந்து போயிருந்த மார்க்ஸ் மீளாத்துயில் கொண்டுவிட்டார் . காரல் மார்க்ஸ் கண்ட கனவான பாட்டாளிகளின் புரட்சி அடுத்த நூற்றாண்டில் பல நாடுகளில் காட்டாற்று வெள்ளம் போல பொங்கிப்பெருகிற்று .சூரியனின் கதிர்கள் போல உலகம் முழுக்க கம்யூனிசம் நீக்கமற மக்களின் சிந்தனையில் புகுந்தது .
வர்க்கபேதமற்ற,பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இல்லாத உலகை கட்டமைக்கும் அருங்கனவு கண்ட நாயகன் அவர் ஏங்கல்ஸ் வரிகளில் 

“யூதனாகப் பிறந்தார்!

கிறிஸ்தவனாக வாழ்ந்தார்!!

மனிதனாக இறந்தார்...

காலத்தை வென்று அவரின் அவர் பெயர் நிலைத்து நிற்கும் "

மார்க்ஸ் எனும் மாமனிதரின் பிறந்த நாள் மே - 5நினைவின் நதிக்கரையில்:5                                            இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர்
என்ன காரணத்தாலோ நான் நா.பா.வீட்டில் தங்க முடியாமல் போய்விட்டது. இருந்தாலும் நா.பா.வின் குழந்தைகளை நான் அடிக்கடி கண்ணதாசன் வீட்டுக்கு எதிரே இருக்கும் பூங்காவுக்கு அழைத்துச் செல்வேன். பூரணி சற்று பெரிய பெண். பாரதி சிறுமி. நாராயணன் கைக்குழந்தை. மீரா அப்போது பிறந்திருக்கவில்லை. ஒருமுறை பூரணி நா.பா.வீட்டு வாசல் கேட்டில் ஏறிக்குதித்து, விரலில் நல்ல அடிபட்டு விட்டது. ராயப்பேட்டை மருத்துவமனையில்தான் சிகிச்சை செய்தார்கள். நான் பலமுறை அழைத்துவந்து, கட்டுப் போட்டு அழைத்துச் சென்றதுண்டு.

நா.பா. குழந்தைகளை அழைத்துக் கொண்டு சில மாலை வேளைகளில் பீச்சுக்கு வருவார். நானும் உடன் செல்வேன். யாராவது இலக்கியப் பிரமுகர்கள் சந்தித்துவிட்டால், நா.பா.வோடு மணிக்கணக்கில் பேச ஆரம்பித்து விடுவார்கள். நான் குழந்தைகளை அலையோரம் அழைத்துச்சென்று விளையாட்டுக் காட்டி, அழைத்து வருவேன். பிறகு அவர்களை நா.பா.வுடன் பஸ் ஏற்றி அனுப்பிவிட்டு, தீபம் அலுவலகத்துக்கு வந்துவிடுவேன். குளியல், படுக்கை எல்லாம் அங்கேயேதான். ஒரேயொரு டிரங்குப்பெட்டி தவிர என்னிடம் வேறுபொருள்கள் ஏதுமில்லை. மாற்று உடுப்பு ஒரு செட் இருக்கும். 

இரவில் திருமலை ‘தீபம்’ அலுவலகத்தைப் பூட்டிச் சென்றபின், அந்த அறையின் வாசலிலேயே படுத்திருப்பேன்.அது பெரிய கட்டிடம். நியூசெஞ்சுரி புக்ஹவுஸ், மெட்ரோ பாலிடன் பிரஸ், மவுண்ட் பார்மஸியின் ஸ்டாக் ரூம், கோஆப்டெக்ஸின் குடோன், ‘சம்யுக்த கர்நாடகா’ எனும் கன்னடப் பத்திரிகையின் சென்னை அலுவலகம் என பல்வேறு நிறுவனங்கள் அதில் செயல்பட்டன. மொட்டை மாடியில், பத்திரிகைகளுக்குத் தேவையான படங்களை ‘பிளாக்’ செய்து தரும் மேரிபிராஸஸ் ஒன்றும் இருந்தது. இதை நடத்தும் அந்தோணி, இரவில் வெகுநேரம் இருப்பார். இதனால் தனிமையோ, பயமோ இல்லாமல் அங்கு படுத்துக் கிடப்பேன். 

