Wednesday, 31 October 2012

உலக சினிமா உயரம் தொட்ட மணிரத்னம்

மணிரத்னம:

மணிரத்னம:
தமிழ் சினிமாவை உலக சினிமா உயரத்துக்கு தூக்கிப் பிடித்த முன்னோடி மணிரத்னம். தாம் பேசுவதைவிட, தம் படங்கள் பேசவேண்டும்; பேசப்பட வேண்டும் என்ற கருத்துக்குச் சொந்தக்காரர் அவர். 1983, ‘பல்லவி அனுபல்லவி’ கன்னடத் திரைப்படத்தின் மூலமாகத் திரையுலகில் பிரவேசித்தவர். அடுத்த படம் மலையாளத்தில் ‘உணரு’.
உலக சினிமா உயரம் தொட்ட மணிரத்னம்
85ல் ‘பகல் நிலவு’ மூலமாக தமிழில் களமிறங்கினார். 86ல், ‘மௌனராகம்’ மூலமாக தம்மைத் திரும்பிப் பார்க்க வைத்தார். ‘நாயகன்’ மூலமாக அகில இந்திய வீச்சு கிடைத்தது.

தற்பொழுது எடுத்துக் கொண்டிருக்கும் ‘கடல்’ படத்தோடு மணிரத்னத்துக்கும் சினிமாவுக்குமான தொப்புள் கொடி உறவுக்கு வயது முப்பது. இந்தத் தருணத்தில் தாம் வந்த சினிமா பாதையைத் திரும்பிப் பார்த்து, தமது எண்ண ஓட்டங்களை ஆங்கிலப் புத்தகமாகப் பதிவு செய்து, இந்திய சினிமாவுக்குச் சமர்ப்பித்திருக்கிறார். தலைப்பு: Conversations with Mani Ratnam. எழுதி இருப்பவர்: பரத்வாஜ் ரங்கன். பெங்குயின் வெளியீடு. தம் படங்களைப் பற்றி மணிரத்னம் என்ன சொல்கிறார்? ஒரு சுவையான டிரெயிலர்:

விவேகானந்தா கல்லூரியில் பி. காம் படித்த பிறகு, மும்பை சென்று பஜாஜ் இன்ஸ்டிட்டியூட்டில் எம்.பி.ஏ. முடித்து விட்டு, ஒரு கன்சல்டன்சி கம்பெனியில் பணியாற்றினேன். அங்கே எனக்கு வேலை பிடிக்கவில்லை என்றாலும், சினிமா டைரக்டர் ஆகவேண்டும் என்ற எண்ணம் எனக்குத் துளிக்கூட இல்லை. பிரபல இயக்குனர் பி.ஆர்.பந்துலுவின் மகனும், என் நண்பருமான ரவி சங்கர் தமது முதல் (கன்னட) படத்தை எடுக்க முடிவு செய்த போது, வீணை பாலசந்தரின் மகன் ராமனும், நானும் சேர்ந்து மூவருமாக ஆபீஸ் விட்ட பிறகு மாலை நேரங்களில் சந்தித்து, படத்தின் ஸ்கிரிப்ட்டை எழுத முடிவு செய்தோம். ஒவ்வொரு சீன் குறித்தும் கடுமையான விவாதம் நடக்கும். ஆங்கிலத்தில் ஸ்கிரிப்ட்டை தயார் செய்து கொண்டு, ரவிசங்கர் ஷூட்டிங் ஆரம்பித்தார். கோலாரில் படப்பிடிப்பு. நாங்கள் ஆங்கிலத்தில் எழுதிய சீன்களை, கன்னட வசனகர்த்தாவுக்கு விளக்கிச் சொல்வது என் வேலை. முதல் ஷெட்யூல் முடியும் தறுவாயில் ‘எனக்கான இடம் சினிமா’ என்று நான் முடிவு செய்தேன். அப்போது கூட படத்தின் ஸ்கிரிப்ட்டை எழுதி, டைரக்டர்களுக்குக் கொடுத்து பணம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணமே எனக்கு இருந்தது. ஆனால் ‘பல்லவி அனுபல்லவி’ ஸ்கிரிப்ட் ரெடியானபோது, ‘படத்தை நாமே இயக்கினால் என்ன?’ என்ற எண்ணம் வந்தது.

மும்பையில் இரண்டு வருடங்கள் படித்தபோது, மும்பை நிழல் உலகில் மிக உச்சத்தில் இருந்தார் வரதராஜ முதலியார். மாதுங்கா பகுதி மக்கள் அவரை தெய்வமாகவே நினைத்தார்கள். சக மனிதர் ஒருவரை ஏன் இவர்கள் தெய்வமாக மதிக்கிறார்கள்? என்பது எனக்குப் புதிராகவே இருந்தது. அது எனக்கு பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டிலிருந்து போன ஒருவரால் எப்படி மும்பை நகரத்தையே கட்டி ஆள முடிகிறது என வியந்து போனேன். கமலிடம் திருப்பங்கள் நிறைந்த வரதராஜ முதலியார் வாழ்க்கையைப் படமெடுக்கலாம் என்று சொன்னதும் உடனே சம்மதித்தார். ‘மௌனராகம் கதை’ அப்ரூவ் ஆவதற்கு ஐந்தாண்டுகள் பிடித்தது. நாயகன் பத்தே நிமிடங்களில் ஓ.கே. ஆனது.

‘அக்னி நட்சத்திரம்’ படத்துக்கு இளையராஜா ரீ-ரிக்கார்டிங் செய்து கொண்டிருந்தபோது, அவருடைய நண்பரான இன்னொரு இசையமைப்பாளர், ‘ இப்படியே படத்தை ரிலீஸ் பண்ணாதீர்கள்! கிளைமாக்சை மறுபடியும் எடுங்கள். இல்லையென்றால் படம் பார்க்கிறவர்கள் கண் வலிக்கிறது என்று சொல்வார்கள். நான் சினிமாவில் பல வருடமாக இருப்பவன். நான் சொல்கிறேன். நீங்கள் தப்பு செய்திருக்கிறீர்கள். படம் வெற்றி பெற்றால், நான் என் பெயரை மாற்றிக் கொள்கிறேன்’ என்று சொன்னார்.

என் படங்களில் வரும் மழைக் காட்சிகளுக்கு (ஜப்பானிய இயக்குனர்) குரசோவாதான் காரணம். அவரது படங்களில் பஞ்சபூதங்களும் உயிரோட்டத்தோடு இடம்பெற்றிருக்கும். மழை, என் காட்சிகளுக்கும் வலு சேர்க்கிறது.

பேபி ஷாம்லிக்கு அப்போது இரண்டரை அல்லது மூன்று வயது. அழகான, ஆரோக்கியமான, துறுதுறு வென்று இருக்கும் அந்தக் குழந்தையை மனவளர்ச்சி குன்றிய குழந்தையைப் போல நடிக்க வைப்பது பெரும் சவாலாகத்தான் இருந்தது. ஒரு சிறிய வீட்டில் வீடியோவில் ஒருநாள் படம் பிடித்தோம். எதிர்பார்த்தபடி அமையவில்லை. ‘அஞ்சலி’ படத்தையே டிராப் பண்ணி விடலாமா என்று யோசித்தோம். அண்ணா நகரில் உள்ள சிறப்புக் குழந்தைகள் இல்லத்துக்குச் சென்று, அங்கே இருந்த எஸ்தர் என்ற குழந்தையின் சிரிப்பு, அழுகை, கோபம் என்று விதம் விதமாக இரண்டு மூன்று நாட்களுக்கு கூடவே இருந்து டெஸ்ட் ஷூட் பண்ணினோம். பேபி ஷாம்லிக்கு அதைப் போட்டுக் காட்டினோம். அதன்பிறகு பிரச்னை ஏதுமில்லை.

ரஜினிக்கு என்னோடு பணியாற்ற ஆர்வம் இருந்தது. ஆனால் அவ்வளவு பெரிய ஸ்டாரை வைத்துப் படமெடுக்க என்னிடம் கதை இல்லை. ரஜினியை வைத்து வழக்கமான ஒரு படத்தை எடுக்க எனக்கு விருப்பமில்லை. ரஜினியின் இமேஜுக்குப் பொருத்தமாகவும் இருக்க வேண்டும்; அதே சமயம் அது என் படமாகவும் இருக்க வேண்டும் என நான் நினைத்தேன். அப்போது தான் மகாபாரத கர்ணன் ஐடியா எனக்குத் தோன்றியது. என் அண்ணன் ஜி.வி. யோடு போய், ரஜினியைச் சந்தித்துப் பேசினேன். உடனே சம்மதித்தார். ‘தளபதி’ இப்படித்தான் ஆரம்பமானது.

‘இருவர்’ படத்தின் ஹீரோயினுக்காக ஒரு புதுமுகத்தைத் தேடிக் கொண்டிருந்த போது, ராஜிவ் மேனன், ஐஸ்வர்யா ராயை என் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்து அறிமுகப்படுத்தினார். ‘உங்களுக்கு நட்சத்திர அந்தஸ்து கிடைக்க வழிசெய்யும் படம் அல்ல ‘இருவர்’ படம். படத்தில் அவருக்குரிய இருமாறுபட்ட ரோல்களைப் பற்றிச் சொன்னேன். நடிக்க சம்மதமா?’ என்று கேட்டபோது, சினிமாவில் நடிப்பதா? வேண்டாமா? என்று தயக்கத்தில் இருந்த ஐஸ்வர்யா ராய் ஓ.கே. சொன்னார். அடுத்து, ஆபீசில் டெஸ்ட் எடுத்தோம். தமிழ் வசனம் கொடுத்துப் பேசச் சொன்னோம். முதல் நாள் ஷூட் டிங்கில் ஐஸ்வர்யா ராய் பேசிய ‘எனக்குப் பேசணும்’ என்ற வசனத்தை அவர் இன்னமும் ஞாபகம் வைத்துக் கொண்டிருக்கிறார்.

ஃபிலிப்பைன்ஸைச் சேர்ந்த ஒரு குழந்தை அமெரிக்காவில் ஒரு தம்பதிக்கு, தத்து கொடுக்கப்பட்டது. அதன் வளர்ப்புப் பெற்றோர்கள், அந்தக் குழந்தைக்கு அதன் பெற்றெடுத்தவர்களைக் காட்டுவதற்காக ஃபிலிப்பைன்சுக்கு அழைத்து வந்தார்கள். உணர்ச்சிபூர்வமான அந்தச் சந்திப்பு பற்றி டைம் பத்திரிகையில் ஒரு கட்டுரை வெளியானது. அதை சுஹாசினி படித்துவிட்டு, என்னிடம் காட்டினார். அதை வைத்து ஒரு படம் எடுக்கும்படி அவரிடம் சொன்னேன். அவர் டி.வி. சீரியலில் பிசியாக இருந்ததால், நானே, ஸ்ரீலங்கா பின்னணியில் படமெடுத்தேன். அதுதான் ‘கன்னத்தில் முத்தமிட்டால்.’

சீதை கேரக்டருக்கு மிகப் பொருத்தமான முகம் ஐஸ்வர்யா ராய்யுடையதுதான் என்று நான் நினைத்தேன். அதனால்தான் ராவணனில் அவரை நடிக்க வைத்தேன்.

மணிரத்னத்தோடு 100 மணி நேரம்

மணிரத்னத்தின் படங்கள் பற்றி அவரோடு நீண்ட உரையாடல்கள் நடத்தி, Conversations with Mani Ratnam புத்தகத்தை எழுதி இருப்பவர் ஹிந்து நாளிதழின் துணை ஆசிரியரான பரத்வாஜ் ரங்கன். சினிமா தொடர்பான ஆழமான கட்டுரைகள் பல எழுதியவர். பரத்வாஜ் ரங்கன் பேசுகிறார்:


நான் மணிரத்னத்தின் படங்களைப் பற்றி எழுதிய ஒரு கட்டுரையைப் படித்து விட்டு, என்னை ஒரு புத்தகம் எழுதும்படி பெங்குயின் நிறுவனம் கேட்டது. ஒரு பத்திரிகையாளராக அவரைச் சந்தித்துப் பேட்டி காண்பதற்கான எனது முயற்சிகள் வெற்றிபெறவில்லை என்பதால், மணிரத்னத்தின் ஒவ்வொரு படமாக எடுத்துக் கொண்டு அலசி, ஒரு புத்தகம் எழுத நினைத்தேன். அதற்கு முன்பாக, மரியாதை நிமித்தம் அவரைச் சந்தித்தேன். அவரோடு பேசிக்கொண்டிருந்தபோதுதான், ஒவ்வொரு படம் பற்றியும் அவரோடு உரையாடி புத்தகத்தையும் உரையாடல்களின் தொகுப்பாகவே எழுதுவது என்பது முடிவானது.

ஒரு சந்திப்பில் இரண்டு மணி நேரம் பேசுவோம். இதுபோல 50 தடவைகள் சுமார் 100 மணிநேரம் பேசி இருப்போம். என் கேள்விகள், அவை எரிச்சலூட்டும்படி இருந்தாலும் அவர் கோபப்படாமல், தம் கருத்தை அழுத்தமாகத் தெரிவித்தார். அவரது பேச்சில் நேர்மை இருக்கும். ‘ராவணன்’ படம் முடிந்து சுமார் மூன்று மாதங்கள் கழித்து ஆரம்பித்தோம். அவரோடு பேசிய அனைத்தையும் எழுதியிருந்தால், இந்தப் புத்தகம் 300 பக்கங்களுக்குப் பதிலாக 600 பக்கங்கள் வந்திருக்கும். மணிரத்னம் நேரத்தைப் பொன்னாக மதிப்பவர். சந்திப்புக்கு நேரம் கொடுத்துவிட்டார் என்றால், அந்த நேரத்தில் ரெடியாக இருப்பார்.

ஒரு சந்திப்பில் அவர் சொன்ன விஷயங்களை, அடுத்த முறை சந்திப்பதற்கு முன்னால் எழுதிவிடுவேன். ஒவ்வொரு படத்தின் கதை, கதாபாத்திர உருவாக்கம், நடிகர்கள், வசனம் போன்றவற்றோடு கேமரா, எடிட்டிங், மியூசிக் போன்ற டெக்னிக்கல் விஷயங்களைப் பற்றியும் நிறைய பேசினோம். ஆனால், எல்லோருக்கும் படிக்க சுவாரஸ்யமாக இருக்கும்படி புத்தகம் அமைய வேண்டும் என்பதிலும் குறியாக இருந்தேன்.”

-எஸ். சந்திரமௌலி

-நன்றி கல்கி

இயக்குநர் ஏ.ஜெகந்நாதன்.

எம்.ஜி.ஆருடன் ஏ.ஜெகந்நாதன்இளமையில்  
 இயக்குநர் ஏ.ஜெகந்நாதன்.
கடந்த 7-10-12-ம் தேதி காலை திரையுலக பி.ஆர்.ஓ. நண்பர் விஜயமுரளி அனுப்பிய ஒரு குறுஞ்செய்தி தமிழ்த் திரையுலகத்தில் அரை நூற்றாண்டு காலமாக பணியாற்றிய ஒரு இயக்குநரின் மரணத்தை தெரிவித்தது..! ஆனால் அந்த இயக்குநரின் 50 வருட கால சினிமா வாழ்க்கையைப் பற்றி கோடம்பாக்கம் அதிகம் அறிந்திருக்கவில்லை. அந்த மனிதரும் அதைப் பற்றி இறுதிவரையிலும் கவலைப்பட்டவரில்லை..!

நண்பர் எஸ்.ராமகிருஷ்ணனின் கை காட்டலில் நான் அறிந்து கொண்ட ICAF என்னும் அமைப்பில் சேர்ந்து உலகப் படங்களை ஆர்வத்துடன் கண்டு கொண்டிருந்த நேரம்..! ஒரு வெளிநாட்டு பட விழாவைத் துவக்கி வைக்க மேடையேறி முதன்முதலாக எனக்கு அறிமுகமாகியிருந்தார் இயக்குநர் ஏ.ஜெகந்நாதன்.

அந்த நிகழ்ச்சியில் அவருடைய பேச்சுதான் கலகலப்பு.. அவ்வளவு சுவாரஸ்யமாகவும், நகைச்சுவை பொங்கவும் பேசி கூட்டத்தைக் கவர்ந்திருந்தார். “இவர்தான் மூன்று முகம் இயக்குநர்” என்று இயக்குநர் வேதம் கே.கண்ணனால் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்ட அந்த நாளில் இருந்து, சென்ற மாதம் நான் கடைசியாகப் பேசியவரையிலும் என் மீது அன்பு காட்டி, நட்பு வைத்திருந்து ஒரு நல்ல நண்பனாகவே இருந்து வந்திருக்கிறார் இந்தப் பெரியவர்.

என்னுடைய ஜாதகத்தைக் கேட்டறிந்ததில் இருந்து இவர் என்னை அழைத்தது “லூட்டி சரவணன்” என்றுதான்..! “வீட்டுக்கு வீடு லூட்டி' சீரியலை நானும் பார்த்திருக்கேன்.. நீங்கதான் எழுதினதா..? நல்லாயிருந்துச்சே.. அப்புறம் ஏன் நிறுத்துனீங்க..?” என்றவர் என் முன்பாகவே தனது செல்போனில் “சரவணன் லூட்டி” என்று என் பெயரை பதிவு செய்த தினத்தையும் நான் மறக்க முடியாததுதான்..!

கோடம்பாக்கம் இயக்குநர்கள் காலனியில் உள்ள தனது வீட்டில் இருந்து ஆட்டோவில் பிலிம் சேம்பர் வரும் இவருடன்தான் பெரும்பாலான நேரங்களில் நான் அருகே அமர்ந்து உலகப் படங்களை ரசித்திருக்கிறேன். நான் முதலில் சென்றால் இவருக்கும், இவர் முதலில் சென்றால் எனக்குமாக சீட் போட்டு வைக்கும் அளவுக்கான நட்பு கடைசிவரையிலும் இருந்தது..!

படம் முடிந்தவுடன் என்னுடைய TVS XL Super-ல் நானே அவரது வீட்டில் அவரை டிராப் செய்வேன்.. “உன் வண்டி என்னைத் தாங்குமா..?” என்று முதல் முறை மட்டுமே கேட்டார். அடுத்த முறைகளெல்லாம் “நீ எங்க உக்காந்தாலும், படம் முடிஞ்சவுடனே வாசல்ல வந்து நில்லு.. உன் வண்டிலதான் நானும் வருவேன்..” என்று உரிமையுடன் கேட்டு பல நாட்கள் என்னுடன் பயணம் செய்திருக்கிறார்..

எம்.ஜி.ஆர்., சிவாஜி, சிவக்குமார், ஜெய்சங்கர், ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ் என்று முன்னணி ஹீரோக்கள் அனைவரையும் வைத்து படம் இயக்கியவருக்கு, சில காலம் நான் சாரதியாக இருந்த அந்த நேரத்தை இப்போது நினைத்தாலும் பெருமையாகத்தான் இருக்கிறது..!