அந்தோணி கிளம்பிவிட்டாலும் மெட்ரோ பாலிடன் பிரஸ்ஸில் வேலை பார்க்கும் சீனுவாசன், வாட்ச்மேன் போல அந்தக் கட்டிட வாசலில் படுத்திருப்பார். பிறகு இது நா.பா.வுக்குத் தெரிந்து, அலுவலக சாவியையே என்னிடம் தந்து, உள்ளே படுக்கச் சொல்லிவிட்டார்.

‘தீபம்’ மேனேஜர் திருமலையும் பெரும்பாலும் அலுவலகத்திலேயே தங்க ஆரம்பித்தார். பிரஸ்ஸில் வெளி வேலைகள் வாங்கி, பாரங்களை மட்டும் அச்சிட்டோம். இதனால் பிரஸ்ஸூம் இரவில் இயங்கத் துவங்கியது எனக்கு வசதியாகப் போயிற்று.

தீபம் காரியாலயம் கிட்டத்தட்ட ஒரு சத்திரம் போல (இலக்கிய சத்திரம்) இருந்தது எனலாம். மலேசியா, இலங்கை போன்ற இடங்களிலிருந்து தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்கள் தமிழகம் வந்தால், சென்னையில், தீபம் அலுவலகத்திற்கு உரிமையுடன் வந்து தங்குவர். இதே போல், பம்பாய், கல்கத்தா போன்ற நகரங்களிலிருந்தும் பல எழுத்தாளர் அன்பர்கள் வந்து தங்குவர். சிலர் வாரக்கணக்கில் தங்கி, தங்கள் கதைத் தொகுதிகளை அல்லது கவிதைத் தொகுதிகளை அச்சிட்டு, நூல் வடிவிலாக்கி எடுத்துச் செல்வர். சில தமிழ்ச் சங்க மலர்களும் இப்படி இங்கு அச்சாகும்.

 பம்பாய் தமிழ்ச்சங்கத்திற்காக ‘ஏடு’ என்றொரு இலக்கிய இதழ் ‘தீபம்’ காரியாலயத்தில் தயாரிக்கப்பட்டு, மாதம் தோறும் அனுப்பப்படும். திருமலையும் நானும் இதன் பொறுப்புகளைக் கவனிப்போம். நானும் ‘ஏடு’ இதழில் கதை, கவிதை எழுதியிருக்கிறேன்.

‘தீபம்’ அலுவலகத்தில் நான் சற்றேறக் குறைய பத்தாண்டுக் காலம் பணிபுரிந்தேன். ஆயினும் என் கதை ஒன்று கூட ‘தீபம்’ இதழில் இடம்பெற்றதில்லை. ஆரம்பத்தில் ஒரு சிறுகதை எழுதி, நா.பா.வின் மேஜை மீது வைத்தேன். அவர் மறுநாளே என்னைக் கூப்பிட்டு ‘இதுபோல் இனிக் கதை எதுவும் எழுதி வைக்காதே’ என்று கூறிவிட்டார். முதலில் என் மனம் மிகவும் வேதனைப்பட்டது. நாளடைவில் நான் மனச் சமாதானம் அடைந்ததுடன், நா.பா. நான் எதுவுமே எழுதக்கூடாது என்று கூறிவிடவில்லை என்பதைப் புரிந்துகொண்டேன். 

தீபத்துக்கு வருகிற கதைகளை வரிசை எண்இட்டு நான்தான் கட்டிவைப்பேன். திருமலையும் கதைகளை வாசிப்பார். நா.பா. சில இலக்கியப் பிரமுகர்களிடம் கதைகளை அளித்துப் படிக்கச் சொல்வதுண்டு. யார் படித்தாலும் நாலுவரி சுருக்கம் எழுதி வைக்க வேண்டும். நானும் அப்படிச் செய்திருக்கிறேன். நா.பா. பிரசுரிக்க எண்ணி எடுத்து வைத்த கதையைப் பற்றிய விவரம் கேட்டால் நான் சொல்வேன். அவரும் படித்துப் பார்த்த பிறகே ‘கம்போஸ்’ என்று குறிப்பிட்டு அளிப்பார்.

பின்னால் மிகப் பிரபலமான பல முன்னணி எழுத்தாளர்களின் சிறுகதைகள் தீபத்திலிருந்து ‘பிரசுரிக்க இயலவில்லை’ என்ற குறிப்போடு திருப்பி அனுப்பப்பட்டதுண்டு. சிவசங்கரி, இந்துமதி போன்றவர்கள் ஆரம்ப நாட்களில் தீபத்தில் கதை வெளிவரவில்லையே என்று நா.பா.விடம் வந்து ஆதங்கப்பட்டதை நான் பார்த்திருக்கிறேன். என் கதைகள் தீபத்தில் இடம்பெறாவிட்டாலும், ஒவ்வொரு மாதமும் தமிழ்ப் பத்திரிகைகள் அனைத்திலும் வெளிவருகிற சிறுகதைகள் அனைத்தையும் வாசித்து, ஒரு மதிப்பீட்டுக் கட்டுரை தீபத்தில் வெளியாகும். அப்படிச் சில மாதங்களில் நான் மதிப்பீடு செய்து எழுதிய கட்டுரைகளை நா.பா.வெளியிட்டார். இதேபோல் தீபாவளி மலர்களில் வெளியான கதைகள் பற்றியும் நான் விமரிசனக் கட்டுரை எழுதியிருக்கிறேன்.

‘அஞ்சறைப்பெட்டி’, ‘ஆறங்கம்’ எனச் சில பகுதிகள் ‘தீபம்’ இதழில் உண்டு. இதில் ‘மினி’ பேட்டி மாதிரி சிலரைச் சந்தித்துப் பேசி, அவர்கள் படத்துடன் இலக்கியச் செய்திகளை வெளியிடுவதுண்டு. இப்பகுதிகளுக்காக நான் பலரைச் சந்தித்து ‘பேட்டி’ எடுத்து எழுதினேன். சினிமாவுக்கு தீபத்தில் இடமில்லை. ஆனால், திரைப்பிரபலங்கள் சிலரின் ‘இலக்கிய உணர்வு பற்றிய செய்திகளை இப்பகுதிகளில் இடம்பெறச் செய்வார் நா.பா. பிரபல திரைப்பட இயக்குநர்கள் சிலரைச் சந்திக்கிற வாய்ப்பு எனக்கு இதன் மூலம் கிடைத்தது. எஸ்.ஸார். என்பவர் இதற்கான உதவிகளைச் செய்தார். கே.பாலசந்தர், ஏ.பி. நாகராஜன், வசனகர்த்தா பாலமுருகன், பஞ்சு அருணாசலம், ஏ.எஸ். பிரகாசம், சகஸ்ரநாமம், டி.கே. பகவதி, அவ்வை சண்முகம் போன்ற பிரபலங்கள் பலரை நான் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது.

இந்த அனுபவங்களை இங்கு விரிவாக எழுதினால், பக்கம் வளர்ந்து விடும். நெஞ்சை விட்டு நீங்காத செய்திகள் நிறைய உண்டு. ஒன்றை மட்டும் சொல்வது அவசியமாகிறது. 

இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் வீட்டினுள் என்னை அழைத்து, அருகில் அமர வைத்துக் கொண்டு, தீபத்திற்காக அவர் எழுதிய மேட்டரைப் படித்துக் காட்டி ‘எப்படி இருக்கிறது’ என்று கேட்டார். என் மனம் முழுக்க, ‘இவர் காலில் விழுந்து நடிக்க வாய்ப்பு கேட்டோமா?’ என்பதிலேயே இருந்தது. 