என்னுடைய நிலையில் இருந்து பார்த்தால்தான் இது புரியும். அன்றைய நாளில் ஒரேயொரு சூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்த ஒரு புதிய இயக்குநரிடம் இதே உலகப் பட விழாக்களில் நட்பு பாராட்டச்  சென்று நான் அருகில் சென்றவுடனேயே “கொஞ்சம் திங்க் பண்ணிக்கிட்டிருக்கனே..!” என்று முகத்தில் அடித்தாற்போல்  ஜாதி வெறியையும் தோற்கடிக்கும் திமிர்ப் பேச்சைக் கேட்டு நொந்து போயிருக்கிறேன்.. இன்னொரு புதிய இயக்குநர். எனக்கு நல்ல அறிமுகம். அவரது படத்தின் ஸ்கிரிப்ட்டைகூட நான் டைப் செய்து கொடுத்திருக்கிறேன். அரங்கத்தில் அவர் அருகே சீட் உள்ளது என்று எதேச்சையாக அறிந்து அருகில் அமர்ந்து “ஹலோ ஸார்..” என்று சொன்னவுடனேயே லேசாக புன்சிரிப்பை மட்டுமே உதிர்த்துவிட்டு, விருட்டென எழுந்து 2 சீட்டுக்கள் பின்னால் போய் அமர்ந்து என்னை அவமானப்படுத்தியதையும் மறக்க முடியாது..!

யாரோ, ஊர் பேர் தெரியாத அனாதைகள் கூட்டத்தில் ஒருவனாக, சினிமா ரசிகனாக மட்டுமே பிலிம் சேம்பரில் முகத்தைக் காட்டியிருக்கும் எனக்கு இப்படியொரு பெரிய இயக்குநர் நண்பராக இருந்தது அந்த நேரத்தில் எனக்குக் கிடைத்த ஒரு டானிக்கும்கூட..!

“சாயந்தரமா வீட்டுக்கு வாங்க.. நிறைய பேசலாம்..” என்பார்.  அவருடைய மனைவி வந்து “டைம் ஆச்சு..” என்று சொல்லும்வரையிலும் பேசிக் கொண்டேயிருப்பார். கோடம்பாக்கத்தில் மட்டுமல்ல.. பொதுவாகவே வயதானவர்கள் நிறைய பேச வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதிலும் உழைப்பாளிகளாக தங்களை இந்தச் சமூகத்தில் நிலை நிறுத்திக் கொண்டவர்கள் தங்களுடைய அனுபவங்களை யாரிடமாவது பகிர வேண்டும் என்று நினைக்கிறார்கள். துரதிருஷ்டம் வேகமாக வர.. அதிர்ஷ்டம் ஓடத்தில் வரும் என்பதை போல இந்தப் பாக்கியம் பலருக்கும் கிடைப்பதில்லை..!

“என்னோட திரையுலக வாழ்க்கை அனுபவங்களை எழுதறதுக்கு ஒரு பத்திரிகை கிடைக்கலை.. ஏதாவது ஏற்பாடு செய்ய முடியுமா..?” என்றார்..! அப்போது விகடனில் இது பற்றி கேட்டுப் பார்த்தேன். வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். கடைசியாக 'தினகரனி'லும், 'கல்கி'யிலும் கொஞ்சம், கொஞ்சமாக எழுதினார்.  மிச்சம், மீதியாக பல விஷயங்களை அவரது இல்லத்திலும், பிலிம் சேம்பரிலும், உலக திரைப்பட விழாக்கள் நடைபெற்ற ஆனந்த், உட்லண்ட்ஸ், பைலட் தியேட்டர்களிலும் அவருடன் பேசியதும், பழகியதும், தெரிந்து கொண்டதும் இன்றைக்கும் மனதில் பசுமையாகவே இருக்கிறது..!

ஏ.ஜெகந்நாதன் தனது சினிமா வாழ்க்கையை 1958-ம் ஆண்டு ஜூபிடர் பிக்சர்ஸில் இருந்துதான் துவக்கியிருக்கிறார். இயக்குநர்  டி.பிரகாஷ்ராவ் அந்தச் சமயத்தில் ஜூபிடரில் “எல்லோரும் இந்நாட்டு மன்னர்” என்ற படத்தை இயக்கிக் கொண்டிருந்தார். ஏ.ஜெகந்நாதன் முதலில் துணை இயக்குநராகப் பணியாற்றியதும் இந்தப் படத்தில்தான்.! இந்தப் படம் முடியும்போது அப்படத்தின் கதாசிரியர் வித்வான் மா.லட்சுமணன், இவரின் சுறுசுறுப்பான வேலைகளினால் கவரப்பட்டு, இயக்குநர் ப.நீலகண்டனிடம் இவரை உதவியாளராகச் சேர்த்துவிட்டார். அப்போதிலிருந்துதான் தனக்கு சுக்ரதிசை திரும்பியதாகச் சொன்னார் ஜெகந்நாதன் ஸார்.

“வரிசையா எம்.ஜி.ஆர். படம்.. 'காவல்காரன்', 'கண்ணன் என் காதலன்', 'மாட்டுக்கார வேலன்', 'ராமன் தேடிய சீதை', 'என் அண்ணன்', 'சங்கே முழங்கு', 'கணவன்', 'நீரும் நெருப்பும்', 'நல்லவன் வாழ்வான்', 'ஒரு தாய் மக்கள்'ன்னு ப.நீலகண்டன் இயக்கிய அத்தனை படங்களிலும் நான் வேலை செஞ்சேன். அப்போ எம்.ஜி.ஆர். படத்துல கரெக்ட்டா பேமெண்ட் வந்திரும்.. அதுனால எனக்கு அடுத்தடுத்த பல வருடங்கள் சோத்துக்குப் பஞ்சமில்லாம போச்சு.. நான் இந்த கோடம்பாக்கத்துல ஸ்டெடியா நின்னதுக்கு ரொம்ப பெரிய காரணம் இது ஒண்ணுதான்.. இடைல இடைல டி.பிரகாஷ்ராவ் ஸாரும் வெளிப்படங்கள் செய்யும்போது என்னைக் கூப்பிட்டுக்குவாரு.. நான் நீலகண்டன்கிட்ட சொல்லிட்டுப் போயிட்டு வருவேன்.. ‘படகோட்டி’ படத்துல என்னை இணை இயக்குநரா பிரமோஷன் கொடுத்து பெருமைப்படுத்தினாரு பிரகாஷ்ராவ்..” என்று நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.

“தொட்டால் பூ மலரும்” பாடல் ஷூட்டிங் எடுக்கப் போகும்போது அதை எப்படி எடுக்கலாம்ன்னு பிரகாஷ்ராவ் ஒரு ஐடியா பண்ணிட்டு வந்திருந்தாரு..! ஆனா இயக்குநர் வரும்போது எம்.ஜி.ஆர். ரொம்ப யதார்த்தமா தென்னை மரத்துல கையை வைச்சு அந்தப் பாட்டை பாடி ஹம்மிங் பண்ணிக்கிட்டிருக்கிறதை தூரத்துல இருந்து பார்த்தாரு.. என்ன நினைச்சாரோ தெரியலை.. என்னைக் கூப்பிட்டு “ஏன் அதையே ஸாங் லீடிங்கா நாம வைச்சுக்கக் கூடாது?”ன்னாரு..! அப்படி திடீர்ன்னு உருவானதுதான் அந்தப் பாடலின் துவக்க வரிகளின் காட்சிகள்.. இப்போதும் எம்.ஜி.ஆர்., சரோஜாதேவி ரொமான்ஸ்களில் இந்தப் பாடலும் தனியிடத்தைப் பிடிச்சிருக்கு...” என்றார்.

1958-ம் ஆண்டில் இருந்து இயக்குநர் பணியைக் கற்றுக் கொண்ட இவருக்கு முதல் வாய்ப்பை வழங்கியது எம்.ஜி.ஆரின் முதலாளி ஆர்.எம்.வீரப்பன்தான்.. சின்ன பட்ஜெட்டில் தனது மகள் செல்வி பெயரில் துவங்கிய புது கம்பெனிக்காக ஒரு படத்தைத் தயாரிக்க முன் வந்த ஆர்.எம்.வீ., “ஜெகந்நாதனை இந்தப் படத்தை இயக்கச் சொல்ல்லாமா?” என்று எம்.ஜி.ஆரிடமே கேட்டுவிட்டுத்தான் இந்தப் பணியினை இவருக்கு வழங்கியிருக்கிறார்.

இந்தப் படத்தின் துவக்க விழாவுக்கு வந்த எம்.ஜி.ஆர். ஜெகந்நாதனை பெரிதும் பாராட்டிவிட்டு, “இவருடைய பணியினை நான் நன்கு அறிவேன்.. மிகச் சிறந்த உழைப்பாளி. என்னோட ஸ்டூடண்ட் மாதிரி.. ப.நீலகண்டனிடம் பணியாற்றிய போது இவரது திறமையைப் பார்த்து நான் பெரிதும் ஆச்சரியப்பட்டிருக்கிறேன்..” என்றெல்லாம் சொல்லி புகழ்ந்து தள்ளியிருக்கிறார். இதுவே மிகச் சிறந்த விஸிட்டிங் கார்டாகிவிட்டது இவருக்கு..!
முதுமையில்

இந்த ‘மணிப்பயல்’ படம்தான் திராவிட இயக்கத்தினருக்கும் மிக முக்கிய திரைப்படமாக அமைந்தது ஜெகந்நாதன் ஸார் செய்த புண்ணியம் என்றே சொல்ல வேண்டும். மாஸ்டர் சேகரின் நடிப்பில் பேரறிஞர் அண்ணாவின் புகழ் பாடும் புலமைப்பித்தன் எழுதிய அந்த புகழ் பெற்ற வாழ்க்கை வரலாற்றுப் பாடல் காட்சி இந்தப் படத்தில்தான் இடம் பெற்றிருந்தது..! 'வங்கக் கடல் அலையே வாய் மூடித் தூங்குமெங்கள் தங்கத் தமிழ் மகனைத் தாலாட்டிப் பாடினையோ..” என்ற இந்த வரிகளைக் கேட்டு கண் கலங்காத ரசிகர்கள் இருந்திருக்க முடியாது..!  “அண்ணா.. அண்ணா.. எங்கள் அன்பின் தெய்வம் அண்ணா…” என்ற இந்தப் பாடல் இன்றுவரையிலும் அண்ணாவின் தம்பிகளுக்குப் பிடித்தமானதே..!

இதற்குப் பின் “உனக்கு ஒரு படம் பண்ண வாய்ப்பு தரேன்..” என்று எம்.ஜி.ஆர். சொல்லியிருந்த இடைவேளையில்தான், ஜெய்சங்கரின் ‘இதயம் பார்க்கிறது’ என்ற சின்ன பட்ஜெட் படத்தையும் இயக்கியிருக்கிறார். இதற்குப் பின் எம்.ஜி.ஆரின் ‘இதயக்கனி..!’ சஸ்பென்ஸ் காட்சிகளோடு, எம்.ஜி.ஆரின் அதே அம்மா சென்டிமெண்ட்.. காதல் களியாட்டங்கள்.. அவரது புகழ் பாடும் காட்சிகள் என்று ‘ஏ கிளாஸ் எம்.ஜி.ஆர் படம்’ என்ற பெயரை ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்திற்குப் பிறகு இந்தப் படம்தான் பெற்றது..!

படத்தின் துவக்கக் காட்சியில் வரும் “நீங்க நல்லாயிருக்கணும் நாடு முன்னேற..” பாடல் எம்.ஜி.ஆருக்காகவே உருவாக்கப்பட்டிருக்கிறது..!  இந்தப் படத்தை சிறப்பான முறையில் இயக்கியதற்காக எம்.ஜி.ஆரிடமிருந்து பரிசாக வாங்கி ஜெகந்நாதன் ஸார் அணிந்திருந்த, அந்த கைக்கடிகாரத்தை அடிக்கடி தொட்டுப் பார்ப்பேன்.. சிரிப்பார்.. அதைப் பற்றிப் பேசினாலும், எம்.ஜி.ஆரைப் பற்றிப் பேசினாலும் பேசிக் கொண்டேயிருப்பார். அதற்குள் வீடு வந்துவிட்டால், “நாளைக்கு மிச்சத்தைச் சொல்றேன்..” என்று பாதியிலேயே விட்டுவிட்டுச் சென்றுவிடுவார்..!

அப்படி அவர் பாதியிலேயே சொல்லாமலேயே விட்டுவிட்டது “இன்பமே..” பாடல் காட்சியை ஷூட் செய்த தினங்களில் வி.என்.ஜானகி அம்மாளை ஸ்பாட்டுக்கு தன்னுடன் வர விடாமல் செய்ய எம்.ஜி.ஆர். செய்த சதி வேலைகள்..! பாதிதான் சொன்னார் இயக்குநர்.. மீதி, இனியும் கேட்க முடியாது..!

அந்தப் பாடல் காட்சி என்றில்லை.. “அந்தப் படம் முழுவதுமே ராதாசலூஜா காட்டிய கவர்ச்சி மிகவும் அதீதமாக இருந்ததே..?” என்றேன்.. “அப்போ எம்.ஜி.ஆரை.. எல்லா லேடீஸும் தன்னோட ஹஸ்பெண்ட்டாவே நினைச்சு ரசிச்சுக்கிட்டிருந்தாங்க. அதுனாலதான் எம்.ஜி.ஆரை வைச்சு படம் பண்ற அத்தனை இயக்குநர்களும் கதாநாயகிகளை கவர்ச்சியாவே காட்ட ஆரம்பிச்சிட்டாங்க. விநியோகஸ்தர்களும் இதைத்தான் எம்.ஜி.ஆர். ரசிகர்களும் விரும்புறதாவே சொன்னதால எங்களுக்கும் வேற வழியில்லாம போச்சு..” என்றார்..!

இவ்வளவு பெரிய சூப்பர் ஹிட்டுக்கு பின்பும் தொடர்ந்து எம்.ஜி.ஆர் படங்களை இயக்கும் வாய்ப்பு கிடைக்காததற்கு காரணம்.. “அடுத்த 2 வருடங்கள் மட்டுமே எம்.ஜி.ஆர். நடித்தார்.  அதிலும் என்னுடைய குருநாதர் நீலகண்டனே எம்.ஜி.ஆரின் 2 படங்களை இயக்குவதற்காக காத்திருந்தார். கே.சங்கர், ஸ்ரீதர் தலா ஒரு படம் பண்ணினாங்க.. அதுக்குள்ள எம்.ஜி.ஆரும் தேர்தல்ல ஜெயித்து முதலமைச்சராகிவிட்டதால் ஒரு படம் செஞ்சாலும், மறக்க முடியாத படமா செஞ்சுட்டதா இப்போவரைக்கும் எனக்கு பெருமைதான்..” என்றார்..

“இப்படியே டைப் அடிச்சுக் கொடுத்திட்டு காலத்தை வீணாக்காத.. ஏதாவது சினிமா கதை இருந்தா சொல்லு.. நான் யார்கிட்டயாச்சும் சொல்றேன்.. அப்படியாச்சும் உள்ள நுழைஞ்சு பொழைச்சுக்கோ..” என்றார் ஜெகந்நாதன் ஸார். அப்போதும், இப்போதும் என்னிடம் ஒரு கதை இருந்தது. இருக்கிறது.. “அது மலையாளத்துல பண்ணா நல்லாயிருக்கும்.. நீங்க வேண்ணா படிச்சுப் பாருங்க ஸார்.. புடிச்சிருந்தா யார்கிட்ட வேண்ணாலும் சொல்லுங்க..” என்று சொல்லி அந்தக் கதையைக் குடுத்தேன். படித்துப் பார்த்துவிட்டு மறுநாள் போன் செய்து என்னை வீட்டுக்கு கூப்பிட்டார்.

போனவனை காபியோடு வரவேற்று உட்கார வைத்து, “படிச்சேன்.. நீ சொன்ன மாதிரி இது தமிழுக்கு சூட்டாகாது. மலையாளத்துக்குத்தான் ஆகும்.. வேண்ணா பாலாஜிகிட்ட சொல்லலாமா..?” என்று கேட்டுவிட்டு என்னை கேட்காமலேயே போனை எடுத்து டயல் செய்தார்.. ரிங் போய்க் கொண்டேயிருந்தது.. எடுக்க ஆளில்லை போலும்.. போனை வைத்துவிட்டு, “ரொம்ப வருஷமாச்சு பாலாஜிகிட்ட பேசி.. அவரோட தயாரிப்புல ஒரு படம் செஞ்சேன். பாதி படம் செஞ்சுக்கிட்டிருக்கும்போதே அதே கதையை எனக்குத் தெரியாமலேயே தெலுங்குல செய்ய ரைட்ஸ் கொடுத்திட்டாரு பாலாஜி.. இது எனக்கு ரொம்பக் கோவமாகி காச் மூச்சுன்னு கத்திட்டேன்.. அன்னிக்கு பேசினதுதான்.. இப்போதான் உனக்காக பேசப் போறேன்..” என்று சொல்லிவிட்டு மீண்டும், மீண்டும் டயல் செய்தார். ஆளில்லை போல தெரிய.. “சரி விடு.. நாளைக்கு நான் பேசிட்டு சொல்றேன்..” என்றார்.. எனக்காக இத்தனை வருட பேச்சுவார்த்தையை முடிவுக்கு கொண்டு வந்து தனது ஈகோவை கைவிட எத்தனித்த அவருடைய அந்த நிமிடத்தை இப்போது நினைத்தால் பெருமையாக உள்ளது.. கடைசியில் அவர் திரு.பாலாஜியிடம் பேசிவிட்டு பின்பு என்னிடமும் சொன்னார். “நீ அவரை போய்ப் பாரு..” என்றார். நான் திரு.பாலாஜிக்கு  போன் செய்த நேரம் அவருக்கு மிகவும் துரதிருஷ்டமான நேரம்.. அத்தோடு நான் அதை விட்டுவிட்டேன்..!

‘இதயக்கனி’க்கு பின்பு பிலிம் நியூஸ் ஆனந்தன் தொகுத்தளித்திருக்கும் லிஸ்ட்படி பார்த்தால் பல படங்களை ஜெகந்நாதன் இயக்கியிருந்தாலும் முழு தகவல்களைத் திரட்ட முடியவில்லை. நான் நேரிலும் கேட்டபோது “அதையெல்லாம் நோட் போட்டு எழுதி வைச்சிருந்தேன். வெள்ளையடிக்கும்போது எங்கோ மிஸ்ஸாயிருச்சு.. இப்போ எனக்கே மறந்து போச்சு” என்றார்.. ‘ஆயிரம் வாசல் இதயம்’, ‘குமார விஜயம்’, ‘நந்தா என் நிலா’, ‘குரோதம்’, ‘முதல் இரவு’, ‘அதிர்ஷ்டம் அழைக்கிறது’ போன்ற படங்களை இயக்கியிருப்பது தெரிகிறது.. இதில் ‘அதிர்ஷ்டம் அழைக்கிறது’ படத்தில் இயக்குநர் இமயம் பாரதிராஜாவும் இவரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறார். ‘சின்னச்சாமி’ என்ற பாரதிராஜாவின் ஒரிஜினல் பெயர்தான் டைட்டிலில் வருமாம்..!

'குரோதம்' படத்தில் இவர் அறிமுகப்படுத்திய மலேசிய நடிகர் பிரேமை நீங்கள் மறந்திருக்க முடியாது..! இந்தப் படம் நூறு நாட்களைத் தாண்டி ஓடியிருக்கிறது.  “முதல் இரவு” படத்தில் சிவக்குமார், சுமித்ரா நடித்திருந்தார்கள். “மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்” என்ற பாடல் இந்தப் படத்தில்தான் இடம் பெற்றிருந்தது.. இந்தப் பாடல் காட்சியை படமாக்கியிருக்கும் விதம் எனக்கு மிகவும் பிடித்திருப்பதாகச் சொன்னேன்..  “ஊட்டியில் மாலை மயங்கிய நேரங்களிலேயே இந்தப் பாடல் காட்சியை படமாக்கியதாகவும், இளையராஜாவின் அற்புதமான இசைதான் பாடலை ஹிட்டாக்கிவிட்டது..” என்றார்..! “சிவக்குமாருக்கு அப்போதைய காலக்கட்டத்தில் பொருத்தமான ஜோடி சுமித்ராதான்.. படம் சரியாப் போகலைன்னாலும் எனக்கும், சிவக்குமாருக்கும் இந்தப் படத்துல ஆத்ம திருப்தி..” என்றார்..!

8 ஆண்டுகளுக்கு முன்பாக உலக திரைப்பட விழா சென்னையில் துவங்கியபோது மிக ஆர்வமாக கலந்து கொண்டவர், கடைசியாக சென்ற ஆண்டு வரையிலும் தினம் தவறாமல் வந்திருந்து படங்களை பார்த்துச் சென்றார். சென்ற ஆண்டுதான் கடைசி ஆண்டோ தெரியவில்லை.. இயக்குநர் திரு.எஸ்.பி.முத்துராமனும், ஜெகந்நாதன் ஸாரும்தான் போன வருஷம் முழுக்க ஜோடி போட்டு உட்லண்ட்ஸ் தியேட்டர்ல சுத்தினாங்க..! நான் தியேட்டருக்குள் வேக வேகமா படியேறும்போதே அவரிடமிருந்து போன் வரும். “மிஸ்டர் லூட்டி சரவணன்.. உட்லண்ட்ஸ்ல படம் போர்.. சிம்பொனிக்கு வாங்க.. அங்கதான் உக்காந்திருக்கேன்..” என்பார். சமயங்களில் பல முக்கியத் திரைப்படங்களை முன்பே பார்த்திருப்பதால் “அந்தப் படத்துக்கு போங்க.. இந்தப் படத்துக்கு போங்க..” என்று அவரே திசை திருப்பிவிடுவார்..!

முதல் 2 உலகப் பட விழாக்கள் ஆனந்த் தியேட்டரில் நடந்தபோது நான் வெட்டி ஆபீஸராக இருந்தேன். அப்போதெல்லாம் தினம்தோறும் எனக்கு மதியச் சாப்பாடும், மாலை சிற்றுண்டியும் ஜெகந்நாதன் ஐயா வழங்கியதுதான்..! இப்போதும் நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன்..! ஆனந்த் தியேட்டரில் அன்றொரு நாள் பார்த்த ஒரு படம் மிக மிக வித்தியாசமாக படத்தின் கிளைமாக்ஸே 4 விதமாக இருந்தது.. கடைசி 5 நிமிடங்கள் ரசிகர்கள் அனைவரும் நின்று கொண்டுதான் இருந்தோம். அப்படியொரு சுவாரஸ்யம்..!

வண்டியில் வீட்டிற்கு போகும்வழியில் பாம்குரோம் பக்கத்தில் இருக்கும் செட்டி நாடு ஹோட்டலுக்கு விடச் சொன்னவர்.. அங்கேயே எனக்கு இரவு டிபன் வாங்கிக் கொடுத்து அந்தப் படத்தைப் பற்றி ரீல் பை ரீல் பாராட்டிப் பேசினார்..! “இப்படியெல்லாம் எடுக்கணும்யா.. எங்க நம்ம ஆளுக ரசிச்சானுங்கன்னா எடுக்கலாம்.. யாருய்யா நஷ்டப்பட்டு கை தட்டலுக்காக படம் எடுக்க முன் வரப் போறாங்க..?” என்று பெரிதும் வருத்தப்பட்டார்..!

உதவி செய்வதும், கை காட்டுவதும்.. கனிவாகப் பேசுவதும்.. ஒரு புறத்தில் இருந்தாலும் சுயமரியாதையில் மிக உறுதியாகவே இருந்தார் ஐயா.. நான் எப்போதும் எனது குருநாதர் கே.பி.யை பெயர் குறிப்பிடாமல், “டைரக்டர்” என்றே சொல்வது வழக்கம்.  ‘மின்பிம்பங்கள்’ காலம் தொட்டே இப்படித்தான்..! இவரிடமும் பேசும்போது “இன்னிக்கு டைரக்டரை பார்த்தேன் ஸார்.. டைரக்டர்கிட்ட பேசுனேன் ஸார்..” என்றே சொல்லிக் கொண்டிருந்தேன். ஒரு நாள் திடீரென்று கோபப்பட்டு, “ஏம்ப்பா இங்க பாலசந்தர் மட்டும்தான் டைரக்டரா..? மத்தவன்லாம் அஸிஸ்டெண்ட்டா..? என்ன.. எப்போ பார்த்தாலும் ‘டைரக்டர்’.. ‘டைரக்டர்’ன்னுட்டு..!” என்று சிடுசிடுத்தார்..

அவரது கோபத்தை எதிர்பார்க்கவில்லை என்றாலும், பதில் சொல்ல முடியாமல் நிற்க.. இன்னும் கோபமானார்.. “என்னய்யா டைரக்டர் அவரு(கே.பாலசந்தர்)..? ஒரு ஷாட்கூட ஒழுங்கா வைக்கத் தெரியாது..! நாங்க எடுத்ததெல்லாம் சினிமாய்யா.. அவர் எடுத்தது சினிமாவா..? இங்கேயும் வந்து நாடகம் மாதிரியே டைம் லேப்ஸ் கொடுத்து கிடைச்ச கேப்புல காலண்டரை காட்டுறது.. காலை காட்டுறது.. பொம்மைய காட்டுறதுன்னு  டயலாக் டெலிவரிக்கு டைம் கொடுத்தே, தமிழ்ச் சினிமாவையும் நாடமாக்கிட்டாரு.. இதுல என்னய்யா சினிமாத்தனம் இருக்கு..?” என்று பொங்கித் தீர்த்துவிட்டார்..!

மெளனமாக அவர் சொன்னது முழுவதையும் தாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தவனை இரவு 11 மணிக்கு கைப்பேசியில் மீண்டும் அழைத்தார் ஜெகந்நாதன் ஸார். “அது வந்து.. ஏதோ கோபத்துல சொல்லிட்டேன்.. நீங்க தப்பா நினைச்சுக்காதீங்க.. அவர்கிட்ட சொன்னாலும் எனக்கொண்ணும் ஆட்சேபணையில்லை.. சொல்லலைன்னாலும் வருத்தப்பட மாட்டேன்.. அவரோட மேக்கிங் ஸ்டைல் பத்தி என்னோட கருத்து இதுதான்.. கொஞ்சம் ஸ்பீடா சொல்லும்போது வேற மாதிரி வந்திருச்சு. உங்களுக்கு ஒண்ணும் கோபமில்லையே..?” என்றார் 75 வயது நிரம்பிய அந்த முதியவர்..! இப்போது நினைத்து பார்த்தாலும் இதில் கோபிக்க ஏதுமில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது..!

1982-ம் வருடம் ஜெகந்நாதன் ஸாரின் வாழ்க்கையில் மீண்டும் ஒரு திருப்பு முனை.  சத்யா மூவிஸ் தயாரிப்பில் ரஜினி நடித்த 'மூன்று முகம்' படத்தை ஜகந்நாதன் டைரக்ட் செய்தார்.  ‘அலெக்ஸ் பாண்டியன்’ என்ற இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்த ரஜினியின் கேரக்டர் ஸ்கெட்ச்தான் படமே..! இந்தப் படத்தின் கதையை ரஜினியிடம் சொன்னபோது, “பிறந்த நாள் கேக்கை வெட்டும்போது அந்தத் தீச்சுவாலையில்  பிளாஷ்பேக் கதை விரியும்..” என்று ஜெகந்நாதன் ஸார் சொன்னபோது, ரஜினி கை தட்டி ரசித்தாராம்.. “இது நல்லாயிருக்கு ஸார்.. கண்டிப்பா நல்லா வரும் ஸார்..” என்று முதலிலேயே ரெடியாகிவிட்டாராம்..!

முதலில் அலெக்ஸ் பாண்டியன் கேரக்டருக்கு ரவிச்சந்திரன்தான் நடிப்பதாக இருந்ததாம்.. ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் அவர் நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட அதையும் ரஜினியே செய்யட்டுமே என்று ஆர்.எம்.வீ.யும் கதை இலாகாவினரும் சொல்லிவிட்டார்களாம்.. அந்த கேரக்டருக்காக தனி ஸ்டைல் இருந்தால் நல்லாயிருக்குமே என்று ஜெகந்நாதன் ஸார் விருப்ப்ப்பட்டிருக்கிறார். “நீங்க சொல்லுங்க ஸார்.. செஞ்சு பார்த்திருவோம்..” என்று ரஜினியும் ஓகே சொல்லி “இதுவரைக்கும் வேகமாக பேசித்தான் நடிச்சிருக்கேன்.. அதே ஸ்பீட்ல நடந்தா நல்லாயிருக்குமா..? செஞ்சு பார்க்கலாமா..?” என்று ப்ளோரிலேயே பல முறை நடந்து காட்டினாராம்.. இதுவும் போதாமல், மேக்கப் அறையில்கூட குறுக்கும், நெடுக்குமாக நடந்து பார்த்துவிட்டு “இப்போ ஓகே ஸார்..” என்றாராம்..! “அந்த ஸ்டைல்தான் படமே..! அதுனாலதான் படம் ஜெயிச்சது.. நான் திரும்பவும் ஜெயிச்சேன்..” என்றார்..!

“ரஜினி அதுக்கப்புறம் பல நேரம் திடீர், திடீர்ன்னு போன் செய்வாரு.. அப்புறம் போனே செய்றதில்லை.. ரொம்ப நாளாச்சு..  செளந்தர்யா கல்யாணத்துல பார்த்ததுதான்..” என்ற வருத்தத்தில் இருந்த ஜெகந்நாதன் ஸாரை, இன்னும் கொஞ்சம் கோபப்பட வைத்துவிட்டார் ரஜினி.

இயக்குநர்கள் சங்க ஆண்டு விழாவில் ஜெகந்நாதன் ஸார் ரஜினியின் அருகில் சென்று பேச முயல.. “ஓகே.. ஓகே..” என்று வழக்கம்போல ஆசீர்வாதம் செய்வது போல சொல்லி  மறுதலித்துவிட்டார் ரஜினி. ஏற்கெனவே நடு ராத்திரியில் மேடையேற்றிய கோபத்தில் இருந்த ஜெகந்நாதன் ஸாருக்கு இது இன்னுமொரு கோபமாகிவிட்டது.. “என்ன சரவணா இது..? ச்சும்மா தலையை ஆட்டி.. ஓகே ஓகேன்னா என்ன அர்த்தம்..? அவர்ல்ல எந்திரிச்சு வந்து என்னை விசாரிக்கணும்.. நானே தள்ளாடிக்கிட்டு நடந்து வர்றேன். ஏதோ மூணாம் மனுஷன் மாதிரி பேசினா எப்படி...?” என்று மிகவும் வருத்தப்பட்டார்..!

இதுவும் கொஞ்ச நாள்தான்..! இதற்குச் சில நாட்கள் கழித்து ரஜினி தனது வீட்டில் தன்னை வைத்து இயக்கிய பெரிய இயக்குநர்கள்.. தனக்கு நெருக்கமான திரையுலகப் பிரமுகர்கள் அனைவரையும் அழைத்து ஒரு விழா எடுத்தார்..! இந்த விழாவுக்கு ஜெகந்நாதன் ஸாருக்கும் அழைப்பு வந்தது. லதா ரஜினியே போன் செய்து அழைத்திருந்தார். விழாவுக்கு போய்விட்டு வந்து அன்று மாலையே என்னை போனில் அழைத்து சந்தோஷப்பட்டார்..!

“இன்னிக்கு ரஜினியை பார்த்தேன் சரவணன்.. நல்லா பேசினாரு.. ‘உடம்பை பார்த்துக்குங்க’ன்னு சொன்னாரு..  ‘உங்களை நிறைய மிஸ் பண்ணிட்டேன்’னு சொன்னாரு.. எனக்கும் வருத்தமாத்தான் இருந்தது.. ‘எனக்கு உடம்புக்கு முடியலை. இல்லாட்டி உங்களை அடிக்கடி வந்து பார்ப்பேன்’னு சொன்னேன்.. ‘இல்ல.. இல்ல.. நீங்க வீட்ல ரெஸ்ட் எடுங்க.. போன்ல பேசுவோம்’னு சொன்னாரு..! அவருக்கு உ.வே.சா. பத்தின புத்தகத்தை பரிசா கொடுத்தேன்..! உங்காளும்(கே.பி.) வந்திருந்தாரு.. ரொம்ப நாள் கழிச்சு அவர்கிட்டேயும் பேசினேன்.. அவருக்கும் ஒரு புத்தகத்தை பரிசா கொடுத்திட்டு வந்தேன்..! ஆனா உன்னைப் பத்தி எதுவும் சொல்லலை.. ரஜினி வாசல்வரைக்கும் வந்து வழியனுப்பி வைச்சாரு.. ஐ ஆம் ஸோ ஹேப்பி..!” என்றார்.

அடிப்படையில் ஜெகந்நாதன் ஸார் கோவை பி.எஸ்.ஜி. கலைக் கல்லூரியில் இரண்டாம் பேட்ச் மாணவர். பி.ஏ. தமிழ் இலக்கியம் படித்தவர்.. தமிழ் இலக்கியத்தில் நிரம்ப ஆர்வம் கொண்டவர்.. அதிலும் சிலப்பதிகாரத்தில் ஆழ்ந்த புலமை கொண்டவர்.. தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யர் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தவர். சென்னையில் உ.வே.சா.வுக்கு சிலை அமைக்கப்பட்ட பின்பு, உ.வே.சா.வின் ஒவ்வொரு பிறந்த நாளின்போதும்  அவரது சிலைக்கு மாலை அணிவிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

உ.வே.சா.வை பற்றிப் பேசச் சொன்னாலும் மணிக்கணக்காகப் பேசுவார். அவரைப் பற்றி தூர்தர்ஷனுக்காக 13 வாரத் தொடராக “தமிழ்த் தாத்தா” என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சியை தயாரித்து வழங்கியிருந்தார்..!  வீட்டில் இருந்த புத்தகங்களில் பெரும்பான்மையானவை இலக்கிய புத்தகங்கள்தான்..! “சிலப்பதிகாரத்துக்கு உரைநடையாக புத்தகம் இருக்குமா?” என்று நான் கேட்டிருந்தேன்.. எனக்காக பல இடங்களிலும் விசாரித்துவிட்டு மிகவும் கவலையோடு “இதுவரைக்கும் யாரும் அப்படி எழுதலை சரவணா..!” என்று வருத்தப்பட்டு சொன்னவிதம் , எனக்குள் அவர் மீதான மரியாதையை பன்மடங்கு உயர்த்தியது..!

இலக்கியத் தொடர்பில் பல முக்கிய இலக்கிய பத்திரிகைகளை வாசித்து வந்தாலும் அசோகமித்திரனுடன் பழக்கம் இருந்ததாகச் சொன்னார்..!  ஒரு முறை அசோகமித்திரன் இவரிடம், “கரகாட்டக்காரன்-சின்னத்தம்பி.. இந்த ரெண்டு படமும் எப்படிங்க ஜெயிச்சது..? ஏன் இந்த ஓட்டம் ஓடுச்சு..?” என்று கேட்டாராம்..! “இதுக்கு ஆன்ஸர் தெரிஞ்சா, நானே இதே மாதிரி படம் செஞ்சிர மாட்டேனா...?” என்று இவரும் பதில் சொன்னாராம்..!

மூன்று முகம் வெளியான அடுத்த வருடமே ஜெகந்நாதன் ஸாருக்கு மீண்டும் ஒரு டபுள் ஆக்சன்..! 1983 நவம்பர் 4. தீபாவளியன்று சிவாஜி பிலிம்ஸின் ‘வெள்ளை ரோஜா’வும், ரஜினியின் ‘தங்க மகன்’ இரண்டு படங்களும் ஒரே நாளில் ரிலீஸாகி இரண்டுமே ஹிட்டடித்தன..! ‘வெள்ளை ரோஜா’வில் சாப்ட்டான கேரக்டரில் நடிப்பு சாயல் இல்லாமல் இருந்தால் ஜெயிக்குமா என்ற நடிகர் திலகத்தின் சந்தேகத்தை தீர்த்துவைத்து, உடன் ராம்குமாரையும் வில்லனாக நடிக்க வைத்து ஜெயித்துக் காட்டினார்.  இதே 'வெள்ளை ரோஜா', இந்திக்கும், கன்னடத்திற்கும் படையெடுத்திருக்கிறது. இந்தியில் ஜிதேந்திராவும் கன்னடத்தில் பிரபாகரும் நடிக்க இவைகளையும் ஜெகந்நாதன் ஸாரே இயக்கியிருக்கிறார். சிறந்த இயக்குநருக்கான ஒரேயொரு பிலிம்பேர் விருதையும் ‘வெள்ளை ரோஜா’ படத்துக்காகவே வாங்கியிருக்கிறார் ஜெகந்நாதன் ஸார்..!

ரஜினி, சிவாஜியுடன் மட்டுமா என்ற கேள்விக்கு 1987 பொங்கலில் வெளியான சத்யா மூவிஸின்  'காதல் பரிசு' படம் விடை சொன்னது. இதில் ‘காதல் மகாராணி’ பாடல் “நினைத்தேன் வந்தாய் நூறு வயது’ ஸ்டைலில் இருப்பதாக நான் சொன்னவுடன்.. “அதேதான்.. அந்த ஸ்டைல்ல ஒரு பாட்டு வேணும்ன்னு விருப்பப்பட்டோம். அதுனால அதே மாதிரி  எடுத்தோம்.. இருந்தாலும் கமல், அம்பிகாவோட ஆர்ட் டைரக்சனும் அற்புதமாக வேலை பார்த்தாங்க.. இப்பவும் அந்தப் படத்துல எனக்கு ரொம்ப புடிச்ச பாட்டு அதுதான்...” என்றார். “ஆனால் எனக்கு கூ.. கூ.. என்று குயில் கூவாதா..? பாட்டுதான் பிடிக்குது..” என்றேன்.. “அந்த டான்ஸெல்லாம் ச்சே.. ச்சே.. சான்ஸே இல்லை.. கமலுக்கு மட்டும்தான்..” என்றேன்..