சிறுவயதிலேயே நவாப் ராஜமாணிக்கம் பிள்ளையின் நாடகக் கம்பெனியில் சேர்ந்து சில மாதங்கள் நடித்த அனுபவமுள்ளவன் நான். அந்த ஆசையில்தான் சென்னைக்கே வந்திருந்தேன். ஆனால், அந்தக் கணத்தில் நா.பா. எப்பேர்ப்பட்ட மனிதர். அவர் பெயரிலுள்ள மரியாதையால் அல்லவா இவர் நம்மை மதித்துப் பேசுகிறார். நாம் நடிக்க வாய்ப்பு கேட்டால், அது அசட்டுத்தனமாகவல்லவா போய்விடும்’ என்று எண்ணி, என் மனக்கதவை இறுக்க மூடிக்கொண்டேன். பிறகு ‘அட்டா...நல்ல வாய்ப்பைத் தவறவிட்டு விட்டோமே’ என வருந்தியதுண்டு. ஒரு வேளை அன்று அது நிகழ்ந்திருந்தால் நான் ரஜினி, கமல் போன்ற நிலைகளை அடைந்திருப்பேனோ என்னவோ! (ஆசைதான்!)

Sunday, 5 May 2013

நினைவின் நதிக்கரையில்:4-(கௌதம நீலாம்பரன்) நானோ தீவிர எம்.ஜி.ஆர். ரசிகன் நானோ தீவிர எம்.ஜி.ஆர். ரசிகன்


வல்லிக்கண்ணன் அவர்களிடம் சகோதரர் கோமதி நாயகம் எபிஷியண்ட் பப்ளிஸிடியில் இருந்தார். அவர் இந்த வகையில் நிறைய உதவிகள் செய்வார். திருமலை ஒரு வில்போல இருந்து, என்னை அம்பாகப் பல இடங்களுக்கும் எய்து கொண்டிருந்தார். அலைச்சல் அதிகம். பெரும்பாலும் நடந்தேதான் எங்கும் சென்று வருவேன்.


‘தீபம்’ மாத இதழ் உருவாக அதிகம் உழைப்பவர்கள் என்று, திருமலை, நான், ராஜதுரை, மோகன் ஆகிய நால்வரையும்தான் சொல்ல வேண்டும். ஒரு குடும்பம் போல் நாங்கள் பாசத்தோடு பழகினோம். திருமலை நா.பா.வின் உறவினர். மற்ற மூவரும் நா.பா. வின் தீவிர ரசிகர்கள். இது போகப் போகத்தான் எனக்கு புரிந்தது. ராஜதுரை வெறும் கம்பாஸிடர் மட்டுமல்ல;  நல்ல இலக்கிய ரசிகர். ஜெயகாந்தன் மீதும் நா.பா. மீதும் அவர் கொண்டிருந்த பற்று அசாதாரணமானது. 

அவர் பேசத்துவங்கினால், ஏராளமான உலக விஷயங்கள் அருவிபோல் கொட்டும். ஆங்கிலப் படங்கள் நிறைய பார்ப்பார். அரசியலில் மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, கர்மவீரர் காமராஜர் இவர்களை மட்டுமே அவருக்குப் பிடிக்கும். காமராஜர் மீது பக்தி அதிகம் எனலாம். ராஜதுரை பேசுகிற விஷயங்களிலிருந்து அரசியல், உலக சினிமா, நவீன தமிழ் இலக்கியம் பற்றியெல்லாம் நான் நிறைய அறிய முடிந்தது. 

மனிதர் மகா கோபக்காரர். ஆனால் கர்வி இல்லை. திடீர், திடீரென்று என்னோடு கோபித்துக் கொண்டு பேசாமல் இருப்பார். கோபம் தணிய சில நாட்கள் ஆகும். நான் கொஞ்சம் வாய்த்துடுக்காக ஏதும் பேசி விடுவேன். அந்த வயதில் விவாதிக்கும் போக்கு என்னிடம் சற்று அதிகம். அதனால் நான் நிறைய துன்பங்களைத்தான் சந்திக்க முடிந்தது.

திரும்பப் பேசுவது ராஜதுரையாகத்தான் இருக்கும். வயதில் பெரியவர் என்பதை நிரூபித்து விடுவார். ‘உன் கருத்து நாளை மாறும்... எது சரியென்று புரிந்து கொள்வாய்... ’ இப்படி ஏதாவது சொல்வார். எம்.ஜி.ஆர். என்றாலே ராஜதுரைக்கு வேப்பங்காய். நானோ தீவிர எம்.ஜி.ஆர். ரசிகன். இதில் ராஜதுரையின் விமரிசனங்களை நான் இறுதிவரை ஏற்றதில்லை. 