“கமல் இதுக்கு முன்னாடி நான் டைரக்ட் செஞ்ச படங்கள்லேயே சின்ன சின்ன கேரக்டர்ல நடிச்சிருக்கான்.. அப்பல்லாம் ஆழ்வார்பேட்டைல அவனை ஏத்திக்கிட்டு அதே கார் என் வீட்டுக்கு வந்து என்னையும் கூட்டிக்கிட்டு கிளம்பும்.. அன்னிக்கு டான்ஸ் ரிகர்சல்ன்னா வண்டிலேயே கையை, காலை ஆட்டிக்கிட்டு ஏதாவது செஞ்சுக்கிட்டேதான் வருவான்.. டயலாக் போர்ஷன்னா மனப்பாடம் செஞ்ச மாதிரி டயலாக்கை சொல்லிக்கிட்டேதான் வருவான்.. டெடிகேஷன் பெர்ஷன்.. அதுனாலதான் இந்த அளவுக்கு வந்திருக்கான்..! இந்தப் படத்துலகூட லொகேஷன் வந்த பின்னாடி இடத்தைப் பார்த்துட்டு, திரும்பத் திரும்ப டான்ஸ் மூவ்மெண்ட்ஸை மாத்தி, மாத்தி ரெடி பண்ணிக் குடுத்தான்.. அதான் அந்த டான்ஸ் இப்பவும் பேசப்படுது..” என்றார்..!

சத்யா மூவிஸ் தயாரிப்பு மட்டுமல்ல.. வெளி தயாரிப்புப் படங்களையும் ஒப்புக் கொண்டு இயக்கியிருந்தாலும் அவருடைய கடைசி ஹிட் ‘காதல் பரிசு’தான். ‘முத்துக்கள் மூன்று’, 'கொம்பேறி மூக்கன்', 'நாளை உனது நாள்', ஓ மானே - மானே, 'கற்பூர தீபம்' 'என் தங்கை', மில் தொழிலாளி', 'அர்ச்சனா ஐ.ஏ.எஸ்', 'ஹீரோ' என்று லிஸ்ட்டில் பல படங்களும் அடக்கம். இடையில் சுருளிராஜனை ஹீரோவாக வைத்துகூட ஒரு படத்தை இயக்கியிருக்கிறார். ஜெகந்நாதன் ஸார் இயக்கிய கடைசிப் படம் ‘வாட்ச்மேன் வடிவேலு’. சிவக்குமார் ஹீரோவாக நடித்திருந்தார். “அதற்குப் பின்பும் பட வாய்ப்பு வந்தது.. அந்த நேரத்துல உ.வே.சா. பத்தின டாக்குமெண்ட்ரி எடுக்கப் போனதால கொஞ்சம் கேப் விழுந்திருச்சு.. அதுனால அப்படியே கோடம்பாக்கம் கை விட்டுப் போயிருச்சு” என்றார்..!

கோடம்பாக்கம் கைவிட்டாலும் சின்னத்திரையிலும் சில தொடர்களை இயக்கியிருக்கிறார் ஜெகந்நாதன் ஸார்.. வரிசைக்கிரமமாக பார்த்தால் ‘தாலி’, ‘மர்மம்’, ‘நரசிம்மாவதாரம்’, ‘பவானி’, ‘கோர்ட்டு தீர்ப்பு’, ‘பெண் ஒரு ஜீவ நதி’ என்று சில குறுந்தொடர்களை இயக்கிய நிலையில் மேலும் பலவற்றுக்கு கதை ஐடியா மட்டுமே கொடுத்துக் கொண்டிருந்தார். வயதானது ஒரு பக்கம்.. துணைக்கு யாருடைய உதவியும் இல்லாதது..! சேனல்களில் அறிமுகம் இல்லாதது - இதெல்லாம் சேர்ந்து கொண்டதால் இதுவே போதும் என்று தனது படைப்புலகத்தில் இருந்து விலகியிருந்தார் ஜெகந்நாதன் ஸார்..!

சென்ற வருட உலகத் திரைப்பட விழாவின் அனைத்து நாட்களிலும் வராமல் போனாலும் கடைசி 4 நாட்கள் முழுவதுமாக என்னுடன் இருந்தார்..! நான் ஈரோடு சென்று திரும்புவதாகச் சொன்னபோது “உனக்கு இப்போ அந்த விருது ரொம்ப முக்கியமா..? இப்போ மிஸ் பண்ற படங்களை எப்படி திரும்பப் பார்ப்ப..?” என்று லேசாகக் கோபித்தும் கொண்டார்..!  இடையிடையே ஐசிஏஎஃப்பின் புதிய பட திரையிடூகள் பற்றி போனில் பேசுவோம்..! ரஷ்யன் கல்ச்சுரல் சென்டரில் இட நெருக்கடியால் சில நேரங்களில் உட்கார முடியாததால், இப்போதெல்லாம் போக முடியவில்லை என்று ரொம்பவே வருத்தப்பட்டுக் கொண்டார்..!

அவருடைய மகள்கள் இருவரும் திருப்பூரிலும், திருச்சியிலும் இருப்பதால் அடிக்கடி டூர் சென்றுவிடுவார். ஏதாவது முக்கிய படங்கள் ரிலீஸாகும்போது மட்டுமே போன் செய்து ரிசல்ட் என்ன என்று ஆர்வத்துடன் விசாரிப்பார். “இதுவும் ஊத்திக்கிச்சா..?” என்று அவர் மெல்ல சொல்லும்போது எனக்கு புரையேறுவது போல சிரிப்பு வரும்..! ஆனாலும் அவர் சிரிக்காமல் “அவன் இவ்ளோ அலட்டும்போதே நினைச்சேன்.. இப்படித்தான் எடுத்துத் தொலைப்பான்னு..” என்பார்..!

திருப்பூரில் தான் இருந்தபொழுதுகூட அந்த ஊரில் நடந்த பல புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிகளிலும், சினிமா தொடர்பான நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டிருக்கிறார்.. “இப்போ எல்லாருமே வரலாறு தெரியாமலேயே பேசுறாங்க.. எழுதுறாங்க.. நம்மளை கொஞ்சம் பேச விட்டா பேசலாம்.. எங்க முடியுது..” என்று அலுத்துக் கொண்டவருக்கு சினிமாவைக் கற்றுக் கொள்வதில் இருந்த ஆர்வம் இறுதி வரையிலும் இருந்திருக்கிறது. இதுதான் ஆச்சரியம்..! சிலருக்கு மட்டுமே இது சாத்தியம்..!

ஒரு மகன். பெயர் அருண்.. மைக்ரோசாப்ட் கம்பெனியில் மிகப் பெரிய பொறுப்பில் இருப்பது குறித்து அவருக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அதே சமயம்.. பெரிய குறையும் அதுதான் என்பார். “எனக்குப் பின்னாடி என் பேரைச் சொல்ல இங்க யாருமே இல்லை..” என்பார். “என்னோட அஸிஸ்டெண்ட்கூட யார், எங்க இருக்காங்கன்னே தெரியலை.. ஒருத்தராச்சும் ஏதாவது ஒரு நல்ல நாள்ல வந்து பார்த்திட்டு போகக் கூடாதா..?” என்பார்.. எனக்குத் தெரிந்து இவருடன் நீண்ட நாட்கள் அஸிஸ்டெண்ட்டாக இருந்தவர்களில் யாரும் இயக்குநர்களாக பரிணமிக்கவில்லை என்பது உண்மை..!

78 வயதாகி சற்றுத் தளர்ச்சியான நடையில் இருந்தாலும், 2 ஆண்டுகளுக்கு முன்னால்தான் அமெரிக்கா சென்று 6 மாதங்கள் தனது மகன் வீட்டில் தங்கியிருந்துவிட்டு வந்தார்..!  திருப்பூரிலேயே பாத்ரூமில் வழுக்கி விழுந்து அடிபட்டுவிட்டதாகவும், சீக்கிரமா சென்னைக்கு வந்துட்டு கூப்பிடுறேன் என்று மட்டுமே கடைசியாக  பேசும்போது கூறியிருந்தார்.  திரும்பி வருவார் என்றுதான் நானும் நம்பியிருந்தேன். நான் மட்டுமல்ல.. அவர் வீட்டு போர்டிகாவில் இப்போதும் எரிந்து கொண்டிருக்கும் அந்த 40 வால்ட்ஸ் பல்பும் அவருக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறது..!

அவரது பூதவுடலை சென்னை கொண்டு வந்திருந்தால் இயக்குநர்கள் சங்க மாலையோடு அவருக்கு இறுதி மரியாதை செலுத்தியிருக்கலாம்.. ஆனால் வாய்ப்பில்லாமல் போய்விட்டதெண்ணி அவர் நிச்சயம் வருத்தப்படுவார் என்றே நினைக்கிறேன். ஏனெனில் அவர் சினிமாவை நேசித்தார்.. தான் சினிமாக்காரன் என்பதை மிகவும் உயர்வாகவே கருதினார்.. அந்த உயர்வுக்குரிய மரியாதை அவரது உடலுக்கு கிடைக்காமல் போனது வருத்தமானதே..! ஆனால் இது எல்லாவற்றையும்விட அவருக்கு இன்னொரு பெயர் கிடைத்திருக்கிறது.. தான் பிறந்து வாழ்ந்த அதே ஊரில் ஒரு பண்பட்ட மனிதனுக்கு இறப்பும் கிடைக்கிறது என்றால் அது அவரவர் செய்த பாக்கியம் என்றே சொல்ல வேண்டும்..!

1935 டிசம்பர் 25-ம் தேதி  திருப்பூரில் ஆறுமுகம் முதலியாருக்கும்,  ராமாத்தாளுக்கும் மகனாகப் பிறந்த ஜெகந்நாதன் அதே ஊரில் தனது தந்தை பெயரில் கட்டியிருந்த.. பெற்றோர் இருந்திருந்த வீட்டிலேயே இறந்தும் போனது அவருக்குக் கிடைத்த கொடுப்பினை..!

என்னைப் போன்ற சாதாரணமானவர்களையெல்லாம் நடுவீட்டில் உட்கார வைத்து மரியாதை செய்து நம்பிக்கையூட்டிய எனது மூத்தோர் ஜெகந்நாதன் ஐயாவுக்கு என்னால் முடிந்தது இந்தச் சிறிய அஞ்சலிதான்..!

அவரது ஆன்மா சாந்தியாகட்டும்..!

Thanks:: http://truetamilans.blogspot.com/

Tuesday, 30 October 2012

தமிழ் மூலம் சீனம்- பாடம் 3

சீனத்து அழகி 
தமிழ்  மூலம் சீனம்- பாடம் 3
 கடந்த முறை மேலும் இரண்டு சொற்களைப் படித்தறிந்தோம். நீங்கள் பல முறை பயற்சி செய்தீர்களா? மனதில் பதிந்துவிட்டதா?. அவற்றை மீண்டும் பார்ப்மே! 
下午好 (xia wu hao).
下午好 (xia wu hao)

அடுத்து, 晚上好(wan shang hao), 
晚上好.wan shang hao)

இன்று மேலும் நான்கு சொற்களை அறிய இருக்கின்றோம்.

முதலில் 您好, சீனாவில், தன்னைவிட வயது கூடுதலானவர், மதிப்புக்குரியவர் ஆகியோருக்கு மரியாதை காட்டும் வகையில், அவர்களுக்கு வணக்கம் தெரிவிக்கும் போது, 您好(NIN HAO)என்று சொல்ல வேண்டும். 您 (NIN) என்றால், நீங்கள் என்று பொருள். இப்பொழுது  படியுங்கள். 您好 (NIN HAO)您好.

அடுத்து, 你们好 (NI MEN HAO), 
இதில் 你们 (NI MEN)என்பது, 你(NI)என்ற சொல்லின் பன்மை வடிவமாகும். 2க்கு அதிகமானோர் இருந்தால், 你们 (NI MEN )என்று சொல்ல வேண்டும். நீங்கள் என்று இது பொருட்படும். இப்பொழுது  படியுங்கள்.
 你们好.(NI MEN )
 你们好.(NI MEN )
அடுத்து, 我(wo)என்ற சொல்லைக் காண்போம்.
 我(wo) என்றால் நான் என்பது பொருள்.  சேர்ந்து படியுங்கள்.
 我(wo). 我们 (wo men)என்றால் நாங்கள் என்று பொருள். 
இது, 我(wo) என்ற சொல்லின் பன்மை வடிவமாகும். இப்பொழுது சேர்ந்து படியுங்கள்
 我们 (wo men).
 我们 (wo men).
அடுத்து, 他 என்ற சொல்லைப் பார்ப்போம். 
他(ta) என்றால் அவர் என்று பொருள். 
 சேர்ந்து படியுங்கள் 他 (ta).அவர் 
சேர்ந்து படியுங்கள் 他 (ta).அவர் 
 他们 (ta men)என்றால், அவர்கள் என்று பொருள்.
 இது 他(ta) என்ற சொல்லின் பன்மை வடிவமாகும்.  
சேர்ந்து படியுங்கள் 他们 (ta men).
他们 (ta men).
இன்று மொத்தம் 6 சொற்களைப் பார்த்தோம்., 
您好(nin hao), 你们(ni men), 我(wo), 我们(wo men), 他(ta), 他们(ta men) என்பன அவை.
 您好 (nin hao)என்பது, தன்னைவிட வயது கூடுதலானவருக்கு அல்லது மதிப்புக்குரியவருக்கு வணக்கம் தெரிவிக்கும் போது பயன்படுகின்றது. 
你们(ni men) என்றால், நீங்கள்,
 我(wo) என்றால் நான், 我们 (wo men)என்றால் நாங்கள், 他(ta) என்றால் அவர், 他们(ta men) என்றால், அவர்கள்.
நன்றி : சீனா வானொலி 

18வது அட்சக்கோடு

அசோகமித்திரன்
18வது அட்சக்கோடு
அசோகமித்திரன் நாவல்


18வது அட்சரேகையில் அமைந்திருக்கும் ஒரு நகரத்தின் கதை. இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்கப்போகும் தருணத்தில் ஆரம்பிக்கும் கதை காந்தியின் மறைவையொட்டி முடிகின்றது. ஒருவன் கல்லூரி சிறுவனாக ஆரம்பித்து மெதுவாக முதிர்ச்சியடைந்த ஒருவனாக மாறுவதை, நாட்டின் கதையுடன் சேர்த்து நமக்கு கூறுகின்றார். நாட்டின் பிரிவினை மற்றும் சேர்க்கையை பற்றி பேசுவதால், புவியியல் ரீதியான தலைப்பை தந்துள்ளார் போல

இந்தியாவை விட்டு பிரிட்டிஷார் போகும் போது நாம் பார்க்கும் முழு இந்தியாவாக விட்டு செல்லவில்லை. ஆங்காங்கு பழைய மன்னர்கள் தனியாக செல்ல நினைத்தனர். வல்லபாய் படேல் என்னும் இரும்பு மனிதர் அனைத்துவித முறைகளை முயற்சித்து இன்றைய இந்தியாவை உண்டாக்கினார். அப்படி போர்க்கொடி உயர்த்திய நிஜாம், இந்தியாவை எதிர்த்து பின் அடிபணிந்த காலகட்டத்தை நாவலின் பின்புலமாக வைத்து, ஒரு கல்லூரி சிறுவன், சிறுவன் என்ற கட்டத்திலிருந்து இளைஞன் என்ற கட்டத்திற்கு முன்னேறுவதை கூறியுள்ளார்.

நிஜாம் தான் ஒரு இஸ்லாமியர் என்ற காரணத்தால் பாகிஸ்தானுடன் நட்பு பாராட்டி இந்துக்கள் பெரும்பானமையாக இருந்த சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைக்கமுன்வரவில்லை . வெளிநாடுகளிடமிருந்து ஆயுதங்கள் வாங்கி அல்லது வாங்குவதாக மக்களை நம்பவைத்து தனி நாடாக இருக்க அனைத்து முயற்சிகளையும் செய்தார். படேல் என்னும் மனிதரின் முன்பு அவரின் வேலை பலிக்கவில்லை. இந்திய அரசின் அனைத்துவித தடைகளாலும், ராணுவ நடவடிக்கைகளாலும் வேறு வழியின்றி ஆட்சியை ஒப்படைத்தார்.

நிஜாம் ஒரு பெரிய கஞ்சர் என்று பிரபலம், அதுவும் புத்தகத்தில் பதிவாகியுள்ளது. அக்கால ரயில்வே உத்தியோகத்தின் பெருமை, பல நாணய முறைகள், யுந்தகால ரேஷன் முறை, என பல விஷயங்களையும் போகிற போக்கில் தெரியவைத்து செல்கின்றார்.

சந்திரசேகரன் இந்தியா சுதந்திரமடைந்த காலத்தில், நிஜாம் தனிநாடு கனவிலிருக்கையில், அவனும் கிரிக்கெட் கனவிலிருக்கின்றான். சந்துருவின் குடும்பம் நமக்கு ஏதும் ஆகாது என்று எண்ணிக்கொண்டு அவர்கள் வாழ்க்கையை நடத்துகின்றனர். சந்துருவின் அப்பாவின் நண்பர்களில் சிலர் மெதுவாக ஊரை காலிசெய்து போகின்றனர், சிலர் தனி நாட்டு கனவில் திரிகின்றனர், சிலர் சூழ்நிலையோடு ஒத்துபோய் வாழ நினைக்கின்றனர்.  ராஜாக்கர்களால் தாக்கப்படும் சந்துரு முதலில் அங்குள்ள நிலைமையை புரிந்து கொள்ள ஆரம்பிக்கின்றான். மெதுவாக சந்துருவின் கவனம் கிரிக்கெட்டிலிருந்து அரசியல் பக்கம் திரும்பி கல்லூரியை புறக்கணித்தல், போராட்டத்தில் இறங்குதல் என திசைமாறி, ஒரு அதிர்ச்சியை சந்தித்து வேறு பக்கம் மாறுவதை, சந்திரசேகரனின் பார்வையிலும், ஆசிரியர் பார்வையிலும் மாறி மாறி பேசுகின்றது.

சந்துருவின் பழைய நினைவுகளை பேசும் போது கதை சந்துரு கூறுவதாகவும், நிகழ்கால நடப்புகள் ஆசிரியர் கூற்றாகவும் போகின்றது. அசோகமித்ரனின் சிறுசிறு வரிகளில் கதை சொல்லும் முறை மிகவும் பிடித்துவிட்டது, அத்துடன் அங்கங்கு இழையோடும் நகைச்சுவை. சந்துருவின் பால்யகால நினைவுகளில் வரும் நண்பர்கள் எதிரிகள், ஒரு சிறுவனின் மனப்பான்மையை அப்படியே காட்டுகின்றார்.
அரசியல் சூழல் மெதுவாக மாறுவதை அண்டை வீட்டுகாரர்களின் மூலமாக நுட்பமாக விவரித்துள்ளார். நிஜாம் கை ஓங்கும் என எதிர்பார்த்து குரல் உயர்த்தும் அண்டைவீட்டுக்காரர், மெதுவாக மாறி ஒடுங்குவது. தமிழ் இஸ்லாமியராக இருந்து உருது பேசும் மற்ற இஸ்லாமியர் போல மாற முயற்சி செய்யும் சந்துருவின் அப்பாவின் இஸ்லாமிய நண்பர், உரக்க வீர வசனம் பேசி ஓடி ஒளியும் நரசிம்ம ராவ், எதைப் பற்றியும் கவலையின்றி மரத்தில் தொங்கும் சட்டைக்காரன், அவனின் சகோதரிகள் என அனைத்து கதாபாத்திரங்களையும் மறக்க முடியாததாக்குகின்றார்

கடைசி காட்சி மனதை நிறைய தொந்தரவு செய்கின்றது. அனைத்து மனிதனிடமும் அடிப்படையில் கொஞ்சமாவது மனிததன்மை இருக்கும், பல காரணங்களால் அது மறைந்து வேறுதுவேஷம் மேலோங்கி நிற்கும். ஆனால் அந்த மனிதத்தன்மை அவனிடம் எப்போதும் இருக்கும், அதை தூண்டிவிட எதாவது ஒன்று தேவை, அதை எப்போது அணையவிடாமல் வைத்திருக்க அவனது சுற்றமும் சூழலும் சரியாக இருக்க வேண்டும். சந்துரு பல நிகழ்ச்சிகளால் மறந்த அந்த உணர்ச்சி அந்த கடைசி நிகழ்ச்சியில், அந்த அதிர்ச்சியால் தூண்டப்படுகின்றது.

நாட்டின் மதத்தின் பெயராலும், ஜாதியின் பெயராலும் கலவரம் ஏற்படும் போது உண்மையில் பாதிக்க படுபவர்கள் ஒன்றுமறியா அப்பாவிகள்தான். ஒரு மதத்தை சேர்ந்தவன் இன்னொருவனை அடித்தான் என்றால் பதிலுக்கு அடிபடுவர்கள் அடித்தவனல்ல வேறு எவனோ ஒருவன். மதம், ஜாதி என்று எதைப் பற்றியும் கவலைப்படாமல் அடுத்த வேளையை பற்றி மட்டும் யோசிக்கும் மக்கள்தான் மாட்டிக்கொள்கின்றார்கள்.
தமிழின் குறிப்பிடத்தக்க நாவல்களில் இதுவும் ஒன்று 

விண்வெளி தரிசனம்

வைனு பாப்பு  தொலைநோக்கிக் கூடம் 
விண்வெளி தரிசனம்

ஆசியாவிலேயே மிகப்பெரிய வான்வெளித் தொலைநோக்கி (Telescope), தமிழகத்தின் காவலூரில் அமைந்து இருக்கிறது; அங்கே கோள்களின் இயக்கத்தை ஆராய்கிறார்கள்
காவலூர் வான்வெளி ஆய்வு மையத்துக்கு, ‘வைனு பப்பு’ என்பவரது பெயரைச் சூட்டி இருக்கிறார்கள். (Vainu Bappu Observatory). அவர்தாம், அந்த மையத்தின் முதலாவது இயக்குநராக இருந்து, அமைப்புப் பணிகளை மேற்கொண்டவர். இந்திய வான்வெளி ஆராய்ச்சிகளில் அவர் ஒரு முன்னோடி. அவரது நினைவாக, அந்தப் பெயர் சூட்டப்பட்டு உள்ளது.
வைனு பாப்பு


இந்த ஆய்வு மையத்தை, வாரந்தோறும் சனிக்கிழமை, பிற்பகல் 2 முதல் 5 மணி வரை மட்டுமே, பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுவர்; வானிலை தெளிவாக இருந்தால், மாலை 6.30 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலும், விண்மீன்களைப் பார்க்கலாம் என்று குறிப்புகள் காணப்பட்டன.வாணியம்பாடியில் பிரியாணியை ஒரு பிடி பிடித்தோம். அங்கிருந்து ஆலங்காயம், ஜமுனா மரத்தூர் வழியாக, மாலை 4 மணி அளவில், காவலூர் போய்ச் சேர்ந்தோம். ஆய்வு மையத்தின் நுழைவாயிலில், நூற்றுக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் காத்துக்கொண்டு இருந்தார்கள். கதவைத் திறந்ததும், நடக்கத் தொடங்கினோம். சற்று ஏற்றமாக உள்ள அந்தப் பாதையில் நடந்தேதான் செல்ல வேண்டுமாம்.

முதலில் 6 இன்ச  தொலைநோக்கி அறை தென்பட்டது. அடுத்து, 25 இன்ச , 40 இன்ச் என வரிசையாக தொலைநோக்கி அறைகள் அமைந்து உள்ளன.

சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள 90 இன்ச் தொலைநோக்கிதான், வைனு பப்பு தொலைநோக்கி. இதுதான் பெரியது. தொலைவில் இருந்து பார்க்கும்போது சிறிதாகத் தெரிந்தது. அருகில் சென்றபோது, பிரமாண்டமாக இருந்தது. சுமார் 75 முதல் 100 அடி உயர கோபுரம். லிப்ட் இருந்தாலும், காவலர் படிகளின் வழியாக ஏறிச் செல்லுமாறு கூறிவிட்டார். வயதானவர்கள், உடல் பருத்தவர்கள் மூச்சு வாங்கிக் கொண்டு மேலே ஏறி வந்தார்கள்.

உள்ளே இருந்த பிரமாண்டமான தொலைநோக்கியைப் பார்த்தபோது, ஆங்கிலப் படங்களின் காட்சிகள் நினைவுக்கு வந்தன. எங்களுக்கு முன்பு சுமார் 25 கல்லூரி மாணவர்கள் ஒரு குழுவாக நின்றுகொண்டு இருந்தார்கள். அவர்களுக்கு தொலைநோக்கியைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்லிக்கொண்டு இருந்தார் ஊழியர் ஒருவர். நாங்களும் அந்தக் குழுவில் போய் இணைந்து கொண்டோம்.

“இதுதான் தொலைநோக்கி; வட்டவடிவில் சுழலக்கூடியது; முன்னும் பின்னும், மேலும் கீழுமாக இயங்கக் கூடியது. மேலே இருக்கின்ற மூடி திறக்கும்; அதன் வழியாக தொலைநோக்கி, விண்ணைப் பார்த்த நிலையில் இருக்கும்போது, தொலைவில் உள்ள விண்மீன்கள், கோள்களில் இருந்து பெறப்படுகின்ற ஒளிக்கற்றைகள் குறித்த விவரங்களைப் பக்கத்தில் உள்ள கணினிகளில் பெற்று, ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வுகளை மேற்கொள்வார்கள்”என்றார்.

நான் ஒரு சில விளக்கங்களைக் கேட்டேன். வேறு யாரும் பேசவில்லை. ஐந்து நிமிடங்களுக்கு உள்ளாக அவர் தன்னுடைய விளக்கத்தை முடித்துக் கொண்டார். “அவ்வளவுதான், நீங்கள் போகலாம்; அடுத்த குழு வருவார்கள்” என்றார்.

இருபத்து ஆண்டுகளாகப் பார்க்கத் திட்டமிட்டு, இந்த ஐந்து நிமிட விளக்கத்தைப் பெறுவதற்காகவா, நேரத்தையும், பணத்தையும் செலவழித்து, சென்னையில் இருந்து இவ்வளவு தொலைவு வந்தோம்?

தொலைநோக்கி வழியாக விண்வெளியில் எதையாவது காட்டுவார்கள் என்று பார்த்தால், இப்படி விரட்டுகிறார்களே? என்று எண்ணிக்கொண்டே, அவரிடம் பேசினேன்:

“ஐயா நான் ஒரு பயண எழுத்தாளர். காவலூர் தொலைநோக்கியைப் பற்றி மக்கள் எளிதில் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, ஒரு கட்டுரை எழுதும் நோக்கத்தோடு வந்தேன். எனக்கு மேலும் விவரங்கள் வேண்டும்” என்றேன்.

“அப்படியானால், ஒரு மணி நேரம் பொறுத்து இருங்கள். பார்வையாளர்களை அனுப்பி விட்டு வருகிறேன்” என்றார்.

அடுத்த குழுவினர் வந்தார்கள். நாங்கள் அங்கேயே ஒதுங்கி நின்றுகொண்டு இருந்தோம். அவர்களுக்கும் ஐந்து நிமிட விளக்கம்தான். அதற்குள் அங்கே வந்த ஒரு காவலர், “ஆர்.டி.ஓ. வருகிறார்” என்று எல்லோரது காதுபடவும் சத்தமாகச் சொல்லிவிட்டு, அந்தக் குழுவை உடனடியாக அங்கிருந்து அகற்றினார். ஏமாற்றத்தோடு அவர்கள் போய்விட்டார்கள்.

ஆனால், அடுத்து அரை மணி நேரமாகியும் எந்த ஆர்.டி.ஓ.வும் வரவில்லை.

கூட்டத்தை விரட்ட வேண்டும் என்றால், இப்படிச் சொல்லி விரட்டுவது ஒரு சூழ்ச்சி என்பதைப் புரிந்து கொண்டேன். நாங்கள் அங்கேயே ஒரு ஓரமாக நின்றுகொண்டு இருந்தோம்.

அதற்குள் இருள் சூழ்ந்து விட்டது. இருட்டு என்றால், அப்படி ஒரு கும்மிருட்டு.

இருபது ஆண்டுகளில், தமிழ்நாடு முழுவதும் பத்து ஆயிரம் கிராமங்களுக்கும் மேல் சுற்றி வந்து இருக்கிறேன். அதற்கான சான்று ஆவணங்களையும் வைத்து உள்ளேன். ஆனால், தமிழ்நாட்டில் எந்த ஒரு இடத்திலும் இப்படிப்பட்ட கும்மிருட்டை நான் பார்த்ததே இல்லை.

தொலைநோக்கி கோபுரத்தின் உச்சியில் உள்ள பலகணியில் நின்று கொண்டு பார்த்தபோது, கண்ணுக்கு எட்டிய தொலைவிலும் ஒரு மின்விளக்கு கூடத் தென்படவில்லை. ஊட்டி, கொடைக்கானல், மலைவழியில் இரவு நேரங்களில் ஏறும்போது, ஆயிரக்கணக்கான மின்விளக்குளின் ஒளி வெள்ளத்தைப் பார்க்கலாம். ஆனால், காவலூரில் ஒரு விளக்கும் இல்லை.

தொலைநோக்கி இருக்கின்ற இடத்தில் இருந்து, சுமார் பத்து கிலோ மீட்டர் தொலைவுக்கு, விளக்குகள் பொருத்துவதற்கு அனுமதி இல்லையாம். தொலைநோக்கிக் கோபுரத்தில் இருந்து வெளியே வந்தால், கீழே தரையில் ஒன்றுமே தெரியவில்லை.

இரண்டாம் முறையாக மேலே ஏறும்போது, லிப்ட் வழியாக ஏறினோம். கதவைத் திறந்தபோது, லிப்டுக்கு உள்ளேயும் விளக்கு இல்லை. கதவைப் பூட்டியபின்புதான், ஊழியர் மின்விளக்கைப் போட்டார்.

இரண்டாவது அடுக்கு தாண்டியவுடன் அந்த விளக்கும் தானாக அணைந்து விட்டது. ஒரு சிறிய குண்டு பல்ப் கூட எரியவில்லை. அதுகூட, தொலைநோக்கியின் இயக்கத்துக்கு ஊறு விளைவிக்கும் என்பதால் இத்தகைய ஏற்பாடுகள்.

எல்லாப் பார்வையாளர்களும் சென்றபின்பு எங்களிடம் வந்த ஊழியர், “இன்றைக்குத் தொலைநோக்கியை இயக்க முடியாது” என்றார்.

அவரிடம் சில விளக்கங்களைக் கேட்டேன். அவர் சொன்ன தகவல்களுடன், நான் படித்த, டிஸ்கவரி தொலைக்காட்சியில் பார்த்த பல தகவல்களையும் தருகிறேன்:

நிலநடுக்கோட்டுக்கு அருகில் வைக்கப்படுகின்ற தொலைநோக்கியின் வழியாக, விண்ணில் இருந்து கூடுதலாக தகவல்களைப் பெற முடியும் என்பதால்தான், இந்தியாவின் தென்கோடியில், நிலநடுக்கோட்டுக்கு அருகில் உள்ள தமிழகத்தில் இந்தத் தொலைநோக்கி வைக்கப்பட்டு உள்ளது.

வானிலை மாசுபடாத, இயற்கைச் சூழலோடு சரியான ஈரப்பதம் நிலவுகின்ற இடமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான், இந்த மலையைத் தேர்ந்து எடுத்து இருக்கிறார்கள்.

நீண்டகாலமாக, இந்தத் தொலைநோக்கிதான், ஆசியாவிலே பெரிதாக இருந்தது. இப்போது, சீனாவில், இதைவிட சில இன்ச் கூடுதலாக உள்ள தொலைநோக்கியை நிறுவி இருக்கிறார்கள்.

‘ஹப்பிள் தொலைநோக்கி (Hubbel Space Telescope) என்று கேள்விப்பட்டு இருப்பீர்கள். அதுவும், காவலூரில் உள்ளதுபோலவே, 93 இன்ச் விட்டம் கொண்ட தொலைநோக்கிதான் என்றாலும், அது விண்ணில் உள்ள செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டு உள்ளதால், மிக நீண்ட தொலைவுக்குத் தெளிவாக ஊடுருவிப் பார்க்கக் கூடிய ஆற்றல் வாய்ந்தது.

பூமியில் பொருத்தப்பட்டு உள்ள தொலைநோக்கிகள், மேகக்கூட்டத்தைத் தாண்டித்தான் பார்க்க முடியும் என்பதால், அது மிகப்பெரிய இடையூறாக இருக்கிறது. ஓராண்டில் சில மாதங்கள்தான் வானம் மிகத் தெளிவாகவும், மழை இன்றியும் இருக்கும். அப்போதுதான் அவற்றில் ஆய்வுகளை மேற்கொள்ள முடியும். ஹப்பிள் தொலைநோக்கிக்கு இத்தகைய இடையூறுகள் ஏதும் இல்லை. அமெரிக்காவில் நாசா விண்வெளி ஆய்வு மையம், அந்தத் தொலைநோக்கியை விண்ணில் செலுத்தி உள்ளது.

தற்போது, பூமிக்கு அருகில் உள்ள கோள்கள் விண்மீன்கள் குறித்த அடிப்படைத் தகவல்கள் பெரும்பாலும் திரட்டப்பட்டு விட்டது. எனினும், தொடர்ந்து அவற்றில் நிகழுகின்ற மாறுதல்களைக் கண்காணித்து வருகிறார்கள். நீண்டதொலைவு ஊடுருவக்கூடிய புதிய தொலைநோக்கிகள் அமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் லே பகுதியில் வானம் மிகத் தெளிவாக இருக்கிறது. அங்கே புதிய தொலைநோக்கி ஒன்று அமைக்கப்படுகிறது.

உலகிலேயே பசிபிக் பெருங்கடலின் நடுவில் அமைந்து உள்ள, அமெரிக்காவுக்குச் சொந்தமான ஹவாய் தீவுகளுக்கு மேலே உள்ள வானம்தான், மிகத் தெளிவான பகுதி என்பதால், அங்கே பல நாடுகள் தொலைநோக்கிகளை அமைத்து உள்ளன.

அங்கே, 30 மீட்டர் (சுமார் 100 அடிகள்) அகலம் கொண்ட, உலகிலேயே மிக பிரமாண்டமான தொலைநோக்கியை, பல நாடுகள் சேர்ந்து அமைக்க உள்ளன. இந்தியாவும், இந்தத் திட்டத்தில் சேர்ந்து உள்ளது. அந்தத் தொலைநோக்கியை அமைக்கும் பணி, 2018 ஆம் ஆண்டுதான் நிறைவு பெறும். அதற்குப்பின்னர், விண்வெளியைப் பற்றி மேலும் புதிய புதிய தகவல்களை நாம் பெற முடியும்.

டிஸ்கவரி, நேஷனல் ஜியாகிரபி போன்ற தொலைக்காட்சிகளில், விண்வெளி குறித்து விரிவான பல நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறார்கள். டிஸ்கவரி தொலைக்காட்சியில் தமிழிலேயே பார்க்க முடியும்.

வாய்மொழியாகப் பெற்ற தகவல்களைத் தவிர, காவலூர் தொலைநோக்கி மையத்தில் உள்ள தொலைநோக்கியின் வழியாக நாம் விண்ணில் எதையும் பார்க்க முடியாது என்பது புரிந்தது. எதையும் நமக்குக் காட்டுகின்ற மனநிலையில் அங்கே உள்ள ஊழியர்கள் இல்லை.

எந்த ஒரு இடத்திலும், தொலைநோக்கி வழியாக நமக்கு விண்வெளியைக் காட்ட மாட்டார்கள். அவ்வப்போது, பத்திரிகைச் செய்திகளுக்காக நான்கு பேர் பார்ப்பது போலப் படம் போட்டுத் தங்கள் பணியை முடித்துக் கொள்வதுதான், இந்தியாவில் உள்ள பிளானடோரியங்கள், வானிலை ஆய்வு மையங்கள் செய்கின்ற ஏமாற்று வேலை. அதற்கு நாம் வெறுங்கண்ணால் நட்சத்திரங்களைப் பார்ப்பதே மேல்.

இவ்வளவு முயற்சிகள் எடுத்து வந்த எங்களால், தொலைநோக்கி வழியாக வான்வெளியைப் பார்க்க முடியவில்லையே, எட்டுக் கோடித் தமிழர்கள் வசிக்கின்ற தமிழ்நாட்டில், எத்தனை பேர் தொலைநோக்கி வழியாக, வான்வெளியைப் பார்த்து இருக்கிறார்கள் என்ற கேள்வியும் மனதுக்குள் எழுந்தது. இருபத்துஒன்றாம் நூற்றாண்டிலும் இதுதான் நிலைமை.

கும்மிருட்டுக்குள் நிற்கும் காவலூர் தொலைநோக்கி!

காவலூர் தொலைநோக்கி இருக்கின்ற இடம் கும்மிருட்டு என்று சொன்னேன் அல்லவா? ஆய்வாளர்களுக்கு மட்டும்தான் அங்கே வேலையாம். அவர்கள்கூட, தொலைநோக்கியின் வழியாகப் பார்க்க முடியாதாம். அதன்வழியாகப் பெறப்பட்டு கணினியில் பதிவு செய்கின்ற தகவல்களை வைத்துத்தான் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டுமாம்.
அப்படியானால், அடித்தட்டு மக்களைப் பொருத்த அளவில், காவலூரில் தொலைநோக்கி இருப்பதும், ஒன்றுதான்; இருப்பது தெரியாமல் கும்மிருட்டுக்குள் நிற்பதும் ஒன்றுதான். அதனால் நமக்கு எந்த நன்மையும் இல்லை; பெருமையும் இல்லை.

அதைப் பார்ப்பதற்காகச் சென்று உங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம்!

மூச்சு இரைக்க முக்கால் மணி நேரம் நடந்து மேலே ஏறி வருபவர்களுக்கு, மூன்று நிமிடங்கள் வாய்மொழியாக விளக்கம் கொடுத்து விரட்டுகிறார்கள். ஏன் இங்கே வந்தீர்கள் என்று கேட்காமல் கேட்கிறார்கள்.

நான் மேலே சொன்ன பிளானடோரியங்களிலாவது, புரொஜக்டரை வைத்து ஒரு படம் காட்டுகிறார்கள். காவலூரில் அதுவும் இல்லை. அங்கே நிறைய இடம் காலியாக இருக்கிறது. ஒரு இருட்டு அறைக்குள், சின்னத் தொலைக்காட்சியை வைத்து, விண்வெளியில் ஏற்கனவே எடுத்த படங்களைப் போட்டு சிறிய விளக்கமாவது கொடுக்கலாம். அதுவும் இல்லை.