ஜெயகாந்தனின் ‘சினிமாவுக்குப் போன சித்தாளு’ கதையை அவர் வரிக்கு வரி சிலாகிப்பார். ரொம்ப நாள் கழித்தே நானே அக்கதையை வாசித்தேன். புதிதாக ஏதுமில்லாத அளவு முன்பே அக்கதை என் மனசில் பதிந்திருந்தது. ஒரு கதையோ அல்லது வேறு விஷயமோ ராஜதுரை எடுத்துச் சொல்லும் பாங்கு மகத்தானது. பல கோணங்களில் அதற்கான விமரிசனங்களோடு, ஒப்பீட்டுடன்தான் பேசுவார்.

ஜெயகாந்தனின் பாரதி ஈடுபாட்டைப் பற்றி ராஜதுரை, ‘பாரதி பாடல் முழுவதையும் கிழித்து எறிந்து, எங்கும் இல்லாமலே யாராவது செய்து விட்டால், ஜே.கே. மட்டுமே அதைத் திரும்ப எழுதி உலகுக்கு அளித்து விடுவார்’ என்பார். அதே போல் ஜே.கே.யின் நூல்கள் அனைத்தையும் யாராவது அழித்துவிட்டால், ராஜதுரை திரும்ப எழுதித் தந்துவிடுவார் என்று சொல்லத் தோன்றும்.

எனக்கு முன்னால் ‘தீபத்தில்’ எஸ். சம்பத் என்பவர் வேலை பார்த்தார். இவர்மீது ராஜதுரைக்கு அதீத பாசம் உண்டு. ‘வாழ்வில் மிகப்பெரிய அளவு முன்னுக்கு வரவேண்டியவன். என்ன துரதிர்ஷ்டமோ அவன் அப்படி வரவில்லை’ என அடிக்கடி ஆதங்கப்படுவார். இந்த சம்பத் ஷோபாலலித் என்கிற பெயரில் நிறைய சிறுகதைகள் எழுதியிருக்கிறார். இவர் அப்போது ‘அலைஓசை’ நாளிதழில் புரூப்ரீடராகப் பணிபுரிந்தார். அடிக்கடி ‘தீபம்’ அலுவலகம் வந்து செல்வார். இவரும் நா.பா.வின் தீவிர ரசிகரே. இந்த சம்பத்தின் மீதுள்ள அன்பால், ராஜதுரை ‘கலைக்கனல்’ என்றொரு சினிமா மாத இதழைத் துவங்கி, அதில் இவர் பெயரை ஆசிரியர் என்றும் போட்டார்
.
‘தீபம்’ அலுவலகத்தில் ராஜதுரை மிகவும் குறைந்த ஊதியமே பெற்று வந்ததால் நா.பா. இவருடைய ‘கலைக்கனல்’ இதழுக்கான மேட்டர்களை இலவசமாக அச்சுக்கோர்த்துக் கொள்ள அனுமதித்தார். ‘தீபம்’ அச்சகத்தில் இலவசமாக அச்சடித்தும் தரப்பட்டது. பேப்பர் மட்டும்தான் விலைக்கு வாங்க வேண்டும். அதிக விளம்பரமின்றி வெளிவந்தாலும் ‘கலைக்கனல்’ தரமான சினிமா இதழாக வெளி வந்தது. இதில் நான் சினிமா விமரிசனங்கள் எழுதியிருக்கிறேன். சிறுகதைகளும் எழுதியிருக்கிறேன். பாரதிராஜா உதவி இயக்குநராக இருந்து வெளியான ‘தாகம்’ என்னும் சினிமாவுக்கு ‘கலைக்கனல்’ இதழில் நான் விமரிசனம் எழுதியதைக் குறிப்பிடலாம்.

ராஜதுரை உடல்நலம் குன்றியதாலோ என்னவோ நடுவில் சில மாதங்கள் வேலைக்கு வரவில்லை. அப்போது வேறு ஒருவர் அந்தப் பணியைச் செய்தார். பெயர் விவேகானந்தன் என்று ஞாபகம். பிரபல திரைப்பட இயக்குநரும், வசனகர்த்தாவுமான மதுரை திருமாறனின் உறவினர் இவர். மதுரை திருமாறனின் வீடு மேற்கு சி.ஐ.டி. நகரில் நா.பா.வீட்டுக்கு மிக அருகிலேயே இருந்தது. இந்த கம்பாஸிடரும் ‘நடிகன் குரல்’ என்றொரு சினிமா பத்திரிகை நடத்தினார் இதிலும் நான் கவிதை, கட்டுரைகள் எழுதியிருக்கிறேன்.