93 இன்ச் பெரிய தொலைநோக்கியை இயக்குவதில் ஒருவேளை நடைமுறைச் சிக்கல்கள், சிரமங்கள் இருக்கலாம். 6 இன்ச் தொலைநோக்கி வழியாகக் காண்பிப்பார்கள் என்று பார்த்தால் அதுவும் இல்லை.

கேட்டால் எல்லாவற்றுக்கும் ஒரு காரணமாக, வானம் தெளிவாக இருக்க வேண்டும்; ஈரப்பதம் இல்லாமல் இருக்க வேண்டும் என்கிறார்கள். டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில்தான் தெளிவாகப் பார்க்க முடியுமாம்.

அப்படி என்றால், மற்ற மாதங்களில் பொதுமக்கள் வரவேண்டியது இல்லை என்று சொல்லி விடலாமே? ஏன் அலைய வைக்கிறார்கள்?

நான் விசாரித்தவரையில், இவர்கள் யாரையுமே தொலைநோக்கி வழியாகப் பார்க்க அனுமதிப்பது இல்லை என்பதை அறிந்து கொண்டேன்.

காவலூர் தொலைநோக்கி வழியாக விண்வெளியைப் பார்த்தவர்கள் யாரேனும் இருக்கின்றீர் களா?

அப்படிப் பார்த்தவர்கள் இருந்தால், உங்கள் அனுபவங்களைச் சொல்லுங்கள்.

சென்னையில் தொலைநோக்கிகள் எங்கே கிடைக்கும் என்று கேட்டேன். அதற்கும் பதில் இல்லை. ஆண்டுதோறும் நடைபெறுகின்ற சென்னை புத்தகக் காட்சியில், பஞ்சாப்பில் இருந்து வந்த நிறுவனத்தார் சிறிய தொலைநோக்கிகளை விற்கிறார்கள். இந்த ஆண்டும் விற்றுக் கொண்டு இருந்தார்கள். அவர்கள் 6000 ரூபாய் வரையிலும் சொன்னார்கள். சிறிய தொலைநோக்கியை அவ்வளவு விலை கொடுத்து வாங்கி, எந்த அளவுக்கு நம்மால் வான்வெளியை ஆராய முடியும்? என்ற எண்ணத்தில் வாங்கவில்லை.

பண்டைக்காலத்தில் நம்முடைய முன்னோர்கள், மின்சார விளக்குகள் இல்லாமல், கும்மிருட்டில் வாழ்ந்தார்கள். இரவு ஆனதும், வேறு வழி இன்றி, விண்மீன்களை எண்ணிக் கொண்டு இருந்தார்கள். அப்படி அவர்கள் கண்டுபிடித்துச் சொன்ன தகவல்களைத்தான், ராசி பலன்கள் என்று நாம் இன்றுவரையிலும் கேட்டுக்கொண்டு இருக்கிறோம்.

இப்போது, நம்மில் எத்தனை பேர் தொடர்ச்சியாக வான்வெளியை ஆராய்கிறோம்?

350ஆண்டுகளுக்கு முன்பே கலிலியோ ஒரு சிறிய தொலைநோக்கியை வடிவமைத்து வான்வெளியை ஆராய்ந்தார்.

ஏழு கோடித் தமிழர்கள் என்றைக்குத் தொலைநோக்கி வழியாகப் பார்க்கப் போகிறோமோ என்ற கேள்விதான் எழுந்தது!
நன்றி :அருணகிரி ( writerarunagiri@gmail.com)

ஃபிலிப்கார்ட் ரகசியம்

பன்சால் சகோதரர்கள் 
ஃபிலிப்கார்ட் ரகசியம் 


“என்னுடைய ரகசியம் சாண்டாவிடமிருந்துதான் அது எனக்கு கிறிஸ்துமஸ் பரிசாக கிடைத்தது; அதன் மூலம் பலவற்றுள் ஒன்றை தேர்வு செய்ய முடிந்தது, சவுகரியம், ஒரு புதிய உறவு எல்லாம் கிடைத்தது”, மும்பையிலிருக்கும், 26 வயது திட்ட நிர்வாகியான நவீத் அன்சாரி, இப்படித்தான் ஃபிலிப்கார்ட்டுடனான தனது முதல் உறவைப் பற்றிக் கூறுகிறார். நகரத்தில் பெரும்பாலானவர்கள் பார்க்கும் பணியில் இருக்கும் அவருக்கு, நேரம் குறைவாகவே இருக்கிறது; அவரும் மற்றவர்களைப் போலே சவுகரியத்தை விரும்புகிறார். அதனால், ஃபிலிப்கார்ட்டின் இ-வவுச்சர் அவருக்கு வரப்பிரசாதமாகத் தோன்றியது. இந்த பரிசு தான் அவர் மின்வணிகத்தில் முதலடி எடுத்து வைக்கவைத்திருக்கிறது; அவருடைய பயணம் இப்போது தான் தொடங்கியிருக்கிறது.

இன்றைக்கு பல இந்தியர்கள் ஆர்வமுடன் மின் சில்லறை வணிகத்தை பற்றிக் கொள்கிறார்கள். c போன்ற பிரபல தளங்கள், ஆஃப்லைன் வாடிக்கையாளர்களை, இணையத்தில் நல்ல பேரங்களை வேட்டையாடுபவர்களாக மாற்றியிருக்கின்றன. “எனக்கு, ஃபிலிப்கார்ட்டில் பணம் செலுத்துவது எளிதாக இருப்பதால் அது ஒரு நல்ல தேர்வாகத் தெரிகிறது, மேலும் அத்தளத்தில் இருக்கும் பல்வகையான பொருட்கள், கூடுதல் நன்மையாக எடுத்துக் கொள்கிறேன்.” ஃபிலிப்கார்ட்டைப் பொறுத்தவரை, ஆன்லைனில் பொருள் வாங்குவதால் கிடைக்கும் மகிழ்ச்சியையும் சவுகரியத்தையும் இன்னும் பல வாடிக்கையாளர்களுக்கு கொண்டு செல்வதே. அந்நிறுவனத்தில் தலைமைச் செயல் அலுவலரும் நிறுவனர்களில் ஒருவருமான சச்சின் பன்சால் (இன்னொருவர் பின்னி பன்சால்), வாடிக்கையாளர் சேவையின் பலத்தில் உறுதியான நம்பிக்கை கொண்டவர். “இந்திய வாடிக்கையாளருக்கென்றே பிரத்யேகமான தயாரிப்பை உருவாக்க வேண்டுமென்ற எங்கள் சின்ன ஆசை, இன்றைக்கு எங்களுடைய கற்பனையைத் தாண்டி வளர்ந்திருக்கிறது” என்கிறார் சச்சின். ஃபிலிப்கார்ட்டின் வரலாற்றைக் கொஞ்சம் நோக்கினால் தெரியும், முதலில் அது விலைகளை ஒப்பிட்டுப்பார்க்கும் தளமாத்தான் தொடங்கப்பட்டது, ஆனால் ஒப்பிட்டுப்பார்க்க போதிய மின்வணிகத் தளங்கள் அப்போது இல்லை. அப்போது, ஐஐடி தில்லியிலும் பின்னர் அமேசான்.காம்-லும் சகாக்களாக இருந்த இரண்டு பன்சால்களும், “ஏன் ஒரு மின்வணிகத் தளத்தை தொடங்கக் கூடாது?” என்று யோசித்தார்கள். இப்படித்தான் ஃபிலிப்கார்ட் உருவானது. எட்டாயிரம் டாலர் முதலீட்டில் தொடங்கிய இந்தச் சின்ன ஆசை, இன்றைக்கு நூறுமில்லியன் டாலர் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கிறது. நிறுவனர்களுக்கு, வாடிக்கையாளருக்கான இணைய வெளியில் இருக்கும் ஆர்வம், அந்த பிராண்டிலும் வெளிப்படுகிறது; வாடிக்கையாளர் சேவைக்கும் அவர்களுடைய திருப்திக்கும் மறுபெயராய் விளங்குகிறது ஃப்லிப்கார்ட். ‘வாடிக்கையாளர் புன்னகைப்பதற்கு முன்னரே அவர் உங்கள் வாடிக்கையாளர் ஆகிவிட்டதாய் நினைத்துவிடாதீர்கள்’ என்பதே நிறுவனத்தில் செயல் மந்திரம். அதை அவர்கள் வெற்றிகரமாக செயல்படுத்தவும் செய்கிறார்கள்.

மின்வணிகம் என்பது வாடிக்கையாளர்களின் மனதை மிக வேகமாக ஆக்கிரமித்துக் கொண்டுவருகிறது. பெருநகரங்களில் நேரமின்மையே, ஆன்லைனில் பொருள் வாங்குவதற்கான பெரிய காரணியாக இருக்கிறது. மற்றொரு பக்கத்தில், பல்வேறு வகையான பொருட்களைப் பெற முடிவதால், சிற்றூர் மற்றும் சிறுநகரங்களில் இருப்பவர்களை ஆன்லைன் பக்கம் இழுக்கிறது. தங்களுடைய கடைகளில் போதுமான சரக்கை கொள்முதல் செய்துவைப்பது பெரிய சில்லறை வணிகர்களுக்கு சவாலாகவே இருக்கிறது. பெரும்பாலும் வாடிக்கையாளர்களால் தங்களுக்கு விருப்பமான பொருளைப் வாங்க முடியாததும், அவர்களை மின் சில்லறை வணிகத்தின் பக்கம் வர வைக்கிறது. ”புத்தகங்களை நேரடியாகக் கடைகளில் போய் வாங்குவதைத் தான் நான் விரும்புவேன், ஆனால் இதுவரை, மற்ற இடங்களில் கிடைபப்தற்கு அரிதான, மங்கா எனும் ஜப்பானிய இலக்கியத்தை ஃபிலிப்கார்டால் மட்டுமே தர முடிந்திருக்கிறது. மேலும் ஆன்லைனில் வாங்குவது, மலிவாகவும் இருக்கிறது. அந்த தளத்திற்கு நான் அடிக்கடி போவேன்”, என்று ஜெய்பூரைச் சேர்ந்த ரித்திம்மா தோஷின்வால் என்ற உள்ளடக்க எழுத்தாளர் கூறுகிறார்.

இதைப் போன்ற அனுபவங்கள் மூலம் பெருநகரங்களைத் தாண்டியும் ஃப்லிப்கார்ட் பிரபலமடைந்திருப்பதை புரிந்து கொள்ளலாம். “2011-2012ம் வருடத்தில் நூறுமில்லியன் டாலருக்கு மேல் வருவாயை அடைவோம். 2015ல் ஒரு பில்லியன் டாலரை அடைய விரும்புகிறோம். ஆனால் இப்போதைய போக்கைப் பார்க்கும் போது, அதை விரைவிலேயே அடைந்துவிட முடியும் என்று தோன்றுகிறது,” என்று ஃப்லிப்கார்ட்டின் தலைமை இயக்க/செயல்பாட்டு அதிகாரியான பின்னி சொல்கிறார். “சாதாரண சில்லறை வணிகத்திலும், ஆன்லைன் சில்லறை வணிகத்திலும் விழுமியங்கள் மாறுகின்றன. பொருளை தொட்டு உணர்ந்து வாங்குவதே நேரில் சென்று பொருள் வாங்க உற்சாகமூட்டுகிறது. ஆன்லைனைப் பொறுத்தவரை சவுகரியமே முன்னால் நிற்கிறது. இரண்டுமே வளர்வதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன,” என்கிறார் சச்சின்.

ஒரு ஆன்லைன் தொழில் பிழைக்க, உறுதியான பின்புல அமைப்பு இருக்க வேண்டியது அவசியம். ஏனென்றால் ஒரு வாடிக்கையாளர் பரிமாற்றைத்த முடித்தவுடன், இந்த பின்புல அமைப்பே எல்லாவற்றையும் கவனித்துக் கொள்கிறது. ஃபிலிப்கார்ட், முதலில் வலைதளத்தின் மூலம் பெறப்படும் ஆர்டர்களுக்கு, பொருட்களை சப்ளையர்களிடமிருந்து வாங்கி அதை வாடிக்கையாளருக்கு அனுப்பி வந்தது. ஆனால், காலப்போக்கில், அவர்கள் வேர்ஹவுஸ் மாதிரிக்கு மாறிவிட்டார்கள். இப்போது நிறுவனம் தனக்கென்று சொந்த வேர்ஹவுஸ்களையும் அவற்றுக்கான பொருள் இருப்புப் பட்டியலையும் வைத்திருக்கிறது. விற்பனை முன்னோட்டம் பொருள் இருப்பை தீர்மானிக்கிறது; மீதமிருக்கும் பொருள், விற்பனை நிலவரத்தைச் சொல்லிவிடுகிறது; இதுவொரு வட்டம். “சுமார் 60 முதல் 70 சதம் வரையிலான டெலிவரி எங்களுடைய சொந்த வலைப்பின்னல் மூலமே நடக்கிறது,” என்கிறார் சச்சின். இந்த அமைப்பு, ஒட்டுமொத்த பொருள் அனுப்புதலை தங்களது கைக்குள் வைத்திருக்க முடிகிறது என்று அவர் நம்புகிறார்.

பொருட்களை கொண்டு சேர்ப்பதில் ஏற்படும் தாமதமோ அல்லது தவறான பொருளைக் கொண்டு சேர்ப்பதோ தான் இந்நிறுவனத்திற்கு பிரச்சனை. வாடிக்கையாளரை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் என்பதால், இந்தப் பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் வெகுநாள் வைத்திருக்க முடியாது. "இப்படித் தவறாக அனுப்பப்படும் பொருட்களை பிந்தொடர்வது பெரிய சவால் தான். சரியாக கொண்டு சேர்க்கப்படாத ஆர்டர்களின் சுவடுகளைத் தேடுவதே பெரிய வேலை, அவற்றுக்கான செலவும் அதிகம்”. அதனால் தான் ஃப்லிப்கார்ட் வாடிக்கையாளர் சேவையில் அதிக கவனம் செலுத்துகிறது; ’எங்களுடய் சேவையை இன்னும் சிறப்பானதாக்குக்குவோம்’ என்பதே அவர்களுடைய சித்தாந்தம். பின்னி சொல்கிறார், “எங்கள் சங்கிலித் தொடரிலும் தொழில்நுட்பத்திலும் செய்யப்படும் பெரிய முதலீடுகள் மூலம், எங்களால் பெரிய பொருள் கிடங்குகளையும் செயல்முறையை தன்னியமாக்கவும் முடியும். எங்களுடைய பெரிய நோக்கம், இந்தியா பொருள் வாங்கும் முறையை மறுவடிவம் செய்வதே.”

மாறாத வாடிக்கையாளர் சேவையே ஃபிலிப்கார்ட்டின் தனித்தன்மை. சரியான நேரத்தில் சிறந்த முறையில் செய்யப்படும் சேவையின் மூலம் அடையும் வாடிக்கையாளர் திருப்தியை தள்ளுபடிகள் மூலம் அடைந்துவிட முடியாது என்று அதன் நிறுவனர்கள் நம்புகிறார்கள். அதே போல், நம்பகத்தன்மையை உருவாக்குவதற்கும் அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் மூலம் ஃப்லிப்கார்ட், வாடிக்கையாளரோடு நிகழ்நேரத்தில் தொடர்பில் இருக்கிறது. மின்வணிகத்தின் முன்னோடியான இவர்களுக்கு, நேர்மையே எல்லாவற்றைக் காட்டிலும் சிறந்த கொள்கையாக இருக்கிறது. "அந்த இடத்திலேயே முடிவுகளை எடுக்க எங்கள் வாடிக்கையாளர் சேவை நிர்வாகிகளை பயிற்றுவித்திருக்கிறோம். வாடிக்கையாளரின் கவலைகளைத் தீர்ப்பதன் மூலமும், எங்களுடைய தவறுகளை ஒப்புக்கொள்வதன் மூலமும், வாடிக்கையாளர் நலனுக்கு நாங்கள் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதை அவர்களுக்குப் புரிய வைக்கிறோம். எங்களுடைய தொழிலில் பொருளைக் கொண்டு சேர்க்கும் விதம் தான் மகிழ்ச்சியைத் தரமுடியும்,” என்கிறார் சச்சின்.

வாழ்வழியாக ஃபிலிப்கார்ட்டைப் பற்றிச் சொல்லப்படும் விஷயங்கள் அவர்களுக்கு வாடிக்கையாளர்களிடம் நல்ல பெயரை வாங்கித்தந்திருக்கிறது. மற்ற இடங்களிலும் அவர்கள் முன்னணியில் தான் இருக்கிறார்கள். சமீபத்தில் லெட்ஸ்பை.காம்-ஐ வாங்கியதன் மூலம் அவர்கள் வளர்ச்சிவேகம் அதிகரிக்கும். பின்னியின் நீண்ட காலத் திட்டத்தில், நிறுவனமே நடத்தும் பொருள் கொண்டு சேர்க்கும் நெட்வொர்க்கை விரிவுபடுத்துவதும், ஒத்த கருத்துடைய தொழில் நிறுவனங்களோடு கூட்டு சேர்வதும் அடங்கும். “எங்களுடைய இலக்கை அடைய உதவும், கூட்டுக்கு நாங்கள் தயார்” என்கிறார் அவர். மின்வணிகத்தில், வென்ச்சர் முதலீடுகள் அதிகமாகி வருவது இருவருக்கும் மகிழ்ச்சியே, “ பின்புலத்தை இன்னமும் உறுதியாக்க நிறைய முதலீடுகள் வர வேண்டும்” என்கிறார் சச்சின்.

எல்லா தொழில்முனைவர்களைப் போலே இவரும், ஒரு நிறுவனத்தின் வெற்றிக்கு புதுமை மிக முக்கியம் என்று அபிப்ராயப்படுகிறார். வாடிக்கையாளரின் சவுகரியத்திற்காகவும் அவருக்கு விருப்பமான முறையை பயன்படுத்துவதற்து உதவியாகவும், கேஷ்-ஆன் -டெலிவரி மற்றும் வாடிக்கையாளர் இடத்திலேயே கடன் அட்டை மூலம் பணம் செலுத்தும் வசதிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. டிஜிட்டல் களத்திலும் நிறுவனத்தின் இடத்தை விரிவுபடுத்த flyte என்ற இசையை பணம் செலுத்தி தரவிறக்கிக் கொள்ளும் சேவையை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். எழுநூறுக்கு மேற்பட்ட வகை இசையையும் 55 மொழிகளுக்கு மேலும் mp3 வடிவில் வாடிக்கையாளர் வாங்கமுடியும். DRM என்று அழைக்கப்படும் digital rights management இல்லாக இந்த கோப்புகளை, எந்த கருவிகளில் வேண்டுமானாலும் எத்தனை முறை வேண்டுமானாலும் இசைக்க முடியும்.

புதுமை என்பது தொழில்துறையின் ஒரு அம்சம் மட்டுமே. இன்றைய தேதியில், பாரம்பரியமானதோ நவீனமானதோ, ஒரு தொழிலுடைய இடம், அது எந்தளவுக்கு திறமையாக தகவல்களைக் கையாள்கிறது என்பதில் தான் இருக்கிறது. ஃபிலிப்கார்ட் தங்களிடம் இருக்கும் தகவல்களின் மூலம் வாடிக்கையாளர் எண்ணங்களை எப்படிப் புரிந்துகொள்கிறது? மின்வணிகம் என்பது இப்போது தான் வளர்ந்து வருவதால், முந்தைய காலத்தைப் புரட்டிப் பார்த்துத் தெரிந்து கொள்ள ஒன்றுமேயில்லை. எனவே, தகவல்களைச் சேகரித்து அவற்றை அலசுவது, நிறுவனத்தின் வருங்கால செயல்பாடுகளை திட்டமிட அவசியமானது. இந்த முறை வாடிக்கையாளருக்கு ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் உண்டாக்குகிறது; ஏனென்றால், வாடிக்கையாளர்கள் அவர்களுக்கு தேவையான பொருத்தமான பேரங்களைப் பெறுகிறார்கள். சச்சின் சொல்கிறார், ”வாடிக்கையாளரின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்வதில் தான் எங்களுடைய உழைப்பு முழுதும் செலவிடுகிறோம், மின்வணிகத்தை உயர்த்த எங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவையும் செய்கிறோம்”

இந்த தொழிலில் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் ஏராளம், அதே போல் தான் தோல்வியும். ஆலோசக நிறுவனமான டெக்நோபார்க் அட்வைசர்ஸ், இன்றைய தேதியில் இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதார மதிப்பு $600 மில்லியன் என்றும், 2020 அது $70 பில்லியனாக உயர்வதற்கான சாத்தியம் இருக்கிறது என்கிறார்கள். மின்வணிகத்தில் அனுபவமுள்ளவரும், ஆரம்ப காலத்திலேயே தொடங்கப்பட்ட இந்தியாபிளாசா.காம் -ன் நிறுவனரும் தலைமை செயல் அலுவலருமான கே.வைத்தீஸ்வரன், இந்தத் தொழிலை ஒரு மராத்தானோடு ஒப்பிடுகிறார். “இது நூறு மீட்டர் ஓட்டப்பந்தயத்தைப் போன்றது அல்ல. உலகளவில், நாங்கள் குறைய மார்ஜின் வைத்து தான் செயல்படுகிறோம், இருந்தும் உண்மையான வளர்ச்சியை நாங்கள் காண்கிறோம்.” இன்றுவரை, நூறு சதம் வெற்றி என்பதற்கான ஃபார்முலா இல்லை. இந்த மாராத்தானில் ஃபிலிப்கார்ட் தனியார் பங்கு நிறுவனங்களாக அக்சல் பார்ட்னர்ஸ் மற்றும் டைகர் க்ளோபல் உதவியோடு தான் ஓடிக்கொண்டிருக்கிறது; இந்த இரண்டு நிறுவனங்களும் $150 மில்லியனை இந்நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறார்கள். வரிக்கு பிந்தைய லாபம் இல்லையென்றாலும் கூட, இந்த இரண்டு நிறுவங்களும் பங்கு கொண்ட பிறகு, ஃபிலிப்கார்ட்டின் நிதி மதிப்பு உயர்ந்து கொண்டே வருகிறது. லெட்ஸ்பை.காம்-ஐ வாங்கியதன் மூலம் ஃபிலிப்கார்ட் உள்ளூர் ஆன்லைன் சந்தையை கைப்பறும் ஃபிலிப்கார்ட்டின் நோக்கம் தெளிவாகியிருக்கிறது. வளர்ந்துவரும் வாடிக்கையாளர் எண்ணிக்கை, இணைய அறிவு கொண்ட மக்கள் மற்றும் ஆர்வத்தோடு இறங்கும் நிதி நிறுவனங்கள் எல்லாம் சேர்ந்து ஃபிலிப்கார்ட்டை அமேசான்.காம்-ற்கான இந்தியாவின் சவாலாய் நிறுத்தக்கூடும்.

இந்தியர்களை ஆன்லைன் வணிகத்திற்கு இழுத்துவருவது ஒரு அற்புதமான வேலை. புதிய திட்டங்கள், தரமான பொருட்கள் மற்றும் கச்சிதமான வாடிக்கையாளர் சேவையை தரும் நிறுவனங்கள் மட்டுமே பிழைக்க முடியும். இந்த வருடங்களில், மின்வணிகத்தில் நாயகனாக உயர்ந்திருக்கும் ஃபிலிப்கார்ட், இந்த இடத்தை அடைந்தற்கு புத்திசாலித்தனமோ அல்லது இயல்பறிவோ காரணமாக இருக்கலாம். ஃபிலிப்கார்ட் அனுபவத்தை மொத்தமாகச் சொல்ல, பூனேவின் விற்பனையியல் மாணவரான அபிஷேக் ஆஸ்தானா ஒரு கவிதையே எழுதியிருக்கிறார். மாஸ்டர்கார்டின் பிரபல விளம்பரத்தை இவர் கொஞ்சம் மாற்றியிருக்கிறார், “சில பொருட்களை நீங்கள் ஆன்லைனில் வாங்க முடியாது.... மற்ற எல்லாவற்றுக்கும் ஃபிலிப்கார்ட் இருக்கிறது!”

நன்றி:தி ஹிந்து
ஃபோர்ப்ஸ் இந்தியா கட்டுரை -

கழுகுமலை


கழுகுமலை - வெட்டுவான் கோயில், சமணர் பள்ளி!
சங்கரன்கோவில்-கோவில்பட்டி சாலையில், இரு நகரங்களுக்கும் நடுவே அமைந்து உள்ளது கழுகுமலை பேரூர்.சென்னிமலை அண்ணாமலைக் கவிராயர் பாடிய காவடிச் சிந்து பாடல்களில், கழுகுமலை நகர் வளத்தை ஏகமாகப் புகழ்ந்து உரைத்து இருக்கிறார். நூற்றுக்கும் மேற்பட்ட முறை, இந்த ஊரைக் கடந்து சென்று இருக்கிறேன். பள்ளிப் பருவத்தில் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக, எண்ணற்ற முறை கழுகுமலைக்கு வந்து இருக்கிறேன். அங்கே உள்ள மாட்டுத்தாவணித் திடலில், காலையில் போட்டிகளை ஆடி முடித்தபின்பு, மலைக்குச் சென்று, கொண்டு வந்த உணவை சாப்பிடுவோம்; பாறை நிழலில் படுத்து உறங்குவோம். பிற்பகலில் நண்பர்களோடு மலையில் ஏறுவோம். அப்படிப் பலமுறை கழுகுமலை உச்சிக்குச் சென்று வந்து இருக்கிறேன்.

மதுரை யானைமலையில் உள்ளது போலவே, ‘கழுகுமலை’யிலும், 7,8 ஆம் நூற்றாண்டுக் காலச் சமணர் சிற்பங்கள் உள்ளன. பள்ளிப் பருவத்தில், இந்தச் சிற்பங்களின் மதிப்பு எனக்குத் தெரியவில்லை. அந்த மலைக்கு, ஆடை அணியாத சமணத் துறவிகள் அடிக்கடி வந்து போவார்கள் என்று, அந்த ஊர் நண்பர்கள் சொன்னார்கள்.

வரலாற்றுப் பாடங்களைப் படிக்கும்போதுதான், இதன் அருமை பெருமைகளை உணர்ந்தேன்.

2009 செப்டெம்பர் மாதம், என் மகள் ஐஸ்வர்யாவுக்கு, கழுகுமலையைச் சுற்றிக் காண்பிப்பதற்காக அழைத்துச் சென்றேன். என்னுடைய தந்தையார், சங்கரன்கோவில் நகர்மன்ற முன்னாள் தலைவர் அ.பழநிசாமி, இராணுவத்தில் பணி ஆற்றி ஓய்வு பெற்ற நண்பன் இராமச்சந்திரன், மருமகன் அரவிந்த் ஆகியோரும் உடன் வந்தார்கள்.

மலையின் பின்பகுதியில் உள்ள படிக்கட்டுகளின் வழியாக மேலே ஏறினோம். விறுவிறுவென ஏறினால், பதினைந்து இருபது நிமிடங்களுக்கு உள்ளாக ஏறி விடலாம். இடையில் சற்று அமர்ந்து ஓய்வு எடுத்துக் கொண்டு ஏறினால், அரை மணி நேரத்துக்கு உள்ளாகப் போய் விடலாம். உச்சி வரையிலும் சென்று, கண்ணுக்கு எட்டிய தொலைவு வரையிலுமான காட்சிகளைக் கண்டு ரசித்தோம்.

சமணர் பள்ளிமலையின் நடுவே ஓரிடத்தில், வரிசையாகப் பல சிலைகள் செதுக்கப்பட்டு உள்ளன. சமணர்கள், தங்கள் குரு, தாய், தந்தை ஆகியோரின் நினைவாக, இங்கே சமண தீர்த்தங்கரர்களின் சிலைகளைச் செதுக்கி உள்ளனர். இச்சிற்பங்களின் கீழே, அவற்றைச் செதுக்கியவர்களின் பெயர்கள் தமிழ் வட்டு எழுத்துகளில் பொறிக்கப்பட்டு உள்ளன. சிறுசிறு குகைகளும் உள்ளன. அங்கே அமைந்து இருந்த சமணர் பள்ளிகளில், சமண மதக் கருத்துகளைப் போதித்தனர்.

வெட்டுவான் கோவில்

கழுகுமலையின் மற்றொரு சிறப்பு, அந்த மலையின் பின்புறம் அமைந்து உள்ள ‘வெட்டுவான் கோயில்’ ஆகும். மலையின் ஒரு பகுதியில் பாறையை வெட்டி, அந்த ஒற்றைப் பாறையிலேயே ஒரு கோயிலைச் செதுக்கி இருக்கிறார்கள். அதுதான், ‘வெட்டுவான் கோயில்’ என்று அழைக்கப்படுகிறது.

இத்தகைய கோயில், தமிழகத்திலேயே இது ஒன்றுதான் என்பதுவே, கழுகுமலையின் மாபெரும் சிறப்பு ஆகும். இந்தியாவிலேயே கழுகுமலையைத் தவிர, மராட்டிய மாநிலம் எல்லோராவில் உள்ள கைலாசநாதர் கோவில் மட்டுமே, மலைக் குடைவரைக் கோயில் என்பது குறிப்பிடத்தக்கது.வெட்டுவான் கோயில், ஒரே கல்லில் செதுக்கப்பட்டு உள்ளது (Monolithic). கழுகுமலையின் ஒரு பகுதியில், 7.50 மீட்டர் ஆழத்துக்குச் சதுரமாக வெட்டி எடுத்து, அதன் நடுப்பகுதியைக் கோவிலாகச் செதுக்கி உள்ளனர். ஆனால் அந்தக் கோவிலின் பணி முழுமையாக நிறைவு பெறவில்லை. இதில், கரு அறையும், அர்த்த மண்டபமும் உள்ளன. கோவில் கோபுரத்தில், உமா மகேசுவரர், தட்சிணாமூர்த்தி, திருமால், பிரம்மா வடிவங்கள் காணப்படுகின்றன.

விமானத்தின் மேற்குத்திசையில் நரசிம்மரும், வடக்கில் பிரம்மனும் காட்சி தருகின்றனர். விமானத்தின் நான்கு மூலைகளில் நந்தி சிலைகளும், இவற்றுக்குக் கீழே யாளி வரிகளும், கபோதகமும் உள்ளன.

கல்வெட்டுக் குறிப்புகள்

கழுகுமலையின் மேலே ஏறுவதற்கு முன்பு ஓரிடத்தில், தமிழக அரசு அமைத்து உள்ள கல்வெட்டில், கீழ்காணும் தகவல்கள் இடம் பெற்று உள்ளன:பராந்தக நெடுஞ்சடையன் என்ற மன்னனின் காலத்தில், கழுகுமலையில் சிற்பங்களைச் செதுக்கி இருக்கிறார்கள்.

கழுகுமலையில், மூன்று நினைவுச் சின்னங்கள் உள்ளன. 1. சமணர் பள்ளி 2. வெட்டுவான் கோயில் 3. முருகன் கோவில்.

மலையின் பழம்பெயர் ‘அரைமலை’. இன்றைய பெயர் ‘கழுகுமலை’.

ஊரின் பழம்பெயர்: பெருநெச்சுறம் அல்லது திருநெச்சுறம்.

நாட்டுப் பிரிவு: இராஜராஜப்பாண்டி நாட்டு, முடிகொண்ட சோழவளநாட்டு, நெச்சுற நாட்டு நெச்சுறம்.

ஊரில் குறிக்கப்பட்டு உள்ள அரசர்கள்:

1. பாண்டியன் மாறஞ்சடையன் (பராந்தக நெடுஞ்சடையன்)

2. பாண்டியன் மாறஞ்சடையன் (பராந்தக வீரநாராயணன்).

வரலாற்றுச் செய்தி: இவ்வூரில், மங்கல ஏனாதி என்னும் தானைத்தலைவர் இருந்தார். அவருடைய சேவகர்கள், பாண்டியன் மாறஞ்சடையன், ஆய் மன்னன் கருநந்தன் மீது படை எடுத்தபோது, பாண்டியனுக்காகச் சென்று, அருவி ஊர் கோட்டையை அழித்து, போரில் மாண்டனர். அவர்களுக்காக நிலம் அளித்ததை, குசக்குடி கல்வெட்டு தெரிவிக்கிறது. அக்கல்வெட்டு, மதுரை திருமலை நாயக்கர் மஹாலில் உள்ளது.

மேலும், ‘திருமலை வீரர்’, ‘பராந்தக வீரர்’ எனும் பெயர் பெற்ற படைகள், பாண்டியன் பராந்தக வீரநாராயணன் காலத்தில் இவ்வூரில் இருந்தது பற்றிய குறிப்புகளும் உள்ளன.

வெட்டுவான் கோயிலும், சமணர் பள்ளியும், தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வுத்துறையின் பாதுகாப்பில் உள்ளன’ என்ற குறிப்புகள் காணப்படுகின்றன.

இப்போதும், வட இந்தியாவில் இருந்து சமணர்கள், கழுகுமலைக்கு வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.

கழுகுமலை-சிறு குறிப்புகள்:

கோவில்பட்டி-சங்கரன்கோவில் சாலையில் கழுகுமலை வழியாகப் பயணிக்கும்போது, ஒரு வேடிக்கையைக் காணலாம். முன்பெல்லாம் பேருந்துகளில் நடத்துநர், ஓட்டுநர் இருவருமே பயணச்சீட்டுக் குறிப்பை எழுதுவர். பின்னால் இருந்து நடத்துவர் சத்தம்போட்டு, வழியில் உள்ள ஊர்களுக்குக் கொடுத்த பயணச்சீட்டு எண்ணிக்கையைச் சொல்லுவார். நடத்துநர் அதைக் கேட்டு எழுதிக் கொள்வார்.

பல ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் இருந்து வந்த ஒருவர் இந்த வழியாகப் பேருந்தில் பயணித்து இருக்கின்றார். அந்தப் பேருந்தின் நடத்துநர், “நாலு குருவி, ஐந்து வானரம், பத்து கழுகு, ஐந்து நாலாடு” என்று சொல்லி இருக்கின்றார். சென்னைவாசிக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன ஏது? என்று பக்கத்தில் இருந்தவரை விசாரித்து இருக்கிறார். அவர் விளக்கம் அளித்தார்.

அதாவது, இந்தச் சாலையில் உள்ள சில ஊர்களின் பெயர்கள்: குருவிகுளம், வானரமுட்டி, கழுகுமலை, நாலாட்டின்புத்தூர் என்பனவாகும். தினந்தோறும் இதை முழுமையாகச் சொல்லிக்கொண்டு இருக்க முடியாது என்பதால், அந்தப் பெயர்களைத்தான் அப்படிச் சுருக்கிக் கூறி உள்ளார் நடத்துநர். இந்தச் செய்தியை, அந்தச் சென்னைவாசி, ஒரு வார இதழுக்கு எழுதி அனுப்பி, அதில் வெளியாகி இருந்தது.கழுகுமலையின் அடிவாரத்தில் பாலசுப்பிரமணியர் திருக்கோயில் உள்ளது. இதன் மூலவர் இருக்கின்ற இடமும் ஒரு குடைவரைதான். இந்தக் கோவிலின் தெப்பக் குளத்தில், பால் போன்ற நிறத்தில் நல்ல குடிநீர் கிடைக்கிறது. அதுதான், இந்த ஊர் மக்களின் குடிநீராக, அண்மைக்காலம் வரையிலும் பயன்பட்டு வந்தது. எனவே, அந்தக் குளத்தைத் தூய்மையாகப் பராமரித்து வருகிறார்கள். இப்போது, தாமிரபரணி ஆற்றில் இருந்து குடிநீர் கொண்டு வருகிற திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது.

கழுகுமலை வெட்டுவான் கோவில் குறித்து ஆய்வு செய்து, ஏ.ஆர்.கணபதி அவர்கள் வெட்டுவான் கோவில் என்ற பெயரிலேயே ஒரு புத்தகமாக எழுதி வெளியிட்டு இருக்கின்றார்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு, சென்னையில் எனது அலுவலகத்துக்கு நேரில் வந்து, அதன் படி ஒன்றை எனக்குத் தந்தார்கள். திரு கணபதி அவர்கள், கழுகுமலையில் இருந்து பதினைந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மேலநீலிதநல்லூர் பசும்பொன் முத்துராமலிங்கம் கல்லூரியின் நிறுவனர்-முதல்வர், நினைவில் வாழும் ஏ.ஆர்.பொன்னையா அவர்களுடைய உடன்பிறந்த தம்பி ஆவார். வெட்டுவான் கோவில் குறித்த செய்திகளை அறிய விழைவோர், அந்த நூலைப் படிக்கலாம்.

வெட்டுவான் கோவில் குறித்து, அந்தப் பகுதி மக்களிடையே பல கதைகள் உலா வருகின்றன. அவற்றையெல்லாம் தேடிச் சேகரித்து எழுதினால், மேலும் பல செய்திகள் பதிவு ஆகலாம்; இந்தப் பணியை, தமிழ் ஆசிரியர்கள், இலக்கியவாதிகள், கழுகுமலை இளைஞர்கள் செய்ய வேண்டும்!

(2010 ஆம் ஆண்டு வெளியான, அந்தமானில் அருணகிரி என்ற நூலில் இடம் பெற்று உள்ள கட்டுரை-திருத்தங்களுடன்)

- அருணகிரி ( writerarunagiri@gmail.com)தமிழ் மூலம் சீனம் பாடம் 2

தமிழ் மூலம் சீனம் பாடம் 2


. கடந்த முறை 4 சொற்களைப் படித்தோம். பாடத்துக்குப் பின், நீங்கள் அதிக முறை பயிற்சி  செய்யவேண்டும் .செய்தீர்களா? மீண்டும் மீண்டும் செய்யுங்கள் .மனதில் பபதிகிரவரை . முதலில், அந்த 4 சொற்களை மீண்டும் பார்போம்.

ஒருமுறை படியுங்கள், 你好(NI HAO).
மீண்டும் ஒருமுறை படியுங்கள், 你好(NI HAO).
அடுத்து, 早上好(ZHAO SHANG HAO).
மீண்டும் ஒருமுறை , 早上好(ZHAO SHANG HAO).
அடுத்து, 上午好(SHANG WU HAO).
மீண்டும் ஒருமுறை 上午好(SHANG WU HAO).
 இப்போது  மேலும் நான்கு புதிய சொற்களைப் படிக்கலாம்.