மிஷின்மேன் மோகன் நா.பா.வின் சமூக நாவல்களுக்கு மட்டுமே தீவிர ரசிகர். பொன்விலங்கு, குறிஞ்சிமலர், சமுதாய வீதி, ஆத்மாவின் ராகங்கள், கங்கை இன்னும் வற்றிவிடவில்லை போன்ற கதைகளை வெகுவாகப் புகழ்வார். சரித்திர நாவல்களில் நா.பா.வின் சாதனைகளை இவர் ஏற்பதில்லை. மோகன் கோ.வி. மணிசேகரனின் சரித்திரக் கதைகளை மட்டுமே உயர்வாகப் பேசுவார். இவருடைய தூண்டுதலால்தான் நான் ‘கோ.வி’யின் கதைகள் பலவற்றை வாசித்தேன்

. ‘கோவி’யை மனக்கோபுரத்தின் உச்சியில் வைத்திருந்த மோகன், ஜெகசிற்பியனின் சரித்திரப் புதினங்களையும் புகழ்வார். சாண்டில்யனின் கதைகள் பற்றிக் கேட்டால், ‘அதையெல்லாம் படிக்க உனக்கு வயசு பத்தாது. இப்ப வேணாம். நீ நான் சொல்றதைப் படி’ என்று அதிகாரத் தோரணையில் கூறுவார்.
இவர் நிறைய கதைப் புத்தகங்களை பைண்டு செய்து வைத்திருந்தார். இவரிடம் நிறைய புத்தகங்கள் வாங்கிப் படித்திருக்கிறேன். சிலப்பதிகாரம், மணிமேகலை, நந்திக்கலம்பகம், கலிங்கத்துப் பரணி போன்ற நூல்களையும் இவர் எனக்கு அளித்தார். நா.பா.வின் ‘மணிபல்லவம்’ போன்ற கதைகளை மோகன் விமரிசித்தது தொடர்பாக இவருடன் எனக்கு பலமுறை தகராறு ஏற்பட்டதுண்டு. அது வழக்கமான ராஜா-ராணி கதையல்ல; மன்னர்கள் காலத்தில் வாழ்ந்த ஒரு வணிக குடும்பத்து இளைஞன் பற்றிய நவீனம். தமிழில் அது ஒரு புதுமுயற்சி என்பதால், வழக்கமான சரித்திர நாவல் பிரியர்கள் பலர் அதை ரசிக்காமல் இருந்திருக்கலாம். ஆனால், நா.பா.வின் புகழ் மகுடத்தில் அது ஒப்பற்ற ஒளி வீசும் ஒரு மாணிக்கம். (பிற்காலத்தில் பிரபஞ்சன் இதுபோல் புதுவை வரலாற்றில் ஒருகால கட்டத்தைப் பிரதிபலிக்கும் ‘மானுடம் வெல்லும்’ கதையை எழுதி, சாகித்ய அகாடமி பரிசும் பெற்றார்.)

மோகன் எப்படி நா.பா.வின் சரித்திர நாவல்களை அதிகம் சிலாகிப்பதில்லையோ, அப்படியே கோவி.மணிசேகரனின் சமூகநாவல்களயும் கடுமையாக விமரிசனம் செய்வார். நான் ரசித்துப் பாராட்டிய ஒன்றிரண்டு நவீனங்களையும் கூட அவர் ஏற்க மறுத்துவிட்டார். ‘அவருக்கு எதற்கு இந்த வீண்வேலை?’ என்பார். இது அவரவர் மனப்போக்கைக் குறித்த விஷயம். ராஜா-ராணி படங்களில் கத்திச் சண்டை போட்ட எம்.ஜி.ஆர் பேண்ட், சட்டை போட்டு சமூகப் படங்களில் நடித்தாலும் ஆரம்பத்தில் அதை ரசிகர்கள் ஏற்கவில்லை என்பார்கள். இது போன்றதே இதுவும்.

இந்த மோகனும் நானும் பல இரவுகளில் ஒரு டீயை வாங்கி, ஆளுக்குப் பாதி குடித்துவிட்டு வேலை செய்திருக்கிறோம். மோகன், எழும்பூரில் ஒரு அச்சகத்தில் இரவு வேலைக்குச் செல்வார். என்னையும் அழைத்துச் செல்வார். இப்போதைய ஆல்பர்ட் தியேட்டரின் எதிர் வாடையில், கடைசியில் இருந்தது அந்த அச்சகம். பல்ராம் பிரதர்ஸ் அச்சகம் என்று நினைவு. பாடநூல்களுக்கான பாரங்கள் அச்சாகும். மோகன் தயார்செய்து தந்த பிறகு மிஷினை நான் ஓட்டுவேன். இரவு முழுக்க வேலை செய்தால் மூன்றுரூபாய் கிடைக்கும். ஐந்து ரூபாய் சேர்ந்ததும் ஒரு புதிய அரைக்கை சட்டை வாங்கி அணிந்துகொள்வேன்.

தீபத்தில் ஆரம்பத்தில் நான்பெற்ற சம்பளம் ஒரு நாளைக்கு இரண்டு ரூபாய்தான். இதில் பெரிய ஓட்டல்களில் போய் சாப்பிட முடியாது. டீக்கடையில் குறைந்தவிலைச் சாப்பாடு கிடைக்கும். இதைத்தான் சாப்பிடுவேன். நான் சைவ சாப்பாட்டுக்காரன். ஆனால், அதை அசைவ சாப்பாட்டுக் கடையில் சாப்பிடுகிறமாதிரி சூழ்நிலை. ஒரு முறை தீபம் அச்சகத்துக்கு வந்த நா.பா. , பக்கத்து டீக்கடையில் நான் சாப்பிடுவதை அறிந்து, அங்கேயே திடுமென்று வந்துநின்று விட்டார். பிறகு, ‘என்னப்பா இதெல்லாம்... நல்ல ஓட்டலில் சாப்பிடக் கூடாதா?’ என்று கேட்டார். நான் என் நிலையை விளக்கினேன். உடனே நா.பா.என்னை, ‘இனிமேல் நீ என் வீட்டிலேயே வந்து தங்கிவிடு’ என்று கூறிவிட்டார்.

மாம்பலம் சி.ஐ.டி. நகரிலிருந்த நா.பா. வீட்டுக்கு நான் அடிக்கடி செல்வதுண்டுதான். கதைகள் எழுதி வைத்திருப்பார். தொடர்கதை அத்தியாயங்களை நான் அவருடைய வீட்டுக்குச் சென்று வாங்கிப்போய், விகடன், கலகி போன்ற இதழ் அலுவலகங்களில் கொடுத்துவருவேன். எழுபது அல்லது எழுபத்து ஒன்றாம் ஆண்டு நா.பா.ஆனந்த விகடனில் ‘நித்திலவல்லி’ என்ற வரலாற்று நாவலை எழுதினார். அதன் ஒவ்வொரு அத்தியாயத்தையும் நான் உட்கார்ந்து பிரதி எடுத்திருக்கிறேன்.

 பெரும்பாலும் மேனேஜர் திருமலை டைப் செய்து, பிரதி எடுப்பதுண்டு. என்ன காரணத்தாலோ இக்கதையை என் கையெழுத்தில் பிரதியெடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதை என் பாக்கியம் என்றே நான் கருதுகிறேன். இதனால் என் கையெழுத்து மிகவும் திருந்தியது. நா.பா.வின் கையெழுத்து போலவே என் கையெழுத்தும் இருப்பதாகப் பலரும் கூறுவர். பின்னாளில் நான் ஒரு சிறுகதை எழுதி, ‘கல்கி’யில் கொடுத்த போது, உதவி ஆசிரியர் பி.எஸ். மணி, ‘என்னப்பா நா.பா.வின் கதையைத் தூக்கி வந்து, உன் கதை என்கிறாயா?’ என்று கேட்டு தமாஷ் செய்ததுண்டு.
(வளரும் )