முதலில், 下午好 XIA WU HAO, "下午XIA WU" என்றால் பிற்பகல் என்று பொருள். இப்பொழுது  படியுங்கள். 下午好(XIA WU HAO).
下午好(XIA WU HAO).
下午好(XIA WU HAO).
இரவில், "晚上好 WAN SHANG HAO"என்று கூறுவர்.
 "晚上 WAN SHANG" என்றால் இரவு எனப் பொருட்படும்.. இப்பொழுது  படியுங்கள். 晚上好(WAN SHANG HAO).
மீண்டும் ஒருமுறை 晚上好(WAN SHANG HAO)
மீண்டும் ஒருமுறை 晚上好(WAN SHANG HAO)
இனி, 您好, சீனாவில், தன்னைவிட வயது கூடுதலானவரை சந்திக்கும் போது அல்லது மதிப்புக்குரியவரைச் சந்திக்கும் போது மரியாதை காட்டும் வகையில் 您好(NIN HAO)என்று சொல்ல வேண்டும். 您 (NIN) என்றால், தமிழ் மொழியில் நீங்கள் என்று பொருள். இப்பொழுது  படியுங்கள். 您好 (NIN HAO).
மீண்டும் ஒருமுறை 您好 (NIN HAO)
மீண்டும் ஒருமுறை您好 (NIN HAO)
அடுத்து, 你们好 (NI MEN HAO), இதில் 你们 (NI MEN)என்பது, 你(NI)என்ற சொல்லின் பன்மை வடிவமாகும். எதிர்த் தரப்பில் 2க்கு அதிகமானோர் இருக்கும் போது 你们 (NI MEN )என்று சொல்ல வேண்டும். தமிழ் மொழியில் நீங்கள் என்று இது பொருட்படும்.
 இப்பொழுது  படியுங்கள். 你们好(NI MEN HAO).

இப்பொழுது இன்று படித்ததை மீண்டும் படிப்போமா?.

முதலில்下午好(XIA WU HAO). ஒருமுறை  படியுங்கள்,下午好(XIAWU HAO). இதில் 下午(XIAWU) என்ற சொல் இப்போது நமக்குத் தெரிகிறது.

அடுத்து, 晚上好(WANSHANG HAO)என்னுடன் சேர்ந்து படியுங்கள். 晚上好(WAN SHANG HAO). இதில், 晚上(WAN SHANG) என்ற சொல்லைப் புரிந்துகொண்டோம்.

அடுத்து, 您好 ( NIN HAO), என்னுடன் சேர்ந்து படியுங்கள். 您好 (NIN HAO). இதில் 您 NIN என்ற சொல்லை தெரிந்துகொண்டோம்.

அடுத்து, 你们好 (NI MEN HAO), என்னுடன் சேர்ந்து படியுங்கள். 你们好(NI MEN HAO). இதில் 你们 (NI MEN)என்ற சொல் நமக்குத் தெரிகிறது.

இன்று மொத்தம் 4 சொற்களைத் தெரிந்துகொண்டோம், அவை 下午(XIAWU), 晚上(WAN SHANG), 您(NIN), 你们(NI MEN). இந்த 4 சொற்களும், உங்கள் மனதில் பதிந்திருக்கும் 
பயிற்சி செய்யுங்கள்.
பயிற்சி செய்யுங்கள். 
பயிற்சி செய்யுங்கள். 

தமிழ் மூலம் சீனம் பாடம் 1

 சீனப்பெண் 
தமிழ் மூலம் சீனம் பாடம் 1
 முதலாவது பாடம். அதன் தலைப்பு 问 候 (WEN HOU)என்பதாகும். தமிழ் மொழியில் வணக்கம் தெரிவிப்பது என்று பொருள்.

சீன வழக்கத்தின் படி, இருவர் சந்திக்கும் போது, ஒருவருக்கொருவர்你好(NI HAO)என்று கூறுவர்.

你 (NI) என்றால் தமிழில் (நீ) என்பது பொருள். 好 (HAO) என்றால் நன்று என்று பொருள். இதை எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் எவரும் பயன்படுத்தலாம்.

你好 (NI HAO) என்று ஒருவருக்குச் சொல்லும் போது, எதிர் தரப்பினரும் 你好(NI HAO) என்று பதிலளிப்பார்.. இருவர் சந்திக்கும் போது, பரஸ்பரம் வணக்கம் தெரிவிப்பது வழக்கம் அல்லவா?

மீண்டும் மீண்டும் பயிற்சி  செய்யுங்கள்
, 你好 (NI HAO)

சீன மக்கள் காலத்தை குறிப்பிட்டு வணக்கம் தெரிவிப்பது உண்டு.  காலையில் 早上好 (ZAO SHANG HAO)என்று கூறுவர்.

早上 (ZAO SHANG)என்றால் காலை என்பது பொருள்.
மீண்டும் மீண்டும் பயிற்சி  செய்யுங்கள்
. 早上好(ZAO SHANG HAO)
早上好(ZAO SHANG HAO)

முற்பகல் 上午好 (SHANG WU HAO)என்று கூறுவர். 上午 (SHANG WU)என்றால் முற்பகலை குறிக்கும்.

மீண்டும் மீண்டும் பயிற்சி  செய்யுங்கள்

上午好 (SHANG WU HAO)
上午好 (SHANG WU HAO)

அடுததற்குப் போவோம்

முதலில் 你好(NI HAO) என்பதை படிக்கின்றோம்.

你好(NI HAO)

இதில் 你(NI), 好(HAO), ஆகிய இரண்டு சொற்கள் நமக்குத் தெரியும்.

அடுத்து, 早上好(ZAO SHANG HAO) என்பதைப் படிக்கின்றோம்.

早上好(ZAO SHANG HAO): இதில் 早上(ZAO SHANG) என்பது நமக்குப் புரிகிறது.

இனி,上午好(SHANGWU HAO) என்பதைப் படிக்கின்றோம், 上午好(SHANGWU HAO): இதில் 上午(SHANGWU) என்பதை தெரிந்து கொண்டோம்.

ஆக, இன்று 4 சொற்களைத் தெரிந்துகொண்டோம் அவை,
你(NI)-நீ 好(HAO)-நன்று 早上(ZAO SHANG)
-காலை 上午(SHANG WU)-முற்பகல் இந்த 4 சொற்களும், உங்கள் மனதில் பதிந்திருக்கின்றனவா. பாடத்துக்குப் பின் அதிக முறை பயிற்சி செய்யுங்கள்.
நன்றி: சீன வானொலி                                                               [தொடரும் ]

Tuesday, 16 October 2012

தமிழில் நாடகம் 

[கடந்த ஞாயிறு அன்று (14-10-2012முற்பகலில்) கோயம்பேடு தங்கபுஷ்பம்  ஹோட்டலில் தமது 75வது பிறந்த நாளை நான்கு முன்னாள் துணைவேந்தர்களும் பேராசிரியர்களும் மாணவர்களும் (லேனா. தமிழ்வாணன் உட்பட ) கலைமாமணி டாக்டர். ஔவை .நடராஜன்  அவர்களின் தலைமையின் கீழ் கொண்டாடிய தமிழ் நாடக ஆய்வாள ரும் பல பேராசிரியர்களின்  பேராசிரியருமான கலைமாமணி டாக்டர் இரா. குமாரவேலன் அவர்கள் எழுதிய தமிழக அரசின் நூல் நிலையப் புறக்கணிப்பால்  வாங்கப்படாது போன இந்த நூலின் விமர்சனத்தை மகிழ்ச்சியோடு வெளியிடுகிறோம்] 

கலையின் ஆற்றல் எவ்வளவு வலிமை வாய்ந்தது நாட்டிற்கு எடுத்துக்காட்டியது நடக்கலை. தேசிய இயக்கத்தில் தொடங்கி திராவிட இயக்கம் வரை தமிழ் நாடகம் மக்களின் கருத்துக்களை வடிவமைப்பதில் தனிப்பெரும் பொறு ப்பேற்றிருந்ததை வரலாறு உணர்த்துகிறது. நாடகம் தாய். சினிமா செய் அன்று நாடகம் வளரவில்லை எனில் இன்று தமிழ் சினிமாவே இல்லை. சினிமா மொழியின் மீது அரசியல் மீது செலுத்தி வருகிற செல்வாக்கை மூளையில் நின்று விமர்சிக்கலாமே தவிர அடியோடு மாற்றி விட முடியாது .அண்ணா, கலைஞர், எம்.ஜி .ஆர்., ஜெயலலிதா இப்படி ஓடுகிறது செல்வாக்கின் நதி 

இந்த நூலை எழுதிய டாக்டர் குமாரவேலன் தம் இளமைப் பருவம் தொட்டு, திராவிட இயக்கச் சிந்தனை உள்ளவர். மாறாத சார்புநிலையும் தமக்கென்று தனிப்பார்வையும் கொண்ட இவர் நாடகம் என்ற கலையின் பொதுமைச் சிறப்பை எந்த மனச்சுளிப்புமற்ற விரிந்த போக்குடன் அணுகி இந்த நூலை எழுதியிருப்பது குறிப்பிட்டே தீர வேண்டியது. திராவிட இயக்க நாடகங்களை மட்டுமே காட்டி மற்ற வகை நாடகங்களை இருட்டடிப்பு செய்யாத அவரது மனப்பக்குவம் நூலின் ஒவ்வொரு பக்கத்தையும் அணி செய்கிறது 

சிறந்த படைப்பைப் போல்வே  வந்திருக்கிற படைப்புக்களை திறந்த மனத்தோடு விமர்சனம் செய்வது முக்கியம் .அந்த பொறுப்பை உணர்ந்து குமாரவேலன் படைத்திருக்கும் இந்த நூல் நான் படித்தவரை தமிழில் இது வரை வெளிவந்த நாடக ஆய்வு நூல்களில் காணாத மனத்தேளிவுள்ள முத்திரையை இதில் நான்  கண்டேன் .ரசித்தேன். வாசிக்க வாசிக்க ஆய்வு நூல் வாசிப்புகளில் வரும் ஆயாசம் வராது ஒரு வரலாற்றுக் காலகட்டத்திற்கே பயணம் சென்று திரும்பிய நிறைவு  அனுபவப்பட்டது. 

திராவிட இயக்க நாடகங்களை அலட்சியப்பார்வையோடு ஒதுக்கும் அறிவுஜீவிக் கண்ணோட்டத்தை மேந் தட்டு விமர்சனப்போக்கை உரத்து முழங்கி இடித்துக்காட்டாத தொனியில் அவை பெற்ற வெற்றியின் விளைவுகளை மௌனமாக உணர்த்துகிறார் டாக்டர் குமாரவேலன் அவர்கள். நவீன நாடகம் என்ன செய்ய வேண்டும் என்று வழிகட்டியிருப்பது நாடகத்தில் ஈடுபாடு உள்ள அனைவருக்கும் உற்சாகம் அளிக்கும் .டாக்டர் குமாரவேலன் அவர்களின்  வாழ்நாள் சாதனைகளில் இந்த நூல் தனி முக்கியத்துவம் பெறுகிறது 

-வையவன் Monday, 15 October 2012

யதார்த்தமும். பதார்த்தமும்.

சுஜாதா 
ஒரு யதார்த்தமும். மத்ததெல்லாம் ஒரு பதார்த்தமும்.
உயிர்மை-சுஜாதா அறக்கட்டளை இணைந்து வழங்கிய
சுஜாதா விருதுகள்-2011
2011ஆம் ஆண்டுக்கான சுஜாதா விருது பெற்ற யுவ கிருஷ்ணாவின் குதூகலக் குறிப்புகள்.{இதன் மனம் திறந்த நேர்மைக்காக காலதாமதமானாலும் ஒரு மீள் பிரசுரம் செய்து மகிழ்கிறோம் -ஆசிரியர்)

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மனுஷ்யபுத்திரன் தொலைபேசி சொன்னபோது நம்பவே இயலவில்லை. “சொக்கா, சொக்கா... பத்தாயிரம் எனக்கா?” என்று மகிழ்ச்சியில் குதித்தேன்.

ஆம் நண்பர்களே. விருது, பாராட்டுப் பத்திரம், இதனால் கிடைக்கப்போகும் பெயர் இதையெல்லாம் விட ‘பத்தாயிரம்’தான் எனக்கு முக்கியமாகப் படுகிறது. ஏனெனில் கடனட்டை நிலுவைத்தொகை கழுத்தை நெரிக்கிறது. இதுதான் சார் யதார்த்தம். மத்ததெல்லாம் சும்மா பதார்த்தம்.


‘நாட்டாமை’ கவுண்டமணியின் பிரச்சினை அப்போதுதான் எனக்கு புரிய நேரிட்டது. விஷயம் தெரிந்ததிலிருந்தே “டீச்சரை நாட்டாமை தம்பி வெச்சிருக்காரு டோய்” என்கிற டைப்பில் விஷயத்தை யாரிடமும் சொல்லவும் முடியாமல், மென்று விழுங்கவும் முடியாமல்.. நேற்று மாலை ஆறு மணி வரை நான் தவித்த தவிப்பை எழுதிட தமிழில்/இங்கிலீஷில்/ஸ்பானிஷ் உள்ளிட்ட லத்தீன் அமெரிக்க மொழிகளிலும் வார்த்தைகள் இல்லை. எகிறிக்குதித்து, தலையால் வானத்தை இடித்துப் பார்த்துவிடும் வண்ணம் சூப்பர்மேனாக பிறந்துத் தொலைக்கவில்லையே என்கிற ஆற்றாமை ஏற்பட்டது.

விருது பெற்றவர்கள் அடக்கமாக இருக்கவேண்டும் என்பது பொதுவிதி. சைக்கிள் கிடைத்தாலே மிதிமிதியென மிதிக்கும் அடங்காப்பிடாரியான எனக்கு புல்லட்டு கிடைத்திருக்கிறது. டபடபவென ஒலி எழுப்பி, ஒரு ஓட்டு ஓட்டிப்பார்த்துவிட மாட்டோமா?

குருநாதர் கெளதம்
காட்ஃபாதர் பா.ராகவன்
ஆசிரியர் மாலன்
அண்ணன்கள் யெஸ்.பாலபாரதி, சிவராமன்
பின் தொடரும் நிழலின் குரலான தோழர் அதிஷா

ஆகியோரே இவ்விருதுக்கான பெருமைக்கும், இனி எனக்கு எழுத்து அடிப்படையில் ஏதேனும் சிறப்புகள் நேர வாய்ப்பிருந்தால் அதற்கும் உரித்தானவர்கள். இவர்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒருவகையில் நான் இயங்கிக் கொண்டிருக்க காரணமாக இருப்பவர்கள்.

பிறந்தவீடான கிழக்கையும், புகுந்த வீடான புதிய தலைமுறையையும் இவ்வேளையில் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன். எனது எழுத்துகளை பிரசுரித்த குமுதம் ரிப்போர்ட்டர், ஆனந்தவிகடன், அகநாழிகை, பில்டர்ஸ் வேர்ல்டு, பெண்ணே நீ, குங்குமம், தினகரன் வசந்தம், கீற்று, 4தமிழ்மீடியா, யூத்ஃபுல் விகடன் உள்ளிட்ட அச்சு மற்றும் இணைய இதழ்களுக்கும் நன்றியோ நன்றி.

குமுதம் ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன், விகடன் ஆசிரியர் ரா.கண்ணன், எழுத்தாளர் சாருநிவேதிதா, தினமலர் வாரமலர் ஆபிஸ்பாய் அந்துமணி, எழுத்தாளர் ராஜூமுருகன், க.சீ.சிவக்குமார் ஆகியோரின் எழுத்துக்களை பிட் அடிப்பதைத் தவிர்த்து வேறெதையும் இதுவரை புதியதாக செய்துப் பார்த்ததில்லை. கிடைத்திருக்கும் அங்கீகாரம் எனக்கான தனித்துவம் ஒன்றினை தேடிக்கண்டிட ஊக்கம் அளிப்பதாக இருக்கிறது.

குறைந்தபட்சம் 50 வயதுவரை இலக்கியவாதி ஆகும் எண்ணம் இல்லை என்பதைக்கூறி எனது வலைப்பூவை வாசிக்கும் தோழர்கள் வயிற்றில் இவ்வேளையில் பாலை வார்க்கிறேன்.

மேலும், இந்த வலைப்பூவை எழுத ஆரம்பித்த காலத்திலிருந்தே ஆதரவும், ஊக்கமும் அளித்த தோழர்கள் முத்து (தமிழினி), முத்துக்குமரன், குழலி, பொட்டீக்கடை சத்யா, வரவனையான் செந்தில், செந்தழல் ரவி, சுகுணாதிவாகர், கோவி.கண்ணன், கேபிள்சங்கர், அகநாழிகை, பொன் வாசுதேவன், கார்க்கி, முரளி கண்ணன், பரிசல்காரன், அப்துல்லா, தமிழ்குரல், பகுத்தறிவு, லெனின், மதன் செந்தில், அருண், சுத்தத்தமிழ், வேக்கப்கால் உள்ளிட்ட ஏராளமான இணையத் தோழர்களும் எனது நன்றிக்குரியவர்கள். (விடுபட்ட பெயர்கள் மறதிப்பிழையால் நேர்ந்தது என்பதால் சம்பந்தப்பட்டவர்கள் மன்னிக்கவும்)

வலைப்பூ எழுதுவதற்கு முன்பாக நான் எழுதிப் பழகிய கருத்துக் களங்களான சிஸ் இந்தியா, தட்ஸ் தமிழ் மற்றும் தமிழ்நாடுடாக் ஆகிய தளங்களுக்கும் நன்றி.

எனது குடும்பத்தார் யாரும் எனது இணையத் தளத்தையோ, புத்தகங்களையோ வாசிப்பதில்லை என்பதால் அவர்களுக்கு எனது நன்றிகளில் எந்தப் பங்குமில்லை.

எனது வலைப்பூவை 2011ஆம் ஆண்டுக்கான சுஜாதா விருதுகளுக்கு தேர்ந்தெடுத்த நடுவர்கள் சாருநிவேதிதா, தமிழ்மகன் மற்றும் ஷாஜி ஆகியோருக்கு 100 மடங்கு நன்றிகள். உயிர்மை பதிப்பகத்துக்கும், அதன் ஆசிரியர் மனுஷ்யபுத்திரன் அவர்களுக்கும், சுஜாதா அறக்கட்டளைக்கும் கோடி நன்றிகள்.

பி.கு : என்னுடைய தனித்துவ அடையாளமாக (?) நான் திரும்பிப் பார்க்கும் திமுக கொடி கலர் சர்ட்டு போட்ட படம் சமீப ஆண்டுகளாக உருவெடுத்திருக்கிறது. நான் எழுதும் புத்தகங்களின் பின்னட்டையிலும், விக்கிப்பீடியா பக்கத்திலும், இன்னும் ஏராளமான இடங்களிலும் இந்தப் படமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தப் படத்தை 2007ஆம் ஆண்டு எடுத்த தோழர் மோகன்தாஸ். லக்கிலுக் (எ) யுவகிருஷ்ணாவுக்கு முகம் கொடுத்த அத்தோழருக்கும் இவ்வேளையில் ஸ்பெஷல் நன்றி.
[கலக்கீட்டீங்க தோழரே! அப்பப்போ இப்படி நம்ம பக்கம் வந்து போவறது!நாலு மன்சாலு சிரிப்பாங்க இல்லே ]